30 வகை கொழுக் கட்டை--30 நாள் 30 வகை சமையல்

பொட்டுக்கடலை பொரித்த கொழுக்கட்டை தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு...

பொட்டுக்கடலை பொரித்த கொழுக்கட்டை தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மில்லி. செய்முறை: பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் பூரணத்தை அதில் வைத்து, சிறிதாக உருட்டி சொப்பு செய்து (மாவை சிறிய கிண்ணம் வடிவில் உருட்டுவதுதான் சொப்பு. இதைச் சிலர் செப்பு என்றும் கூறுவார்கள். கையில் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு சொப்பு செய்தால் கையில் ஓட்டாமல் இருக்கும்), கொழுக்கட்டை வடிவில் மூடவும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் கொழுக்கட்டைகளைப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: பொரித்து செய்யப்படும் இந்தக் கொழுக்கட்டை, ஹோமத்துக்கு மிகவும் விசேஷமாக பயன்படக்கூடியது. இதை முதல் நாளே தயாரித்து வைத்துக் கொள்ளலாம். ------------------------------------------------------------------ தேங்காய் - பருப்பு கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப், கடலைப்பருப்பு - 4 ஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து வடிகட்டி, ஒரு துணியில் சிறிது நேரம் பரவலாகப் போட்டால்... ஈரம் உலர்ந்துவிடும். பின்பு மிக்ஸியில் அரைத்து, மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அதில்இருந்து தேவைப்படும் அளவுக்கான மாவை எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து ஊற வைக்கவும். பிறகு, அதை வேக வைத்து, தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, வாணலியில் நெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையை அதில் சேர்த்துக் கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி இறக்கினால்... பூரணம் ரெடி. அதை, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, மாவை போட்டு கிளறி, ஆறவிடவும். பிறகு, நன்றாகப் பிசைந்து சிறு கிண்ணம் வடிவில் சொப்பு செய்து, உருட்டி வைத்துள்ள பூரணத்தை அதனுள் வைத்து கொழுக்கட்டை வடிவத்தில் மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ------------------------------------------------------------------------------ நட்ஸ் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பாதாம் பருப்பு - 6, முந்திரிப் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு - 10, உலர்ந்த திராட்சை - 10, பேரீச்சம்பழம் - 4, பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பிஸ்தா, திராட்சை, பேரீச்சம்பழம், வெல்லம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாகத் தயாரித்துக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவி கெட்டியாகக் கிளறி பிசையவும். பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள் வைத்து, கொழுக்கட்டை வடிவில் செய்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: மிகவும் சத்து மிகுந்த இந்தக் கொழுக்கட்டை, குழந்தைகளுக்கு ஏற்றது. பூரணத்தை முதல் நாளேகூட தயாரித்து வைத்துக் கொள்ளலாம். -------------------------------------------------------------------- மாம்பழ கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், தோல் சீவி நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப். செய்முறை: தேங்காய் துருவல், வெல்லம், மாம்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் எல்லாம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கெட்டியாக பூரணம் தயாரிக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி பிசையவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து, அதனுள் பூரணத்தை வைத்து, கொழுக்கட்டை வடிவில் மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: மாம்பழத்துக்கு பதிலாக வேறு பழங்களைப் பயன்படுத்தியும் இந்தக் கொழுக்கட்டையைத் தயாரிக்கலாம். --------------------------------------------------------------------- மசாலா கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கையும் உதிர்த்துச் சேர்த்து நன்கு பிசைந்து பூரணம் தயாரிக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். -------------------------------------------------------------------- ஜீரா கொழுக்கட்டை தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மில்லி, நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: மைதாடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும். தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் வாணலியை வைத்து, நெய் விட்டு அரைத்த கலவையை அதில் சேர்த்து பூரணம் கிளறி, கெட்டி யானதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். பிசைந்து வைத்த மைதாவை அப்பளமாக இட்டு, சிறிய டப்பாவின் மூடியால் அழுத்தினால் வட்டவடிவமாக கட் செய்யலாம். இதில் பூரணத்தை வைத்து மூடி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரை நனையும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். அந்த பாகை தட்டில் விட்டால், அப்படியே நிற்க வேண்டும். அத்தகைய பதம் வரை காய்ச்சி, கொழுக்கட்டைகளை அந்தப் பாகில் போட்டு, நன்கு கலந்து ஒரு தட்டில் பரவலாக வைத்தால்... பூப்பூவாக ஜீரா பூத்து வந்து பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, சப்புக்கொட்டும் சுவையிலும் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை! ----------------------------------------------------------- கொள்ளு கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், முளைகட்டிய கொள்ளு - 100 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: முளைகட்டிய கொள்ளுவை வேக வைத்து, தண்ணீரை வடித்து, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வாணலியில் நெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து கெட்டியாகக் கிளறினால்... பூரணம் ரெடி. ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். -------------------------------------------------------------------- உசிலி கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறு துண்டு அல்லது இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-2, மிளகு - 6 , எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பருப்புக் கலவையை அதில் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறினால்... பருப்பு பொலபொலவென வெந்துவிடும். உதிரி உதிரியாக மொறு மொறுப்பாக ஆனவுடன் கேரட் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி பிசையவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து அதனுள் உசிலியை உள்ளே வைத்து நீளவாக்கில் மூடவும். இரு முனைகளும் பிரியாமல் ஒட்டி மூடவேண்டும். பின்பு, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: வாழைப்பூ, கோஸ், பீன்ஸ் என்று விருப்பமான காய்களையும் சேர்த்துச் செய்யலாம். ---------------------------------------------------------------- வாழைப்பழ கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், செவ்வாழைப்பழம் - 2, சர்க்கரை - 100 கிராம், நெய் - 2 ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி, நன்கு மசித்து, சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறினால்... பூரணம் தயார். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: வீட்டில் வாழைப்பழம் நிறைய சேர்த்துவிட்டால்... அல்வா போல் கிளறி வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது கொழுக்கட்டை, போளி, சுகியன் என்று எது வேண்டுமானாலும் சட்டெனத் தயாரிக்கலாம். ------------------------------------------------------------ முளைப்பயறு காரக்கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், கொள்ளு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, சோளம், உளுந்து, கோதுமை (அனைத்தும் முளைவிட்டது) எல்லாம் சேர்த்து - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தானியங்களுடன் மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். இதை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வேக வைத்த தானியக் கலவையை அதில் சேர்த்துக் கிளறினால்... உதிரி உதிரியாக வந்துவிடும். இதுதான் பூரணம்! ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ------------------------------------------------------------------- ஸ்வீட்கார்ன் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், ஸ்வீட்கார்ன் - 2, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன். செய்முறை: குக்கரில் ஸ்வீட்கார்னை வைத்து இரண்டு விசில் வரை வேக வைத்து, முத்துக்களை தனியே உதிர்க்கவும். அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதை வாணலியில் இட்டு, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பூரணம் கிளறவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: புதுமைக்கு என்றுமே வரவேற்புதான்... இது சோளம் சீஸன் என்பதால்... வெளுத்துக் கட்டுங்கள்! -------------------------------------------------------------------- ஸ்ட்ராபெர்ரி கொழுக்கட்டை தேவையானவை: அரிசி மாவு - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி பழம் - 10, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு செய்முறை: ஏலக்காய்த்தூள், ஸ்டாபெர்ரி பழம், வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, கெட்டியாகக் கிளறினால்... பூரணம் தயார். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: ஸ்ட்ராபெர்ரி சாப்பிடாத குழந்தையைக்கூட... சாப்பிட வைக்கும் இந்தக் கொழுக்கட்டை. -------------------------------------------------------------------- ஜீரணக் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் (அ) இஞ்சி ஒரு சிறு துண்டு, பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் (அ) பூண்டுப் பல் நான்கு, பொடித்த ஓமம் - ஒரு டீஸ்பூன், வெற்றிலை - துளசி இலை சேர்த்து - ஒரு கைப்பிடி அளவு, மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மிளகு, சீரகம் வெற்றிலை, துளசி, பூண்டு, இஞ்சி, ஓமம் எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் உப்பை அதில் கரைக்கவும். கூடவே மாவைத் தூவி கெட்டியாகக் கிளறவும். பிறகு, மாவை நன்கு பிசைந்து உருட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: இதில் பயன்படுத்தியிருக்கும் பொருட்கள்... வாயுத் தொல்லை, வயிறு மந்தம், சளித்தொல்லையில் இருந்து நம்மைக் காக்கும். ---------------------------------------------------------------------- படிக் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய தேங்காய் - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் ரவை போல பொடித்துக் கிளறவும். நறுக்கிய தேங்காயையும் மிக்ஸியில் பொடித்து, பருப்பு ரவையுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரிசி மாவைத் தூவி கெட்டியாகக் கிளறவும். இதனுடன், பொடித்துக் கிளறி வைத்திருக்கும் பருப்புக் கலவை மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: குழந்தை வாசல்படி தாண்ட முயற்சிக்கும் அளவுக்கு வளரும்போது, படிக்கு முன்பாக இந்தக் கொழுக்கட்டையை செய்து தட்டில் வைத்து, குழந்தையை வாசல் படி தாண்ட வைப்பார்கள். ------------------------------------------------------------------------- உளுந்து கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், தோல் நீக்கிய உளுந்து - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்துக் களைந்து, தண்ணீரை வடித்து மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும் (வடை மாவு பதத்தில்). இட்லித் தட்டில் மாவை உருட்டி வைத்து வேக வைத்து உதிர்த்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலக்கினால்... பூரணம் ரெடி. ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி நீள வாக்கில் சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: பாரம்பரியமாக செய்யப்படும் இந்தக் கொழுக்கட்டை, ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் கட்டாயம் இடம்பிடிக்கும். ------------------------------------------------------------------ பைனாப்பிள் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பைனாப்பிள் - மூன்று ஸ்லைஸ், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப். செய்முறை: பைனாப்பிள், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து, கெட்டியாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால் பூரணம் ரெடி. இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ் சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: இந்தக் கொழுக்கட்டை, பைனாப்பிள் வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். ------------------------------------------------------------- வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2, பொடித்த வெல்லம் - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு கப், நெய் - 2 ஸ்பூன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு. செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை குக்கரில் இரண்டு விசில் அளவுக்கு வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, வேக வைத்து தண்ணீரை வடித்து, வள்ளிக்கிழங்கு, வெல்லம் ஆகிவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் உதிரியாக அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் கிழங்குக் கலவையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி நன்கு கிளறினால்... பூரணம் தயார். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ------------------------------------------------------------- கேசரி கொழுக்கட்டை தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், ரவை - ஒரு கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி. செய்முறை: கோதுமை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ரவையைத் தூவி நன்கு வெந்ததும்... சர்க்கரை, சிறிது கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்து வைத்து இருக்கும் கோதுமை மாவை சப்பாத்தி வடிவில் இட்டு, சிறிய டப்பா மூடி கொண்டு வட்டமாக கட் செய்து, கேசரி உருண்டைகளை நடுவில் வைத்து கொழுக்கட்டை வடிவில் தயாரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொழுக்கட்டைகளைப் பொரித்து எடுக்கவும். குறிப்பு: மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே கேசரி சுவையுடன் மிகவும் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும். எண்ணெயில் பொரிப்பதால் 2 நாள் வரை கெடாமல் இருக்கும். -------------------------------------------------------------- அம்மணி கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 100 கிராம், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பங்கு அரிசி மாவுக்கு, ஒரு பங்கு என சம அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து மாவைத் தூவி கெட்டியாகக் கிளறவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மாவுடன் சேர்க்கவும். தேங்காய் துருவல் மற்றும் இட்லி மிளகாய்ப் பொடியையும் போட்டு பிசைந்து, சீடை போல உருட்டி இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: கொழுக்கட்டை தயாரிக்கும்போது பூரணம் தீர்ந்துவிட்டால், மிச்சமிருக்கும் அரிசி மாவை வீணடிக்காமல் இப்படிச் செய்யலாம். -------------------------------------------------------------------- பால்கோவா கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பால்கோவா - 100 கிராம். செய்முறை: ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, உள்ளே பால்கோவாவை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: கோவாவை கடையில் வாங்குவதைவிட, நாமே பாலை சுண்டக் காய்ச்சி தயாரித்துக் கொள்ளலாம். முந்திரியை அரைத்து சேர்த்துக் கிளறினால் சுவை கூடும். ---------------------------------------------------------------- ஓட்ஸ் - அவல் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பால், ஓட்ஸ், அவல் - தலா ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: ஓட்ஸ், அவல் இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடித்து, பாலுடன் கலந்து கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி உருட்டினால்... பூரணம் ரெடி! ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ---------------------------------------------------------------------- தத்துவக் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், மாங்காய் துருவல், வெல்லம் - தலா ஒரு கப், நெல்லிக்காய் - ஒன்று, வேப்பம்பூ - 2 ஸ்பூன். செய்முறை: நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கி, வேப்பம்பூ மாங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக பூரணம் கிளறிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: வாழ்க்கை என்றால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு எல்லாம் கலந்து வரும் என்கிற தத்துவத்தை நேரடியாக உணர்த்தும் கொழுக்கட்டை இது. தமிழ் வருடப் பிறப்பன்று இதை பச்சடியாகத் தயாரிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ----------------------------------------------------------------- ஆரஞ்சு கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், ஆரஞ்சு பழம் - ஒன்று, தேங்காய் துருவல், பாசிப்பருப்பு - தலா ஒரு கப். செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். வெந்த பருப்புடன் தேங்காய் துருவல், ஆரஞ்சு சுளைகள் (விதைகள் நீக்கியது) சேர்த்து அரைத்துக் கெட்டியாகக் கிளறினால்... அதுதான் பூரணம். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குறிப்பு: ஆரஞ்சு தோலையும் பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கி அரைத்து பூரணம் தயாரிக்கலாம். ---------------------------------------------------------------- எள் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், எள் - 100 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: வெறும் வாணலியில் பொரியும் வரையில் எள்ளை வறுத்து, வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி பிசையவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து அதனுள் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து, கொழுக்கட்டை வடிவில் மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ----------------------------------------------------------------- வேர்க்கடலை கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: வேர்க்கடலை, வெல்லம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி உருட்டினால், பூரணம் ரெடி. ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி பிசையவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து அதனுள் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து, கொழுக்கட்டை வடிவில் மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: குழந்தைகளின் வளர்ச்சிக்கு வேர்க்கடலையும் வெல்லமும் மிகவும் உதவிபுரியும். -------------------------------------------------------------- நெல்லிக்காய் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: நெல்லிக்காய் சதைப் பகுதியை தனியே சீவி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து அரைத்து, கெட்டியாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பூரணத்தை உருட்டிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ---------------------------------------------------------- மிக்ஸ்டு வெஜிடபிள் கொழுக்கட்டை தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று, கேரட் - ஒன்று, கோஸ் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் தோல் சீவி, கேரட் துருவி மூலமாக துருவிக் கொள்ளவும். இவற்றுடன் கோஸ் துருவல் மற்றும் நறுக்கிய வெங்காய்த்தாள் ஆகியவற்றை சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு, தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு முக்கால் பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவி கிளறி பிசையவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து, வதக்கிய காய்களை ஒரு ஸ்பூன் வீதம் உள்ளே வைத்து கொழுக்கட்டை வடிவத்தில் அல்லது நீளவாக்கில் செய்து, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். --------------------------------------------------------------- அத்திப்பழ கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், அத்திப்பழம் - 4, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அத்திப்பழம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை அரைத்து, ஏலக்காய்த்தூள் தூவி, நன்கு கிளறி உருட்டிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். --------------------------------------------------- பால் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - 100 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பால் - 200 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவைத் தூவிக் கிளறி, பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு லிட்டர் தண்ணீ ரைக் கொதிக்க வைத்து, உருட்டி வைத்து இருக்கும் உருண்டைகளை அதில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகு போல காய்ச்சவும். பாகு ஓரளவு கெட்டியானதும், வேக வைத்த உருண்டைகளை அதில் சேர்க்கவும். பாலையும் காய்ச்சி அதில் சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். குறிப்பு: பாலும் வெல்லமும் சேர்த்து வெந்த உருண்டை, ருசியுடன் இருக்கும். தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். --------------------------------------------------------------- இனிப்பு உருண்டை கொழுக்கட்டை தேவையானவை: ரவையாக உடைத்த பச்சரிசி - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: ஒரு பங்கு அரிசி ரவைக்கு, மூன்று பங்கு என்கிற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரிசி ரவையைத் தூவிக் கிளறவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சி, கிளறிய அரிசி ரவையுடன் சேர்த்துக் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து, நீளவாக்கில் உருட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 2009512080756555617

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item