சமையலறை நிவாரணிகள்!! வீட்டுக்குறிப்புகள் சில!
வீட்டுக்குறிப்புகள்!!! கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப, சின்னச் சின்ன வீட்டுக்குறிப்புகள் சில சமயங்களில் பெரிய அளவில் ...
வீட்டுக்குறிப்புகள்!!!
பல வருடங்களுக்கு முன், என் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஃப்ரீஸரிலிருந்து மீனை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பக்கவாட்டிலிருந்த பெரிய முள் ஒன்று சரேலென்று விரலினுள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளி வந்து நின்றது. வலியில் துடிதுடித்து உடனேயே மருத்துவரிடம் சென்றதில் அவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றார். அடுத்த சில மணி நேரங்களிலேயே முள் முழுவதுமாக விரலினுள் சென்று விட்டதால், இன்னொரு மருத்துவரோ, ' ' குத்தி வெளியில் வந்து விழுந்திருக்கும், நீங்கள் உள்ளேயே இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள்’ என்றார். அடுத்த மருத்துவர் ‘அறுவை சிகிச்சை செய்தால் முள்ளும் வெண்மை, நரம்புகளும் வெண்மை என்பதால் நரம்புகள் ஏதேனும் அறுபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி ஒரு திரவத்தை கொடுத்து அதை தினமும் தடவி வந்தால் நாளடைவில் முள் உள்ளுக்குள்ளேயே கரைந்து போய் விடும் என்றார். அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒருத்தர் ‘சிறிது அரிசி மாவை மஞ்சள் தூள், சிறிது நல்லெண்ணெய் கலந்து பசை போல காய்ச்சி பொறுத்துக்கொள்கிற சூட்டில் குத்திய இடத்தில் வைத்து ஒரு துணியால் அதன் மீது தினமும் கட்டி வந்தால் முள் வெளியே வந்து விடும்’ என்று எழுதியிருந்தார். அந்த கை வைத்தியத்தை தினமும் செய்து வர, அடுத்த நான்காம் நாள் தொடக்கத்தில் முள்ளின் ஒரு பகுதி குத்திய பக்கத்திலிருந்தும் முள்ளின் அடுத்த பகுதி அடுத்த துவாரத்திலிருந்தும் வெளியே வந்தது. கை வைத்தியத்தின் பெருமை அப்போது முழுமையாக மனதில் பதிந்தது. அது போலவே தான் இந்த சின்னச் சின்ன குறிப்புகள் எதிர்பாராத சமயங்களில் பெரிய உதவிகளாய் கை கொடுக்கும்!!
வீட்டுக்குறிப்புகள் சில!
1. பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதைத் தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
2. வேப்பிலை போட்டு ஊற வைத்த நீரை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் பூச்சி அரிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்.
3. புதுப்புளி வாங்கி கொஞ்ச நாட்கள் கழித்து கருக்க ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க புதுப்புளி வாங்கியதும் ஒரு மண் பானையில் கொஞ்சம் புளியைப்போட்டு அதன் மீது கொஞ்சம் கல் உப்பைத்தூவி அதன் மீது மீண்டும் புளியை வைத்து மறுபடியும் உப்பைப்போட்டு இப்படியே புளி, உப்பு என்று மாறி மாறிப்போட்டு மூடி வைத்தால் அடுத்த சீசனுக்கு புளி வாங்கும் வரை கருக்காமல் இருக்கும்.
4. மாம்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, நெருப்பிலிட்டால் அதன் புகையில் கொசுக்கள் வராது.
5. பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவி விட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
6. தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.
7. சாயம் போகக்கூடிய துணிகளை புதியதாக இருக்கும்போது நேரடியாக தண்ணீரில் நனைக்கக்கூடாது. கல் உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு வழக்கம்போல துவைத்தால் அதிகப்படியான சாயம் நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும்போது சாயம் போகாது.
வீட்டு சுவர்களில் விரிசல் இருந்தால் வெள்ளை சிமிண்டுடன் சிறிதளவு பேக்கிங் பெளடரைக்கரைத்து ஊற்றினால் விரிசலே தெரியாதவாறு ஒட்டிக்கொள்ளும்.
8. வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.
9. இரவு சுண்டலுக்கு ஊறவைக்க மறந்து விட்டால் காலையில் அதை ஹாட்பாக்ஸில் போட்டு வென்னீர் ஊற்றி மூடி வைத்தால் 2 மணி நேரத்தில் நன்கு பெரிதாக ஊறி விடும்.
Post a Comment