கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும்
முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது
உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும்
அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே...
பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக...
குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி
வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின்
இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம்,
கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு
இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு,
குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை
செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால்
வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால்
குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால,
குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ
சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள்
நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக்
கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா
இறால் வளர்த்துட்டுருக்கேன்.
இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல.
நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு
வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து
வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை
இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.
100 நாட்களில் வருமானம்!
''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட,
இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல
லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு
குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7
ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர்,
கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான்
வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால்
வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத்
தொகுத்திருக்கிறோம்.
சூரிய வெளிச்சம் அவசியம்!
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க
வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை
இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க
திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம்.
அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை
நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது
அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை
அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால்
குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று,
இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி
நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச்.
முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப்
பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப்
பரிசோதிக்க வேண்டியதில்லை.
நான்கு வேளைகளில் தீவனம்!
குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள்
வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100
கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர்
நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,
5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப்
பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும்.
கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி
உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி
உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு
லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ
இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி,
மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு
பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே
முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப்
போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று
தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு
கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன்
கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை,
நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.
தீவனம்... கவனம்!
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4
கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.
8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க
வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம்
தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம்
தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க
வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட
வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம்
எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு
உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7
சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ
தீவனம் போட வேண்டும்.
38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும்.
மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம்
போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக்
குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை
கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க
வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில்
கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி
எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார்
ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.
ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு
இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம்
முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள்
1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில்
ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக
1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன்
நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும்
நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ
சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம்.
உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற
இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம்
ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா
செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர்
குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய்
அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.
ஆலோசனை தேவையா?
தஞ்சாவூரில்
உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இறால் வளர்ப்புப் பயிற்சி
தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.
தேவைப்படுவோர் இந்த மையத்தை அணுகலாம். தொடர்புக்கு, தொலைபேசி:
04362-291625, செல்போன்: 99441-61466
நெற்பயிரைக் காப்பாற்றிய இறால் தண்ணீர்!
கடந்த ஆண்டின் கடும் வறட்சியிலும்கூட பிள்ளையார்நத்தம்
கிராமத்தில் பலருடைய நிலங்களில் நெற்பயிர் செழித்து வளர்ந்து, நல்ல பலனைக்
கொடுத்திருக்கிறது. இதற்கும் கைகொடுத்திருக்கிறது... இறால் பண்ணை. இதைப்
பற்றி பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ''போன சம்பா பருவத்துல 7
ஏக்கர் நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். கடுமையான வறட்சியால பயிர்கள் கருக
ஆரம்பிச்சிடுச்சு. அப்போ, இந்த இறால் குட்டையில் இருந்து கொடுத்த தண்ணீரைப்
பாய்ச்சித்தான் என்னோட பயிரைக் காப்பாத்தினேன். இறாலோட கழிவும், சத்தான
தீவனமும் தண்ணீர்ல இருந்ததால, பயிர்கள் நல்லா செழிப்பாகி, கதிர்களும் நல்லா
வாளிப்பா வந்துச்சு. இந்த கிராமத்துல நிறைய பேரோட பயிரை இந்த இறால் குட்டை
தண்ணிதான் காப்பாத்திக் கொடுத்துச்சு'' என நெகிழ்ச்சியோடு சொன்னார்.
தொடர்புக்கு,
கடல் பொருள் ஏற்றுமதி வாரியம் சென்னை.
தொலைபேசி: 044-26269192.சீனிவாசன்
செல்போன்: 90434-11312
Post a Comment