மிஸ் பண்ணாதீங்க! --- உபயோகமான தகவல்கள்
அறுவைசிகிச்சை இல்லாமல், கருப்பையை அகற்றாமலும், துளிகூட ரத்தம் சிந்தாமலும் கருப்பைக்கட்டியை அழிக்கும் 'எம்.ஆர்.ஐ. கெய்டட் ஃபோக்கஸ்டு அல்ட...

''பெண்களுக்கு 30 முதல் 50 வயது வரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை கருப்பைக் கட்டிகள். புற்றுநோய் இல்லை என்றாலும், இவற்றால் அவர்கள் அடையும் பாதிப்புகள் மிக அதிகம். உடல் பருமன், ஹார்மோன் சமன்பாடுக் குறைவு போன்ற காரணங்களால் இந்தக் கட்டிகள் வருகின்றன.
இந்தக் கட்டிகள் கருப்பைத் தசைகளில் வளரும். கருப்பைக் கட்டி வந்த பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு மற்றும் நீண்ட நாள் ரத்தப்போக்கு இருக்கும். சில நேரம் ரத்தம் கட்டிப்போய் இருக்கும். முதுகு மற்றும் கால் வலி, இடுப்பு வலி அல்லது அழுத்தம் இருக்கும். உடலுறவுகொள்ளும்போது கடுமையான வலி இருக்கும். சிறுநீர்ப் பையில் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். குடல் மீது அழுத்தம் ஏற்படுவதால் வலி இருக்கும்.
கருப்பையில் ஏற்பட்டுள்ள கட்டியின் தன்மை, எண்ணிக்கையைப் பொருத்து, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கருப்பைக் கட்டிகளுக்குத் தீர்வாக அந்தக் கருப்பையையே அகற்றும் சிகிச்சைகள் நடந்துவருகின்றன. இதனால், பெண்மையின் அடையாளமான கருப்பையை இழந்ததால் மன அழுத்தத்துக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இது தவிர, இந்த அறுவை சிகிச்சைகள் ஓப்பன் முறையில் செய்யப்படுவதால் மயக்க மருந்து அளித்தல், பெரிய தழும்பு, ரத்த இழப்பு, வலி, மருத்துவமனையில் தங்கி இருத்தல், சிகிச்சைக்குப் பிறகு பல நாட்கள் ஓய்வு என்று பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. கருப்பையை அகற்றாமல், ரத்தக் குழாய் வழியே சென்று கருப்பைக் கட்டிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் சிகிச்சை முறை உள்ளது. ஆனால், இந்தச் சிகிச்சையில் வெற்றி வாய்ப்பு குறைவு.
இவற்றுக்கு எல்லாம் மாற்றாக வந்திருப்பதுதான் எம்.ஆர்.ஐ. கெய்டட் ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை. இதில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் மெஷினில் ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் கருப்பைக் கட்டி எங்கே உள்ளது, எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பைக் கட்டி உள்ள நோயாளியை இந்தக் கருவியில் குப்புறப் படுக்கவைத்து எம்.ஆர்.ஐ. கருவியின் உள்ளே அனுப்புவோம். நோயாளியின் இடுப்புப் பகுதியில் ஸ்கேன் செய்து எந்த இடத்தில் கட்டி உள்ளது என்பதைத் தெளிவாகப் பார்த்து அதற்கேற்ப சிகிச்சை திட்டமிடப்படும். அதன் பிறகு குறிப்பிட்ட அந்த இடத்தில் ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்படும். இந்தக் கருவியில் இருந்து வரும் ஒலியானது கட்டி மீது போய் குவியும். இதனால் கருவிக்கும் கட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதன் குவிமுனையில் வெப்பம் உற்பத்தியாகி கருப்பைக் கட்டியைச் சுட்டுப் பொசுக்கும்.
ஒவ்வொரு முறை அல்ட்ரா சவுண்ட் செலுத்தி தாக்குதல் நடத்திய பிறகு எவ்வளவு திசுக்கள் அழிக்கப்பட்டன, எந்த இடத்தில் அழிக்கப்பட்டன என்பன போன்ற விவரங்கள் கிடைத்துவிடும். இவை அனைத்தையும் வெளியில் இருந்து எங்கள் வல்லுனர் குழு கண்காணிக்கும். அதன் பிறகு, அடுத்த இடத்துக்கு குவிமையம் மாறும். இப்படி முழுக் கட்டியும் அழிக்கப்படும். இந்த சிகிச்சையின்போது வலி இருக்காது. அதனால் மயக்க மருந்து அளிக்கப்படுவது இல்லை. இருப்பினும் சிறிய அளவு வலி நீக்க மருந்து செலுத்தப்படும். நோயாளியின் கையில் ஒரு சிறிய சுவிட்ச் கொடுக்கப்பட்டு இருக்கும். வலி அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அதை அழுத்தி ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்டை நிறுத்திவிடலாம். நோயாளிகள் பாடல் கேட்டுக்கொண்டே சிகிச்சை பெற்று வீடு திரும்பலாம். இதனால், சிகிச்சையில் இருக்கிறோம் என்கிற கவலையைக்கூட நோயாளிகள் அடைய வேண்டியது இல்லை.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை இல்லை, தழும்பு இல்லை. காலையில் வந்து சிகிச்சை பெற்று ஒன்று இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்குச் செல்லலாம். அடுத்த நாளே வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருஷத்துக்குள் நோய் அறிகுறி குறைந்து, கருப்பைக் கட்டி முற்றிலும் அழிந்துவிடும். இதனால் தாய்மை பாதுகாக்கப்படும். சில பெண்களுக்கு இந்தக் கருப்பைக் கட்டிகள் காரணமாக குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் பிரச்னையையும் இந்தச் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும்.
இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் மார்பகப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய், ப்ராஸ்டேட் எனப்படும் விந்துநாளச் சுரப்பி புற்றுநோய், மூளையில் ஏற்படும் கட்டிகளும் அகற்றப்படுகின்றன. விரைவில் மார்பகப் புற்றுநோய் தொடங்கி இங்கேயே எல்லாச் சிகிச்சைகளும் அளிக்கப்படும்'' என்கிறார் டாக்டர் ஆர்.இமானுவேல் மிகுந்த நம்பிக்கையோடு!
Post a Comment