கத்திரிக் குறிப்புகள் இதோ, இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கிவிட்டது. நம் எல்லோரையும் வாட்ட...

கத்திரிக் குறிப்புகள்
இதோ, இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கிவிட்டது. நம் எல்லோரையும் வாட்டி வதைத்து, வறுத்தெடுக்கப்போகிறது சூரியன். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், இந்தக் கத்திரியில் நிழலும் சுடப்போகிறது. பரவாயில்லை. கவலைப்பட வேண்டாம். சில தற்காப்பு மற்றும் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உடலின் வெளிப்பகுதியையும், உள் பகுதிகளையும் நாம் வெயிலின் சூடு பாதிக்காமல் தடுத்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். அதற்கான சில நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
1. தினமும் மூன்று வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
2. குளிக்கும் இடைவெளிகளில் அடிக்கடி முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவலாம். சோப்பு பயன்படுத்த வேண்டாம்.
3. இறுக்கம் இல்லாத, தளர்வான, காற்றோட்டமான, பருத்தியால் ஆன உடைகளை அணியலாம்.
4. வீட்டில் இருந்தால், குறைவான ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.
5. துண்டைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டுக்கொள்ளலாம்.
6. குளித்த பிறகு, உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
7. அழகு கிரீம்களுக்குப் பதிலாக கற்றாழையில் தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

இவையெல்லாம், உடலின் வெளிப்புறத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும் நடவடிக்கைகள். அடுத்து, உள்ளுக்குச் செய்யவேண்டிய உபகாரங்களைப் பார்ப்போம்.
1. வழக்கமாக ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்போம். அதை இப்போது 4 முதல் 5 லிட்டர் என்று அதிகரித்துக்கொள்ளலாம். மண் பானையில் நீர் ஊற்றி வைத்துக் குடிப்பது நல்லது.
2. திட உணவுகளைக் குறைத்து, அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
3. பழச்சாறுகள் மிகவும் நல்லது. டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறுகள், குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
4. வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், மாம்பழம் மிகவும் நல்லது.
5. கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ் போன்றவை உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சி தரக்கூடியவை.
6. மோரில் சீரகம் போட்டுக் குடிப்பது நல்லது.
7. திரவ உணவுதானே என்று காபி, டீ அதிகம் குடிக்க வேண்டாம்.
8. நாவறட்சி, தாகம் இருந்தால், குளிர்ந்த நீருக்குப் பதிலாக, கொதிக்க வைத்து, ஓரளவு வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கவும்.
இவையெல்லாம், வழக்கமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் / கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள். அடுத்து, சில இயற்கை ‘மூலிகைப் பொருள்களை’ப் பயன்படுத்தி சூட்டைத் தணித்துக்கொள்வது எப்படி? பார்ப்போம்.
1. வெட்டி வேர் சூப் - வெயிலுக்கு மிகச் சிறந்த பானம். வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வியர்வை அதிகம் வராது. சிறுநீரகத்துக்கு நல்லது. வாய்ப்புண் ஏற்படாது. உடல் சூடு தணியும். வியர்வை நாற்றம் அடிக்காது.
2. நன்னாரி சர்பத் - நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேரை வாங்கி வந்து தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம். அல்லது சர்பத், கஷாயம், டீ தயாரித்துக் குடிக்கலாம். இதுவும், இயற்கையான முறையில் உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.
3. வாழைத்தண்டு மிகச் சிறந்த உணவுப்பொருள். பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறையும். சிறுநீரகத்துக்கு நல்லது.
4. வெள்ளைப்பூசணியுடன் சிறுபருப்பு சேர்த்து கூட்டு அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம். உடல் சூடு தணியும்.
5. கோவைக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய் ஆகியவை கோடைக்காலத்துக்கு மிகவும் நல்லது.
6. பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, வெந்தயக் கீரை, முளைக் கீரை ஆகியவை மிகவும் குளிர்ச்சி தரக்கூடியவை.
7. ஆவாரம் பூவில் டீ அல்லது ரசம் வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது.
எல்லாவற்றுக்கும் கடைசியாக, கூடுமானவரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
Post a Comment