வெல்லம் சேர்த்த பால் கொழுக்கட்டை---சமையல் குறிப்புகள்,
வெல்லம் சேர்த்த பால் கொழுக்கட்டை (JAGGERY MILK DUMPLINGS,PAAL KOZHUKATTAI) வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. நம் உடலுக்குத் தேவையான ...

வெல்லம் சேர்த்த பால் கொழுக்கட்டை (JAGGERY MILK DUMPLINGS,PAAL KOZHUKATTAI)
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி – 1 கப்
- எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
- காய்ச்சிய பால் – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்
- சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – சிறிது (விருப்பமானால்)
செய்முறை:
- இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும்.
- அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். மாவு தரதரப்பின்றி மென்மையான பட்டுப் போன்ற மாவாக இருக்க வேண்டும்.
- கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், அதே சமயம் அரிசி முழுமையாக அரைபடும் அளவுக்கு மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
- எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும்.
- மாவு வதங்கி வாணலியின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். (இது எல்லா உருண்டைகளும் சீராக ஒரே நேரத்தில் வேக உதவும்.)
- பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.
- வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். (வெல்லத்தில் மண், குப்பை இருக்கும். அதை நீக்க இவ்வாறு செய்து, தூய்மையான வெல்லக் கரைசல் தயாரித்துக் கொள்ளவும்.)
- ஏலக்காயைத் தட்டி பொடி செய்து கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும்.
- அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
- கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க (கூட்டுப் போல் வர) உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும்.
- விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- கொழுக்கட்டை மாவை நிறைய எண்ணெய் ஊற்றி நீண்ட நேரம் வதக்கி விடக் கூடாது. மாவு வெந்து ஆங்காங்கே கட்டிகளாக சேர்ந்து கொள்ளும். மாவும் வலுத்து விடும். கொழுக்கட்டை கடித்து சாப்பிட மெதுவாக இருக்காது.
- இட்லி அரிசி அல்லது பச்சரிசியைப் பயன்படுத்தி கொழுக்கட்டை செய்யலாம்.
- வெல்லத்தின் அளவை அவரவர் தேவைக்கு ஏற்றவாறு கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.
- மாவு உருண்டைகளை தண்ணீரில் கொதிக்கும் முன் சேர்த்தால் மாவு கரையத் தொடங்கி விடும்.
- மாவு உருண்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டவுடன் கரண்டி வைத்து கலக்கக் கூடாது.
- மாவு உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்ததில் இருந்து 5-6 நிமிடங்கள் கழித்து லேசாக கரண்டி வைத்து கிளறி விட கொழுக்கட்டைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சீராக வெந்து கொள்ளும்.
Post a Comment