பங்கமில்லாத வருமானம் தரும் ஃபண்ட்! -- வேலை வாய்ப்புகள்
பணத்தைச் சேமிக்க, பெண்கள் பெரும்பாலும் நாடும் மூன்று முக்கிய வழிகள்... வங்கி டெபாஸிட், ஏலச் சீட்டு, நகைச் சீட்டு. இவற்றில் வங்கி டெபாஸிட் ...

பணத்தைச் சேமிக்க, பெண்கள் பெரும்பாலும் நாடும் மூன்று முக்கிய வழிகள்... வங்கி டெபாஸிட், ஏலச் சீட்டு, நகைச் சீட்டு. இவற்றில் வங்கி டெபாஸிட் பாதுகாப்பானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், மற்ற இரண்டும்?
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் சீட்டுப் போட்டுவிட்டு, திடீரென ஒரு நாள் அந்த நபர்கள் குடும்பத்தோடு காணாமல் போகும்போது... மொத்த பணமும் பறிபோய், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கண்ணீரோடு காத்திருக்கும் பலரையும் அடிக்கடி மீடியாக்களில் நாம் பார்த்துக் கொண் டிருக்கிறோம். கிட்டத்தட்ட இதேபோலத்தான்... முகம் தெரியாத தனியார் சீட்டு நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகளில் பணத்தைக் கட்டிவிட்டு, திடீரென அவர்கள் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடிப்போனதும்... கண்ணீரில் மிதக்கிறார்கள் பலரும்!
வங்கியில் டெபாஸிட் செய்யும்போது, சீட்டு மற்றும் நகைச் சீட்டு அளவுக்கு லாபம் இருப்பதில்லை. குறைந்த சதவிகிதமே வட்டியாக கிடைக்கும். அதற்காக, மொத்த பணமும் பறிபோகும் வகையிலான ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டுமா? இதற்குப் பதிலாக, நமது பணம் பாதுகாப்பாகவும் இருக்கும், அதேநேரத்தில் நன்றாக சம்பாதித்தும் கொடுக்கும் என்றால்... நாம் வேண்டாம் என்றா சொல்வோம்! இதற்காகவேதான் இருக்கிறது... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாம். அதாவது, மியூச்சுவல் ஃபண்டில்... 'ஃபண்ட் மேனேஜர்' என ஒருவர் இருப்பார். அவர் நம்மிடம் இருந்து வாங்கும் பணத்தை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பங்குகள், அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வார். இதில் கிடைக்கும் லாபத்தை நமக்கு பங்கிட்டுக் கொடுப்பார்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு, முகவரிச் சான்று மற்றும் கே.ஒய்.சி. படிவம் போன்றவை அவசியம். உங்க ளிடம் இருக்கும் பணத்தை வங்கியில் டெபாஸிட் செய்து, தேவையின்போது உடனே எடுப்பது போலவும், மாத வருமானம் வருவது போலவும் மியூச்சுவல் ஃபண்டிலும் பல திட்டங்கள் இருக்கின்றன.
மன்த்லி இன்கம் பிளான்: ஓய்வு பெற்றவர்கள், மாத வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் தொகையின் அடிப் படையில் மாதந்தோறும் ஒரு தொகை வருமானமாக வரும். இத்திட்டத்தில் வருமானம் சிறிது குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு அதிகம்.
பேலன்ஸ்டு ஃபண்ட்: இதில் முதலீடு செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் கலவையாக முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை மேலே போனாலும், கீழே போனாலும் இந்தத் திட்டத்தில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது.
லிக்யூட் ஃபண்ட்: வங்கி சேமிப்புக் கணக்கு போலவே, இதிலும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாஸிட் செய்யலாம், எடுக்கலாம். கையில் இரண்டு லட்ச ரூபாய் இருக்கிறது எனில், அதை லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். வங்கி சேமிப்புக் கணக்குக்கு கிடைக்கும் வட்டியைவிட, இதில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்: வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதுபோல குறிப்பிட்ட வருடத்துக்கு இதில் பணத்தை டெபாஸிட் செய்யலாம். அதாவது, உங்கள் மகள் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாள், கையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது, அவளின் திருமணத்தின் போதுதான் அந்தப் பணம் தேவை எனில் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளானில் முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை சேமிக்க பல முறைகள் இருக்கின்றன. இதில் எஸ்.ஐ.பி. (Systematic Investment plan) எனும் முறை சுலபமாக முதலீடு செய் வதற்கு ஏற்றதாக இருக்கிறது. குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் எதிர்காலத் தேவையைக் கணக்கில் கொண்டு அவர்களின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் பணம் சேமித்து வர, எஸ்.ஐ.பி. முறையே சிறந்தது. 100, 500, 1000 ரூபாய் என உங்க ளால் முடிந்த தொகையை மாதந்தோறும் இதில் சேமித்து வரலாம். நீங்கள் குறிப்பிட்டுக் கொடுக்கும் தேதியில் வங்கிக் கணக்கிலிருந்து அந்தத் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எடுத்துக் கொள்ளும். பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும்போது நல்ல வருமானம் கொடுக்கும். குழந்தைகளின் படிப்பு, திருமணச் சமயங்களில் இந்தத் தொகை மிகவும் உதவியாக இருக்கும். வேலைக்குப் போகும் பெண்கள், மாதந்தோறும் சேமிக் கும் பெண்களுக்கு ஏற்ற சேமிப்பு முறை இது. கையில் போனஸ், இன்க்ரிமென்ட் அல்லது ஏதாவது பணம் வந்தால், அதையும் இதில் கூடுதலாக முதலீடு செய்யலாம்.
'மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது... பங்குச் சந்தை சார்ந்தது. அதில் பணத்தை முதலீடு செய்வது, ரிஸ்க்' என்கிற பொதுக்கருத்து ஒன்று இங்கே உலா வருகிறது. ஆனால், அது தவறான கருத்து. அதேபோல வங்கியைப் போன்று இதில் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்ற பயமும் தேவையற்றது. வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி உள்ளது போல, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த 'செபி’ என்ற அமைப்பு உள்ளது. எனவே, ரிஸ்க் பயம் வேண்டாம்; மியூச்சுவல் ஃபண்ட், சாமர்த்தியமான ஒரு முதலீட்டு முறை என்பதில் சந்தேகம் வேண்டவே வேண்டாம்!
- பணம் பெருகும்...
நீங்களும் ஏஜென்ட் ஆகலாம்!
பணம் டெபாஸிட் செய்து சேமிப்பது மட்டுமல்ல... மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ஸி மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். இதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், 'நிசிம்’ எனும் தேர்வை எழுத வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே இதற்கான பயிற்சியைக் கொடுப்பார்கள். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் எனில் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு மட்டும்தான் ஏஜென்ட்டாக இருக்க முடியும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், பல ஃபண்ட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட்டாக இருக்கலாம் என்பது கூடுதல் வாய்ப்பு. இது, பெண்களுக்கு ஏற்ற பணியாகவும் இருப்பது... இதன் விசேஷம்!
Post a Comment