சமையல் குறிப்புகள்--30 வகை பாசிப்பருப்பு சமையல் !

சூப்பர் டேஸ்ட்... டாப்பர் ஹெல்த்... பாசிப்பருப்பு சமையல் ! பச்சைப்பயறு... காலகாலமாக நம்முடைய உணவில் தவறாமல் இடம்பிடித்து வரும் பயறு வகைகள...

சூப்பர் டேஸ்ட்... டாப்பர் ஹெல்த்... பாசிப்பருப்பு சமையல் ! பச்சைப்பயறு... காலகாலமாக நம்முடைய உணவில் தவறாமல் இடம்பிடித்து வரும் பயறு வகைகளில், முக்கிய இடம் பிடித்திருக்கும் பயறுகளில் ஒன்று. அதோடு, மிக எளிதாக சமைத்துவிடக் கூடியதும்கூட! பச்சைப்பயறு மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாயசம் முதல் பக்கோடா வரை அறுசுவை உணவுகளை அட்டகாசமாக செய்து காட்டியிருக்கிறார் பச்சைப்பயறு மற்றும் பாசிப்பருப்பு பற்றிய சத்தான தகவல்கள் இந்த இணைப்பிதழ் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன. குடும்பத்தாருக்கு, தினம் தினம் ஒவ்வொன்றாக செய்து கொடுத்து பலசாலியாக்குங்கள். பாசிப்பருப்பு தோசை தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பு, பச்சரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை முதலில் லேசாக அரைத்து, பிறகு பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை போட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும். பச்சைப்பயறு குழிப்பணியாரம் தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறு, பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் மாவை ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷில் பச்சைப்பயறு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பச்சைப்பயறு வெஜ் சாலட் தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், துருவிய கேரட், பீட்ரூட் சேர்ந்தது - கால் கப், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன். செய்முறை: முளைகட்டிய பயறை 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் காய்கறிக் கலவை, முளைகட்டியபயறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு விட்டு, கலந்து பரிமாறவும். முழுமையாக இருந்தால் (தோலுடன் கூடியது) 'பச்சைப்பயறு' என்றும், உடைத்ததை பாசிப்பருப்பு என்று அழைக்கிறோம். பச்சைப்பயறு குருமா தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். முளை கட்டிய பயறு எனில் ஊற வைக்க வேண்டாம். தக்காளி, வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி-வெங்காய மசாலா விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் பயறைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும். மிக அதிக புரதச்சத்து நிறைந்தவை பயறு வகைகள். கலோரி, கார்போஹைட்ரேட், புரதம் மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கும். சமச்சீரான புரதம் கிடைத்துவிடும். பச்சைப்பயறு வடை தேவையானவை: முளைகட்டிய பயறு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், மிளகு, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பயறுடன் மிளகு, உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயத்தை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும். முளைகட்டிய பயறு இல்லாவிட்டால், பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். பச்சைப்பயறு சாண்ட்விச் தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6 முதல் 8, முளைகட்டிய பயறு - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்-தக்காளி - கால் கப், வெண்ணெய் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டில் வெண்ணெய் தடவவும். பயறுடன் தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை இரண்டு பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கலாம். பருப்பு வகை உணவுகளை நன்றாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. பச்சைப்பயறு பக்கோடா தேவையானவை: ஊற வைத்த பச்சைப்பயறு (அ) முளைக் கட்டிய பயறு - ஒரு கப், சீரகம், சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பயறுடன் சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடாக்கி, மாவைக் கிள்ளிப் போட்டு, பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பை 'மூங்' என்ற இந்தியில் அழைப்பார்கள். அதிலிருந்துதான் 'மங்' என்று ஆங்கிலத்தில் பெயர் வந்ததாக கூறுகின்றனர். பாசிப்பருப்பு புட்டிங் தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், பச்சரிசி குருணை ரவை, வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை - தலா கால் கப், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு, சமையல் சோடா - அரை டீஸ்பூன், பழுத்த வாழைப்பழம் - 1, நெய் - சிறிதளவு. செய்முறை: பச்சரிசி குருணையில் தேவையான தண்ணீர் விட்டு கஞ்சி போல் காய்ச்சவும். கஞ்சி வெதுவெதுப்பாக இருக்கும்போது பச்சரிசி மாவை சேர்த்து, கட்டியில்லாமல் முதல்நாள் இரவே பிசைந்து வைக்கவும். மறுநாள் காலையில் வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம், சமையல் சோடா, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை பாதியளவு ஊற்றி, குக்கரில் இட்லி வேக வைப்பது போல், வெயிட் போடாமல் 20 நிமிடம் வேக விடவும். ஆறியதும் துண்டுகள் போடவும். முளைக்கட்டிய பயறை அப்படியே சாப்பிடுவதைவிட வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் எடுத்து சாப்பிடுவது நல்லது. பச்சையாக சாப்பிடும்போது பாக்டீரியா பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பெசரெட் தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு, மிளகு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறு, அரிசியை 4 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் இதில் உப்பு, சோம்பு, மிளகு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். தோசைக்கல் காய்ந்ததும், மாவை தோசை போல் ஊற்றி, அதன் மேல் துருவிய கேரட், வெங்காயத்தை தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும். கிட்னி பேஷன்ட்டுகள் பாசிப்பருப்பை உணவில் குறைவாகத்தான் சேர்த்துக் கொள்ளவேண்டும். வேக வைத்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது நல்லது. பச்சைப்பயறு கோஃப்தா கிரேவி தேவையானவை: கோஃப்தா செய்ய: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), சோம்பு, பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி, வெங்காயம் - தலா 1 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு. கிரேவிக்கு அரைத்துக் கொள்ள: தேங்காய் - கால் மூடி, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, செய்முறை: முளைகட்டிய பயறுடன் சோம்பு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோஃப்தா ரெடி! கிரேவிக்கு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களைப் போட்டு, கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும். தினமும் ஒரு நபர், 70 முதல் 100 கிராம் வரை புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். பாசிப்பருப்பு தயிர் புஜியா தேவையானவை: பாசிப்பருப்பு, கெட்டித்தயிர் - தலா ஒரு கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் 2, கேரட் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயில் விட்டு, காய்ந்ததும் மாவை சிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்தெடுக்கவும். தயிரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பொரித்த உருண்டைகளைத் தண்ணீரில் பிழிந்தெடுத்து தயிரில் போடவும். கேரட், கொத்தமல்லி தூவி 'ஜில்'லென்று பரிமாறவும். பயறு வகைகளை எளிதில் சமைத்து விடலாம். பாசிப்பருப்பு பராத்தா தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி துருவல் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா அரை டீஸ்பூன் சேர்த்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இதில் பாசிப்பருப்பை போட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றியதும் பருப்பை மசித்து சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு, அதனுள் பருப்பு உருண்டையை வைத்து மூடி, மீண்டும் பராத்தாவாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். 100 கிராம் பச்சைப்பயறில் கார்போஹைட்ரேட் 56.7% , புரதம் 24%, கொழுப்பு 1.3%, எனர்ஜி 334 கிலோ கலோரி இருக்கிறது. பச்சைப்பயறு சீலா தேவையானவை: பச்சைப்பயறு மாவு ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - கால் டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. மேலே தூவ: துருவிய பனீர் - அரை கப், கொத்தமல்லி சிறிதளவு, சாட் மசாலா - அரை டீஸ்பூன். செய்முறை: பயறு மாவுடன் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம், சர்க்கரை, சமையல் சோடா, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை கனமாக ஊற்றி பனீர், கொத்தமல்லி, சாட் மசாலா தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். பாசிப்பருப்பு வெஜ் ரைஸ் தேவையானவை: அரிசி, நறுக்கிய பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் - தலா ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, வெங்காயத்தை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கழுவிய அரிசி, பாசிப்பருப்பை போடவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடவும். பிரஷர் வந்தவுடன் 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சமைக்கவும். இதை தயிர் பச்சடியுடன் பரிமாறவும். பச்சைப்பயறு ரொட்டி தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். இதில் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு சுட்டு எடுத்து, நெய் தடவி பரிமாறவும். பச்சைப்பயறு புலவு தேவையானவை: முளைகட்டிய பயறு - அரை கப், பாஸ்மதி அரிசி - ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா அரை கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் முளைகட்டியபயறு, உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கிளறி வேக விடவும். வெந்ததும் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி பரிமாறவும். பாசிப்பருப்பு கொத்தமல்லி சாம்பார் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், சின்ன வெங்காயம் - 20, தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 3, நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன். செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் சின்ன வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பாசிப்பருப்பு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பச்சைப்பயறில் நார்ச்சத்து மிக அதிகம். நார்ச்சத்தில் சாலிபிள் ஃபைபர் (Solible Fibre), இன்சாலிபிள் ஃபைபர் (Insolible Fibre) என இருவகை உண்டு. இவை இரண்டுமே பயறு வகைகளில் இருக்கும். கோசுமல்லி தேவையானவை: பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும். கோஸை வெந்நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கோஸ், பாசிப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கி பரிமாறவும். சாலிபிள் ஃபைபர் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நல்ல கொலஸ்ட்ராலுக்கு உதவி புரியும். இன்சாலிபிள் ஃபைபர் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு தரும். பாசிப்பருப்பு இட்லி தேவையானவை: பச்சரிசி, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெந்தயம் - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து, 8 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுக்கவும். இதை காரச் சட்னியுடன் பரிமாறவும். காய்கறி, பழங்களில் மட்டுமே கிடைக்கிற விட்டமின் 'சி', முளைகட்டிய பயறிலிருந்து நமக்கு எளிதில் கிடைத்துவிடும். சொதி தேவையானவை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 2, பொடியாக நறுக்கிய பீன்ஸ் (அ) அவரைக்காய் - கால் கப், சின்ன வெங்காயம் - 10, கீறிய பச்சை மிளகாய் - 6, இஞ்சி துருவல் - சிறிதளவு, வேக வைத்த பாசிப்பருப்பு - அரை கப், முதல் தர தேங்காய்ப்பால் - அரை கப், இரண்டாம் தர தேங்காய் பால் - ஒன்றரை கப், மூன்றாம் தர தேங்காய்பால் - 2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை. செய்முறை: பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்களை இரண்டாம், மூன்றாம் தர தேங்காய்ப்பாலில் வேக விடவும். காய்கள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பு, இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு சேர்த்து, முதல் தர தேங்காய்ப் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி குழம்பில் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். பயறு வகைகளில் விட்டமின் 'பி காம்ப்ளக்ஸ்', புரதம், இரும்புச் சத்து ஆகியவை நிறைய இருக்கின்றன. பயறு வகைகளில் இருக்கும் தாதுப் பொருட்களில் பொட்டாஷியம் அதிகமாக அடங்கியிருக்கிறது. பரங்கிக்காய் -பச்சைப்பயறு கூட்டு தேவையானவை: பரங்கிக்காய் - 250 கிராம், பச்சைப்பயறு - ஒரு கப், தேங்காய் - கால் மூடி, சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறை நன்றாக ஊற விடவும். முளைப்பயிறாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பயறுடன் பரங்கிக்காயை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். ஊட்டச்சத்து உணவான பயறு எளிதில் ஜீரணமாகிவிடும். பாசிப்பருப்பு சப்ஜி தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பருப்பு சேர்க்கவும். உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, மிதமான தீயில் மலர வேக விடவும். வெந்ததும் எடுத்து சப்பாத்தியுடன் பரிமாறவும். பச்சைப்பயறு உருண்டை தேவையானவை: பச்சைப்பயறு மாவு, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், உடைத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பயறு மாவை வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதில் ஏலக்காய்த்தூள் போட்டு, முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். நெய்யை சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக மாவில் கலந்து பிசைந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். பயறு வகைகள் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. சில வகை கேன்சர் நோய்களின் வீரியத்தையும் குறைக்க வல்லது. சம்பா கோதுமை -பாசிப்பருப்பு பொங்கல் தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி துருவல் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சம்பா கோதுமை, பாசிப்பருப்பை தனித்தனியாக வறுக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து, மிளகு, சீரகம், இஞ்சி, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி வந்ததும் நெய் ஊற்றி கிளறி முடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும். பாசிப்பருப்பு பாயசம் தேவையானவை: பாசிப்பருப்பு, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய்த் துண்டுகள், முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேக விடவும். வெல்லத்தைப் பொடி செய்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டவும். நெய்யில் முந்திரி, தேங்காய்த் துண்டுகளை போட்டு வறுக்கவும். வெந்த பாசிப்பருப்புடன் வெல்லக் கரைசல், வறுத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பாயச பக்குவத்தில் வந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். பாசிப்பருப்பு-சுரைக்காய் வடை தேவையானவை: சுரைக்காய் அரை கிலோ, பாசிப்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 2, அரிசி மாவு - 5 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விடவும். சுரைக்காயைத் துருவிப் பிழிந்து தண்ணீரை எடுத்துவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு, உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வடை மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பு முறுக்கு தேவையானவை: பாசிப்பருப்பு மாவு - 2 கப், பச்சரிசி மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், ஓமம் - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வறுத்த பாசிப்பருப்பு மாவு, பச்சரிசி மாவு, உப்பு, ஓமம், மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறி, தேவையான தண்ணீர் சேர்த்து முறுக்குமாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக சுட்டு எடுக்கவும். பாலக்- பயறு கச்சோரி தேவையானவை: பாலக்கீரை - ஒரு கட்டு, பச்சைப்பயறு - ஒரு கப், கோதுமை மாவு - அரை கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, என்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பயறை 8 மணி நேரம் ஊற விட்டு, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி, அரைத்த மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, கடாயில் போட்டுக் கிளறவும். கெட்டியானதும் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிய சப்பாத்திகளாக செய்து, நடுவில் உருண்டையை வைத்து மூடி, வட்டமாக (அ) விரும்பிய வடிவில் செய்யவும். இதை, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். (அ) தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டும் சுட்டெடுக்கலாம். ஃபிரைடு மூங்தால் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு, தண்ணீரை வடித்துவிடவும். பிறகு துணியில் போட்டு உலர்த்தவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பருப்பை பொரித்தெடுக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். உடல் அழகைக் கூட்டுவதற்கான பொருட்கள் தயாரிப்பில் பச்சைப்பயறு பயன்படுத்தப்படுகிறது. பாசிப்பருப்பு அல்வா தேவையானவை: பாசிப்பருப்பு, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். கடாயை சூடாக்கி அரைத்த விழுதைப் போட்டு, நெய் ஊற்றிக் கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து, அல்வா பதத்தில் சுருண்டு ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 5276111650648046903

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item