கீரைத்தண்டு பொரியல் தேவையானவை: தண்டுக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, மி...
கீரைத்தண்டு பொரியல்
தேவையானவை: தண்டுக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, மிளகுத்தூள் - கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தண்டுக்கீரையை ஆய்ந்து, தண்டை நார் நீக்கிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய கீரைத்தண்டைப் போட்டு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்து, வேக விடவும். அடுப்பில் இருந்து இறக்கும் முன் மிளகுத்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தண்டுக்கீரையில் மோர்க்கூட்டும், பாசிப்பருப்பு சேர்த்த கூட்டும் செய்யலாம்.
வெண்டைக்காய் ரோஸ்ட்
தேவையானவை : வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 மி.லி., உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துணியில் உலர விடவும். அதனை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் சேர்த்துக் கலந்துகொண்டு அந்த மாவில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாகப் பிசறி, அதனை எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 20, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும். இதனுடன் சுண்டைக்காய் வற்றல் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதோடு சாம்பார் பொடி போட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதித்து, வாசனை வரும்போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்துக்கு நல்லது. தயிர்ப் பச்சடி, சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
கலவைக் கூட்டு
தேவையானவை: கோஸ் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கத்தரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, குடமிள காய், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, பாசிப் பருப்பு - ஒரு சிறு கிண்ணம், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேகவிடவும், எல்லா காய்களையும் பொடியாக நறுக்கி, அளவான தண்ணீரில் வேக வைக்கவும். சீரகம், பச்சை மிளகாய், தேங்காயை அரைத்து காய்களுடன் சேர்த்து, உப்பு சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
குறிப்பு: சமயங்களில் எல்லா காய்களும் சிறிது சிறிதாக மீதம் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு கலவை காய் கூட்டு செய்யலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். எல்லா காய்களும் இருப்பதால் தொட்டுக்கொள்ள ஏதும் தேவை இருக்காது.
தத்துவப் பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் - 2, அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - (நறுக்கியது) 1, உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். அதில் வேப்பம்பூவைப் போட்டு வதக்கவும். மாங்காய்த் துண்டுகளை வேக விட்டு கரைத்து விடவும். வெல்லத்தை நன்கு பொடித்து, சிறிது உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
குறிப்பு: வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு என எல்லாம் கலந்தது என்ற தத்துவத்தை உணர்த்த தமிழ் புத்தாண்டு அன்று அனைவரது வீட்டிலும் இந்தப் பச்சடிக்கே முதலிடம்... இன்றும் கூட!
கேழ்வரகு மோர்க்கூழ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 200 கிராம், புளித்த மோர் - கால் லிட்டர், மோர் மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன்
செய்முறை: கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மோர்மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்து, கரைத்த மாவை ஊற்றி, நன்கு வேகும் வரை கிளறவும். கூழ் பதம் வந்தவுடன் இறக்கவும். சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
வெரைட்டி பருப்பு பொடி
தேவையானவை: கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டேபிள்ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை கடாயில் எண்ணெய் விடாமல் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். பாட்டிலில் கொட்டி, காற்று புகாதவாறு மூடி வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
குறிப்பு: வீட்டில் காய்கள் இல்லாத சமயம் இந்தப் பொடி பயன்படும். சுட்ட அப்பளம், தயிர்ப் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
வாழைப்பூ துவையல்
தேவையானவை: வாழைப்பூ - 1, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூ மடல்களைப் பிரித்து பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியற்றை சேர்த்து வறுக்கவும். பிறகு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையல், இஞ்சி மணத்துடன் வித்தியாசமான ருசியில் இருக்கும். இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.வாழைப்பூவை தனித்தனியாக உதிர்த்து பஜ்ஜி மாவில் தோய்த்தும் போடலாம்.
முருங்கை இலை பொரித்த குழம்பு
தேவையானவை: முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 1 கப், காய்ந்த மிளகாய் - 1, தனியா - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கவும். முருங்கைக்கீரையுடன் உப்பு சேர்த்து, தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து, வெந்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதை கீரையுடன் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்க்கவும். பிறகு, இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்தது.
கொள்ளுப் பொடி
தேவையானவை: கொள்ளுப் பயறு- 100 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொள்ளுப் பயறை தனியாக வறுத்துக் கொள்ளவும். மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை ஆகியவற்றையும் வறுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் நன்கு பொடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடி, கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இடுப்பெலும்பை வலுப்படுத்தவும் பயன்படும்.
வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, தயிர் - 200 மி.லி., தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, தயிரில் கலக்கவும். அதனை வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இந்தக் கூட்டு, தேங்காய் எண்ணெய் வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். வாழைத்தண்டு சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.
கோதுமை ரவை வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், கோஸ் துருவல் - ஒரு கப், இஞ்சி பேஸ்ட் - கால் டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - இரண்டு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்,
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய கேரட், குடமிளகாய், கோஸ் துருவல்,தேங்காய் துருவல் போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி பேஸ்ட், பெருங்காயத்தூள், மிளகு - சீரகத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, நன்கு கொதித்ததும் கோதுமை ரவையைத் தூவி கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன் மாவை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: எல்லா காய்களும் சேர்த்து இருப்பதால் இதை அப்படியே சாப்பிடலாம். டயாபடீஸ்காரர்களுக்கு மிகச் சிறந்த காலை நேர உணவு இது.
கீரை - தானிய சுண்டல்
தேவையானவை: தண்டுக்கீரை இலை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பாசிப்பயறு - கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை: கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பாசிப்பயறு, கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மிளகுத்தூள், பெருங்காயத்தூள், வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு முன் வேக வைத்த தானியங்களைச் சேர்த்து தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஸ்பிரிங் ஆனியன் ஊத்தப்பம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், துருவிய கேரட் - தலா 1 கப், பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1, தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கேரட் துருவல், இஞ்சி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து சிறிய ஊத்தப்பமாக வார்க்கவும்.
குறிப்பு: பார்வைக்கு கலராகவும் சாப்பிட ருசியாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக் கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பாசிப் பருப்பு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகத்திக்கீரை, பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து அளவான தண்ணீரில் வேக வைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்த அகத்திக் கீரை, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, தேங்காய் துருவல் தூவி, கிளறி இறக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை குடல்புண்ணுக்கு சிறந்த மருந்து.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டேபிள்ஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மணத்தக்காளி வற்றலையும் போட்டு வதக்கவும். வதங்கியதும் சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலக்கவும். ஒரு கொதி வந்ததும் புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு மணம் வந்ததும் இறக்கி, சிறிது பெருங்காயத்தூள் போடவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது.
முளைப்பயறு அடை
தேவையானவை: அரிசி - கால் கிலோ, முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊற வைத்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய கொண்டைக்கடலை, பாசிப்பயறு, இஞ்சி ஆகியவற்றை தனியாக அரைத்து அரிசி மாவுடன் கலக்கவும். பீர்க்கங்காயைப் பொடியாக நறுக்கி, மாவுடன் நன்கு கலந்து அடையாகத் தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடையின் இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடைக்கு இட்லி மிளகாய்ப்பொடி அல்லது வெல்லம் சிறந்த காம்பினேஷன்.
கொத்தமல்லி இடித்த புளி
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 6, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - ஒரு சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை: கொத்தமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி ஒரு துணியில் பரவலாகப் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைத்ததும் கொத்தமல்லி, புளி, உப்பு, வெல்லம் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
குறிப்பு: இது, தயிர்சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
சௌசௌ கூட்டு
தேவையானவை: சௌசௌ - 1, பச்சை மிளகாய் - 1, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சௌசௌவை தோல் சீவிப் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். பாசிப்பருப்பை குழைய வேக விடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த சௌசௌவுடன் பாசிப்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, சௌசௌ கலவையைப் போட்டு, கிளறி இறக்கவும்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணை - 6, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா கால் டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சம் பழம் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பிடிகருணையை வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். அதில் இஞ்சி, பச்சை மிளகாய், மசித்த பிடிகருணையைப் போட்டு நன்கு கிளறவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து மீண்டும் கிளறவும். கடைசியில் எலுமிச்சம் பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: பிடிகருணை மூல நோய்க்கு மிகவும் நல்லது. இதனை சாப்பிட்டால் அரிக்கும் என்பார்கள். நன்கு தோல் உலர்ந்த பழைய கிழங்கு அரிக்காது.
வல்லாரைத் துவையல்
தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வல்லாரைக்கீரையை வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பூண்டையும் உரித்து, வதக்கிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தேங்காய் துருவல், புளி, உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: வல்லாரைக்கீரை நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு, இந்த துவையலை சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பாகற்காய் தீயல்
தேவையானவை: பாகற் காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: பாகற்காயை சிறு வில்லைகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் புளிக் கரைசல் சேர்த்து, மிளகாய்த்தூள் போட்டு, நன்கு பிசறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் வறுத்தவுடன் வெல்லத்தூளைப் போட்டு கலந்து கொள்ளவும்.
குறிப்பு: பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த தீயல் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
நூல்கோல் பிட்லை
தேவையானவை: நூல்கோல் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: நூல்கோலை சிறு துண்டுகளாக நறுக்கி வேக விடவும். புளியைக் கரைத்து, வடிகட்டி அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நறுக்கிய நூல்கோலைப் போட்டுக் கொதிக்க விடவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை தனியே குழைய வேக விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, நூல்கோலில் சேர்க்கவும். வேக வைத்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துக்கு இந்த பிட்லை மிகவும் நன்றாக இருக்கும்.
புடலங்காய் ரோஸ்ட்
தேவையானவை: புடலங்காய் - கால் கிலோ, கடலை மாவு - 4 டீஸ்பூன், அரிசி மாவு, சோள மாவு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 மி.லி., உப்பு - தேவையான அளவு
செய்முறை: புடலங்காயை நறுக்கி, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு போட் டுப் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். புடலங்காயை நறுக்குவதற்கு முன்பே கழுவிவிடுவது நல்லது.
கத்தரிக்காய் சாதம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், கத்தரிக்காய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு சிறு கப், கரம் மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்,
செய்முறை: கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம், கரம் மசாலாதூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கி, சாதத்துடன் வதக்கிய காயைச் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: பிஞ்சுக் கத்தரிக்காயாக இருக்க வேண்டும்; சாதம் குழையாமல் இருக்க வேண்டும். இதற்கு பொரித்த அப்பளம் சிறந்த காம்பினேஷன்.
சேனைக்கிழங்கு ரோஸ்ட்
தேவையானவை: சேனை - கால் கிலோ, தனியா - 2 டீஸ்பூன், பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 6, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனையை தோல் சீவி பிரெட் துண்டு அளவில் நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். பூண்டு, வெங்காயம், தனியா, காய்ந்த மிளகாயை நன்கு அரைத்து, அதனுடன் கரம் மசாலாத்தூள் கலந்து, வேக வைத்த சேனை துண்டுகளில் பரவலாக இருபுறமும் தடவவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு துண்டாக ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
குறிப்பு: இது, மொறுமொறுவென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சோளம் சாலட்
தேவையானவை: சோளக்கதிர் - 2, வெள்ளரிக்காய் - 1, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1, மிளகாய்த்தூள் - கால் டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - கால் டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, குக்கரில் வைத்து உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். சோளத்தை உதிர்த்து, நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு மாலை நேர டிபனாகக் கொடுப்பதற்கு ஏற்ற சத்து நிறைந்த உணவு இது.
புளி-அவல் உப்புமா
தேவையானவை: அவல் - கால் கிலோ, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: புளியைக் கரைத்துக் கொள்ளவும். அவலை புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் போட்டு, இதனுடன் ஊற வைத்த அவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
மூலிகைப் பொடி
தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, மிளகு - 10, சுண்டைக்காய் வற்றல் - 6, வேப்பம்பூ - 6 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, சீரகம், மிளகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விடாமல் கறிவேப்பிலையை வறுத்தெடுக்கவும், சுண்டைக்காய் வற்றல், சீரகம், மிளகு, உளுத்தம்பருப்பை வறுக்கவும். வேப்பம்பூவை தனியாக வறுக்கவும். சுக்கை உடைத்து வறுக்கவும். இவை எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் வயிறு பிரச்னை சரியாகிவிடும்.
கேழ்வரகு மாவு இனிப்பு தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி, மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசை ஊட்டச்சத்து நிறைந்தது. இதை மாலை நேர டிபனாகக் கொடுக்கலாம்.
Post a Comment