சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி! ஹெல்த் ஸ்பெஷல்!!

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் சர...

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி
உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த சர்க்கரை நோய் இன்று 20 வயதினருக்குக்கூட வர ஆரம்பித்துவிட்டது என்பதே கசப்பான உண்மை. நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட, வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம்; அவசியமும்கூட. 'டாக்டர் விகடன்’ தரும் இந்த இணைப்பிதழ், அனைவருக்கும் நிச்சயம் ஒர் 'இனிப்பான’ வழிகாட்டியாக இருக்கும்.  
டாக்டர் பரணிதரன், சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்.
''சர்க்கரை நோயை 'மெட்டபாலிக் டிசீஸ்’ என்போம். நாம் சாப்பிடும் உணவு செரிமானத்தின்போது சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரைதான் நம் உடலில் உள்ள திசுக்களுக்கான உணவு. ரத்தம் உடல் முழுக்கப் பாயும்போது திசுக்கள் ஆக்சிஜனையும், சர்க்கரையையும் எடுத்துக்
கொள்ளும். இந்தச் சர்க்கரையை திசுக்கள் நேரடியாக எடுத்துக்கொள்ளாது. இதற்கு இன்சுலின் தேவை.
சிலருக்கு இன்சுலின் முற்றிலும் சுரக்காது அல்லது போதுமான அளவு சுரக்காது. சிலருக்கு சுரக்கும் இன்சு லினின் செயல்திறன் போதுமானதாக இருக்காது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை திசுக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதையே 'சர்க்கரை நோய்’ என்கிறோம்.
சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2, கர்ப்பகால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத் தவிர்த்து சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று நான்காவதாக ஒன்றும் உள்ளது.
டைப் 1 சர்க்கரை நோய்
இந்த பாதிப்பில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பது இல்லை. இதனால் இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறது.
டைப் 2 சர்க்கரை நோய்
இந்த டைப் நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது. அல்லது சுரக்கும் இன்சுலினைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இதை, 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ என்போம்.
இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் மற்றும் கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள மிகச்சிறிய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால் நீர் இழப்பு ஏற்பட்டு, தாகம் எடுக்கும்.
டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?  
45 வயதைக் கடந்தவர்கள்...
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்
கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தவர்கள்
குடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்
ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்
உடல் உழைப்பு அற்றவர்கள்
உடற்பயிற்சி செய்யாதவர்கள்
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
தாகம்
உடல் சோர்வு
பசி
பார்வை மங்கல்
உலர் சருமம் மற்றும் தோலில் அரிப்பு
காயங்கள் ஆறுவதில் தாமதம்
எதிர்பாராத உடல் எடை இழப்பு அல்லது
  உடல் எடை அதிகரிப்பு
அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏன் ஏற்படுகிறது?
திசுக்கள் சர்க்கரையைப் பயன்படுத்த முடியாத நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சிறுநீரகம் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதனால்தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது சர்க்கரையுடன் சேர்த்து சோடியம், பொட் டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் வெளியேறு கின்றன.
தாகம் ஏன் எடுக்கிறது?
உடலின் நீர்ச் சத்தை நிலைநிறுத்த போதுமான அளவு தண்ணீர் தேவை. அடிக்கடி சிறுநீர் வெளி யேறுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்டுவதற்காகவே தாகம் எடுக்கிறது.
சோர்வு ஏன் ஏற்படுகிறது?
போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் அல்லது இன்சுலின் செயல்திறன் குறைவாக உள்ள காரணத்தால் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைப்பது இல்லை. இதனுடன், சிறுநீரகமும் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றும்போது உடலுக்குத் தேவையான நீர் மற்றும் தாது உப்புக்களையும் சேர்த்தே வெளி யேற்றிவிடுகிறது. இதனால் சோர்வு ஏற்படுகிறது.
சர்க்கரையைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஏன் பசி ஏற்படுகிறது?
பொதுவாக பலருக்கு தாகம் என்ற உணர்வு பசியாக வெளிப் படும். மேலும் உடல் சோர்வாக உள்ள நேரத்தில், போதுமான ஆற்றலைப் பெற உடலும் பசி உணர்வை ஏற்படுத்தும். இதனால்தான் பலருக்குப் பசி உணர்வு ஏற்படுகிறது.
சருமம் ஏன் உலர்கிறது?
நீரிழப்பு ஏற்படுவதால் சருமத்துக்குத் தேவையான நீர் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போய்ச் சேருவது பாதிக்கப்படுகிறது. இதனால் சருமம் சுருங்கி, வறண்டுபோய் அரிப்பு ஏற்படுகிறது.
புண் ஆற ஏன் நாளாகிறது?
காயங்கள் ஆற ஊட்டச் சத்து அந்த இடத்துக்குப்போய் சேர வேண்டும். ஆனால், சர்க்கரை நோயாளிக்கு ஊட்டச் சத்து குறைவாகவே இருக்கிறது. மேலும், சர்க்கரை நோய் இருக்கும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடும் குறைவாகவே இருக்கும்.
உடல் எடை ஏன் குறைகிறது? அல்லது கூடுகிறது?
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாத நிலையில் உடல் எடை குறைகிறது. சிலர், அதிகப் பசி காரணமாக அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க...
1. வரும் வாய்ப்பு உண்டா?
சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என முதலில் குடும்ப மருத்துவரை அணுகி சில பரிசோதனைகள் செய்து கண்டறிய வேண்டும்.
2. கட்டுக்குள் உடல் எடை
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேருவது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக் கிறது. இந்த கொழுப்பு ஒரு கட்டத்தில் இன்சுலின் செயல்திறனைக் குறைத்துவிடுகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். பி.எம்.ஐ. அளவைக் கண்டறிந்து, அதன்படி உடல் எடை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. உடற்பயிற்சி
தினசரி 45 நிமிடம் முதல் ஒரு மணி நேர நடைப் பயிற்சி, மற்றும் கூடவே உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
4. சமச்சீரான உணவு
உடல் எடைக்கு ஏற்ற அளவு, ஊட்டச் சத்து மிக்க உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். அருகில் உள்ள ஊட்டச் சத்து நிபுணரை அணுகி, ஒரு நாளைக்குத் தேவையான கலோரி அளவு என்ன, என்ன மாதிரியான உணவு தேவை என்று ஆலோசனை பெற்று அதை கவனத்துடன் பின்பற்றவேண்டும். உணவில் அதிகப்படியான காய்கறி, பழங்கள், நார்ச்சத்து உள்ள உணவைச் சேர்த்துக்கொள்வது அவசியம். உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
5. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
எளிதில் சமைக்கக்கூடிய அல்லது சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவை முடிந்த வரை தவிர்க்கவேண்டும். பாக்கெட்டில் உள்ள ஊட்டச் சத்து விவரங்களில், சாச்சுரேட்டட், டிரான்ஸ்ஃபேட் உள்ளது என்றால் அதை தவிர்த்துவிட வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவையே எடுத்துக்கொள்வது நல்லது.
6. மது அருந்துதல் கூடாது
அதிக அளவில் மது அருந்துவது உடல் எடை அதிகரிக்கக் காரணம் ஆகிறது. மேலும் அது உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அளவையும் அதிகரித்து விடுகிறது.
7. புகைப்பிடிக்கும் பழக்கம் வேண்டாம்
சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், சிகரெட் புகைப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, புகைப் பழக்கத்தைத் தவிர்த்திடலாமே!
8. கட்டுக்குள் வைக்கவேண்டும் ரத்த அழுத்தத்தை...
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தொடர் உடற்பயிற்சியுடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தாலே, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், டாக்டரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரைகள் எடுத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
9. இதய நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம்
சர்க்கரை நோய், இதய நோய்க்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட ஒன்றே. இதய நோய்க்கான வாய்ப்பைத் தவிர்ப்பது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும்.
10. தொடர் பரிசோதனை
30 வயதைக் கடந்தவர்கள் டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, ரத்தத்தில் கொழுப்பு ஆகியவை கட்டுக்குள் இருந்தால், எந்தப் பாதிப்பும் நம்மை நெருங்காது.
கர்ப்பகால சர்க்கரை நோயைத் தவிர்க்க...
வாழ்க்கைமுறை மாறுபாடு, உணவுப்பழக்கத்தால்தான் சர்க்கரை நோய் வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் கர்ப்பகாலத்தில் பல பெண்கள் கவனக்குறைவாக இருந்துவிடுவதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. இது தற்காலிகமானதுதான். பிரசவத்துக்குப் பிறகு சர்க்கரை நோய் சரியாகிவிடும். இருப்பினும், எதிர்காலத்தில் மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரை நோயைத் தவிர்க்க முடியும்.
யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது?
 உடல் பருமன்
 முந்தைய பிரசவத்தில் உடல் எடை அதிகமாக குழந்தை பிறந்ததது
 கர்ப்பத்துக்கு முன்போ, கர்ப்ப காலத்திலோ சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது
 பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருப்பது
தடுக்க வழிகள்...
1. திட்டமிடல்
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர் பரிசோதித்து சர்க்கரை நோய் வர வாய்ப்புக்கள் உள்ளதா என கண்டறிவார். அப்படி இருந் தால் அதைத் தவிர்க்க மருந்துகள் பரிந்துரைப்பார். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடல், மனம், உணர்வு அடிப்படையில் தயாராக வேண்டியது மிகமிக அவசியம். உடல் எடை இயல்பான அளவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. தொடர் பரிசோதனை
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எவ்வளவு சர்க்கரை அளவு இருந்தது, கர்ப்பம் தரித்த பிறகு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இயல்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
3. ஆலோசனை
கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமானது என்று பலதரப்பட்ட உணவை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் ஆரோக்கியமானது எது என்ற புரிதல் இல்லை. நம்முடைய உணவு மூலமாகவே சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். எனவே, கர்ப்பம் தரித்ததும் உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள். காலை, மதியம், இரவு... இந்த மூன்று வேளை உணவுகளுக்கு நடுவே, மூன்று சிறிய அளவு உணவைப் பிரித்து ஆறு வேளையாக எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் தாய்க்கும் குழந்தைக்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதுடன், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும்.
4. ஆரோக்கியமான உடல் எடை
கர்ப்ப காலத்தில் எவ்வளவு உடல் எடை அதிகரிக்கலாம் என்பது பற்றி மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. வயிற்றில் உள்ள குழந்தைக்காக என்று அதிகப்படியான உணவை எடுத்து, உடல் பருமனாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. உடற்பயிற்சி
கர்ப்பகாலத்தில் பாதுகாப்பான உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். என்ன மாதிரியான பயிற்சி என்பதை டாக்டர் பரிந்துரைப்பார். அவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு...
சர்க்கரை நோய்க்கு தீர்வு இல்லை. ஆனால், வெற்றிகரமாக அதைக் கட்டுக்குள் வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, கட்டுப்பாடுமிக்க உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மட்டுமே! இது சர்க்கரை நோயால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து, பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு வாழ உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் கட்டமாக தங்களுடைய ஏ.பி.சி. (ABC) தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏ என்பது ஏ1சி பரிசோதனை. இதை எச்பிஏ1சி என்றும் சொல்வார்கள். கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்று ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுவைப் பரிசோதனை செய்து கண்ட றியப்படுகிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பரிசோதனைக்கு சில நாட்களுக்கு முன்பு மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்து தங்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுபோல காட்ட முயற்சிப் பார்கள். ஏ1சி பரிசோதனை மூலம் மூன்று மாதங்களில் எவ்வளவு இருந்தது என்பதைக் கண்டறிவதால் யாரும் தப்பிக்க முடியாது. பரிசோதனையில் ஏழுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை கட்டுப்பாடான அளவான 130-க்குள் இருக்கிறது அர்த்தம்.
பி என்பது ரத்த அழுத்தம். ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
சி என்பது கொலஸட்ரால். மொத்தக் கொழுப்பு 180-க்கு குறைவாக இருக்க வேண்டும். எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பு 45-க்கு குறையாமல் இருக்க வேண்டும். பெண்களுக்கு இது 50-க்கு குறையாமல் இருக்க வேண்டும். எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு 100-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
1. மாத்திரை மருந்துகள்
சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகள் அமைதியான வை. எனவேதான் இதை 'சைலன்ட் கில்லர்’ என்கி றோம். சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டறியப்பட்டால், டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. இன்று பலரும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளைப் புறக்கணித்துவிட்டு, கடைசியில் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வருகின்றனர். டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்து, இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எடுத்துக்கொள்ளும்போது, வேறு ஏதேனும் பக்கவிளைவு ஏற்பட்டால், அது பற்றி டாக்டரிடம் பேச வேண்டும்.
2. தினமும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்.
பலரும் மாதக்கணக்கில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ளாமல், டாக்டரின் ஆலோசனை பெறாமல் மாத்திரை மருந்தை மட்டும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப் பார்கள். இது தவறு. தினசரி முடியவில்லை என்றாலும் வாரத்துக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் என்று கண்டறிந்தால், உடனடியாக சர்க்கரை அளவைக் கண்டறியும் கருவியை முதலில் வாங்குங்கள். இதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரை அளவை தினமும் கண்காணிக்கலாம். நம்முடைய உணவு, அசிடிட்டி அளவு, மாத்திரை மருந்து, நோய், மன அழுத்தம் கூட ரத்தத்தில் சாக்கரை அளவை அதிகரிக்கலாம். ஒருவேளை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அளவுக்கு மீறி இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
3. வேண்டாமே சிகரெட் பழக்கம்
புகைப் பழக்கம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று பார்த்தோம். ஒருவேளை சர்க்கரை நோய் வந்துவிட்டால், புகைப்பழக்கம் அதன் பாதிப்புகளை அதிகரித்துவிடும். சிகரெட் பிடிக்கும் பழக்கமானது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது. மேலும் புகைப் பழக்கம் சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்தக் குழாய் பாதிப்பு, பாதங்களில் புண் போன்றவற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. சிகரெட் பழக்கத்தை நிறுத்திய பிறகு பலரும் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வார்கள். நிகோட்டின் குறைவை, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் சமாளிப்பார்கள். இதுவும் தவறானது. புகைப்பதை நிறுத்தினாலும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
4. உணவு பற்றிய புரிதல்
உணவுக் கட்டுப்பாடு ஏன் அவசியம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்று தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். எவை எல்லாம் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்ற புரிதல் வேண்டும். அரிசி, கோதுமையில்கூட கார்போஹைட்ரேட் உள்ளது. சிவப்பு அரிசியாக இருக்கும்போது அது சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்து விடுவது இல்லை. இதையே பாலீஷ் செய்து வெள்ளை அரிசியாக எடுத்துக்கொள்ளும்போதுதான் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்துவிடுகிறது. இதேபோல மைதாவில் செய்யப்பட்ட பொருட்களும் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்துவிடுகிறது. இதுபோன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
5. உணவு கட்டுப்பாடு
கார்போஹைட்ரேட் குறைவான உணவு மட்டும் ஆரோக்கியமானது என்று நினைக்காதீர்கள். சரிவிகித உணவு என்பது நார்ச் சத்து, வைட்ட மின்கள், தாது உப்புகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். வெறும் கார்போ ஹைட்ரேட் குறைவான உணவை மட்டும் எடுத்துக்கொள்வது சோர்வு உள்ளிட்ட வேறு விதமான பாதிப்பு களை ஏற்படுத்தலாம். எனவே, அதோடு சேர்த்து, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
6. மீன் உணவு
வாரத்துக்கு இரண்டு முறை மீன் எடுத்துக்கொள்ளலாம். மீனில் அதிக அளவில் புரதச் சத்து உள்ளது. இது கார்போஹைட்ரேட் போன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுவது இல்லை. மேலும், இறைச்சியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இதில் உள்ளது. நெய்மீன் போன்ற சிறிய வகை மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள ட்ரைகிளிசரைட்டைக் குறைத்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மீனை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்ததைத் தவிர்ப்பதே அனைவருக்கும் நலம்.
7. அதிக அளவு தண்ணீர் அருந்துங்கள்
சோடா, குளிர் பானங்கள், பழச்சாறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக விரைவாக அதிகரித்துவிடும். பெரும்பாலான குளிர்பானங்களில் சர்க்கரை அளவு மிகமிக அதிகமாக இருக்கிறது. எனவே இதைத் தவிர்த்து ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
8. பாதங்கள் பத்திரம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு 'நியூரோபதி’ எனப்படும் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படலாம். பெரும்பாலும் பாதங்களில்தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தினமும் பாதங்களைக் கவனிக்கவேண்டும். நன்றாக சோப் போட்டு வெதுவெதுப்பான நீர் ஊற்றிக் கழுவி, மென்மையாகத் துடைக்கவேண்டும். ஒருவேளை, நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், உணர்ச்சிக் குறைபாடு காரணமாக இது வெளியே தெரியாமலேயே இருக்கும். எனவே, பாதங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். நம் பார்வைக்கு படாத இடம் எனில், கண்ணாடியை வைத்துப் பார்த்து பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும். இதனால் கால் இழப்பு போன்ற பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
9. உடற்பயிற்சி
உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க ஆரோக்கியமான உடல் எடையும், உடற்பயிற்சியும் மிகமிக அவசியம். உடற்பயிற்சியானது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், நடனப் பயிற்சி போன்ற வற்றைச் செய்யலாம்.
10. விபரீதம் வேண்டாம்
சர்க்கரை அளவைக் குறைக்கிறேன் என்று ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக மோசமான அளவுக்குக் குறைத்துவிடவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரை மருந்துகள் எதுவாக இருந்தாலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
சில சந்தேகங்கள்...
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக சில சந்தேகங்கள் ஏற்படும். இதுபற்றி மருத்து வர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டியது மிக அவசியம். பொதுவாக எழக்கூடிய சந்தேகங்களும், அதற்கான தீர்வுகளும்:
1. ஏ1சி என்றால் என்ன?
கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ரத்தத்தின் சர்க்கரை அளவு என்ன என்பதைக் குறிக்கும் அளவு. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து காக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க இந்தப் பரிசோதனை உதவுகிறது. இந்த பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
2. கடைசியாக எடுத்த லிப்பிட் ப்ரொஃபைல் என்றால் என்ன?
இந்தப் பரிசோதனை, நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு எவ்வளவு என அறிய உதவுகிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. எச்.டி.எல். எனப்படுவது நல்ல கொழுப்பு. இது இதய நோயில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பானது இதயத்தைப் பாதிக்கக்கூடியது. கொழுப்பு அளவு தெரிந்தால்தான் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் தொடங்க முடியும்.
3. தொடர் ரத்தத்தில் சர்க்கரை கண்டறிதல் பரிசோதனை அவசியமா?
எந்த மாதிரியான மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது மற்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதைப் பொருத்து இது முடிவு செய்யப்படும். ஒருவேளை சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்த டாக்டர் பரிந்துரைப்பார்.
4. இன்னொரு உறவினரைப் போன்று உணவுப் பழக்கத்தைத் தொடரலாமா?
நாம் ஒவ்வொருவரும் வித்தி யாசமானவர்கள். ஒருவருக்குப் பொருந்துவது நமக்குப் பொருந் தாது. எனவே, டாக்டர் மற்றும் டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகமிக அவசியம்.
5. பாதத்தை ஏன் பராமரிக்க வேண்டும்?
ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு வரும்போதும் டாக்டர் அல்லது செவிலியர்கள் பாதங்களைப் பரிசோதிப்பார்கள். வீட்டிலும் பாதங்களைத் தினமும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்களில் ரத்த ஓட்டம் மற்றும் உணர்ச்சி குறைவாகவே இருக்கும். இதனால் புண் ஏற்பட்டால் ஆறாமல் வேறு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.
6. ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?
ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்குக் கீழாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அது கண்ணில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
7. மைக்ரோஅல்புமின் பரிசோதனை ஏன்?
இந்தப் பரிசோதனை, சிறுநீரகத்தின் செயல்திறனை பரிசோதிக்கச் செய்யப்படுகிறது. பரிசோதனையில் 30 மி.கி.க்கு கீழ் இது இருக்க வேண்டும். ஆரம்பநிலையிலேயே சிறுநீரில் புரதம் வெளியேறுவது கண்டறிவது, சிறுநீரகப் பாதிப்பைக் குறைக்கும்.
டாக்டர் கௌதமன், ஆயுர்வேத மருத்துவர்
மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்திக் கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ. 'மாடு சாப்பிடுவதை எல்லாம் மருந்து எனச்சொல்கிறாரே’ என்று நினைக்கலாம். இப்போது டி.என்.ஏ. கட்டமைப்பு உள்ள ஹியூமன் இன்சுலின், உலகம் முழுக்க வந்துவிட்டது. இதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்தில் இருந்தும், பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்தும்தான் இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஓர் ஆச்சர்யம் என்ன என்றால், சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலும், கோரைக் கிழங்கிலும், எள்ளுப் புண்ணாக்கிலும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்தும் அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டைக் கரைக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
கிராமங்களில் சர்க்கரை நோய் என்று தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களைப் பார்க்கவே முடியாது. அரை கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ, 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்துவைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கை அளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இப்படித் தொடர்ந்து செய்யும் போது, சர்க்கரை நோய் தானா கவே சரியாகிவிடும்.
இந்தியர்களுக்கு, உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
1. வெந்தயம்: சர்க்கரை நோயைப் பிரதானமாக கட்டுப் படுத்தக்கூடிய தன்மை வெந்த யத்துக்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள், வெந்தயம். வெந்தயத்தை வறுத்துவைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். இரவில், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்த யத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப் பாட்டுடன் இருக்கும்.
2. தக்காளி: உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
3. பாதாம்: தினமும் தண்ணீரில் ஊறவைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
4. தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டைக் கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிடத் தோன்றினால், அதனுடன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
5. பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.
6. காய்கறிகள்: அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரைகளை  உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
7. பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளைவிட, பருப்பு வகைகளால் ரத்தத்தில் குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது.
8. ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பு போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.
9. பழங்கள்: அதிக நார்ச்சத்து உள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.
10. உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் சிறிய அளவு உணவை, போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்து உள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
11. இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனைக் கலந்துகொள்ளலாம்.
12. உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்துக்குப் பக்கபலமாக நிற்கும்.
13. பாகற்காய்: பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.
சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சிறுநீரகச் செயலிழப்புகூட உண்டாகலாம். நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்துபோவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோய் இது.  
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்துவைத்து, திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும்போது சர்க்கரை கட்டுப்படும்.
சமையலில் சீரகத்துக்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்ப்பது, சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை
சர்க்கரை, கரும்பு, சாக்லெட், ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், ஜாம் வகைகள், பாலாடை கட்டிகள், திரட்டுப்பால், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், நுங்கு, சப்போட்டா, சீதாப்பழம், உலர் திராட்சை, சேப்பங் கிழங்கு, உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
அளவோடு சேர்த்துக் கொள்ளக் கூடியவை
கம்பு, ஓட்ஸ், அரிசி, அவல், ரவை, பார்லி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட்.
அதிக அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடியவை
பாகற்காய், சுரைக்காய், வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், கீரை, கண்டங்கத்திரி, கோவைக்காய், வெங்காயம், பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய், பப்பாளிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், நூல்கோல், சீமை கத்தரிக்காய்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்
கத்தரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக் காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்த வரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழைப் பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக் காய், சௌசௌ இவற்றுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பச்சடி யாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.
நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லா ரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை. இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துவந்தால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8053793253595131707

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 10:43:51 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,377

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item