'அசோலா' ஓர் அட்சயப் பாத்திரம்! - 14 ஆண்டுகள்! 3 லட்சம் விவசாயிகள்!
க டந்த 14 ஆண்டுகளாக ‘பசுமை விகட’னுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், பு...
கடந்த 14 ஆண்டுகளாக ‘பசுமை விகட’னுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில், பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள்பற்றிப் பேசுகிறது இந்த ‘மறுபயணம்’ பகுதி.
10.11.2007 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘அசோலா ஓர் அமுதசுரபி’ என்ற தலைப்பில் அசோலா தயாரிப்பு முறை, அதன் பயன்கள் குறித்துக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவின் ஒரு பகுதியான ‘இயற்கை வள அபிவிருத்தி திட்டம்’ குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரைக்குப் பிறகுதான் பெரும்பாலான தமிழக விவசாயிகளுக்கு அசோலா அறிமுகமானது. அசோலாவைத் தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தியதிலும், செலவு இல்லாமல் வளர்க்கும் செயற்கை முறை நீர்த்தொட்டி நுட்பம்குறித்து எடுத்துக் கூறியதிலும் விவேகானந்தா கேந்திராவுக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரத்துக்குச் சென்றோம்.
கேந்திரத்தின்
வாசலில் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீரை வழங்கிக் கொண்டிருந்தனர் அதன்
ஊழியர்கள். நாமும் ஒரு டம்ளர் குடிநீரைக் குடித்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.
வியக்கத்தக்க கட்டடக்கலையுடன் கூடிய செங்கல் வளைவு நம்மை வரவேற்றது. அதன்,
இரண்டு புறமும் காலியான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலில் குட்டிச்
சுவர்கள். 20-க்கும் மேற்பட்ட அசோலா தொட்டிகள், காய்கறிச் செடிகள்,
மூலிகைச் செடிகள் எனப் பச்சை பசேலெனக் காட்சியளித்தது. புதிதாக அசோலா
தொட்டி தயாரிப்புப் பணியைக் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தா
கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணனைச்
சந்தித்தோம்.
‘‘கபசுரக் குடிநீர் குடிச்சியளா?” என்றவர், மலையாள
மணத்துடன் பேசத் தொடங்கினார். ‘‘தமிழக விவசாயி கள் மத்தியில் அசோலாவை
அறிமுகப்படுத்தியதில் எங்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனாலும், அசோலா
உற்பத்திச் செலவைக் குறைக்கிற வகையில கேந்திரம் மூலம் சொல்லிக்கொடுத்த
எளிமையான ‘செயற்கை நீர்த்தொட்டி’ நுட்பம்தான் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தமிழகம் தாண்டி, கேரளா உள்ளிட்ட பல மாநில விவசாயிகளிடமும் அதைக் கொண்டு
போய்ச் சேர்த்தது பசுமை விகடன்தான்.
பசுமை விகடன்ல கட்டுரை
வெளியானதுமே, தமிழகத்தின் பல மாவட்டங்கள்ல இருந்தும் விவசாயிகள் போன் பண்ணி
விளக்கம் கேட்டாங்க. தினமும் 50-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரும். போன்
பண்ற விவசாயிங்களோட நம்பர்களைத் தனியா குறிச்சு வச்சோம். தொடர்ந்து, அசோலா
வளர்ப்புக்கான பயிற்சிகளை நடத்த ஆரம்பிச்சோம்.
விவசாயிகளைத்
தொடர்ந்து, கறவை மாடு வளர்ப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பயிற்சிக்கு வர
ஆரம்பிச்சாங்க. மகளிர் சுய உதவிக்குழுவினரும் அசோலா வளர்ப்புப் பயிற்சியை
எடுத்துக் கிட்டாங்க. ஒரு கட்டத்துல, ‘சார்... நாங்க 50 விவசாயிங்க தயாரா
இருக்கோம். மாடு, கன்னுகளை விட்டுட்டு அவ்வளவு தூரம் வந்துட்டு உடனே
திரும்ப முடியாதுங்க. எந்தத் தொந்தரவுமில்லாம பயிற்சி கொடுக் குறதுக்கு
எங்கள்ல சில விவசாயிங்களோட பண்ணை இருக்குதுங்க. நீங்க ஒரு நாள் நேர்ல வந்து
பயிற்சி தர முடியுமாங்க’ன்னு விவசாயிங்க ஆர்வத்தோடு கூப்பிட்டாங்க. அது
மாதிரி, 100-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தியிருக்கோம்.
ஒவ்வொரு
மாசமும் ரெண்டுமுறை ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி கொடுத்திட்டு இருக்கோம்.
ஆராய்ச்சி உதவியாளர்கள் பிரேமலதா, ராஜாமணி ரெண்டு பேரும் பயிற்சிக்
கொடுத்திட்டு இருக்காங்க.
ஒரு கிலோ அசோலா = ஒரு கிலோ புண்ணாக்கு
‘என்னைப்போல
கால்நடை வளர்க் கிறவங்க அதிக அளவுல எதிர்கொள்ளுற பிரச்னையே தீவனப்
பற்றக்குறைதாங்க. கறவை மாடுகளைப் பொறுத்தவரையில் 70 சதவிகிதம் வரை
தீவனத்துக்கே செலவாகிடுது. அப்படிச் செலவு செஞ்சாலும் சமச்சீரில்லாத
தீவனம், பாலின் உற்பத்தியைக் குறைச்சுடுது. அசோலா கொடுப்பதால் கணிசமான
தீவனச் செலவு குறையுது. கால்நடைகளோட வளர்ச்சிக்குத் தேவையான அமினோ
அமிலங்களும் அசோலாவுல இருக்குறதுனால எளிதா ஜீரணமும் ஆயிடுது. ஒரு கிலோ
அசோலா உற்பத்திக்கான செலவு ஒரு ரூபாய்க்கும் குறைவுதான். ஆனால், அதன்
மதிப்பு ஒரு கிலோ புண்ணாக்குக்குச் சமமானது. பாலின் உற்பத்தி 10 முதல் 20
சதவிகிதம் வரை கூடுதலாக் கிடைக்குது’ன்னு தென்காசியில இருந்து ஒருத்தர்
கடிதம் எழுதியிருக்காரு.
‘என்னால கால்நடைகளை வாங்கி அதுகளுக்கு
அசோலாவைத் தீவனமாக் கொடுத்து வளர்த்து விற்பனை செய்ய முடியாது. அதுக்கான
முதலீடுகளும் எங்கிட்ட இல்ல. ஆனா, அசோலாவை வளர்த்து அறுவடை செஞ்சு
சுத்தப்படுத்திப் பக்கத்துல இருக்குற கறவை மாட்டுப் பண்ணைக்குக்
கொடுக்குறேன். தினமும் 3 முதல் 5 கிலோ அறுவடை செஞ்சு ஒரு கிலோ 30 ரூபாய்னு
விற்பனை செய்றேன். இதனால தினமும் 100 முதல் 150 வரை வருமானமாக் கிடைக்குது’
இது தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் சொன்னது.
அதிகரிக்கும் முட்டையின் தரம்
‘கோழிகளுக்கு
அசோலாவைத் தீவனமாகக் கொடுத்ததால முட்டையின் தரமும் எண்ணிக்கையும்
அதிகரிச்சிருக்கு. கோழிக் குஞ்சுகளுக்குக் கொடுக்குற தீவனத்தில் அசோலாவைச்
சேர்த்துப் பார்த்ததில் குஞ்சுகளின் வளர்ச்சி நல்லா இருக்கு. கோழியின்
இறைச்சி கூடுதல் சுவையுடன் இருக்குது’னு கோழி வளர்ப்பாளர்கள் பலரும்
சொல்லியிருக்காங்க.
பாலில் போட்டுக் குடிக்கலாம்
‘அசோலாவை
மனிதர்களும் சாப்பிட லாம்’னு பயிற்சியில் சொன்னப்ப எல்லாரும் ஆச்சர்யமா
பார்த்தாங்க. ‘அசோலாவைக் கையில எடுத்தாலே மாட்டுச்சாணி நாத்தம் அடிக்குது.
இதை எப்படிச் சாப்பிடுறது’ன்னு நிறைய பேர் கேள்வி கேட்டாங்க.
‘கால்நடைகளுக்குத் தீவனமாக் கொடுக் குறதுக்கு முன்னாலயே நாலஞ்சு தடவை
தண்ணியில அலசி சுத்தம் செஞ்சு கொடுக்கச் சொல்றோம். அதுலயே சாண வாசனை
போயிடும். வேணும்னா கூடுதலா ரெண்டு தடவைக் கழுவிக்கோங்க. அசோலாவில்
கொழுப்பு இல்லாமல் புரதம் மட்டுமே இருக்கு. அதனால வடை, போண்டாவுல
கீரைக்குப் பதிலா அசோலாவைப் பயன் படுத்தலாம். அசோலாவைப் பசும்பாலில்
போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்’ என்றதும் மீண்டும் ஆச்சர்யமாகவே
பார்த்தாங்க” என்றவர் நிறைவாக,
“இந்த 14 வருஷத்துல கேந்திரத்தில்
500-க்கும் மேற்பட்ட நேரடிப் பயிற்சிகள் நடத்தியிருப்போம். நேரடியாகவே
15,000 பேருக்கும், விவசாயிகளின் பண்ணைகள், பயிற்சிக் கூட்டங்கள்,
கருத்தரங்குகள், கண்காட்சிகள்னு தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் சேர்த்து
சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்புப் பயிற்சி
கொடுத்திருப்போம். தமிழகத்தைவிடக் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான
விவசாயிகள் அசோலா உற்பத்தியைத் தொடர்ந்து செய்றாங்க.
அசோலா
உற்பத்தியைப் போலவே ‘சமையலறைக் கழிவுகளில் எரிவாயு’ உற்பத்தி செய்யும்
‘சக்தி சுரபி’ எரிவாயுக் கலன் பற்றிய கட்டுரையும் பசுமையில் வெளியானது.
அதன் பிறகே பல வீடுகள்ல காய்கறிக்கழிவும், உணவுக்கழிவும் எரிவாயுவாக
மாறிச்சு. கடந்த சில ஆண்டுகளாக வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், மண்புழு
உரம் தயாரிப்பு, பஞ்சகவ்யா, இ.எம் கரைசல் போன்ற இடுபொருள்கள் தயாரிப்பு,
மழைநீர் சேகரிப்பு போன்ற பயிற்சிகளும் கொடுத்திட்டு இருக்கோம்” என்றார்.
தொடர்புக்கு:
இயக்குநர்,
இயற்கை வள அபிவிருத்தித் திட்டம்,
விவேகானந்தா கேந்திரம்,
விவேகானந்தாபுரம்,
கன்னியாகுமரி – 629702
தொலைபேசி: 04652 246296
பராமரிப்பில் கவனிக்க வேண்டியவை
அசோலா
தொட்டியினுள் வெளி இலைகள் விழுந்துவிடாமலும், வீசும் புழுதிக் காற்றால்
தூசிகள் படியாமலிருக்கவும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவை உள்ளே புகுந்து
மிதித்து விடாமல் இருக்கவும், நிழல் வலையால் மேல் பகுதியிலும், நான்கு
புறமும் மூட வேண்டும். அசோலா வளர்ப்பில் பூச்சி, பூஞ்சணக் கொல்லிகளைப்
பயன்படுத்தக் கூடாது. தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரிக்கும்
குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது அதிவேகமாக வளரும்
தன்மையுடையது என்பதால், தினமும் அறுவடை செய்து, புதிதாக வளர்வதற்கு இடவசதி
அளிக்க வேண்டும். தினமும் குச்சியால் தண்ணீரைக் கிளறி விட வேண்டும்.
இதனால், நெருக்கடி இல்லாமல் வளரும். 10 நாள்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு
பங்கு தண்ணீரைத் தொட்டியிலிருந்து வெளியேற்றி, அதற்குப்பதிலாகச் சுத்தமான
தண்ணீரை நிரப்ப வேண்டும். மாதம் ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றிப்
புதிய மண் இட வேண்டும். 5 முதல் 6 மாதத்துக்கு ஒருமுறை, தொட்டியில் உள்ள
அனைத்து இடுபொருளையும் வெளியேற்றிவிட்டு, புதியதாக இடுபொருள்களைச் சரியான
அளவில் இட வேண்டும். அதில் புதிய அசோலா விதைகளைப் போட்டு மீண்டும்
உற்பத்தியைத் தொடக்க வேண்டும். வயலில் நாற்று நடவு செய்த 10 நாள்களில்
அசோலாவை (ஒரு ஏக்கரில் 200 கிலோ) போட வேண்டும். 20 முதல் 25 நாள்களில்
நிலம் வயல் முழுவதும் பரவிவிடும். மூடாக்குபோல இருப்பதால், தண்ணீர்
ஆவியாவது தடுக்கப்படும், களைகளையும் கட்டுப்படுத்தும். இரண்டாவது களை
எடுக்கும்போது அசோலாவை வயலில் மிதித்துவிட்டால், உரமாகும். உரச்செலவு 20
முதல் 30 சதவிகிதம் வரை குறையும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து
என மூவகைச் சத்துக்களும் அடங்கிய ஒரே தாவரம் இந்த அசோலா மட்டும்தான்.
சமையலறைக் கழிவுகளில் எரிவாயு
சாணம்
மட்டுமல்லாமல் பழைய சாதம், காய்கறி, பழக் கழிவுகள், மாமிசக் கழிவுகள்,
அரிசி களைந்த தண்ணீர், மீந்துபோன உணவுகள் ஆகியவற்றை ஊற்றி எரிவாயு தயாரிக்க
முடியும். நகர்ப்புறப் பகுதிகளில்கூடப் பயன்படுத்தும் வகையில் ‘சக்தி
சுரபி’ என்ற சிறிய சாண எரிவாயுக்கலன் கிடைக்கிறது. ஏற்கெனவே
பயன்படுத்தப்பட்ட சாண எரிவாயுவின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்தச்
சக்தி சுரபி. வழக்கமாகச் சாண எரிவாயுக்கலன் அமைக்க, பெரிய இடம்
தேவைப்படும். ஆனால், இந்த எரிவாயுக் கலனுக்குத் தனி இடம் தேவையில்லை.
சமையலறைக்கு உள்ளேகூட வைத்துக்கொள்ள முடியும்.
இதை அமைப்பதற்கு
ரூ.19,000 வரை செலவாகும். மானியமாக ரூ.5,500 அரசு தருகிறது. சாண
எரிவாயுக்கலன் அமைத்து எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும் என்பவர்களுக்கு
எரிவாயுக்கலன் அமைப்பது குறித்தும், அதைப் பயன்படுத்துவது குறித்தும்
பயிற்சி அளித்து வருகிறது விவேகானந்தா கேந்திரா.
செலவைக் குறைக்கும் செயற்கை நீர்த்தொட்டி
நிழலான
இடத்தில் 2 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் செங்கற்களைக் குறுக்கு
வசமாக வரிசையாக அடுக்கினால், செவ்வக வடிவத்தில் தொட்டி போன்ற அமைப்பு
அமையும். அதற்குள், பிளாஸ்டிக் சாக்குகளை (பழைய சாக்குகளே போதுமானது)
விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்க வேண்டும். அதற்கு மேல், 12
முதல் 15 கிலோ செம்மண் அல்லது வண்டல் மண்ணைப் பரப்பி விட வேண்டும். 8 முதல்
10 செ.மீ உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு
பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசுஞ்சாணத்துடன், 25 கிராம்
ராக் பாஸ்பேட் (இது இயற்கையானது) கலந்து தொட்டிக்குள் ஊற்றிவிட வேண்டும்.
அதில், அரைக்கிலோ அசோலாவைப் பரவலாகத் தூவ வேண்டும். 10 முதல் 15 நாள்களில்
10 மடங்குவரை பெருகியிருக்கும். தினமும் குறைந்தபட்சம் அரைக்கிலோ முதல் ஒரு
கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம். 500 கிராம் பசுஞ்சாணம், 10 கிராம்
ராக் பாஸ்பேட் 5 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை தொட்டிக்குள் கரைத்து
விட்டுக் கொண்டிருந்தால் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும். ஆடு, மாடுகள்
மட்டுமல்லாமல் கோழி, பன்றி, மீன், முயல் ஆகியவற்றுக்கும் பசுந்தீவனமாகக்
கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச்சாண வாசனை இருக்கும்
என்பதால், அசோலாவை 4 முதல் 5 முறை நன்றாகத் தண்ணீரில் அலசிய பிறகே
தீவனமாகக் கொடுக்க வேண்டும். அசோலா வளருமிடங்களில் அந்துப்பூச்சி,
கொசுத்தொல்லை இருக்காது.
Post a Comment