முடி வளர்ச்சிக்கான ரெசிப்பி!
அடர்த்தியான
கூந்தல், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். ''நீளமான, வலுவான கூந்தலைப்
பராமரித்தால் மட்டும் போதாது. சத்துக் குறைபாடுகூட, முடியின் தன்மையையும்,
வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கச் செய்துவிடும்.
தலைமுடிக்கான சமச்சீர் உணவை உண்பதன் மூலமே, ஆயுள்
முழுவதும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிற டயட் கன்சல்டன்ட் யசோதரை
கருணாகரன், முடி வளர்ச்சிக்கான சத்துக்களைப் பட்டியலிட்டார்.
''அன்றாட வளர்ச்சிக்கும், வலுவான கூந்தலுக்கும் புரதம்
மிகவும் அவசியம். கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்றவை
முடியின் தன்மையை மேம்படுத்தும்.
போஷாக்கான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி மிகவும்
அவசியம். வைட்டமின் இ, தலையில் ரத்த ஓட்டத்தை சீர்செய்து, முடி கொட்டுவதைத்
தடுக்கும். முடியின் நுனிப்பிளவைத் தவிர்க்கச் செய்யும். முடிச் சிதைவைச்
சீர் செய்ய துணைபுரியும்.
முடி கொட்டுவதைத் தடுத்து முடி நன்கு வளரச் செய்வதற்கு
உதவுகிறது துத்தநாகம். இரும்புச் சத்து, முடி ஆரோக்கியத்துடன் வேர் விட்டு
வலுப்பெற்று வளர முக்கியமாகத் தேவைப்படுகிறது. முடியின் நிறமான கருமையை
மெருகேற்றுவதுடன் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது செம்பு.
ஆரோக்கியமான வலுவான செல் இயக்கத்துக்கு வைட்டமின் ஏ
மிகவும் அவசியம். இதனால், முடியின் ஆரோக்கிய வளர்ச்சியை மேம்படுத்த
முடியும்'' என்கிற யசோதரை, இந்தச் சத்துக்கள் அடங்கிய உணவு ரெசிப்பிகளைச்
சொல்லி, அவற்றைச் செய்தும் காட்டினார்.
முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்
தேவையானவை: முருங்கைக் கீரை - 2 கப், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2- 3, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரை கப்
கொதிக்கும் உப்பு நீரில் பொடியாக நறுக்கிய முருங்கை கீரையைச் சேர்த்து
வேகவிடவும். கீரை சீக்கிரமே வெந்துவிடும். வறுத்த கடலை மற்றும் வறுத்த
காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றிரண்டாக அரைக்கவும். கீரை வெந்ததும் நீர்
சுண்ட, சுருளக் கிளறவும். இதில், அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி
இறக்கவும்.
மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், வைட்டமின் ஏ சத்துக்கள் அடங்கியுள்ளன.
முளைகட்டிய பயறு சோயா கிரேவி
தேவையானவை: முளை
கட்டிய பாசிப் பயறு - அரை கப், மிகச் சிறிய சோயா உருண்டைகள் - கால் கப்,
இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் -
2, தக்காளி - 1, எண்ணெய் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகு,
சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய் - 3, மஞ்சள்தூள் - சிட்டிகை, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: பயறைத் தனியாக வேகவிடவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவவும்.
எண்ணெயில் மிளகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு
விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தைத் தனியாக வதக்கவும்.
மிளகு, சீரகக் கலவையை அரைத்து, அதில் வதக்கிய
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ஓரளவுக்கு அரைக்கவும். வெந்த
பயறில் சோயா, அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்
விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். புரதச்சத்து நிறைந்த உணவு இது.
கேரட் - தயிர் பச்சடி
தேவையானவை: கேரட் -
2, கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க, காய்ந்த மிளகாய் விதை - அரை
டீஸ்பூன், சர்க்கரை - 2-3 தேக்கரண்டி, உப்பு - அரை சிட்டிகை, கறிவேப்பிலை -
சிறிது, தயிர் - அரை கப்.
செய்முறை: கேரட்டைத் துருவி, அதில் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இதில் வைட்டமின் - ஏ சத்து அதிகம் உள்ளது.
கொட்டை பழக்கலவை
தேவையானவை: அக்ரூட் - ஒரு பிடி, பாதம் - 10, பேரீச்சம்பழம் - 4, அத்திப்பழம் - 2.
செய்முறை: அக்ரூட்
மற்றும் பாதாம் பருப்பு ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறு
துண்டுகளாக்கிய பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழத்தைச் சேர்த்து நன்றாகக்
கலக்கி பரிமாறவும். இதில் ஒமேகா - 3, இரும்புச்சத்து, வைட்டமின் பி
சத்துக்கள் உள்ளன.
முளைக்கட்டிய பயறு அடை
தேவையானவை: முளைக்கட்டிய
கொண்டைக்கடலை, மைசூர் பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, 3,
உப்பு - தேவை யான அளவு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: காய்ந்த
மிளகாய், உப்பு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை, ஊற வைத்த மைசூர் பருப்பு,
பெருங்காயம், கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக
அரைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடை பதத்துக்கு
தண்ணீர் விட்டுக் கலக்கவும். அதிகம் எண்ணெய் விடாமல் அடை வார்த்து
எடுக்கவும்.
அதிக புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவு இது.
கருகரு கூந்தலுக்கு டிப்ஸ்
காலை வெறும் வயிற்றில் முளைகட்டிய பாசிப்பயறு அரை கப் சாப்பிடுங்கள். அதிகப் புரதச்சத்து கிடைக்கும்.
தலைக்கு முட்டையைத் தேய்த்துக் குளிப்பதைவிட, உண்பதே சிறந்தது.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் - ஏ நிரம்பிய கறிவேப்பிலையை அப்படியே உணவில் சேர்க்காமல், சமையலில் அரைத்துச் சேர்க்கலாம்.
அக்ரூட் கொட்டையை ஒரு பிடி, காலை உணவுக்கு பத்து நிமிடங்கள் கழித்துச் சாப்பிடவும். அப்போதுதான் ஒமேகா - 3 உடலில் உறிஞ்சப்படும்.
வாரத்தில் இரு முறை மீன் உணவைச் சேர்த்துக்கொள்ளவும்.
சமையலுக்கு துவரம் பருப்புக்கு பதிலாக மைசூர் பருப்பை சேர்த்துக்கொள்வதால் புரதமும் இரும்புச் சத்தும் ஒருங்கே கிடைக்கும்.
கொழுப்புச்
சத்து குறைவாக உள்ள 'க்ரீக் யோகர்ட்’ எனப்படும் தயிரை எடுத்துக்கொள்வதன்
மூலம் முடியின் போஷாக்கான வளர்ச்சியைப் பாதுகாக்கும். புரதம், வைட்டமின் -
பி5, வைட்டமின் - டி சத்துகள் எளிதில் கிடைத்துவிடும்.
Post a Comment