நன்றி பாராட்டுதல்!--பெட்டகம் சிந்தனை
ஒரிறை கொள்கையைப் போதித்த கோமான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள். மனிதனை மனிதன் அடிமைப...

https://pettagum.blogspot.com/2012/06/blog-post_428.html
ஒரிறை கொள்கையைப் போதித்த கோமான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மக்கள் அனைவரும்
ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி கொடுமை
புரிதல் கூடாது என்றே அல்லாஹ் திருமறையில் அடிமை விடுதலையை விவரித்து கூறுகிறார்.
""அடிமையை விடுதலை செய்வது அகபா என்னும் உயரிய தர்மம் ஆகும். அந்த தர்மம்
புரிவோரின் புகலிடம் சொர்க்கம்'' என்று திருக்குர் ஆனின் 90-12, 13,18 வது வசனங்கள்
வாகாய் கூறுகின்றன.
அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர் பெருமைக்குரிய இஸ்லாத்தை முதலில் ஏற்ற ஆண்
மகன் என்ற சிறப்புடைய அபூபக்கர் (ரலி) அவர்கள் அக்காலத்தில் அஞ்ஞான அரபிகளிடம்
அவதியுற்ற அடிமைகளைக் கண்ட பொழுதெல்லாம் விலை கொடுத்து விடுவித்து விடுதலை
வழங்கினார்.
இஸ்லாத்தை தழுவிய நஹ்தியா என்ற பெண்ணும் அவரின் மகளும் அப்துத்தார் என்பவரிடம்
அடிமையாக இருந்தனர். அபூபக்கர் (ரலி) அவர்கள் அப்துத்தாரிடம் அவர்களுக்குரிய
விலையைக் கொடுத்து வாங்கி விடுதலை கொடுத்தார்கள்.
விடுதலை பெற்ற வேளையில் அப்பெண்கள் மாவு அரைத்துக் கொண்டிருந்தனர்.
அரைகுறையாக வேலையை விட்டுவிட்டு எழாது முழு மாவையும் அரைத்துக் கொடுத்துவிட்டுப்
புறப்பட்டனர். புறப்படும் பொழுது இத்தனை காலம் அவர்களுக்கு உணவளித்த
உரிமையாளர்களுக்கு நன்றி கூறினர்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி பகர்வது, பாராட்டுவது, இறைவனுக்கு நன்றி
செலுத்துவதற்கு அடிப்படையாய் அமையும். அல்லாஹ், "" மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு
நன்றி செலுத்த வேண்டும்'' என்று திருக்குர் ஆன் 32-9வது வசனத்தில் கூறுகிறார்.
அப்பெண்களின் கடமை உணர்வையும் நன்றி விசுவாசத்தையும் அபூபக்கர் (ரலி)
பாராட்டினார்கள்.
நாமும் கடமை உணர்வோடு காரியமாற்றி நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி மறவாது
உள்ளம் ஒன்றி நன்றி நவின்று நல்லன செய்வோம். வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப்
பெறுவோம்.
Post a Comment