ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி!

ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி!   ``எ ங்க பாட்டி, அம்மா எல்லாம் ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... ஹூம், அது மாதிரி இப்ப எங்க ...

ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி!
 
``எங்க பாட்டி, அம்மா எல்லாம் ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... ஹூம், அது மாதிரி இப்ப எங்க கிடைக்குது’’ என்று பெருமூச்சுவிடும் பெரியவர்களுக்கும், ``அசத்தலான அயிட்டம் எல்லாம் ஹோட்டல் மெனு கார்டுலதான் பார்க்க முடியுது’’  என்று உதட்டைப் பிதுக்கும் `யூத்’களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் இல்லத்தரசிகள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்த உதவும் வகையில், ஒவ்வொரு பொருளிலும் பாரம்பர்ய சமையல், மாடர்ன் சமையல் என்று இரண்டு வித ரெசிப்பிக்களை உருவாக்கி, இங்கே வழங்குகிறார் சமையல்கலையில் ஆர்வமும், அனுபவமும் மிக்க அ.சாரதா. அந்த ரெசிப்பிக்களை அழகுற சமைத்துக்காட்டி அசத்தியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
கரண்டி எடுங்க... களத்துல இறங்குங்க... கலக்குங்க!

மிளகுக்குழம்பு
தேவையானவை: மாங்காய் வற்றல் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - கால் கப், கெட்டியான புளிக்கரைசல் - ஒன்றரை கப், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: மிளகு - ஒன்றரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில்  வறுத்து, கொரகொரப்பாக பொடிக்கவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கறிவேப்பிலை, மாங்காய் வற்றல் சேர்த்து, புளிக்கரைசலோடு ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து இதில் ஊற்றி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:  இந்தக் குழம்பு  ஊற ஊற சுவை கூடும். சில நாட்கள் வரை கெடாது. இதை பூண்டுப் பற்கள் சேர்த்தும் செய்யலாம். சூடான சாதத்தில், மிளகு குழம்பு சேர்த்து, சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட்டால், தேவாமிர்தம் போல் சுவை தரும்.

பேபிகார்ன் - பெப்பர் ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - 10-15 (நீளவாக்கில் வெட்டவும்), குடமிளகாய், தக்காளி - தலா 2, வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - அரை கட்டு, இஞ்சி - சிறிய துண்டு, மிளகுத்தூள் - இரண்டு டீஸ்பூன், அஜினோமோட்டோ - முக்கால் டீஸ்பூன், கடலை மாவு - 3 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோயா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: குடமிளகாய், தக்காளி,  வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். நீளவாக்கில் வெட்டிய பேபி கார்னில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கால் டீஸ்பூன் அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவிட்டு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் குடமிளகாய், தக்காளி, மிளகுத்தூள்,  பொரித்த பேபிகார்ன் சேர்த்துக் கிளறவும். சோயா சாஸ், மீதமுள்ள அரை டீஸ்பூன் அஜினோமோட்டோ சேர்த்து மேலும் கிளறி, சோள மாவை கரைத்துவிட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.
பூரி, சப்பாத்தி, நாண், புல்கா, ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுக்கு  இது சூப்பர் டிஷ். இதை தனியாகவும் சாப்பிடலாம்.

ஷாஹி ஆலூ
தேவையானவை: உருளைக்கிழங்கு - 500 கிராம், பட்டை - சிறு துண்டு, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, பூண்டு பற்கள் - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: கசகசா - முக்கால் டீஸ்பூன், முந்திரி - 7, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை  - சிறிதளவு, இஞ்சி - சிறு துண்டு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கசகசா, முந்திரியை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பூண்டு பற்கள், அரைத்து வைத்த விழுது, உருளைகிழங்குத் துண்டுகள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒன்றரை, அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு திறந்து... புதினா, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்
பூரி, சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸ், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், நெய் சாதம் என எல்லாவற்றுக்கும் ஏற்ற காம்பினேஷன் இந்த ஷாஹி ஆலூ.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 500 கிராம், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன்,  கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துப் பிசிறி உதிர்க்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து, உதிர்த்த கிழங்கையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கு இது சூப்பர் காம்பினேஷன்!

பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக் கிழங்கு - அரை கிலோ (வேகவைக்கவும்), வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - பெரிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், கெட்டியான புளிக்கரைசல் - ஒன்றரை கப், கடுகு - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வேகவைத்த பிடிகருணைக் கிழங்கை மசிக்கவும். அதோடு புளிக்கரைசல், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் பருப்பை சேர்த்துக் கலந்து இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து மசியலில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்தால் கூடுதல் மணம், சுவை கிடைக்கும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.  துவையல் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம்.

பிடிகருணை கட்லெட்
தேவையானவை: பிடி கருணைக் கிழங்கு - 500 கிராம் (வேகவைக்கவும்), கெட்டியான புளிக்கரைசல் - கால் கப், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கட்டு (பொடியாக நறுக்கவும்), பிரெட் கிரம்ப்ஸ் (பிரெட் தூள்) - ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வேகவைத்த பிடிகருணைக் கிழங்கை மசிக்க வும். அதோடு மிளகாய்த்தூள், கிராம்புத்தூள், உப்பு, கொத்த மல்லித்தழை சேர்த்து, புளிக் கரைசல் கலந்து, தேவை யானால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துப் பிசைந்து, வேண்டிய வடிவங்களில் செய்துகொள்ளவும். இதை பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு, பொன்னிறமாக இருபக்கமும் வேகவிட்டு எடுக்கவும் (தோசைக் கல்லில் போடும்போது நடுவில் முந்திரி பதிக்கவும்).
இதற்கு சாஸ் அட்டகாசமான ஜோடி.

கொத்தவரங்காய் பருப்புசிலி
தேவையானவை: கொத்தவரங்காய் - 500 கிராம், துவரம்பருப்பு - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 6, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து... காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தவரங்காயை நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து,  அரைத்த துவரம்பருப்பை உதிர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து வேகும் வரை வதக்கவும். வெந்ததும் கொத்தவரங்காயை சேர்த்துக் கிளறி, தேங்காய் எண்ணெய் 2 சொட்டு விட்டுக் கிளறி இறக்கவும்.
இதை ரசம் சாதம், சாம் பார் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம், சூடான சாதத்தோடும் கலந்து சாப்பிடலாம். அரைத்துவிட்ட ரசம், பூசணி மோர்க்குழம்புக்கு இது அமர்க்களமான காம்பினேஷன்.

சோயா சங்க்ஸ் பருப்புசிலி
தேவையானவை: சோயா சங்க்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம், துவரம்பருப்பு - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை அரை மணி ஊறவைத்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சோயா சங்க்ஸ் உடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வெந்நீரில் போட்டு வைக்கவும். பிறகு, அதை எடுத்துப் பிழிந்து, சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவரம்பருப்பு விழுதை உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி, பருப்பு வெந்ததும், சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.
டோஃபு (சோயா பனீர்) பயன்படுத்தியும் இதைச் செய்யலாம். சோயா சங்க்ஸுக்குப் பதில் (இறக்கும் சமயத்தில்) பொடியாக நறுக்கிய டோஃபு சேர்த்து இறக்கவும். இது சத்துமிக்கது. இதையே தனி உணவாக சாப்பிடலாம்.

மிக்ஸ்டு வெஜ் மஞ்சூரியன்
தேவையானவை: காய்கறி கலவை (பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, குடமிளகாய்) - அரை கிலோ, மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒன்றரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் - அரை கட்டு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: காய்கறிகளை சதுரமாக, பொடியாக நறுக்கவும். காய்கறி கலவையோடு மைதா மாவு, அரிசி மாவு, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, அஜினோமோட்டோ, ஒரு சொட்டு சோயா சாஸ் கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி உருண்டைகளாக்கி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியதும், மிளகுத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து... பொரித்து வைத்த உருண்டைகள், மீதமுள்ள சோயா சாஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து, சோள மாவை கரைத்து விட்டு, பளபளவென வந்து கெட்டியானதும், நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
இந்த வெஜ் மஞ்சூரியன்... ஃப்ரைடு ரைஸ், சப்பாத்திக்கு ஏற்ற ஜோடி. இதை தனியாகவும் சாப்பிடலாம்.

அவியல்
தேவையானவை: நறுக்கிய காய்கறி கலவை - அரை கிலோ (சேனைக் கிழங்கு, கத்திரிக்காய், வாழைக்காய், சௌசௌ, அவரைக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட்) புளிப்புத் தயிர் - ஒன்றரை கப், தேங்காய் - அரை  மூடி, பச்சை மிளகாய் 4 , காய்ந்த மிளகாய் 4, சீரகம் -  ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒன்றிரண்டாக அரைக்கவும். காய்கறிகளை வேகவைக்கவும். வெந்த காய்கறி கலவையோடு அரைத்த தேங்காய் விழுது, புளிப்புத் தயிர், உப்பு கலந்து கொதிக்கவிடவும். சிறிது நுரைக்கும்போது, தேங்காய் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

புடலங்காய் கூட்டு
தேவையானவை: பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ (அரை வில்லைகளாக நறுக்கவும்), நாட்டுத் தக்காளி - 3, புளிப்புத் தயிர் - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: தேங்காய் எண் ணெய் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,  காய்ந்த மிளகாய் - 7 (அல்லது காரத்துக்கேற்ப), உளுத்தம்பருப்பு ஒரு  டீஸ்பூன், அரிசி மாவு - அரை டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய தக்காளி, புடலங்காய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, திட்டமாக தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் குக்கரை அணைத்துவிடவும். பிறகு, குக்கரைத் திறந்து அரைத்த விழுது, தயிர், உப்பு கலந்து இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள் தூவிக் கலந்து, சூடாகப் பரிமாறவும்.

புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி
தேவையானவை: பிஞ்சு புடலை - அரை கிலோ (நீள ட்யூப் போல வெட்டிக் கொள்ளவும்), கடலை மாவு - கால் கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
ஸ்டஃப்பிங்குக்கு: பனீர் - கால் கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பனீரை உதிர்த்து, அதனுடன் ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் ஆகியவற்றை, நீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வெந்நீரில் உப்பு சேர்த்து வெட்டிய புடலைத் துண்டுகளை 10 நிமிடம் போட்டு வைத்து எடுத்து... அதனுள் ஸ்டஃப்பிங்கை அடைத்து கரைத்துவைத்த மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பூசணி மோர்க்குழம்பு
தேவையானவை: வெள்ளைப் பூசணி - ஒரு கீற்று (பெரிய துண்டுகளாக நறுக்கவும்), புளிப்புத் தயிர் - ஒன்றரை கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - முக்கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, அரிசி - தலா கால் டீஸ்பூன் (பருப்புகள், அரிசியை அரை மணி ஊறவைத்து, அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து விழுதாக அரைக்கவும்).
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: தயிரை லேசாக கடைந்து, அதனுடன் அரைத்த விழுதைக் கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு,  தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பூசணியை சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், தயிர் கலவையை சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நுரைத்ததும் இறக்கிவிடவும்.
அடை, சூடான சாதம், இடியாப்பம் போன்றவற்றுக்கு இது சூப்பர் ஜோடி.

டயட் அடை
தேவையானவை: வெள்ளைப் பூசணித் துருவல் - 2 கப், கோதுமை ரவை - இரண்டரை கப், கொத்தமல்லித்தழை - கால் கட்டு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை, உப்பு - தேவைகேற்ப.
செய்முறை: பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை  பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும். பூசணித் துருவலில் உப்பு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். நீர் விட்டிருக்கும். கொடுக்கப் பட்டுள்ள மற்ற பொருட் களை அதோடு கலந்து, 10 நிமிடம் ஊறவிட்டு மெல்லிய அடைகளாக தட்டி எடுக்கவும்.

குறிப்பு: நறுக்கிய தக்காளி சேர்த்து தயாரித்தால், மேலும் சுவையாக இருக்கும். குறைந்த கலோரி  உணவு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவும்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ (வேகவைத்து, தோலுரித்து, கட் செய்யவும்), கெட்டியான புளிக்கரைசல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,  தேங்காய் எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயோடு பெருங்காயத்தூள், புளிக்கரைசல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, உப்பு சேர்க்கவும். சேப்பங்கிழங்கு துண்டுகளில் இக்கலவையை தடவி 10 - 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலையை சேர்த்துக் கிளறவும். பிறகு, ஊறிய சேம்புக் கலவையை சேர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து நன்கு ரோஸ்ட் செய்து இறக்கவும்.
குறிப்பு: கூடுதல் மொறு மொறுப்புக்கு கொஞ்சம் அரிசி மாவு தூவி ரோஸ்ட் செய்யலாம்.

சேப்பங்கிழங்கு கோல்டு காயின்ஸ்
தேவையானவை: சேப்பங் கிழங்கு - அரை கிலோ (வேக வைத்து, தோலுரிக்கவும்), கடலை மாவு - ஒன்றரை டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றே முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வேகவைத்த கிழங்கோடு மற்ற பொருட்களைக் கலந்து, பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கி, தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.

பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப்.
செய்முறை: துவரம்பருப்பை ஊறவைக்கவும். ஊறிய பருப்போடு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையை உருண்டைகளாக்கி, இட்லித் தட்டில் வைத்து, இட்லி குக்கரில் 15 நிமிடம் வேகவிடவும். கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கி... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்ததும், உருண்டைகளை சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும் (கொஞ்சம் நீர்க்க இருந்தால், ஆற ஆற குழம்பு திக்காகிவிடும்).
மசித்த கீரை, சுட்ட அப்பளம் இதற்கு அட்டகாசமான காம்பினேஷன்.

பக்கோடா குருமா
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - 4, நாட்டுத் தக்காளி - 3, புளிக்கரைசல் - 3 கப் (கொஞ்சம் தளர்வாக கரைக்கவும்), பச்சை மிளகாய் 3, இஞ்சி - சிறு துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், தனி மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றே முக்கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஊறவைத்து, கொர கொரப்பாக அரைக்கவும். 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இதை அரைத்த கடலைப்பருப்போடு கலந்து, சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, ஒரு  பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) சேர்த்து, சூடான எண்ணெயில் அரை வேக்காடு பதத்தில் பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
மீதமுள்ள 2 வெங்காயத்தை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும். பிறகு புளிக்கரைசல், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பொரித்த பக்கோடா, தனி மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து நன்கு கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான இந்த டிஷ்... இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துக்கு நல்ல காம்பினேஷன்.

ரவா சாண்ட்விச்
தேவையானவை: ரவை - ஒன்றே கால் கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,  சீஸ் துருவல், தக்காளி சாஸ் - தேவையான அளவு, ஃப்ரூட்டி பிரெட் - ஒரு பாக்கெட், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி, ரவையுடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, பாலில் அரை மணி ஊறவிடவும். பிரெட் ஸ்லைஸின் மேல் இந்தக் கலவையை தடவி, சிறிதளவு சீஸ் தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து மூடி, தவாவில் போட்டு, இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும் (அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). சாஸ் உடன் பரிமாறவும்.

ரவை உப்புமா
தேவையானவை: ரவை - ஒரு கப் (வறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் ரவையை சேர்த்து, கட்டிதட்டாமல் கிளறி, வெந்ததும் இறக்கிவிடவும்.

கீரை - பனீர் கட்லெட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், துருவிய பனீர்  - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன், கிராம்புத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), எண் ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, விரும்பிய வடிவத்தில் கட்லெட்களாக செய்து, சூடான தவாவில் போட்டு, சிறி
தளவு எண்ணெய் விட்டு, பொன் னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான காம்பினேஷன்.
குறிப்பு: இதை எந்த வகை கீரையிலும் செய்யலாம்.

கீரை மொளகூட்டல்
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் - கால் மூடி, காய்ந்த மிளகாய் - 4, கடுகு, சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், புளிப்புத் தயிர் - அரை கப், தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: முளைக் கீரையை பொடியாக நறுக்கி, மண் போக நன்கு அலசி, கடாயில் வேகவிடவும். தேங்காய், காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்
பான விழுதாக அரைத்து, வெந்த கீரையோடு சேர்க்கவும். உப்பு, தயிர், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.

கத்திரிக்காய் துவையல்
தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம் (வதக்கவும்), புளி - எலுமிச்சையளவு (ஊறவைக்கவும்), நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்.
வறுக்க: காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, புளி, வதக்கிய கத்திரிக்காய், சேர்த்து, அம்மி யிலோ, மிக்ஸியிலோ கொரகொரப்பாக அரைக்கவும். நல்லெண்ணெய் கலந்து பரிமாறவும்.
சூடான சாதம் - கத்திரிக்காய்  துவையல் - சுட்ட அப்பளம் காம்பி னேஷன், சுவையில் அசத்தும்.

கத்திரி சிஸ்லர்ஸ்
தேவையானவை: கத்திரிக் காய் - 3, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ் - 3 டீஸ்பூன், சீஸ் துருவல் - 4 - 5 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சோயா சாஸ், சில்லி சாஸை கலந்துகொள்ளவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். தோசைக்கல் அல்லது தவாவை சூடாக்கி, கத்திரிக் காயை இரு பக்கமும் லேசாக டோஸ்ட் செய்யவும். பின்னர் மேல்பக்கத்தில் முழுவதும் சாஸ் கலவையை தடவி, சீஸ் தூவி சுருட்டி, டூத் பிக்கால் குத்தி பரிமாறவும்.

கத்திரிக்காய் கொத்சு
தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம், கெட்டியான புளிக்கரைசல் - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: நல்லெண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக்கவும். புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து, அதில் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, மசித்த கத்திரிக்காய் கலவையை சேர்த்து, நுரைக்க கொதிக்கவிட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: கத்திரிக்காயை சுட்டு, தோலுரித்தும் செய்யலாம்.

பைங்கன் மசாலா
தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 3 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், பால் - கால் கப், (விருப்பப்பட்டால்) க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை வில்லைகளாக்கவும். கொஞ்சம் எண்ணெயை சுடவைத்து சிட்டிகை உப்பைக் கலக்கவும். இதில் கத்திரிக்காய் வில்லைகளைப்  பொரித்து வைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி, தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மேலும் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, பால் சேர்த்து இறக்கவும் (க்ரீம் சேர்த்தால் ரிச்சாக இருக்கும்). கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
ஃப்ரைடு ரைஸ், பூரி, சப்பாத்திக்கு ஏற்ற ஜோடி இது.

உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி நொய் (குருணை) - 2 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் கப், தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, 5 கப் தண்ணீர் ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது நொய் சேர்த்து, கைவிடாமல் கிளறி முக்கால் வேக்காடு பதத்தில் இறக்கவும். ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கிளறி, உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி நல்ல ஜோடி.

ஸ்பைஸி கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி குருணை - ஒரு கப், சோயா கிரான்யூல்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)  - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப், பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
அரைக்க: நாட்டுத் தக்காளி - 5, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை - கால் கட்டு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுதை சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கவும். கொதிக்கும்போது பச்சரிசி குருணை, இரண்டு முறை முறை அலசிய சோயா கிரான்யூல்ஸ், முளைகட்டிய பயறு சேர்த்து முக்கால் வேக்காடு பதம் வந்ததும் அடுப்பை  அணைக்கவும். ஆறியதும் உருண்டை பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, இட்லி குக்கரில் 5 - 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
சைட் டிஷ் தேவையில்லாத சூப்பர் டிபன் இது.

பாகற்காய் மசாலா
தேவையானவை: நீள பாகற்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டுப் பற்கள் - 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: கடலை பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாகற்காயை வட்டமாக நறுக்கி, உப்பு, புளி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். (தண்ணீர் குறைவாக சேர்க்கவும்). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும். மீதியுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி... நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, வெந்த பாகற்காயையும் சேர்த்துக் கிளறி, வறுத்துப் பொடித்த பொடித்த பொடியினையும் தூவிக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
இதை சாதத்துக்கு தொட்டுச் சாப்பிடலாம். சப்பாத்தி, தோசைக்கும் சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

பாகற்காய் பிட்லை
தேவையானவை: பாகற்காய் - 250 கிராம் (விதை நீக்கவும்), புளித் தண்ணீர் - 2 கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: காய்ந்த மிளகாய் - 7, தனியா - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், வெந்தயம் - கால் டீஸ்பூன் செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாகற்காயை பொடியாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து, புளித் தண்ணீரில் வேகவிடவும். வெந்ததும் மஞ்சள்தூள் மற்றும் அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். அரிசி களைந்த நீரில் பாகற்காயை ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு நன்கு குறையும்.

 கிச்சன் ராணி
மணத்தக்காளி கீரை ஸ்வீட் போளி
தேவையானவை: சுத்தம் செய்து நறுக்கிய மணத்தக்காளி கீரை - 2 கப், பாதாம் டிரிங் மிக்ஸ் - 200 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், மைதா - ஒன்றரை கப்,  எண்ணெய் - சிறிதளவு, பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - நெய் கலவை - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.
செய்முறை: மைதாவுடன், உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு போளிக்கு பிசைவது போல் பிசைந்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, கீரையை சுருள வதக்கி, ஆறவைக்கவும். இதனுடன்  பாதாம் டிரிங் மிக்ஸ், சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். இதுதான் பூரணம். பூரணத்தை சிறு உருண்டைகளாக செய்யவும் (பூரணம் தளர இருந்தால், சிறிதளவு பொட்டுக்கடலை மாவு அல்லது  பாதாம் மிக்ஸ் சேர்க்கலாம்).
பிசைந்து வைத்த மைதா மாவை சிறிதளவு எடுத்து உருட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டி, பூரண உருண்டை வைத்து மூடி, மீண்டும் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு, சுட்டு எடுத்தால்... சத்துள்ள, சுவையான மணத்தக்காளி போளி ரெடி.


Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 3910333571299447241

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item