பேரீச்சம்பழ வடகம்!
தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1/2கிலோ கொண்டைக்கடலை – 100 கிராம் தட்டாம்பயறு – 100 கிராம் பச்சரிசி – 100 கிராம்...
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1/2கிலோ
கொண்டைக்கடலை – 100 கிராம்
தட்டாம்பயறு – 100 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
இஞ்சி – இரண்டு துண்டுகள்
வாழைக்காய் (பெரியது) – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப்பொடி – 1 1/2 கரண்டி
சீரகம் – 2 கரண்டி
கொத்தமல்லி – சிறு கட்டு
ஒமம் – 1/2 கரண்டி
எலுமிச்சம்பழம் – அரை மூடி
நல்லெண்ணெய் – அரை லீட்டர்
செய்முறை:
கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, பச்சரிசி இவற்றை நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பேரீச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயையும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியையும் கொத்தமல்லிக் கட்டையும் மண்போக அலம்பவும். பின்னர் ஊறவைத்த பொருட்களுடன் பேரீச்சம்பழம், வாழைக்காய், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இவற்றையும் சேர்த்துக்கொண்டு ஆட்டுரலில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுது கெட்டியாகவும் பரபரப்பாகவும் இருக்கவேண்டும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அரை மூடி எலுமிச்சம் பழத்தையும் பிழியவும். ஓமத்தையும் சீரகத்தையும் பொடிசெய்து அதோடு பெருங்காயப்பொடியையும் சேர்த்து அரைத்த விழுதுடன் கலக்கவும். பின்னர் ஒரு அகலமான மெல்லிய துணியை எடுத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை சிறுசிறு வட்டங்களாக துணியின் மேல் தட்டிக்கொள்ளவும். இந்த வட்டங்களை இரண்டு நாள் வெயிலில் உலர்த்தவும். வடகம் நன்றாக காய்ந்தவுடன் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
இந்த வடகங்களை டப்பாவில் போட்டு வைத்து விருந்தினர் வரும்நேரம் பொரித்து பரிமாறலாம்.
Post a Comment