தேங்காய் இளநீர் ரெசிப்பிகள்!
கிருஷ்ணமூர்த்தி
டயட் கவுன்சலர்
எஸ்.ராஜகுமாரி
சமையல் கலை நிபுணர்
குளிர்ச்சியைத்
தந்து உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது தேங்காய். அதிக அளவு தாது
உப்புக்கள் இருப்பதால், தினமும் ஓர் இளநீர் குடிப்பதை
வழக்கமாக்கிக்கொள்ளலாம். இந்தக் கோடையில் வெப்பத்தைத் தணிக்க, தேங்காய்,
இளநீர் ரெசிப்பிகளை செய்து காட்டியிருக்கிறார், சமையல்கலை நிபுணர்
எஸ்.ராஜகுமாரி. பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட் கவுன்சலர்
கிருஷ்ணமூர்த்தி.
தேங்காய்ப் பால் மில்க் ஷேக்
தேவையானவை: தேங்காய்ப் பால் - ஒரு கப், பால் - அரை கப், ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 5 டீஸ்பூன்.
செய்முறை: அகலமான
பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவைக்கவும். பாதிக் கொதி வரும்போது,
தேங்காய்ப் பால், சர்க்கரை சேர்த்து, ஒரு கொதிவந்ததும் இறக்கி, ஏலக்காய்த்
தூள் தூவவும். தேங்காய்ப் பாலை அதிகமாகக் கொதிக்கவிடக் கூடாது.
சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டு வெல்லம் சேர்த்தால் உடலுக்கு நல்லது.
பலன்கள்: உடலுக்கு
எனர்ஜியைத் தரும். தேங்காய்ப் பாலுடன் பால் சேர்க்கும்போது, கொழுப்புச்
சத்து அதிகம் கிடைக்கும். புரதமும் தாது உப்புக்களும் சிறிதளவு இருப்பதால்,
நல்ல தெம்பைத் தரும். வயிற்றுப் புண், அல்சர், பசியின்மையால்
அவதிப்படுபவர்கள், எடை குறைந்தவர்கள் இதை அருந்தலாம். குளிரவைத்துக்
குடிப்பது நல்லது.
தேங்காய்ப் பொடி
தேவையானவை: துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு, உடைத்த முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை: வெறும்
கடாயில் தேங்காயை வறுத்து, தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெயை
ஊற்றி, வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில்
கரகரப்பாகப் பொடிக்கவும். வறுத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு சுற்று
சுற்றிஎடுக்கவும். தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து, அதில்,
பொடித்தவற்றையும் சேர்த்து, ஒருமுறைப் புரட்டி, அடுப்பை அணைத்துவிடவும்.
ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில்போட்டு, பத்திரப்படுத்தவும். இந்த
ரெடிமேட் சட்னி ஒரு வாரம் வரை கெடாது.
பலன்கள்: வெளியூர்களுக்குச் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம். இட்லிக்குத் தொட்டுகொள்ளலாம். சூடான சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
எடைக் குறைந்தவர்கள், அடிக்கடி சோர்வுடன் இருப்பவர்கள், செரிமான சக்தி
குறைந்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும்
என்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடவேண்டாம். எபிலெப்சி வலிப்பு நோய்
இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
இளநீர் பானகம்
தேவையானவை: லேசான வழுக்கை உள்ள இளநீர் - 2 கப், பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: இளநீர்
வழுக்கையை மிக்ஸியில் அடித்து, பனங்கற்கண்டு, இளநீர், ஏலக்காய்த் தூள்
சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்தப் பானகத்தை அப்படியே அருந்தலாம்.
அருமையாக இருக்கும்.
பலன்கள்:
இளநீரில், பொட்டாசியமும் சோடியமும் இருப்பதால், கோடைக்கேற்ற குளிர் பானம்.
வியர்வையால் தளர்ந்துபோன தசைகளுக்கு நல்லது. வயிற்றுப் போக்கு, அல்சரால்
அவதிப்படுபவர்கள் அருந்தலாம். உடலில் எனர்ஜி இல்லாமல் போகும்போது,
உடனடியாக எனர்ஜியை அள்ளித் தரும். சிறுநீர் நன்றாகப் போகும். உஷ்ணத்தைத்
தணிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும்.
தேங்காய்ப்பால் பிரியாணி
தேவையானவை: பச்சரிசி
அல்லது பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, பட்டை,
சோம்பு, வறுத்துப் பொடித்த கசகசா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - மூன்று
டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் -
ஒன்று, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - பாதி, பச்சை மிளகாய், கேரட் - தலா
1, ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க: நறுக்கிய மல்லித் தழை - 2 டீஸ்பூன்.
செய்முறை: வெறும்
கடாயில் அரிசியை வறுக்கவும். குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு,
நறுக்கிய பெரிய வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால், உப்பு, மஞ்சள் தூள், மசாலாத் தூள்,
பட்டாணி சேர்த்து, நன்றாகக் கலந்து, குக்கரில்வைத்து, ஒரு விசில் வந்ததும்
இறக்கவும். ஆவி வெளியேறியதும், மல்லித் தழையைத் தூவி அலங்கரிக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை.
பலன்கள்: சிறிதளவு
கலோரியும் கொழுப்பு, புரதச் சத்தும் இதில் உள்ளன. அல்சர், வயிற்றுப் புண்
இருப்பவர்கள் ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். எடை குறைந்தவர்கள், உடலில்
எனர்ஜி இல்லாமல் இருப்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது.
நார்ச்சத்து இல்லை என்பதால், மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள்
தவிர்க்கவும்.
தேங்காய் இடியாப்பம்
தேவையானவை:
இடியாப்ப மாவு - ஒரு கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால்
கப், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், வெந்த பச்சைப் பட்டாணி - 3 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உடைத்த முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிட்டிகை.
செய்முறை: வாய்
அகன்ற பாத்திரத்தில், இடியாப்ப மாவினைக் கொட்டவும். ஒரு பாத்திரத்தில்
உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவைத்து, அந்த நீரை மாவில்
கொட்டிக் கிளறிவிடவும். இடியாப்பக் குழலில் மாவினைப் போட்டு,
இட்லித்தட்டில் பிழிந்து, குக்கரில்வைத்து, ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி, ஆறியதும் உதிர்த்துவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து,தேங்காய்த் துருவலையும் சேர்த்து
வதக்கி, உப்பு, பட்டாணி, கேரட் துருவல் சேர்த்து வதக்கி, மிளகுத் தூள் தூவி
இறக்கவும். இதில், உதிர்த்த இடியாப்பம் சேர்த்துக் கலந்துவிடவும்.
பலன்கள்: மஞ்சள்காமாலையால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண், அல்சர்
இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். எளிதில் செரிக்கக்கூடியது. கேரட்,
பட்டாணி சேர்ப்பதால், ஓரளவுக்குப் புரதச்சத்தும் கிடைக்கும். அனைவரும்
சாப்பிட ஏற்றது.
தேங்காய் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி
மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப்,
ஏலக்காய்த் தூள், உப்பு - சிட்டிகை, நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில்
மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக்
கொதிக்கவிடவும். இதில், அரிசி மாவினைக் கொட்டிக் கிளறி, மாவு வெந்ததும்
இறக்கவும். சிறிது ஆறியதும், சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக
உருட்டி, இட்லித்தட்டில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். தேங்காயை
நைஸாக சிறிதுத் தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம்,
அரைத்த தேங்காய், ஏலக்காய்த் தூள் போட்டு, கொதித்ததும் வெந்த உருண்டைகளைச்
சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: உடலுக்கு
நல்ல சக்தியைத் தரும். எளிதில் ஜீரணமாகும். ஓரளவு புரதம் மற்றும்
கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள்,
தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாய் கசப்பு
இருப்பவர்களை விரும்பிச் சாப்பிடவைக்கும். மாலை வேளை டிபனாக சாப்பிடலாம்.
Post a Comment