பிரேக் ஃபாஸ்ட் !

பிரேக் ஃபாஸ்ட் ! பில்லா குடுமுலு தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் துவரம் பருப்பு - அரை கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பொடியாக நற...

பிரேக் ஃபாஸ்ட் !
பில்லா குடுமுலு
தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

மிக்ஸியில் அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கனமான அடிப்பாகமுள்ள வாணலியை அடுப்பில் வைத்து, 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். நசுக்கிய மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய், சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைக் கொதிக்கும் தண்ணீரில் சேருங்கள். தீயை மிதமாக்கி உடைத்து வைத்த அரிசி, பருப்பைச் சேர்த்து 5 நிமிடம் வேக விடுங்கள். 5 நிமிடம் கழித்து கரண்டியால் கட்டி விழாமல் கிளறி, மீண்டும் 5 நிமிடம் வேக விடுங்கள். அடுப்பை அணைத்து கலவையை ஆற விட்டு எலுமிச்சை சைஸுக்கு எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டுங்கள் (கலவை சற்று கடினமாக இருந்தால், சிறிது தண்ணீரைச் சேர்த்து மிருதுவாக்கிக் கொள்ளுங்கள்). அடுப்பில் தவாவை வைத்து சிறிது எண்ணெய் தடவி, தட்டிய கலவையை வைத்து அதில் இருபக்கமும் தலா ஐந்து நிமிடங்கள் வேக வைத்து, விருப்பப்பட்ட சட்னியோடு பரிமாறுங்கள்.

மில்லெட் கார அடை
தேவையானவை:

தினை அரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
சின்னதாக நறுக்கிய தேங்காய் சில்லுகள் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு‌
மஞ்சள்த்தூள் - சிறிதளவு‌
செய்முறை:

தினை அரிசியைத் தனியாகவும் எல்லா பருப்புகளை ஒன்றாகவும் மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை வடித்து அரிசி மற்றும்  பருபபுகளை மிக்ஸியில் சேர்த்து அடை பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். இதை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் சில்லுகள், மஞ்சள்த்தூள், பெருங்காயம், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அடை பதத்துக்குக் கலந்து கொள்ளுங்கள்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவெடுத்து ஊற்றி, இருபுறமும் அடையாகச் சுட்டெடுங்கள். இதற்கு சட்னி சரியான சைட் டிஷ்.

அவகாடோ சாண்ட்விச்
தேவையானவை:

 அவகாடோ (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று
 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று
 மீடியம் சைஸ் தக்காளி - ஒன்று
 மிளகுத்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பிரெட் ஸ்லைஸ் - 8
 வெண்ணெய் அல்லது நெய் - டோஸ்ட் செய்ய‌
செய்முறை:

வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவகாடோ தோலை நீக்கி உள்ளே உள்ள சதைப்பகுதிகளைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, அவகாடோ, ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தவாவை வைத்து, சிறிது நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அதில் பிரெட் ஸ்லைஸ்களை வைத்து இருபுறமும் கோல்டன் பிரவுன் நிறம் வரை டோஸ்ட் செய்து எடுங்கள். இரண்டு பிரெட்களுக்கு நடுவே அவகாடோ கலவையை வைத்து சாண்ட்விச்சாகப் பரிமாறுங்கள்.

கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா
தேவையானவை:

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
கேரட் - கால் கப் (க்யூப் சைஸில் வெட்டியது)
பச்சைப்பட்டாணி - கால் கப்
வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு - கால் கப் (க்யூப்ஸ்களாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 நீளமாக உடைத்தது
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மீடியமான பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 10 இலைகள்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து சுத்தம் செய்த ரவையை அதில் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்குங்கள். இத்துடன் கேரட், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து 4 முதல் 5 நிமிடம் நன்கு வதக்குங்கள். இதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகப்படுத்தி நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு கொதிக்கும் போது வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறுங்கள். தீயைக் குறைத்து மூடி போட்டு 20 நிமிடம் வேக விட்டு எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறுங்கள்.

எக் சீஸ் மக்ரோனி மஃபின்
தேவையானவை:
 
மக்ரோனி - முக்கால் கப்
மஞ்சள், பச்சை, சிவப்பு குடமிளகாய் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
முட்டை - 3
பால் - முக்கால் கப்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
துருவிய சீஸ் - முக்கால் கப்
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
பிரெட் கிரம்பஸ் - அலங்கரிக்க‌
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மக்்ரோனி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி எட்டு முதல் பத்து நிமிடம் வேக வையுங்கள். பிறகு, தண்ணீரை இறுத்து தனியாக ஆற விடுங்கள். ஒரு பவுலில் மக்ரோனி, ஆலிவ் ஆயில், உப்பு, துருவிய சீஸ், நறுக்கிய குடமிளகாய்கள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு புரட்டிக் கொள்ளுங்கள். மஃபின் தட்டுக்களில் உள்ள குழிகளில் ஆலிவ் ஆயில் விட்டு எல்லா பக்கமும் எண்ணெய் படுமாறு தடவிக் கொள்ளுங்கள். இதில் கலந்து வைத்த மக்ரோனியை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு நிரப்புங்கள். ஒரு பவுலில் பால் மற்றும் முட்டையை அடித்து ஊற்றி, நன்கு கலந்து இதனை மஃபினின் குழிகளில் ஊற்றுங்கள். மேலே துருவிய சீஸ் மற்றும் பிரெட் கிரம்ப்ஸை தூவி அலங்கரியுங்கள். பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு ஹீட் செய்து, மஃபின் கலவை நிரப்பப்பட்ட தட்டுக்களை பேக்கிங் அவனில் வைத்து பதினைந்து முதல் இருபது நிமிடம் வேக வைத்து எடுங்கள். பிறகு மஃபின் தட்டுகளை எடுத்து ஒரு வயர் ரேக்கில் வைத்து, சூடு ஆறியதும் மஃபினை எடுத்துப் பரிமாறுங்கள்.

 பிரவுன் ரைஸ் தோசை
தேவையானவை:

பிரவுன் ரைஸ் - 2 கப்
தோல் நீக்கிய முழு உளுந்து - கால் கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

அரிசியை (பிரவுன் ரைஸ்) மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் அரிசியைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வையுங்கள். உளுந்தையும் தண்ணீரில் அலசி, வெந்தயம் சேர்த்து  தனியாக ஊற விடுங்கள். மிக்ஸியில் உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக அவை பொங்கும் அளவுக்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து வையுங்கள். இதே போல அரிசியையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்த இரண்டு மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு சேர்த்து கலக்கி எட்டு முதல் பத்து மணி நேரம் புளிக்க விடுங்கள். மறுநாள் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, தோசையாகச் சுட்டெடுங்கள்.

கறிவேப்பிலை தோசை
தேவையானவை:

 பொன்னி அரிசி - 2 கப்
 உளுந்து - அரை கப்
 ஓமம் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 2 கப்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு‌
செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தைக் கழுவி தனித்தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வையுங்கள். கறிவேப்பிலையை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து, இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கறிவேப்பிலை, ஓமம் இரண்டையும் சேர்த்து மைய அரைத்து மாவோடு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவுக் கலவையை எட்டு முதல் பத்து மணி நேரம் மூடி புளி விடுங்கள்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி தோசையாக வார்த்து, அதனை ஒரு மூடியால் இரண்டு முதல் மூன்று நிமிட நேரம் வேக விடுங்கள். கிரிஸ்பியாக வெந்திருக்கும் இந்த தோசையை மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும் என்பதில்லை. சட்னியோடு பரிமாறுங்கள்.

ஹேஷ் பிரவுன்
தேவையானவை:

 பெரிய உருளைக்கிழங்கு - 2
 உப்பு - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:

கனமான அடிபாகமுள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உருளைக்கிழங்குகளைச் சேர்த்து பாதி வேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் தண்ணீரை வடித்து தோல் நீக்கி, பெரிய துவாரங்கள் கொண்ட துருவியில் துருவிக் கொள்ளுங்கள். மைதா மாவை இதில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை ஒரு செவ்வக வடிவத் தட்டில் பரப்பி வையுங்கள். கலவையின் மீது உப்பு, மிளகுத்தூளைத் தூவி ஃபோர்க்கால்(முள் கரண்டி)கிளறி விடுங்கள்.
கையில் எண்ணெய் தடவிக்கொண்டு உருளைக்கலவையை வட்டமாகத் தட்டிக் கொள்ளுங்கள். அடுப்பில் தவாவை வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு, தட்டிய கலவையை வைத்து இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

தினை அரிசி உப்புமா
தேவையானவை:

 தினை அரிசி - ஒரு கப்
 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயம் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:

தினை அரிசியை மூன்று முறை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடம் ஊற வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலைப்பருப்பு, இஞ்சி, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இதில் தினை அரிசி, தேவையான அளவு உப்புச் சேர்த்து தீயைக் குறைத்து, மூடி போட்டு பதினைந்து நிமிடம் வேக விடுங்கள். அடுப்பை அணைத்து இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.

தோசை டோஸ்ட்
தேவையானவை:

பிரெட் - 6 ஸ்லைஸ்
தோசை மாவு - ஒரு கப்
மீடியமான பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
பொடியாகத் துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:
 

சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:

மேலே சொன்னவற்றில் பிரெட், தாளிக்கக் கொடுத்த பொருட்கள் தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் தோசை மாவில் கலந்து கொள்ளுங்கள். தாளிக்கக் கொடுத்தவற்றை தவாவில் எண்ணெய் விட்டு தாளித்து தோசை மாவில் கொட்டிக் கலக்குங்கள். பிறகு பிரெட்டை தோசை மாவில் மெதுவாக முக்கி எடுங்கள். தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் பிரெட்டை தவாவில் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து சட்னியோடு பரிமாறுங்கள்.

ப்ரோக்கோலி கத்திரி கொஸ்து
தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - 100 கிராம்
கத்திரிக்காய் - 100 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 5 கிராம்
புளிக்கரைசல் - 1 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 5
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீர் - ஒன்றரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
கடலைப்பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி  - 2 டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
அரிசி மாவு -அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் -50 கிராம்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தயாரிக்க:

மல்லி (தனியா) - 30 கிராம்
கடலைப்பருப்பு - 15 கிராம்.
விரலி மஞ்சள் - 1
சிவப்பு மிளகாய் - 50 கிராம்
செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கரம் மசாலாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி சேர்த்து மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும்  நறுக்கிய ப்ரோக்கோலி, கத்திரிக்காய் போடவும். நன்றாகக் கலந்ததும்  மஞ்சள்த்தூள் மற்றும் கரம் மசாலாவைச்் சேர்க்கவும். பின்னர் புளிக்கரைசலை ஊற்றி லேசான சூட்டில் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். பின்னர், பருப்பு வேக வைத்த தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகக் கலந்ததும் அதில் வெல்லம் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரில் அரிசி மாவைக் கலந்து கொதிக்கும் கலவையில் ஊற்றிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும். தோசை இட்லி மற்றும் அடைக்குத் தொட்டு சாப்பிடலாம்.

பயறு தினை பெலாபாத்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி குருணை அரிசி - 1/2 கப்
தினை - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முளைக்கட்டிய பாசிப்பயறு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பட்டை - 1
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன் கொத்துமல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை :

தினை மற்றும் பச்சரிசிக் குருணையை 20 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். குக்கரில் பாசிப்பருப்பு, முளைக்கட்டிய பாசிப்பயறு, மஞ்சள்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் அப்படியே ஆற விடுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகு, பட்டை, கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அவை நன்றாகப் பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெந்த‌ அரிசி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

 பீர்க்கங்காய் சட்னி
தேவையானவை:

தோல் சீவி பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் -  அரை கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
காஷ்மீர் சிவப்பு மிளகாய்
(டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று (இரண்டாக உடைத்தது)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு கப்
புளிக்கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

அடுப்பில், நான் ஸ்டிக் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் பீர்க்கங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, தனியாக வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், கடலைப்பருப்பு, காஷ்மீர் சிவப்பு மிளகாய், பெருங்காயம், உளுந்து ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, பீர்க்கங்காயோடு சேர்க்கவும். அடுத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புளிக்கரைசல், துருவிதேங்காய், உப்பு இவற்றோடு கால் கப் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் மையாக அரைத்தால், பீர்க்கங்காய் சட்னி ரெடி. இதனை, காற்றுப்புகாத டப்பாவில் வைத்து, ஃபரிட்ஜில் சேமித்தால், 2 நாட்கள் வரை கெடாது.

 பீட்ரூட் சட்னி
தேவையானவை:
துருவிய பீட்ரூட் - அரை கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை உளுந்து - கால் கப்
காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - 5
உப்பு - தேவையான அளவு
துருவியதேங்காய் - கால் கப்
தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
செய்முறை:
வாய் அகன்ற நான்-ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், உளுந்து, கறிவேப்பிலை, காஷ்மீர் சிவப்பு மிளகாய் சேர்த்து, தீயை மிதமாக்கி, சிறிது நேரம் வதக்கவும். இத்துடன் துருவிய பீட்ரூட், தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளித்து, சட்னியில் ஊற்றினால், அசத்தலான பீட்ரூட் சட்னி ரெடி. இது தோசை, இட்லிக்கு ஏற்ற சைட் டிஷ். காற்றுப்புகாத டப்பாவில் வைத்து, ஃபரிட்ஜில் வைத்தால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தினை தோசை
தேவையானவை:
தினை - 3 கப்
உளுந்தம் பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தினையைக் கழுவி, 5 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, தனியாக  5 மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து, ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு வழக்கம் போல, தோசை ஊற்றி,  சட்னி அல்லது சாம்பார் சேர்த்துப் பரிமாறவும்.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 8233875789224454481

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item