ஈஸியாக செய்யலாம் லேஸிக்!--உபயோகமான தகவல்கள்,
ஈஸியாக செய்யலாம் லேஸிக்! 'பார்வைக் குறைபாட்டைக் கண்ணாடி போட்டுத்தான் சமாளிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றிய லேஸிக் (Laser Assisted in-Si...

'பார்வைக் குறைபாட்டைக் கண்ணாடி போட்டுத்தான் சமாளிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றிய லேஸிக் (Laser Assisted in-Situ keratomileusis - LASIK) சிகிச்சைபற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், தமிழராக நீங்கள் பெருமைகொள்ள வேண்டிய ஒரு விஷயம் லேஸிக் சிகிச்சையில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தச் சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் ரங்கஸ்வாமி ஸ்ரீனிவாசன் என்ற சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழர்.
லேஸிக் சிகிச்சையை எல்லோராலும் செய்துகொள்ள முடியுமா? எப்படி செய்யப்படுகிறது? என்ன செலவாகும்? லேஸிக் முறையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கும் டாக்டர் பி.கௌசிக்கிடம் பேசினோம்.
''சாதாரணமாகத் தூரப் பார்வை அல்லது கிட்டப்பார்வைக் குறைபாடுகளுக்காகக் கண்ணாடி அணிகிறோம். ஒரு பொருளின் பிம்பம் கண்ணுக்குள் இருக்கும் விழித் திரையில் விழும். அப்போதுதான் அது என்ன என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். விழித்திரைக்குச் சற்று முன்போ அல்லது பின்போ பிம்பம் விழும்போது அது சரியாகத் தெரியாது. இதைத்தான் முறையே கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்கிறோம். பிம்பத்தை மிகச் சரியாக விழித் திரையில் விழவைப்பதற்காகக் கண்ணாடி அணிகிறோம். இதற்குத் தீர்வாக வந்ததுதான் லேஸிக் சிகிச்சை முறை. இந்தச் சிகிச்சையில் கண் கருவிழியின் அடர்த்தியைச் சற்று மாற்றி அமைப்பதன் மூலம் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். தூரப் பார்வை என்றால், 10 மைக்ரான் என்ற அளவில் கருவிழியின் வெளிப் பகுதியில் குறைக்க வேண்டும். கிட்டப் பார்வை என்றால் விழித் திரைக்குப் பின்னால் விழும் பிம்பம் சரியாக விழித் திரையில் விழ வேண்டும் என்பதற்காகக் கருவிழியின் உட்பகுதியில் கொஞ்சம் குறைக்க வேண்டி இருக்கும்'' என்றவர் சிகிச்சை முறையைப் பற்றி விரிவாகப் பேசினார்.
''மிகவும் நுட்பமான சிகிச்சை என்பதால், லேசர் மூலம்தான் இதைச் செய்ய முடியும். 'இந்த அளவு பவர் உள்ள ஒருவருக்கு இவ்வளவு அடர்த்தியை மாற்ற வேண்டும்’ என்பது போன்ற தகவல்களைக் கணிப்பொறியில் சேர்த்துவிட்டால், அதுவே கருவிழியின் அளவை அந்தக் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றி அமைத்துவிடும். அதன் பிறகு, கண்ணாடி இல்லாமலேயே தெளிவாகப் பார்க்க முடியும். சாதாரணமாகக் கருவிழியின் பவர் 44 இருக்க வேண்டும். ஒருவருக்கு 46 இருக்கிறது என்றால், அந்த பவர் உள்ளவர்களுக்கு - மைனஸ் 2 பவரில் கண்ணாடி அணியும்போது கண்ணின் பவர் 44 ஆகக் குறைந்துவிடும். கண்ணாடி மூலம் குறைக்க வேண்டிய அந்த -2 பவரை இந்த அறுவைச் சிகிச்சை மூலம் கருவிழியிலேயே நேரடியாக 44 எனும் அளவுக்குக் குறைத்துவிட முடியும். இதனால் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், பொதுவாகவே 40 வயதுக்கு மேல் படிப்பதில் சிரமம் வரும். இதை வெள்ளெழுத்து என்று சொல்வோம். இந்தக் குறைபாடு வந்தால், படிப்பதற்காகக் கண்ணாடி அணிய வேண்டி இருக்கும்.
இந்த அறுவைச் சிகிச்சைக்கு 10 நிமிடங்கள்தான் ஆகும். நோயாளி அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். அறுவைச் சிகிச்சைக்கு முன் கருவிழிக்கு அனஸ்தீஷியா கொடுத்துவிடுவதால் வலி தெரியாது. உணர்வு வந்த பிறகு, ஒரு நாளைக்கு லேசாக வலி இருக்கும். காயம் ஆறுவதற்கு அதிகப்பட்சமாக 48 மணி நேரம் ஆகும். காயம் சரியானதும் பேப்பர் படிக்கலாம், கம்ப்யூட்டரில் பணிபுரியலாம்...'' என்கிறார் டாக்டர் பி.கௌசிக்.
''லேஸிக் அறுவைச் சிகிச்சையை யாரெல்லாம் செய்து கொள்ளலாம்? அதற்கான வயது வரம்பு என்ன?'' என லேஸிக் சிகிச்சை ஆலோசகரான டாக்டர் பீனா ஜானிடம் கேட்டோம்.
''மைனஸ் பவர் 10 வரை இருப்பவர்களுக்கும் ப்ளஸ் பவரில் 6 வரை இருப்பவர்களுக்கும் லேஸிக் செய்ய முடியும். கருவிழி அமைப்பும் அதன் ஆரோக்கியமும்தான் ரொம்ப முக்கியம். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உடலில் வளர்ச்சி இருப்பதைப்போல், கண்ணிலும் வளர்ச்சி இருக்கும். இதனால் இவர்களுக்கு லேஸிக் செய்யக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு அடிக்கடி பவர் மாறிக்கொண்டே இருக்கும். இவர்களுக்கும் லேஸிக் செய்யக் கூடாது. கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், குளுக்கோமா பிரச்னை இருப்பவர்களும் இந்தச் சிகிச்சை செய்யக் கூடாது. சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களும் லேஸிக் செய்துகொண்டால், காயம் ஆற கூடுதலாக நேரம் தேவைப்படும். சர்க்கரைக் குறைபாட்டுடன் கண் நரம்பில் கோளாறுகள் இருந்தால், இந்தச் சிகிச்சை கூடாது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் வெளிச்சம் படும்போது கண்கள் கூசும். எனவே இரண்டு நாட்கள் கண்களை கசக்காமல் இருக்கவும், தூசு படாமல் பார்த்துக்கொள்ளவும் கறுப்புக் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) கட்டாயம் அணிய வேண்டும். செலவு? இரண்டு கண்களுக்கும் சேர்த்து சராசரியாக 30 ஆயிரத்தில் கட்டணம் தொடங்குகிறது. கார்னியாவின் ஆரோக்கியத்தைப் பொருத்தே சிகிச்சைக்கான கட்டணம் முடிவாகும்!''
Post a Comment