இவர் தான் முஹம்மது நபி...

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந...

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந்த மனிதர் மீது அபரிமிதமான அன்பை பொழிய என்ன காரணம்?, மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்திருக்கின்றார் என்றால், அவருடைய போதனைகள் எப்படி இருந்தன?
இம்மாதிரியான கேள்விகளுக்கு, சற்றே சுருக்கமான முறையில் விடை கொடுக்க முயலும் பதிவு தான் இது.
முஸ்லிம்களால் தங்கள் உயிரினினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்த பதிவு அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்).
நபியவர்கள் குறித்து சில வரிகளில்:
மக்கா நகரில் 570-ஆம் ஆண்டு பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். மக்கா நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். நேர்மையாளராகவும், உண்மையாளராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், நபிகளாரின் நாற்பதாவது வயதில் இந்த காட்சிகள் மாறத்தொடங்கின. இந்த வயதில் தான் இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லும் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).
இறைவன் தன்னை நபியாக தேர்ந்தெடுத்திருக்கின்றான், இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க சொல்லிருக்கின்றான் என்று சொன்னதால் கேலியும், கிண்டலுமே மிஞ்சின. ஆனாலும் இறைச்செய்தியை எடுத்துச்சொல்வதில் பின்வாங்கவில்லை. அழகான முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். இறைச்செய்தியால் கவரப்பட்ட மக்கள், சிறிது சிறிதாக இஸ்லாத்தின்பால் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.
தங்களின் மூதாதையர் பின்பற்றிய பாதையிலிருந்து மக்களை திசை திருப்புகின்றார் முஹம்மது (ஸல்) என்று கொந்தளித்தனர் மக்கா நகர அதிகார வர்க்கத்தினர். சமாதானம் பேச சென்றனர். இஸ்லாத்தை எடுத்துக்கூறுவதை முஹம்மது (ஸல்) கைவிடுவாரேயானால், அவருக்கு, பொன் பொருள் அதிகாரம் என்று அனைத்தையும் தருவதாக கூறினர். ஆனால் நபியவர்களோ எளிமையான வார்த்தைகளை பதிலாக கூறினார்கள்.
ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்த சொன்னாலும் தன்னால் முடியாது என்ற வார்த்தைகள் தான் அவை. இன்றளவும், இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும்போது வரக்கூடிய தடங்கல்களையும், சோதனைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முஸ்லிம்கள் செயல்பட ஊக்கமாய் இருப்பது அந்த எளிமையான, காத்திரமான வார்த்தைகள் தான்.
உலக மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதரை எதிர்த்தவர்கள், கொன்றொழிக்க வாளேந்தி புறப்பட்டவர்கள் என்று பலரும் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அந்த பகுதி முழுவதுமே இஸ்லாத்தை தழுவியிருந்தது.
நபியவர்களின், வாழ்வின் பல்வேறு அங்கங்கள் குறித்த சுமார் 25 நபிமொழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள், இந்த அற்புத மனிதர் குறித்த மேலும் பல தகவல்களை இதன் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். அவை உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையலாம் (இறைவன் நாடினால்).
**********
1. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.
2. ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)' என்று மக்கள் கேட்டார்கள். ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.
3. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள், "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணைபுரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).
4. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்".
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.
5. "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.
6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.
அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.
7. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புஹாரி.
8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.
9. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புஹாரி.
10. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.
11. ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புஹாரி.
12. நபி(ஸல்) அவர்களிடம் ஹிந்த் பின்த்து உத்பா(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புஹாரி.
13. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று மக்கள் கூறினார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.
14. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புஹாரி.
15. "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.
16. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)".
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.
17. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.
அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி).
ஆதாரம்: புஹாரி.
18. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் (செயல்) செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், 'நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு - கடனாளிகளுக்கு தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி).
நூல்: முஸ்லிம்.
19. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.
20. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றார்கள். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி).
ஆதாரம்: முஅத்தா.
21. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தாய் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
ஆதாரம்: புஹாரி.
22. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி).
ஆதாரம்: அபூதாவூத்.
23. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி.
24. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: புஹாரி.
25. '(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புஹாரி.
**********
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படிக்க, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும். இமெயில் மூலம் பெற விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com). நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நாம் வாழ்ந்திட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். வார்த்தை சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
1. ஸல் - ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் என்பதின் சுருக்கமாகும். இதற்கு "இவர் மீது இறைவனின் அமைதியும், கண்ணியமும் நிலவுவதாக " என்று பொருள்.
2. ரலி - ரலியல்லாஹு அன்ஹு/அன்ஹா என்பதின் சுருக்கமாகும். இதனை, நபியவர்களுடன் இருந்த/கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு "இறைவன் இவர்களை பொருந்திக்கொள்வானாக" என்று பொருள்.

Related

அமுத மொழிகள் 4814538700173729265

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item