நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?--அமுத மொழிகள்

அஸ்ஸலாமு அலைக்கும், நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்?
அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
பதிவிற்குள் செல்லும்முன், நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.
பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.
பதிவிற்குள் செல்வோம்.
திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர்.
அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது.
பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1).
நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது.
---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.
எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது,
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்'
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.
திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்).
இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு,
'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன்.
என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து. பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)
அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்!
(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :)
அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!
என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது'
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள்.
மேலும்,
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது'
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள்.
ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன.
சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது.
என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!
'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.
'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை.
பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :)
குறிப்பு:
மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள்.
(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன்.
மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)
மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.
என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.
மஅஸ்ஸலாமா!(9)
அன்பு சகோதரி.
--------------------------
அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள்.
  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும்,
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும்,
இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன்.
Please Note: ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார். அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். சஹிஹ் ஹதீஸ்களில் இது போன்ற தகவல்கள் காணப்படவில்லை. அதே நேரம் சில வரலாற்று நூல்களில் இதனை காணமுடிகின்றது. அப்படியே இருந்தாலும் அந்த வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு. பின்வருவது தான் அந்த பின்னணி. நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள். ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்,
வார்த்தைகளுக்கான விளக்கங்கள்: 1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. 2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது. 3. துஆ - பிரார்த்தனை. 4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை. 5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே. 6. வலிமா - திருமண விருந்து. 7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால். 8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.

Related

அமுத மொழிகள் 2077667238110190425

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item