சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்
சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம் சளிக்காய்ச்சல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும். சளிக்காய...

https://pettagum.blogspot.com/2011/06/blog-post_5847.html
சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்
சளிக்காய்ச்சல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும். சளிக்காய்ச்சசல் இருமலால் அவதியுறும்பொழுது நீங்கள் இந்த இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி பயன் காணலாம்.
கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.
தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
சிற்றிருமல்
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
வறட்டு இருமல்
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.
உடல் சூட்டினால் இருமல்
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
எந்த வகையான இருமலுக்கும்
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.
கக்குவான் இருமலுக்கு
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக இருமல்
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
காய்ச்சல்
சாதாரண ஜூரத்திற்கு
இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.
காய்ச்சல் குணமாக
சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.
காய்ச்சல்
காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
குளிர்காய்ச்சல்
நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.
எந்த விதமான காய்ச்சலும் குணமாக
வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.
(குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும், மற்றபடி வீட்டில் உள்ள முதியோர்களின் ஆலோசனையின் பேரில் மற்றும் நாட்டு வைத்திய அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது)
2 comments
enakku 11 madhathil pen kuzhandhai 1 ulladhu. avalukku maarbu chali adhigamaga irupadhaga doctor sonnar. adhumattumalla, nuraieeralil sali irupadhagavum sonnar. enakku migavum bayamaga ulladhu. pls ungal alosanaiyai koorungal.
அன்பு நெஞ்சம் சத்யா அவர்களுக்கு, தங்களின் கருத்துரை அறிந்தேன். தற்போது எனக்கு கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் உங்களுக்கு உடனடி ஆலோசனை வழங்கமுடியவில்லை. உங்களது மெயில் முகவரி அனுப்பவும். விரைவில் நான் உங்களுக்கு யோசனை வழங்குகின்றேன். எனது மெயில் முகவரி a.s.mohamedali@gmail.com அன்புடன் A.S.முஹம்மது அலி
Post a Comment