ஹெல்த்தி மீன் குழம்பு மிகக்குறைவான எண்ணெய் பயன்படுத்துவதாலும், அதிகமான சின்ன வெங்காயம் சேர்ப்பதாலும் இக்குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. ட...

ஹெல்த்தி மீன் குழம்பு
மிகக்குறைவான எண்ணெய் பயன்படுத்துவதாலும், அதிகமான சின்ன வெங்காயம் சேர்ப்பதாலும் இக்குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. டயட் செய்பவர்கள் மீனை இம்முறையில் சமைத்து சுவையாக சாப்பிடலாம்
தேவையானப் பொருட்கள்:
* மீன்(சுறா, தூனாமீன் தவிர்த்து) - அரைக் கிலோ
* சின்னவெங்காயம் -20 முதல் 25
* தக்காளி - ஒன்று
* மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
* மல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
* மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
* மிளகு - ஒரு தேக்கரண்டி
* வெந்தயம் - 2 சிட்டிகை (2 பின்ச்)
* புளி - நெல்லிக்காய் அளவு
* நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3 நிமிடம் நன்றாக வதக்கி நறுக்கின தக்காளி, புளி சேர்த்து மேலும் 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.
இப்போது தீயின் அளவைக் குறைத்து பொடி வகைகளை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
இரண்டு சிட்டிகை வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்த்து மீதமுள்ள கறிவேப்பிலை, மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே மீன் பாத்திரத்தை சுழற்றி வைக்கவும். இப்படி செய்வதால் மீன் சட்டியில் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.
நன்றாக கொதித்து மீன் வெந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பொடித்து வைத்த வெந்தயப் பொடி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான எண்ணெய் குறைவான ஆரோக்கியமான மீன் குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.
இறுதியாக ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
--------------------------------------------------------------------------
Post a Comment