சமையல் அரிச்சுவடி-3
இன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம். 4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில் மேலேயுள்ள அடுக்கில் ஒன்றரை மேசை...

https://pettagum.blogspot.com/2011/06/3.html
இன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம்.
4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில் மேலேயுள்ள அடுக்கில் ஒன்றரை மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போட்டு லேசாக அழுத்தி விடவும். ஒரு டம்ளர் நன்கு கொதிக்கும் நீரை காஃபித்தூள் உள்ள அடுக்கில் ஊற்றி, கலக்குவதற்காக உள்ள தகட்டால் லேசாக கலக்கி மூடி வைக்கவும்.
Filter coffee1/2 மணி நேரத்திற்குள் டிக்காஷன் கீழேயுள்ள அடுக்கில் இறங்கி இருக்கும். (ரொம்ப ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால் 2 மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போடலாம்). 1/4 டம்ளர் டிக்காஷனுடன் 3/4 டம்ளர் கொதிக்கும் பாலும், 2 தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை மட்டும் ஆற்றி, நுரை பொங்க கோப்பையில் ஊற்றி கொடுக்கவும். ஃபில்டர் காஃபிக்கு பால் எப்போதும் திக்காக இருக்க வேண்டும், தண்ணியாக இருந்தால் காஃபி ருசிக்காது.
இரண்டாவது காஃபி சுமாராக இருந்தால் பரவாயில்லையென்றால் எல்லா டிக்காஷனும் எடுத்த பிறகு இன்னுமொரு 1/2 டம்ளர் கொதிக்கும் நீரை காஃபித்தூளின் மேல் ஊற்றினால் சிறிதுநேரத்தில் டிக்காஷன் கிடைக்கும். இதில் சுமாரான காஃபி கலக்கலாம். (விளம்பரத்தில் வரும் மாமியார் போல் இல்லாமல் நம் வீட்டு ஆட்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.)
ஃபில்டரை கழுவும் போது துளைகளில் காஃபித்தூள் இல்லாமல் கழுவி வைத்தால் தான், அடுத்த முறை டிக்காஷன் சுலபமாக இறங்கும்.
எப்போதும் டிக்காஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு பண்ண கூடாது. அவ்வாறு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். காஃபி கலந்த பிறகும் அடுப்பில் வைத்து சூடு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். அதனால் கலக்கும் பால் எப்போதும் கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். அப்படியும் டிக்காஷனை சூடு செய்தே ஆக வேண்டுமென்றிருந்தால் கொதிக்கும் தண்ணீரில் டிக்காஷன் உள்ள டம்ளரை சிறிது நேரம் வைத்திருந்து எடுக்கவும்.
சாதா காஃபி:
2 டம்ளர் காஃபிக்கு ஒரு மேசைக்கரண்டி தேவைப்படும். ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு, ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரை அதில் ஊற்றி, ஒரு ஸ்பூனால் நன்கு கலக்கி, மேலாக சிறிது தண்ணீரை தெளித்து மூடி வைக்க வேண்டும்.
5 நிமிடத்தில் தூள் கீழே இறங்கி விடும். கலக்காமல் மேலாக டிக்காஷனை வடித்து, (வடிகட்டியால் ஒரு முறை வடிப்பது நல்லது) ஒரு டம்ளர் பால், 4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கினால் காஃபி ரெடி.
கொடுத்துள்ள அளவுக்கும் குறைவாக காஃபித்தூள் போட்டால், காஃபி தண்ணீரைப் போல் ருசியே இருக்காது. இது எல்லாமே சிக்கிரி கலந்த காஃபித்தூளுக்கு தான். சிக்கிரி கலக்காத காஃபித்தூளில் காஃபி போட்டால் ருசி இருக்கும், திக்னெஸ் கிடைக்காது. சிக்கிரி கலந்த காஃபித்தூளில் தான் மணமும் ருசியும் அதிகமிருக்கும். 30 % சிக்கிரி, 70 % காஃபித்தூள் ஓரளவுக்கு சரியான காம்பினேஷன். அதற்கும் குறைவாக சிக்கிரி கலந்தால் காஃபியின் திக்னெஸ் குறைந்து கொண்டே போகும்.
பால் பவுடரில் காஃபி போடும் முறை:
ஏற்கனவே நான் கூறியது போல் பவுடரை கரைத்து பால் காய்ச்சி வைத்துக்கொண்டு மேலே சொன்ன முறைகளில் அந்தந்த காஃபியை போடலாம்.
Post a Comment