சமையல் அரிச்சுவடி-2
பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா? பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 ...

https://pettagum.blogspot.com/2011/06/2.html
பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மில்லி தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, பொங்கி வரும் வரை காய்ச்சி இறக்கினால் பால் ரெடி.
டீ போட வேண்டுமென்றால், 3/4 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மிலி தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். லேசாக சூடேறியதும் 1 தேக்கரண்டி டீத்தூள், 2 தேக்கரண்டி (பாலிலேயே கொஞ்சம் இனிப்புத் தன்மை இருக்கும்) சர்க்கரை சேர்த்து டீத்தூள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் டீ குடிப்பதற்கு தயார். இதிலும் தூளாக்கிய ஏலக்காயையும், நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து டீ போடலாம். பால் சூடாகாமல் டீத்தூள், சர்க்கரை சேர்த்தால் சில நேரங்களில் பால் திரிந்து விடும்.
பால் திரிந்தால் என்ன செய்வதுன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேனல்லவா? திரிந்து போன பாலை கொஞ்சம் தயிர் அல்லது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி இன்னும் நன்றாக திரிய வைக்கவும். நன்கு திரிந்ததும் வடிகட்டி, கட்டியாக நிற்கும் பனீரை ஒரு சுத்தமான துணியில் கட்டி, மேலே ஏதாவது வெயிட் வைத்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து கெட்டியான பனீர் கிடைக்கும். இந்தப் பனீரை வைத்து பனீர் மசாலா, பட்டர் மசாலா இன்னும் எவ்வளவோ செய்யலாம். ரசகுல்லா கூட செய்யலாம்!
திரிந்த பாலில் ரசகுல்லா !
கெட்டியான பனீரை கைகளால் நன்கு தேய்த்து உதிர்த்து விட்டு நீள ஷேப்பில் உருட்டி வைத்துக் கொள்ளவும். 1/2 டம்ளர் சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து, கொதிக்க விடவும். தளதளன்னு நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு மேலே மிதந்து வந்தபின் அடுத்தது சேர்க்க வேண்டும். எல்லா உருண்டைகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ரசகுல்லா சாப்பிட தயார் தான். அளவு ரொம்ப கம்மியாக இருக்குன்னு பார்க்கறீங்களா? அரை லிட்டர் பால் திரிந்தால் இவ்வளவு தாங்க வரும். இதுக்காக வேண்டுமென்றே அடுத்த முறை பாலைத் திரிய விடக் கூடாது :-)
ஹை, பார்த்தீங்களா? இப்ப ஒரு இனிப்பும் செய்ய கத்துக் கொண்டாச்சு.
இன்னொரு கொசுறு டிப்ஸ்: வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே வாட்டர் எனப்படுவது. சூப் வைக்க பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு வே வாட்டருடன் சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுப்போக்கு மட்டுப்படும். இந்த வே வாட்டரை 2, 3 நாட்கள் புளிக்க விட்டு, அந்த வே வாட்டரை பாலில் ஊற்றி திரிய வைத்து பனீராக்கி ரசகுல்லா செய்வது தான் பெரிய அளவில் செய்யும் சரியான முறை.
பால் பவுடர் ஸ்கிம்டு மில்க் பவுடராக (SKIMMED MILK POWDER) கொழுப்பு அதிகமில்லாமல் உடம்புக்கு நன்மை பயக்கும்.
காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா? ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது கெடுதலை உண்டாக்கும்.
காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.
1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.
டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.
1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.
இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும் காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள் அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும் காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது. அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.
இப்போதைக்கு இன்ஸ்டன்ட் காஃபி குடிச்சிட்டு அடுத்த வாரம் வரை சுறுசுறுப்பாக இருங்க. ஃபில்டர் காஃபியும் சாதா காஃபியும் அடுத்து பார்ப்போம்.
Post a Comment