'மனிதன் எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமல் இல்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வா...

'மனிதன் எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமல் இல்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது)' அல்குர் ஆன்: 50:18.
'நம் வாயிலிருந்து சிந்தும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றது. அதோடு அதற்கான பலன்களும் உடனுக்குடன் பகிர்ந்தளிக்கப்படுகின்றது' என்ற செய்தியையும் இதன் மூலம் அறிய முடிகிறது. நாம் வார்த்தை பிரயோகத்தை எந்த அளவுக்கு சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதில் தொக்கி நிற்கின்றது.
சின்ன விஷயங்களுக்காக சாதாரணமாய் நமது வீடுகளில், மனைவியையோ, குழந்தையையோ கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் நம் வாயிலிருந்து புறப்படுகின்ற வார்த்தைகள் எந்த அளவுக்கு அவர்கள் மனதில் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நாம் உணருவதில்லை. அல்லாஹ் அதனை ஏற்றுக் கொண்டானேயானால் அது எந்த அளவுக்கு அவர்களைப் பாதிக்கும் என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுவதில்லை. இருந்தும் எந்தக் குறிக்கோளும் இன்றி சர்வ சாதாரணமாய் அதனை பிரயோகித்து வருகிறோம்.
அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள். 'நமது உடலில் நரம்பில்லாத உறுப்பு ஒன்றிருக்கிறது. அதனை முறையாக நாம் பயன்படுத்தவில்லை என்றால் அது விளைவிக்கும் விபரீதங்கள் விலைமதிப்பற்ற உறவுகளையே உடைத்தெறிந்து விடும்' என்று.
கறந்த பால் மடி புகாது. அது போன்று சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என்பது முதியோர்கள் நமக்குக் கற்றுத் தந்த கருத்து பெட்டகம். குடும்பப் பிரச்சினைகளில் அல்லது ஊர் பஞ்சாயத்துக்களில் சிந்திக்காமல் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் வீரியங்கள் எந்த அளவுக்கு வன்மங்களை வளர்த்து விட்டிருக்கின்றன என்பது ஆங்காங்கே கண்கூடு.
நாளடைவில் நாம் சாதாரணமாய் பயன்படுத்தி வந்த வார்த்தைகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அர்த்தம் கொள்ளக்கூடிய அபாயமும் உண்டு. அது போன்ற சமயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாய் செயல்பட வேண்டியது அவசியம்.
தர்க்கங்களில் ஈடுபடும்போது தவறி விழுகின்ற வார்த்தைகள் பல சமயங்களில் தவறான அர்த்தம் கொள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அதுபோன்ற நிலைகளில் தன் பக்கம் நியாயம் இருந்தாலும்கூட எடுத்துச் சொல்லாமல் மௌனம் சாதிப்பது நல்ல பலனைத் தரும். 'அனாவசிய பேச்சைத் தவிர்த்து மௌனம் சாதிப்பது சாலச் சிறந்தது' என்ற அண்ணலாரின் அமுதவாக்கும் நமக்கு அறிவுரை பகரும்.
வார்த்தை வீரியங்கள் இன்றைய இளைஞர்களின் கனவுகளைத் தகர்த்து பலரின் விவாகரத்திற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அண்ணன், தம்பிகளிடையே பங்காளிகளின் பகையை வளர்த்து விட்டிருக்கிறது. தாய், தந்தை, பாட்டன்களின் பாசத்தை உடைத் தெறிந்திருக்கிறது. உறவுப் பாலங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. உலக நாடுகளிடையே தோற்றுப் போகும் பேச்சு வார்த்தைகள் உலகப் போர்களாய் உலகை ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றன. தன்னலமற்ற தலைவர்கள் மட்டுமல்ல... அப்பாவி மக்களையும் காவு கொடுத்திருக்கின்றன.
எனவே வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கவனம் கொள்வோம். அதில் வரும் சிக்கலைத் தீர்ப்பதற்கு அல்லாஹ்வை திக்ரு செய்வோம். மற்றைய நேரங்களில் மௌனம் சாதிப்போம். உலகம் அமைதி பெறும்.
Post a Comment