செளசெள துவையல்-கேரட் துருவல்-பத்திய சமையல்!
பத்திய சமையல் ‘உ டம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றார், திருமூலர் அந்த உடல் நல்ல முறையில் வளர, நாம் காய் கனிகளை...

செளசெள துவையல்
தேவையானவை:
பிஞ்சான செளசெள - 1
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
செளசெளவைத் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இட்லிப்பானையில் நீர்விட்டு இட்லித்தட்டில் செளசெள துருவலை உப்பு சேர்த்து நீர்விடாமல் வைத்து இட்லிப்பானை மூடியால் மூடி, 8 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி, பிறகு வெந்த செளசௌ சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். செளசெள துவையல் தயார். (இதற்கு செளசெளவில் உள்ள தண்ணீரே போதும். நீர்விட்டு அரைக்கத் தேவையில்லை.) இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
தீர்வு:
தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும், உடல் பருமனைக் குறைக்கும். தசைப் பிடிப்பைத் தடுக்கும் என்று, இந்தத் துவையலுக்கு நிறைய பலன்கள் உண்டு.
கேரட் துருவல்
தேவையானவை:
துருவிய கேரட் - 1 கப்
உப்பு - சிறிதளவு
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுப்பொடி - அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
வாயகன்ற ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட்டைச் சேர்த்து உப்பு எலுமிச்சைச்சாறு, மிளகுப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். இதை சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் மாலைநேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம்.
தீர்வு:
தினமும் கேரட் சாப்பிட்டால், சருமம், கூந்தல், நகங்கள் ஆகியவை பொலிவு பெறும். கண் பார்வைத்திறன் அதிகரிக்கும். துருவிய கேரட்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றி சிறந்த பூச்சி நிவாரணியாக இது செயல்படுகிறது.
Post a Comment