முறுக்கு ரெசிப்பிக்கள்!
முறுக்கு ரெசிப்பிக்கள்! ரவா முறுக்கு பட்டர் முறுக்கு பாசிப்பருப்பு முறுக்கு முந்திரி முறுக்கு ...
பட்டர் முறுக்கு
பாசிப்பருப்பு முறுக்கு
முந்திரி முறுக்கு
உருளைக்கிழங்கு முறுக்கு
கடலைமாவு முறுக்கு
ஜவ்வரிசி முறுக்கு
ஓட்ஸ் முறுக்கு
கோதுமைமாவு முறுக்கு
---------------------------------------------------------------------------------------------------------------------------
தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள். எண்ணிக்கை: 15 முறுக்கு.
தேவையானவை:
அரிசி மாவு - கால் கப்
ரவை - கால் கப்
தண்ணீர் - 1 கப் (ரவை வேக வைக்க)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
சீரகம் - 2 சிட்டிகை
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ரவையை வறுக்காமல் மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ரவை சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும். ரவை நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும். அகலமான பாத்திரத்தில் வேகவைத்த ரவை, அரிசி மாவு, சூடான எண்ணெய், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், எள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து மாவை தேன்குழல் ஆச்சு அல்லது முள்ளு முறுக்கு அச்சு (ஸ்டார் அச்சு) மூலம் பிழியவும். முறுக்கு இருபுறமும் வெந்து எண்ணெயின் சலசலப்பு ஓசை அடங்கியதும் எடுத்தால், மொறு மொறுப்பான ரவை முறுக்கு தயார்.
குறிப்பு:
ரவை நன்கு ஆறியவுடன் முறுக்கு செய்யவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
பட்டர் முறுக்கு
தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள். 10 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - அரை கப்
கடலை மாவு - அரை கப்
பொட்டுக்கடலை - அரை கப்
வெண்ணெய்/ நெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சீரகம் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவை 3 கண் உள்ள ஸ்டார் அச்சில் சிறிது சிறிதாக விட்டு, ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
குறிப்பு:
பட்டர் முறுக்குக்கு ஸ்டார் அச்சையே பயன்படுத்தவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
பாசிப்பருப்பு முறுக்கு
தேவைப்படும் நேரம்: 35 நிமிடங்கள். 12 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
சீீரகம் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்து கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான முறுக்கு மாவாகப் பிசையவும். 3 கண் உள்ள தேன்குழல் அச்சில் மாவை விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில், பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால், வாசனையான மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.
குறிப்பு:இதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
முந்திரி முறுக்கு
தேவைப்படும் நேரம்: 35 நிமிடங்கள். 12 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
முந்திரிப்பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி முந்திரிப்பருப்பை வெண்ணெயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, முந்திரி வெண்ணெய் பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெயைச் சேர்த்துப் பிசிறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். இனி பிசைந்த மாவை 3 கண் ஸ்டார் அச்சில் விட்டு, வாணலியில் சூடான எண்ணெயைச் சூடாக்கிப் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
இதை தேன்குழல் முறுக்கு மாதிரியும் பிழியலாம். முந்திரிக்கு பதிலாக பாதாமை ஊற வைத்து அரைத்துச் சேர்க்கலாம்
---------------------------------------------------------------------------------------------------------------------------
உருளைக்கிழங்கு முறுக்கு
தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள். 10 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோல் உரித்து)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கைத் துருவிக் கொள்ளவும்். அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, துருவிய உருளைக்கிழங்கு, வெண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயத்தூள், சீரகம், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். தேன்குழல் அச்சில் இட்டு முறுக்குக் குழலில் போட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடேற்றி, அதில் பிழிந்து இரண்டு புறமும் வேகவைத்தெடுக்கவும். மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.
குறிப்பு:
பிசைந்த மாவை உடனே முறுக்கு பிழிய வேண்டும். சிறிது நேரம் வைத்திருந்தால் முறுக்கு சிவந்து விடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
கடலை மாவு முறுக்கு
தேவைப்படும் நேரம்: 35 நிமிடங்கள். 15 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - அரை கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். இதை 3 கண்கள் உள்ள தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி முறுக்காகப் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுத்துப் பரிமாறவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு:
மிளகாய்த்தூளுக்குப் பதிலாக மிளகுப் பொடி கூட சேர்க்கலாம். காரமே சேர்க்காமலும் செய்யலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜவ்வரிசி முறுக்கு
தேவைப்படும் நேரம்: 25 நிமிடங்கள். ஊற வைக்க 4-5 மணி நேரம்.
3 கப் முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
ஜவ்வரிசி - கால் கப்
கெட்டியான மோர் - கால் கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சீரகம் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
ஜவ்வரிசியை 4-5 மணி நேரம் மோரில் ஊறவைக்கவும். ஊறிய பின் ஜவ்வரிசி ஊற வைத்த அளவை விட இரண்டு மடங்காக மாறியிருக்கும். அகலமான பாத்திரத்தில், ஊறிய ஜவ்வரிசி, அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும். ஜவ்வரிசி முத்துக்களைக் கைகளால் நன்றாகப் பிசைந்து விடவும். ஊறி இருப்பதால் நன்கு குழைந்து விடும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெயைச் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். பிசைந்த மாவை முறுக்கு அச்்சில் விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடேற்றி, அதில் பிழிந்து வேக விடவும். இருபுறமும் வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு:
ஜவ்வரிசி நன்றாக ஊறினால் மட்டுமே முறுக்கு நன்றாக வேகும். இல்லையென்றால், எண்ணெயில் போட்டதும் வெடிக்க ஆரம்பித்துவிடும். நன்கு பிசைந்து கொண்டால் மட்டுமே முறுக்கு பிழிவதில் சிரமம் இருக்காது. இல்லையென்றால், அச்சில் மாட்டிக் கொள்ளும். மிளகாய்த்தூளுக்கு பதிலாக அரைத்த பச்சை மிளகாய் விழுதையும் சேர்க்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஓட்ஸ் முறுக்கு
தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள். 18 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
ஓட்ஸ் - கால் கப்
பொட்டுக்கடலை - கால் கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சீரகம் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், ஓட்ஸ் மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறவும். காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவை 3 கண் ஓட்டை உள்ள தேன்குழல் அச்சில் சேர்த்து, வாணலியில் எண்ணெயைச் சூடேற்றி, அதில் பிழிந்து வேக விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு:
ஓட்ஸை வறுக்கும் போது மிதமான தீயில் வறுக்கவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
கோதுமை மாவு முறுக்கு
தேவைப்படும் நேரம்: 45 நிமிடங்கள். 12 முறுக்குகள் கிடைக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 2 சிட்டிகை
சீரகம் 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
கோதுமை மாவை ஒரு மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் 15 நிமிடம் வேக விடவும். குக்கரில் வைத்தால் வெயிட் போட வேண்டாம். மாவை ஆவியில் இருந்து எடுத்து ஆறியவுடன் நன்கு சலித்துக் கொள்ளவும். அகலமான ஒரு பாத்திரத்தில், வெந்த கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவை முறுக்கு அச்சில் விட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கிப் பிழியவும். மாவு இரு புறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுக்கவும். இந்த முறுக்கு வேக சற்று நேரம் எடுக்கும். மிதமான தீயில் வைத்துப் பொரிக்கவும். மற்ற முறுக்கு வகைகளை விட இது சிறிது அதிகம் எண்ணெய் இழுக்கும்.
குறிப்பு: ஆவியில் வேகும் போது மாவில் சிறு தண்ணீர் கூட படக்கூடாது. கோதுமைக்கு பதில் மைதா மாவிலும் இந்த முறுக்கைச் செய்யலாம்.
Post a Comment