கைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபாரிகள் லாபம் பார்க்கும் வழிகள்!
கைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபாரிகள் லாபம் பார்க்கும் வழிகள்! ஜெ.சரவணன் இ னி எந்தவொ...
இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை 2020-ல் 100 பில்லியன் அமெரிக்க டாலரை தொடும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களோ விழாக்கால விற்பனை நாட்களில் (Festival Sale-Big Billion Day-Diwali Offer) மட்டுமே பல்லாயிரம் கோடிகளில் விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளது. இன்றைக்கு பெரும்பாலானோர் ஆன்லைனில் பொருட்களை வாங்கத் தயாராகிவிட்ட நிலையையே இது காட்டுகிறது.
எல்லோரும் ஆன்லைனில் பொருட்களை வாங்கத் தொடங்கி விட்ட நிலையில், சிறு வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும், அவர்களுக்கு தங்கள் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள என்னதான் வழி என்று தொழில்முனை வோர்களுக்கு பல்வேறு சேவைகளைக் தந்துவரும் இண்டியா ஃபைலிங்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் லியனல் சார்லஸ் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
‘‘நிறைய ரீடெயில் வியாபாரிகள் இ-காமர்ஸின் வளர்ச்சியைக் கண்டு, இதனால் நம் வியாபாரம் இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கும் கைக்கொடுக்கும் வகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க முடியும் என்ற வசதியை இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன.
ஏனெனில் முன்பெல்லாம் இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஒரு மையப் படுத்தப்பட்ட கிடங்கிலிருந்துதான் பொருட்களை டெலிவரி செய்துவந்தன. ஆனால், இப்போது நுகர்வோர்களுக்கு மிக அருகில் உள்ள கடைகளில் இருந்துதான் பொருட்களை வாங்கி டெலிவரி செய்கின்றன. அதனால் எப்போதுமே ரீடெயில் கடைகளுக்கு அழிவில்லை. ஆனால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுக்கொள்வதும் காலத்திற்கேற்ப மாறுவதும்தான்.
இப்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மட்டுமில்லாமல், பேடிஎம் (Paytm), ஜஸ்ட் டயல் போன்ற ஆன்லைன் போர்ட்டல்களும் இது போன்ற சேவைகளைக் கொடுக்கத் தயாராகியுள்ளன.
கணினி அறிவு வேண்டும்!
இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து தங்கள் பொருட்களை விற்பதற்குமுன் சில அடிப்படை விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இனி எந்தவொரு தொழிலும் கணினி இல்லாமல் இயங்க முடியாது. எனவே, முதலில் கணினி, இணையம் பற்றிய அறிவு மிகவும் அவசியம். அல்லது கணினி அறிவுள்ள நபர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது, எந்தப் பொருள் அதிக லாபம் தரும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, மொபைல் போன்ற பொருட்களை அதிக லாபத்தில் விற்க முடியாது. ஆனால், மொபைலுக் கான துணைப் பொருட்களை அதிக லாபத்தில் விற்க முடியும்.
எப்படி அணுகுவது?
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இதற்கென்றே ஒரு பகுதி உள்ளது. நாம் ஏற்கெனவே ஒரு கடை வைத்திருக்கும்பட்சத்தில், தொழில் செய்வதற்கான ஆவணங்கள், வாட் (VAT) பதிவு சான்றிதழ், பான் கார்டு, வங்கிக் கணக்கு, தொடர்பு எண், முகவரி ஆகியவை நம்மிடம் இருக்கும். இல்லையென்றால் இவற்றை தயார் செய்துகொண்ட பிறகு இ-காமர்ஸ் தளங்களில் இந்த விவரங்களை தந்து பதிவு செய்யலாம்.
இதில் தனிநபராக, ஒரு பிரைவேட் கம்பெனி பெயரில் மற்றும் பங்குதாரராக என மூன்று வகைகளில் அதற்கேற்ற ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சோதனை செய்யப்பட்ட பிறகு அவர்களே உங்களை அழைத்து பேசி ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.
அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன், அவர்களுடைய தளத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அவை எப்படி செயல்படுகிறது, எந்த மாதிரியான பொருட்கள் விற்கப்படு கின்றன, அவற்றுக்கான விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றன, எவ்வளவு தள்ளுபடி தருகின்றன என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ப நம் நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் தைரியமாக வைக்கலாம்.
எப்படி செயல்படுகிறது?
இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபிறகு, விலை நிர்ணயம் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனைத் தளத்தில் வரிசைப்படுத்தப் படும். அவை விற்றதும், விற்றுத் தந்ததற்கான கமிஷன் தொகையை நிறுவனம் எடுத்துக்கொண்டு பொருளுக்கான தொகையைத் தரும். இந்த கமிஷன் தொகை பொருள்களின் வகைகளுக்கேற்ப மாறும்.
மேலும், பொருளுக்கான விலை, தள்ளுபடி போன்றவற்றை இ-காமர்ஸ் நிறுவனமே நிர்ணயிக்கும். இறுதியில் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும், டெலிவரி செலவுகளையும் இ-காமர்ஸ் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள லாபம் முழுவதும் பொருளுக்குச் சொந்தக்காரர் யாரோ அவருக்குத்தான். விற்பனை வரியும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாகும் என்பதால், அதுவும் ஒரு லாபமாக அமைகிறது.
டெலிவரி எப்படி?
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் மூன்று வகைகளில் டெலிவரி செய்யப்படுகின்றன. பொருளுக்குச் சொந்தக்காரரே நேரடியாக ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வது. இரண்டாவது, இ-காமர்ஸ் நிறுவனத்துக்காக செயல்படும் கொரியர் நிறுவனம் வந்து பொருளை வாங்கி பேக்கிங் செய்து டெலிவரி செய்வது. மூன்றாவது, பொருட்களை இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாங்கிக் கிடங்கில் வைத்து அங்கிருந்து ஆர்டர்களை டெலிவரி செய்வது. இதில் இரண்டாம் வகை டெலிவரிதான் அதிகம் நடக்கிறது.
நீங்கள் ஒரு பொருளை ஆர்டரின் பேரில் டெலிவரி செய்கிறீர்கள். ஆனால், அந்தப் பொருள் திரும்பி வந்துவிடுகிறது எனில், ஏன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து நடவடிக்கைகள் இருக்கும். சரியான பொருளை முறையாக பேக்கிங் செய்து அனுப்பினாலே எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போதும் பொருளின் தரத்திலும், பேக்கிங்கிலும் கவனமாக இருப்பது நம்முடைய பொறுப்பு. அப்போதுதான் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
கவனிக்கவேண்டியவை!
இ-காமர்ஸ் தளத்தில் பொருளை வரிசைப் படுத்திய பிறகு எப்போதும் ஆன்லைனில் தொடர்பில் இருக்க வேண்டும். ஆர்டர் வந்ததும் டெலிவரிக்கான வேலைகளைப் பார்க்க வேண்டும். தவிர, நம்மிடமுள்ள பொருட்களை வரும் ஆர்டர் களுக்கேற்ப மேலாண்மை செய்ய வேண்டும். பொருள் இருப்பில் இல்லையென்றால் இ-காமர்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களே தங்களுடைய விற்பனையாளர்களுக்கு உற்பத்தி, ஆர்டர், இருப்பு போன்றவற்றை மேலாண்மை செய்வதற்கான பயிற்சிகளை வழங்குகின்றன.
அடுத்து, விற்கப்பட்ட பொருட்களுக்கான பணம் வர எத்தனை நாட்கள் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பணம் வரத் தாமதமானால் உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி காரணம் கேட்க வேண்டும். விற்றப் பொருட்களுக்கான பணத்தை விரைவில் தரும் இ-காமர்ஸ் நிறுவனங்களைத் தேர்தெடுப்பது நல்லது” என்று சொல்லி முடித்தார்.
இனி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை தரும் அதே நேரத்தில், இ-காமர்ஸ் தளங்களிலும் பொருட்களை வரிசைப்படுத்தி, வரும் ஆர்டர்களை சரியான நேரத்துக்கு டெலிவரி செய்து, பல மடங்கு லாபம் பார்க்கலாம்.
Post a Comment