விரல்கள் செய்யும் விந்தை
மூட்டுகளைப் பாதுகாக்கும் சந்தி முத்திரை
நம் உடலின்
அசைவுகளுக்கும் இயக்கத்துக்கும் உதவுபவை மூட்டுகள். இரண்டு எலும்புகளை
ஆதாரமாகக்கொண்டு, நடுவில் வட்ட (Disc) வடிவில் இருக்கும். தசைநார்கள்,
சவ்வு ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று இணைந்து, அதைச் சுற்றிலும் ஈரப்பசையான
திரவத்தால் (Synovial fluid) மூடப்பெற்று, ரத்தமும் நரம்புகளும் அதன்
வழியாகச் செல்லும் ஓர் அற்புத இயற்கைப் படைப்பு.
ஒரு காலத்தில் 60 வயதில் வந்த மூட்டு வலிப் பிரச்னை, இப்போது 30-40
வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது. உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ
பிரச்னைகளில், மூட்டு வலி மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. வலிக்குக்
காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்தாமல், தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை
மட்டுமே சாப்பிடுவதால், சிறுநீரகப் பாதிப்பு எனும் பின்விளைவு, நம்மைப்
பின்தொடர்கிறது. இதற்குத் தீர்வாக மருந்தில்லா மருத்துவமாக, அதாவது நம்
கைகளிலே இருக்கக்கூடிய இயற்கை அளித்த கொடைதான், ‘சந்தி முத்திரை.’
மண் மற்றும் ஆகாயம் ஆகிய இரு பூதங்களும் சமன்படுவதால் வலுவற்ற, தளர்வான
மற்றும் இறுக்கமான மூட்டுகளுக்கு நிவாரணம் அளித்து அவற்றை உறுதியாக்கும்
வேலையை சந்தி முத்திரை செய்கிறது.
கட்டளைகள்
நாற்காலியில் அமர்ந்து, இரண்டு பாதங்களையும் தரையில் ஊன்றிச் செய்யலாம்.
இயன்றவர்கள் சப்பளங்கால் போட்டு அமர்ந்தும் செய்யலாம். யோகா செய்து
பழகியவர்கள் வஜ்ராசனத்தில் செய்தால், சிறந்த பலன் பெற முடியும். வெறும்
வயிற்றிலோ, உணவு உண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.
முத்திரையை 20 - 45 நிமிடங்கள் வரை செய்யலாம். பல ஆண்டுகளாக மூட்டு
வலியால் அவதிபடுவோர், ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஓய்வு நேரத்திலும் செய்யலாம்.
எப்படிச் செய்வது?
வலது கை: பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை: பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்

முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கும்.

மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து, வலியைக் குறைக்கும்.

வயோதிகத்தால்
மூட்டுகளில் உள்ள ஈரப்பசை குறைவதால் வறட்சி ஏற்பட்டு, நடக்கும்போதும்,
காலை நீட்டி மடக்கும்போதும் சத்தம் கேட்கும். இதற்கு சந்தி முத்திரை
செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல்
தடுக்கும்.

அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும்.

இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.

மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை நார் கிழிவுகளில் ஏற்படும் பிறழ்வு, வலி, வீக்கத்துக்குத் தீர்வு கிடைக்கிறது.

வஜ்ராசனத்தில் செய்துவந்தால், 60 வயதில்கூட மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.

சிக்குன்குனியா,
வாதஜுரம், டெங்கு போன்ற முடக்குவாதக் காய்ச்சல்களில் மூட்டு வலி அதிகமாக
இருக்கும். காய்ச்சல் இருக்கும் போதே படுத்த நிலையிலோ அல்லது உட்கார்ந்த
நிலையிலோ முத்திரை செய்துவர, உடல் அசதி, வலி, காய்ச்சலால் ஏற்படும்
மூட்டுப் பாதிப்புகள் குறையும்.

முழங்கால்
மூட்டுகளில் ஏற்படும் தசைநார்க் கிழிவு (Ligament tear), மீண்டும்
ஒன்றுகூடப் பல நாட்கள் ஆகும். வலியும் தீவிரமாக இருக்கும். இதற்கு சந்தி
முத்திரை சிறந்த தீர்வு.

பல
வருடங்களுக்கு முன் சிக்குன்குனியாவால் வந்த முடக்குவாதம் மற்றும்
மூட்டுவலி, மூட்டுகள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர், தொடர்ந்து மூன்று
மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும்.

தரையில் உட்கார முடியாதோர், வயோதிகத்தால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தவிப்போர், இந்த முத்திரையைச் செய்யலாம்.
1 comment
Is there a tag that I can use to search for all articles on Hand Mudras from Dr Kalpana Devi.
Post a Comment