ஜீரோ பட்ஜெட் வாழை... ஆயிரம் ஆண்டுகளுக்கு வருமானம்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
மே 11-ம் தேதி, நாமக்கல், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில்,
'ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்’ என்ற தலைப்பில் தமிழக முன்னோடி 'ஜீரோ
பட்ஜெட்’ விவசாயிகளின் அனுபவப் பகிர்வு நடைபெற்றது. அதில், வாழை சாகுபடி
பற்றி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள
லிங்கமநாயக்கன்புதூரைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி பாலகிருஷ்ணன்
சொல்லிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.
விதைநேர்த்தி அவசியம்!
''வாழை சாகுபடிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர்
நிலத்தை, நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பிறகு, அடியுரமாக 100 கிலோ
குப்பை உரத்துடன், 100 கிலோ கனஜீவாமிர்தத்தைக் கலந்து இடவேண்டும்.
வாழைக்கிழங்கை விதைநேர்த்தி செய்து விதைத்தால், நன்கு வளர்வதுடன், வேர்
சம்பந்தமான நோய்கள் வராது. விதைநேர்த்தி செய்ய... தேவையான அளவு பீஜாமிர்தக்
கரைசலைத் தயார் செய்து கொண்டு, நடவுக்கான வாழைக்கிழங்கை அதில் நனைத்து
எடுத்து நிழலில் உலர்த்தவேண்டும். அடுத்து, வரிசைக்கு வரிசை 8 அடி,
கன்றுக்கு கன்று 4 அடி இடைவெளியில், வழக்கமான முறையில் வாழைக்கிழங்குகளை
நடவு செய்யவேண்டும்.
ஊடுபயிரில் கூடுதல் லாபம்!
ஜீரோ பட்ஜெட் முறையில் ஊடுபயிர் சாகுபடியும்
முக்கியமானது. ஒரே மாதிரியான பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது
காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தை உறிஞ்சி, வேருக்குக் கொடுக்கும் வேலைகளை
இந்தப் பயிர்கள் செய்துவிடும். வெங்காயம், உளுந்து, தட்டைப்பயறு, மிளகாய்
ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். வாழை வரிசைகளுக்கு இடையிலான 8 அடி
இடைவெளியை இதற்குப் பயன்படுத்தலாம். 60 நாட்களில் அறுவடைக்கு வருகிற
வெங்காயம்; 90 நாட்களில் அறுவடைக்கு வருகிற உளுந்து அல்லது தட்டைப்பயறு;
150 நாட்களில் அறுவடைக்கு வருகிற மிளகாய் ஆகிய மூன்றையும் ஊடுபயிராக
சாகுபடி செய்யும்போது... வாழை அறுவடைக்கு வருவதற்குள், இந்த மூன்றையும்
அறுவடை செய்து லாபம் பார்த்துவிட முடியும்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்... மூடாக்குக்கு ஊடுபயிர்!
மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஏக்கருக்கு
200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட
வேண்டும். அதிகபட்சமாக எத்தனை தடவை வேண்டுமானாலும் விடலாம். சொட்டு
நீர்ப்பாசனத்தில்கூட ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடலாம். இந்த
ஜீவாமிர்தமே ஊடுபயிர்களுக்குத் தேவையான ஊட்டத்தையும் கொடுத்துவிடும். ஜீரோ
பட்ஜெட் விவசாயத்தில் மூடாக்கும் முக்கியமானது. வெங்காயத்தாள், தட்டைப்பயறு
அல்லது உளுந்து செடி, மிளகாய் செடி இவை மூன்றுமே அறுவடை வரை உயிர்
மூடாக்காக இருக்கும். அறுவடை செய்த பிறகு இந்தச் செடிகளை வாழைக்கன்றுகளைச்
சுற்றி நிலத்தில் பரப்பி விட்டால், மூடாக்காக இருப்பதோடு... மட்கி மண்ணில்
கலந்து உரமாகவும் ஆகிவிடும்.
நோய்கள், பூச்சிகளுக்கு எளிய தீர்வு!

அடுத்ததாக
வாழையைத் தாக்குகிற பூச்சிகள், நோய்களைப் பற்றிப் பாப்போம். இவற்றுக்கும்
ஜீரோ பட்ஜெட் முறையில் எளிய தீர்வுகள் உள்ளன. வாழையை பெரும்பாலும் ஊசி
வண்டு அதிகமாகத் தாக்கும். தண்டில் துளையிட்டு உள்ளே போவதால், தண்டு
பலமிழந்து மரம் சாய்ந்துவிடும். இதன் காரணமாக அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.
வேருக்கு அருகில் வேப்பம் பிண்ணாக்கை வைப்பதன் மூலமும், ஜீவாமிர்தம்
தெளிப்பதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம். வேர் அருகில் வேப்பம்
பிண்ணாக்கு வைக்கும்போது... வேர் அழுகல் நோயும் கட்டுப்படும். தொடர்ந்து
ஜீவாமிர்தத்தை மேல் வழித்தெளிப்பாகவும், பாசன நீருடனும் பயன்படுத்தும்போது
90 சதவிகிதம் நோய்களும், பூச்சிகளும் வருவதில்லை.
பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம்
என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். இதை, ஊடுபயிர்களுக்கும் தெளிக்கலாம்.
வாழையைத் தாக்கும் முக்கியமான நோய் இலைகருகல். வேர் பகுதியில் அதிக
தண்ணீர் நிற்பதும் காற்றோட்டம் இல்லாமல் இருப்பதும்தான் இந்நோய்க்குக்
காரணம். ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது தானாகவே காற்றோட்டம் கிடைத்து
விடும். வேர்பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே இலைக்கருகல்
வராது. இவற்றைத் தவிர வேறு பராமரிப்புகள் தேவையிருக்காது.
ஆயிரங்காலத்துப் பயிர்!
ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை சாகுபடி செய்யும்போது ஒரு
தடவை நட்டு விட்டால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வருமானம் பார்க்கலாம்
என்கிறார், பாலேக்கர். வாழையில் குலை தள்ளும் வரை அடியில் முளைக்கும்
பக்கக் கன்றுகளை அகற்றிக் கொண்டே வர வேண்டும். வாழை குலை தள்ளியவுடன்
அந்தக்குலைக்கு நேர் எதிரில் உள்ள பக்கக்கன்றை மட்டும் வளரவிட்டு,
மற்றவற்றை அகற்றி விட வேண்டும். அதேபோல, அறுவடை செய்த பிறகு, மரத்தை
முற்றிலும் வெட்டி விடாமல் மேலே இலைப்பகுதியை மட்டும் வெட்டி மூடாக்காக
தோப்பில் பரப்பி விட வேண்டும். தண்டுப்பகுதியை அப்படியே விட்டுவிட
வேண்டும். இந்தத்தண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கருக்கிக்கொண்டே வரும்.
அதேசமயம், இந்த தாய் மரத்தில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு...
பக்கக்கன்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வரும். இதேபோல மாற்றி மாற்றி
செய்தால்... ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழையில் வருமானம் பார்க்க
முடியும். இதே முறையை கரும்பிலும் மேற்கொள்ளலாம்'' என்றார், பாலகிருஷ்ணன்.
இதே நிகழ்வில் பேசப்பட்ட சம்பங்கி, கரும்பு, நெல் ஆகிய பயிர்களின் சாகுபடி முறைகளைப் பற்றி
அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2
கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200
லிட்டர், இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து, பிளாஸ்டிக்
கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை
என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து, இதைக் கலக்கி
விட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன
நீரிலேயே இதை கலந்து விடலாம். ஒரு பங்கு ஜீவாமிர்தக் கரைசலுடன் பத்து பங்கு
தண்ணீர் கலந்தும் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு
போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங் கள். கூடவே, உப்புமா பதம்
வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
Post a Comment