30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!30 நாள் 30 வகை சமையல்!!

வே லை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், 'அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது... கரகரமொறுமொறு ஸ்...


வேலை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், 'அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது... கரகரமொறுமொறு ஸ்நாக்ஸ் தட்டை நீட்டுபவர்களை தங்கள் பாசத்துக்கு உரியவர்களாக கொண்டாடு வார்கள். அதுவும் சுவை சூப்பராக இருந்தால் கேட்கவே வேண்டாம்! இந்த இனிய உணர்வு உங்கள் இல்லத்தில் பரவிட உதவும் வகையில்... கட்லெட், டிக்கி, பஜ்ஜி, சமோசா போன்ற    வற்றை விதம்விதமாகவும், புதுவிதமாகவும் தயாரித்து, '30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’களை குவித்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
''இந்த ரெசிப்பிகள், சாப்பிடுபவர்களை 'ஒன் மோர் ப்ளீஸ்’ என கேட்க வைக்கும்'' என்று உற்சாகப்படுத்தும் ஆதிரை, ''அதேசமயம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்பதால், அளவோடு செய்து பரிமாறுங்கள்'' என்று அறிவுறுத்துகிறார்.
மினி சமோசா
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

நட்ஸ் பால்ஸ்
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், வறுத்த எள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், ரஸ்க் - 6, பொடித்த வெல்லம் - 150 கிராம், பேரீச்சை - 6, முந்திரி - 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் - சிறிதளவு.
செய்முறை: பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும்.

சீஸ் ஆலு பன்ச்
தேவையானவை: துருவிய சீஸ் - கால் கப், உருளைக்கிழங்கு - 4, பிரெட் துண்டுகள் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக் கவும். இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக நறுக்கவும். நறுக்கிய பிரெட் துண்டுகளின் மேல் உருளை மசாலாவைத் தடவி, அதன் மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... சுடச்சுட பரிமாறவும்.

டொமேட்டோ ரிப்பன்
தேவையானவை:  மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், தக்காளி - 3, பச்சை மிளகாய் - 4, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயை மிக்ஸியில் மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி ஆவியில் வேக வைத்து சலிக்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அரைத்து வடிகட்டிய தக்காளி - பச்சைமிளகாய் சாறு மற்றும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். மாவை ரிப்பன் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

ஸ்பெகாட்டி பனீர் பால்ஸ்
தேவையானவை: குச்சி நூடுல்ஸ் (ஸ்பெகாட்டி - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம்,  பனீர் - 200 கிராம், சீஸ் - 4 சிறிய துண்டுகள், பால் - 2 கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மைதா - அரை கப், பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 4 , ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கவும். சீஸை நன்கு துருவவும். 6 கப் நீரை நன்கு கொதிக்கவிட்டு, ஸ்பெகாட்டியை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, ஸ்பெகாட்டியைக் குளிர்ந்த நீரில் போட்டு அலசவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நசுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சோள மாவை பாலில் கரைத்து  சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவை கெட்டியாகிக் கொதித்த உடனேயே உப்பு, ஸ்பெ காட்டி, பனீர், சீஸ், மைதா சேர்த்துக் கலந்து இறக்கி, சிறுசிறு உருண்டை களாக உருட்டவும். உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கார்ன் ஃப்ரிட்டர்ஸ்
தேவையானவை:  பேபி கார்ன் - 10 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்),  சோள மாவு, மைதா மாவு - தலா கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்  கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய  பேபி கார்னை கரைத்த மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு டிக்கி
தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, ஆம்சூர் பொடி - ஒரு சிட்டிகை, முந்திரி - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக  மிக்ஸியில் பொடிக்கவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும். மசித்த சேப்பங்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை, பொடித்த முந்திரி, உப்பு, கடலை மாவு, மிளகாய்தூள், ஆம்சூர் பொடி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும். இதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். இதற்கு, தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்.

நியூட்ரிஷியஸ் பேல்
தேவையானவை:  வறுத்த வேர்க்கடலை - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், பொரி - ஒன்றரை கப், ஆப்பிள் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், துருவிய மாங்காய் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
இனிப்பு  சட்னிக்கு: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை - 6, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு (புளி, திராட்சை, பேரீச்சையை ஊறவைத்து நைஸான விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்றே கெட்டியாகும் வரை (சுமார் 2 நிமிடம்) கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி).
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலை, முளைகட்டிய பயறு, தக்காளி, மாதுளை, பொரி, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் துண்டுகள், கார்ன் ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கலக்கவும். பரிமாறும் முன் இந்தக் கலவையை  தட்டில் போட்டு தேவையான இனிப்பு சட்னி விட்டுக் கலந்து, கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பீஸ் கபாப்
தேவையானவை: பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கட்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பை தனித்தனியே வேகவைத்து நீரை வடித்துவிட்டு, இரண்டையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சியை சுத்தம் செய்து... பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைக்கவும். இதனுடன் பட்டாணி - கடலைப்பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்தக் கலவையை நீள நீளமாக சிலிண்டர் வடிவில் செய்து, ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பொட்டுக்கடலை மாவு
வேர்க்கடலை பக்கோடா  
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். மிளகு, பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும். பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, பொடித்த மிளகு - பெருஞ்சீரகம், வதக்கி வைத்திருக்கும் கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப்,  வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேகவிட்டு தோல் நீக்கி, நன்றாக மசிக்கவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்க வும். உதிர்த்த மைதா மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளை எள், உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு நீர்விட்டுப் பிசைந்து சீடை போல சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருட்டி வைத்தவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
வாயில் போட்டால் கரையும்... இந்த ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்.

மூங்தால் கிரிஸ்பி
தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா கால் கிலோ, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலை, அரிசியையும் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுகளை நன்கு சலித்து, அவற்றுடன் வெள்ளை எள், உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பனீர் மேத்தி டிக்கி
தேவையானவை: பனீர் - அரை கிலோ (நன்கு உதிர்க்கவும்), உருளைக்கிழங்கு - 3 வெந்தயக் கீரை - ஒரு சிறிய கட்டு, மைதா - 6 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி யில்லாமல் மசிக்கவும். வெந்தயக் கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உதிர்த்த பனீர், மசித்த உருளைக்கிழங்கு, 3 டேபிள்ஸ்பூன் மைதா, நறுக்கிய கொத்தமல்லி, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 3 டேபிள்ஸ்பூன் மைதாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

பேபி கார்ன் பெப்பர்
தேவையானவை: பேபி கார்ன் - 6 (வட்டமாக மெல்லியதாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - ஒன்று, வெங்காயத்தாள் - 4, ஆலிவ் ஆயில் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

கோபி கிராக்கெட்ஸ்
தேவையானவை: காலிஃப்ளவர்- ஒன்று, உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் மையாக அரைக்கவும். உருளைக்கிழங்கை  வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும்.
நறுக்கிய காலிஃப்ளவர், மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, 2 டேபிள்ஸ்பூன் மைதா, துருவிய சீஸ், தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவமாக்கவும். இதுதான் கோபி கிராக்கெட்ஸ்.
மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவை சற்று நீர்க்கக் கரைத்து, அதில் கோபி கிராகெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.

சுனந்தாலு
தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி - 10.
செய்முறை: பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு நெய்யை உருக்கி, அது சூடாக இருக்கும்போதே கலந்து வைத்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.

கிரிஸ்பி பட்டர் முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 50 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து, தேவையான நீர் சேர்த்து பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
வாயில் போட்ட உடனே கரையும் இந்த பட்டர் கிரிஸ்பி முறுக்கு.

வெஜ் ஸ்பிரிங் ரோல்
தேவையானவை: மைதா மாவு, நவதானிய மாவு (மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - தலா அரை கப், முளைகட்டிய நவதானியம் (பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை (சேர்த்து) - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

கிரெய்ன்ஸ் ஸ்டஃப்டு பன்
தேவையானவை: வட்டமான பன் - 4, முளைகட்டிய நவதானியம் ( பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,  கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், சீரகம், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். புளியை கெட்டியாகக் கரைக்கவும். பச்சை வேர்க்கடலை, வறுத்த எள், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, வேர்க்கடலை விழுது, புளிக்கரைசல், உப்பு, தனியாத்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, கொப்பரைத் துருவல் தூவி இறக்கவும். பன்னை பாதியாக வெட்டி வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து, தயாரித்து வைத்த கலவையை நடுவில் வைத்து பரிமாறினால்... சாப்பிடுபவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள்... 'ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்’தான்!
குறிப்பு: பன் துண்டுகளின் நடுவில் மிகவும் மெல்லியதாக, வட்டமாக 'கட்’ செய்த தக்காளி, குடமிளகாயையும் வைக்கலாம்.

ஸ்பெஷல் மிக்ஸர்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், வேர்க்கடலை, அவல் - தலா 100 கிராம், பல்லு பல்லாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு - 10, முந்திரி (பாதியாக உடைக்கவும்) - 10 சர்க்கரை பொடி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வேர்க்கடலை, அவல், நறுக்கிய கொப்பரைத் தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரி ஆகியவற்றை எண்ணெயில் தனித்தனியே பொரித்து எடுக்கவும். கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண் ணெயில் பிழிந்து மொறுமொறு வென எடுக்கவும். இதனுடன் எண்ணெயில் பொரித்த பொருட்கள், உலர்திராட்சை சேர்த்துக் கலந்து, சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.

சீஸ் சேமியா டிலைட்
தேவையானவை: சேமியா - ஒரு கப், சீஸ் - 2 சிறிய துண்டு கள், மைதா - கால் கப், வெங் காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயத்தாள் - அரை கட்டு, பனீர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சேமியாவை வறுத்து, தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து உதிர்க்கவும். சீஸை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பனீரை துருவிக்கொள்ளவும். இவற்றுடன் மைதா, உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதனை தக்காளி சாஸுடன் சுடச்சுட பரிமாறினால்... சுவை 'ஜோர் ஜோர்’தான்!

சீஸ் ரஸ்க் டிக்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சிறிய சீஸ் துண்டுகள் - 3 (துருவவும்), துருவிய பனீர் - சிறிதளவு, ரஸ்க் தூள் - தேவையான அளவு, பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெயை விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை சேர்த்து வதக்கி, பாலை ஊற்றி, அடுப்பை சிறுதீயில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கி... உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், துருவிய பனீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவோடு சிறிது நீர் சேர்த்து கரைக்கவும். உருளை - சீஸ் கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

டிரம்ஸ்டிக் கட்லெட்
தேவையானவை: முருங்கைக்காய் - 3, உருளைக்கிழங்கு - 3, இஞ்சி - பச்சை மிளகாய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும். முருங்கைக்காயை நறுக்கி, வேகவைத்து, சதையை மட்டும் வழித்தெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பிரெட் தூள், கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இதை சின்ன சின்ன கட்லெட்டுகளாகத் செய்து, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.

ஸ்பெஷல் தயிர் வடை
தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், கெட்டித் தயிர் - 2 கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, பாதாம், முந்திரி - தலா 8, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து... பால், சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதை பால் - தயிர் கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.

மைதா ரவுண்ட்
தேவையானவை:  மைதா மாவு - அரை கிலோ, பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை:  மைதாவை நீர் தெளித்துப் பிசிறி, ஆவி யில் வேகவிட்டு எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப் பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லிய தான சின்னச் சின்ன வட்டங்க ளாக தட்டி, சூடான எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.

முள்ளங்கி புர்ஜி
தேவையானவை:  வெள்ளை முள்ளங்கி - 4, பொட்டுக்கடலை மாவு - அரை கப், பிரெட் தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 2 பல், பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, கிராம்பு, பூண்டு, பெருஞ் சீரகம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை தோல் சீவி,    துருவி, நீரைப் பிழிந்துவிடவும். அதனுடன் பிரெட் தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கவும். இந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவில் போட்டு நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ஸ்பிரவுட் டிக்கி
தேவையானவை: முளைகட்டிய பயறு கலவை (பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், ரஸ்க் தூள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப்,  எண்ணெய். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகெரப்பாக அரைக்கவும். அதில் ரஸ்க்தூள் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன் சிறிது உப்பு மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு படத்தில் கரைக்கவும். உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பீட்ரூட் கேஷ்யூ கட்லெட்
தேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ,  உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, முந்திரி - 10, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 6 (பொடித்துக்கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், துரு விய பீட்ரூட், தேவையான உப்பு, பொடித்த முந்திரி சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். கடலை மாவுடன் கொஞ்சம் நீர், சிறிதளவு உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். செய்து வைத்த கட்லெட்டுகளை கடலை மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மஷ்ரூம்   ஆலு ரெனடி
தேவையானவை: காளான் - 100 கிராம் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு மசித்துக் கொள்ளவும்), கேரட் - ஒன்று (துருவவும்), பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  நறுக்கிய காளான், துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை சிறிதளவு உப்பு கலந்த நீரில் நனைத்து, உடனே  பிழிந்து  நடுவே மஷ்ரூம் உருண்டை   களை  வைத்து, அப்படியே  மூடி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பனீர் பஜ்ஜி
தேவையானவை: பனீர் - கால் கிலோ (விரல்நீளத் துண்டுகளாக, சற்று மெல்லியதாக நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய், பனீர் துண்டுகள்  நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம்  நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 169784183800281105

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item