நெற்பயிரில் மிரட்டும் பூச்சிகள்... விரட்டியடிக்க எளிய வழிகள்!
வயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்... பதில்களும்!
நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பூச்சியல் வல்லுநர் நீ. செல்வம்.
''நெல் பயிருக்குப் பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் குணம் உண்டா?''
''நெல் பயிர், தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான
இலைகளைவிட, 50 சதவிகிதம் அதிகமாக உற்பத்தி செய்யும் குணம் கொண்டது. மேலும்,
எல்லா பயிர்களை விடவும் 200% தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய பயிர்.
அதனால்தான் வறட்சியிலும், தண்ணீரிலும் வளர்கிறது. சிலவகையான பூச்சித்
தாக்குதல்களையும் இயல்பாகவே தாங்கி வளரும் குணம் கொண்டதுதான் நெற்பயிர்.''
''பூச்சித் தாக்குதலை தடுக்க என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?''
''ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 கிலோ வேப்பங்கொட்டைத்
தூள் இட்டு நடவு செய்ய வேண்டும். தழைச்சத்துக்காக அதிகமான அளவுக்கு
யூரியாவைப் பயன்படுத்துவதைக் குறைத்து, மண்புழு உரத்தைப் பயன்படுத்த
வேண்டும்.
இயற்கை விவசாயிகளாக இருந்தாலும், 'பச்சை வண்ண
அட்டை’யைப் பயன்படுத்தி சோதித்து, தேவையான அளவில் மட்டுமே உரங்களைக்
கொடுக்க வேண்டும். சோதனையின்போது, 3-ம் எண்ணுக்கு மேல் பச்சையம் இருந்தால்,
எந்தவிதமான உரங்களையும் கொடுக்கத் தேவையில்லை.
நெல் வயல் முழுவதும், 10 இடங்களில் பயிரின் உயரத்துக்கு
தென்னை மட்டையின் அடிப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு நட்டு வைக்க
வேண்டும். இவ்வாறு செய்வதால், ஆந்தை, கோட்டான் போன்ற பறவைகள் வந்தமர்ந்து
பூச்சிகளைப் பிடித்து உண்ணும், வேப்பம் பிண்ணாக்கில் 'அசாடிரக்டின்’ போன்ற
அல்க்லாய்டு சத்துகள் குறைவாக இருப்பதால், வேப்பம் பிண்ணாக்கைத் தவிர்த்து,
வேப்பங்கொட்டைத் தூளைப் பயன்படுத்த வேண்டும். நான்கு பக்கங்களிலும்
வரப்புகளில் பொறிப்பயிராக... உளுந்து, தட்டைப் பயறு ஆகியவற்றை சாகுபடி
செய்தால், நன்மை செய்யும் பூச்சிகள் ஓடோடி வரும். இவை, தீமை செய்யும்
பூச்சிகளை அழிக்கும். வரப்புகளின் நான்கு மூலையிலும், செண்டுமல்லிப் பூவை
நடவு செய்ய வேண்டும். இதன் மூலமாக பூச்சித் தாக்குதல் வெகுவாகக்
குறையும்.''
''நெல் நாற்றுகளை எந்த வகையான பூச்சிகள் அதிகமாகத் தாக்குகின்றன?''
''இலைப்பேன் மற்றும் பயிர் கரையான் ஆகியவை அதிகமாகத் தாக்குகின்றன.''
''இலைப்பேனின் தாக்குதல் எவ்வாறு இருக்கும்? இவற்றை எவ்வாறு கட்டுப் படுத்த வேண்டும்?''
''இயற்கை உரங்கள் போடப்படும் நாற்றுகளில் இந்தப்
பிரச்னை இருக்காது. நாற்றுகளில் வெள்ளைக் கோடுகள் தென்பட்டால், தண்ணீரில்
கையை நனைத்து, நாற்றுகளில் ஒற்றி எடுத்துப் பார்த்தால், இலைப்பேன்களைக்
காணலாம். 5 பேன்களுக்கு மேல் காணப்பட்டால், தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள
வேண்டும். நாற்றங்கால் முழுவதும் தண்ணீர் கட்டி வடித்துவிட வேண்டும்.
அல்லது பவர் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை வேகமாகத் தெளிக்கலாம்.''
''பயிர் கரையானின் தாக்குதல் எவ்வாறு இருக்கும்? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?''
''பயிர் கரையானால் தாக்கப்பட்ட நாற்றுகள் அழுகி
இருக்கும். நாற்றங்கால் தயாரிப்பு செய்யும்போதே, ஒரு சென்ட் நிலத்துக்கு 2
கிலோ என்ற கணக்கில் வேப்பங்கொட்டைத்தூள் இட்டால், பயிர் கரையான் வராது.''
''நாற்று நடவு செய்த பிறகு பயிரை என்ன விதமான பூச்சிகள் தாக்குகின்றன? அவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது?''
''இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி (தண்டுத்
துளைப்பான்), கம்பளிப் புழு, பச்சைக்கொம்புப் புழு, புகையான்,
கதிர்நாவாய்ப் பூச்சி, ஆனைக்கொம்பன், கூண்டுப்புழு, மாவுப் பூச்சி ஆகியவை
தாக்குகின்றன. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இலைச்சுருட்டுப் புழு: இலைச்சுருட்டுப்
புழு மற்றும் குருத்துப் பூச்சி இவை இரண்டில் முதலில் எந்தப் பூச்சி
வேண்டுமானாலும் பயிரைத் தாக்கலாம். இலைச்சுருட்டுப் புழு, இலையைச்
சுருட்டிக்கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சாப்பிடும். இதனால், பயிர்கள்
வெயில் நேரங்களில் வெள்ளை நிறத்தில் தோன்றும். இப்புழுவைக்
கட்டுப்படுத்த... தழைச்சத்து உரங்களை நிலத்தில் சரியான அளவுகளில்
பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன்
மூலம், பயிர்களின் மிதமான பச்சை நிறம் மட்டும் இருப்பதால் புழு தாக்குதல்
இருக்காது.
குருத்துப் பூச்சி:
குருத்துப் பூச்சிகள் சில நேரங்களில் நாற்றுகளையும் தாக்கும். அப் போது,
பயிர்கள் காய்ந்து காணப்படும். மேலும், இளம்நாற்றுகளின் இலை
நுனிப்பகுதிகளில்தான் குருத்துப் பூச்சிகளின் தாய் அந்துப் பூச்சிகள்
முட்டைகளை இடு கின்றன. இவற்றைத் தடுக்க, நாற்றுகளை நடவு செய்யும்போது,
இலைகளின் நுனிப் பகுதியைக் கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த
20 நாட்கள் முதல் 25 நாட்களில், இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக
இருக்கும். இதனால், பயிர்களின் நடுக்குருத்துப் பகுதி மஞ்சள் நிறத்துக்கு
மாறி இருக்கும். அந்தப் பகுதியைப் பிடித்து இழுத்துப் பார்த்தால், அடியில்
கெட்டவாடை வரும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, மஞ்சள்
நிறத்தில் தாய்அந்துப் பூச்சிகள் தென்பட்டால்... உடனடியாக வேப்பங்கொட்டைக்
கரைசல் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 28-ம் நாளில் இருந்து, ஏழு நாட்கள்
இடைவெளியில் மூன்று முறை, ஏக்கருக்கு இரண்டு கன சென்டிமீட்டர் என்ற
கணக்கில் 'டிரைக்கோகிரம்மா ஜப்போனிகம்’ முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை இலைகளில்
கட்டினால், குருத்துப் பூச்சிகள் கட்டுப்படும்.
கம்பளிப் புழு மற்றும் பச்சைக்கொம்புப் புழு: பச்சை
மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும் கம்பளிப் புழுக்கள் அதிகமான
சேதாரத்தை ஏற்படுத்தாது. பறவைகள் அமர்வதற்கு இடம் கொடுத்தால், புழுக்களை
அவை பார்த்துக் கொள்ளும். புழுக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால், பச்சை
மிளகாய்-பூண்டுக்கரைசலைத் தெளித்தாலே போதுமானது.''
- படிப்போம்...
Post a Comment