ஆறாம் திணை - 85
மருத்துவர் கு.சிவராமன்
இந்தக்
கோடையில் எங்கே திரும்பினாலும் அம்மை நோயின் உக்கிரம் தகிக்கிறது! அக்னி
நட்சத்திரப் பருவத்தில் இதைத் தவிர்க்கவே முடியாதா? இந்த அம்மை காலத்தில்
நாம் எதைச் சாப்பிடுவது? அந்த நோய்கான மருந்தை உட்கொள்ளலாமா... கூடாதா?
அம்மை நோயில் இருந்து நாம் குணமடைந்தாலும், சிலருக்குக் கண், சினைப்பை,
விதைப்பையில் தாக்கம் வரும் என்கிறார்களே! அந்தத் தழும்புகள் எப்போது
மறையும்? தடுப்பூசிப் போட்டால் அம்மையைத் தடுக்கலாமா? - இந்தக்
கேள்விகள்தான் தற்போதைய கோடை வெயிலைவிட அதிகம் சுடுபவை!
Varicella Zoster virus எனும் வைரஸ் காரணமாக வரும் இந்த
நோய்க்கு, குழந்தைப் பருவத்தில் போடப்படும் MMRV தடுப்பூசி, மிகச்
சிறப்பாகவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வதாக அத்தனை ஆய்வு
முடிவுகளும் கூறுகின்றன.
மிகத் தீவிரமாகத் தொற்றும் இயல்புடைய அம்மை,
பெரும்பாலும் நிரந்தரப் பிரச்னை ஏதும் நிகழ்த்தாமல், 14 முதல் 16
நாள்களுக்குள் நம்மைவிட்டு விலகிவிடும். குழந்தைகள், கர்ப்பிணிகள்
மட்டும்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள்,
கீமோதெரபி எடுத்துக் கொள்வோர், அறுவைசிகிச்சை செய்து சகஜ நிலைக்குத்
திரும்புவோர்... என, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர் மட்டும் சற்றுக்
கவனமாக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டோர் புழங்கும் பொருள்களைத்
தொடுவதிலும், அவர்களுக்கு அருகில்/உடன் வசிக்கும்போதும்தான் இந்த நோய்
தொற்றத் தொடங்குகிறது.

அம்மையைத்
தடுக்க, காலங்காலமாக சிறப்பு மருந்து வேம்பு மட்டும்தான். அம்மை வைரஸுக்கு
எதிரான வேம்பின் இந்த ஆற்றல் காரணமாக, அதைக் காப்புரிமை மூலம் கபளீகரம்
செய்ய நினைத்த, அமெரிக்காவின் முயற்சியை, இந்தியா நமது பாரம்பரிய
மருத்துவச் சான்றுகள் மூலம் முறியடித்தது. ஆனால், வேம்பின் பயனைச் சொல்லிப்
பயன்படுத்தச் சொன்னால், பெருவாரியான இளைய தலைமுறையும் நவீனப் பற்றாளரும்,
நம்மை ஏதோ குறி சொல்லும் கூட்டம் போல ஏறிட்டு, 'ஏன் இன்னும் வேப்பிலையை
வெச்சுக்கிட்டு ஆடுறீங்க? நானோ துகள் காலம் இது. 'பாரம்பரியம்’ என்ற பேச்சே
மூடநம்பிக்கையின் புதுச்சொல்!’ என்று விலக முனைகின்றனர்.
வேப்பிலையின் அருமையை, தமிழ்ச் சித்தர்களும்
மூத்தக்குடியினரும் மட்டும் பேசிச் செல்லவில்லை... 1867-ல், சென்னை
மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளிவந்த Madras Quarterly Journal of
Medical Science எனும் மருத்துவ ஆய்வு நூலிலேயே வேம்பின் பயன்கள் பற்றி,
மருத்துவர் செஞ்சி பழனியாண்டி எழுதியிருக்கிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் இங்கிலாந்து ராயல்
கல்லூரிகளில் மருத்துவம் பயின்று இந்தியா வந்து, தொற்றுநோய்த் தடுப்புக்கான
தலைமைக் கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது தமிழகத்தில் வெகுவாகப்
பிரச்னை செய்துவந்த பெரியம்மையைத் ((Small Pox)) தடுக்கவும் ஒழிக்கவும்
வேம்பைத்தான் பயன்படுத்தச் சொல்லியிருக்கின்றார். இப்படியான அணுகுமுறைதான்,
பின்னாளில் மறைந்த மிகப் பெரிய மருத்துவர்களான ரத்னவேல் சுப்பிரமணியத்தை,
கீழாநெல்லியை காமாலைக்கு உற்றுப்பார்க்கச் செய்தது.
மறைந்த பேரா.செ.நெ.தெய்வநாயகத்தை, ரசகந்தி மெழுகை
ஹெச்.ஐ.வி. நோய்க்குப் பயன்படுத்தச் செய்தது. அன்று உலகின் மிக உயர்ந்த
மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த அவர்கள், தன் உள்நாட்டு மக்களுக்குத்
தன் மண்ணின் பாரம்பரியத்தை நவீன அறிவியல் ஒப்புநோக்குடன் பயன்படுத்திய
விசாலமான பார்வை, சமீப மாகத் தொலைந்துவிட்டதே, இப்போதைய நம் ஏக்கம்!
இயற்கையின்
சீற்றங்களுக்குப் பெரும்பாலும் இயற்கையிலேயே தீர்வும் இருக்கும்
என்பதற்குச் சான்று, கோடையில் பூக்கும் வேப்பம் பூ. நவீனம் ஏறக்குறைய
மறந்தேபோய்விட்ட உணவு, வேப்பம் பூ ரசம். வேப்பம் பூவைச் சேகரித்து நிழலில்
உலர்த்திக் காய வைத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்துக்கடை, அப்பளம்/வடாம்
விற்கும் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும்!) சாதாரணமாக ரசப்பொடிக்குப்
போடும், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த
வேப்பம் பூவையும் சேர்த்து ரசம் வைத்து கோடையில் வாரம் மூன்று நாள்
சாப்பிட்டால், அம்மை நம்மை அணுகாது.

உலர்த்தி
எடுத்த வேப்பம் பூ - 1 கப், பழுப்பு நிறமுள்ள வேப்பங்கொழுந்து (கிடைத்தால்
சேர்க்கவும்) - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், தொலி
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன், மிளகு -
1 ஸ்பூன், நீள வற்றல் மிளகாய் - 2, பெருங்காயம் - அரை
டீஸ்பூன், கல் உப்பு தேவைக்கேற்ப... இவை எல்லாவற்றையும் சேர்த்து வறுத்து
அரைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பருப்புப் பொடி சாதம்
சாப்பிடுவது போல கோடையில் சூடான கைக்குத்தல் அரிசி சோற்றிலோ, வரகு அரிசி
சோற்றிலோ போட்டுச் சாப்பிடுவது வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை
நிச்சயம் கொடுக்கும். இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய்-சீரகம் சேர்த்து
வறுத்து, புளியோதரை சாதம் போல் கிளறி வேப்பம் பூ சாதம் செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கும் பிடிக்கும்!
இனிப்புச் சுவையுடன் இருக்கும் அதிமதுர வேர்,
இந்தியாவில் மட்டுமல்ல சீனா, ஜப்பானிலும் வெகு பிரபலம். இனிப்பாக
இருந்தாலும் சர்க்கரைச் சத்து இதில் கிடையாது. டயாபடீஸ் நோயாளிகளும்
பரவசமாகச் சாப்பிடலாம். வீட்டில் ஒருவருக்கு அம்மை தொற்றிக்கொண்டால்,
அடுத்தவர் தம்மைக் காத்துக்கொள்ள இந்த வேர்ப் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு
காலையும் மாலையும் சாப்பிடலாம். சாதாரணமான தொண்டைப்புண், வயிற்றுப்
புண்ணுக்கு மருந்தாகப் பயன்படும் இந்தப் பொடி, உடலின் அதிகச் சூட்டைக்
குறைத்து, பித்தம் தணித்து, நோய் எதிர்ப்பு கொடுத்து அம்மையைத் தவிர்க்க
உதவும்.
அப்படியும் நோய் வந்தால், கொப்பளங்களை அதிகம்
சொறிந்துவிடாமல் இருக்க வேண்டும். வெகு சிலருக்கு அம்மை போன பின்னரும்,
நரம்பு முனைகளில் இந்த வைரஸ் குறைந்த அளவில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சம் வலி
தரும். Shingles எனும் இந்த வலிக்கும் வேப்பிலை தடவல், பூச்சு நல்ல பலன்
அளிக்கும்.
இன்னும் ஹெப்படைடீஸ் பி வைரஸுக்கு உலக அளவில் நம்பிக்கை
தரும் ஒரே மருந்தான கீழாநெல்லியும், ரத்தப்புற்றுக்குப் பயனாகும்
வின்கிரிஸ்டின் தரும் நித்யகல்யாணியும், மார்பகப் புற்றுநோய்க்கான டாக்ஸால்
தரும் yew மரப்பட்டையான, தாளிச்சப்பத்திரியும் நம் மூத்தக்குடிகளின்
பாரம்பரிய மருத்துவத்தில் இருந்துதான் பிறந்தன.
இன்னும் சர்க்கரை நோய்க்கான
மெட்ஃபார்மினும், இதய நோய்க்கான ஆஸ்பிரினும், டிஜாக்சினும்,
மலேரியாவுக்கான கொய்னைனும் அர்டிமைசினும் கண்டறியப்பட்டு, கோடிக்கான மக்களை
தினம் காத்துவருவதும்கூட வேறு நாட்டின் பாரம்பரிய அனுபவங்களின்
நீட்சிதான்!
Post a Comment