சிறுதொழில் சிறப்பிதழ் பெ ண்கள் எடுத்துச் செய்ய விரும்பும் சிறுதொழில்களில் ஒன்று, புடவை வியாபாரம். அதில் வெ...
சிறுதொழில் சிறப்பிதழ்
பெண்கள்
எடுத்துச் செய்ய விரும்பும் சிறுதொழில்களில் ஒன்று, புடவை வியாபாரம்.
அதில் வெற்றியாளராக காலூன்றியிருக்கிறார் காரைக்குடி, ஷோபா. 'இனி, வாழ்க்கை
அவ்வளவுதான்' என்கிற கொடுமையான சூழலுக்குக் குடும்பம் தள்ளப்பட்ட
நிலையிலும், எளிமையான இந்தத் தொழிலில் கால்பதித்து, தன் வலிமையால் வென்றது
பற்றி இங்கே பெருமைப் புன்னகையுடன் பகிர்கிறார் ஷோபா... பலருக்குள்ளும்
நம்பிக்கை விதைகளைத் தூவும் வகையில்!
''பத்தாவதுதான் படிப்பு. வீட்டு சூழ்நிலை காரணமா, 17
வயசுல ரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போனேன். வீட்டுல
இருக்குற நேரத்துல நவதானியத்துல பிள்ளையார் செய்து, ஃப்ரேம் பண்ணி
விற்பேன். கல்யாணப் பேச்சு வந்தப்போ, காதல் விஷயத்தை சொன்னேன். பெரிய
பிரச்னை வரவே... 'கல்யாணமே வேண்டாம்... ரெண்டு தங்கச்சிங்களுக்கும்
பண்ணுங்க’னு சொல்லிட்டு, என்னால முடிஞ்சதை சம்பாதிச்சு கொடுத்து,
தங்கச்சிங்க கல்யாணத்தை முடிச்சேன்.
தங்கச்சிகளுக்கு குழந்தைகள் பிறந்த நிலையிலயும்...
'கல்யாணம் வேண்டாம்'கறதுல உறுதியா இருக்கவே, ஒருவழியா என் காதலுக்கு எங்க
வீட்டுல சம்மதம் சொன்னாங்க. அவர், இன்ஷூரன்ஸ் தொடர்பான பிஸினஸ், வேன்
வாங்கி விடறதுனு சில வேலைகளை செய்துட்டிருந்தார். இதுக்காக நிறைய
கடன்களையும் வாங்கியிருந்தார். ஆனா, திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல,
பிஸினஸுல அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம்... வெளியில தலைகாட்ட முடியாத அளவுக்கு
கடன். வீட்டுப்படியேறி வர ஆரம்பிச்சுட்டாங்க கடன் கொடுத்தவங்க.
தற்கொலை முடிவுவரை போனநிலையில... 'நாம நிச்சயமா இதுல
இருந்து மீள முடியும். பத்து வருஷம் காத்திருந்து கிடைச்ச இந்த வாழ்க்கையை,
பத்திரமா வாழணும். நமக்கு வாழ வழியா இல்லை'னு ரெண்டு பேருமா யோசிச்சோம்.
எங்க ஏரியாவுல இருந்து கரன்ட் பில் கட்டறதுக்கு ரொம்ப தூரம் போகணும். 'ஒரு
கம்ப்யூட்டர் வாங்கி இணையதளம் மூலமா கரன்ட், போன் இப்படி பில் கட்டுற
தொழிலை செய்யலாம்'னு முடிவு பண்ணினோம். நல்ல வரவேற்பு. 'பரவாயில்ல...
இவங்ககிட்ட பொறுத்து கடனை வாங்கலாம்’னு கடன் கொடுத்தவங்களுக்கும்
நம்பிக்கையும் வந்துச்சு.
அப்போதான் புடவை வியாபாரம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்.
பொதுவாவே என்னோட ஆடை தேர்வு, ரசனையா இருக்கும். வாடிக்கையாளர்கள்கிட்ட
பேசி விக்கிற வாய்த்திறமையும் நமக்கு இருக்குனு நம்பினதால, தைரியமா
இறங்கினேன். ஆரம்பத்துல 10 சேலை வாங்கி, மிச்சமில்லாமல் விற்பனை செஞ்சேன்.
தொடர்ந்து, அம்மா வீட்டு ஏரியா, எங்க வீட்டு ஏரியானு கஸ்டமர்களைத் தேடிப்
போனேன். கணிசமா கையில் காசு கிடைக்கவே... தைரியமா பத்தாயிரம் ரூபாய்க்கு
சரக்கு எடுத்து, சின்ன கடையை பிடிச்சேன்.
வந்த கஸ்டமர்கள்கிட்ட எல்லாம், கடனை அடைக்க நான் தொழில்
ஆரம்பிச்சுருக்குற அவசியத்தையும் பகிர்ந்துப்பேன். அவங்களும் எனக்கு உதவி
பண்ணும்விதமா, 'அங்க புடவை சூப்பரா இருக்கு...’னு சொல்லி மற்ற பெண்களையும்
அழைச்சுட்டு வருவாங்க. இப்படித்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க.
அடுத்ததா, பிளவுஸ், உள்பாவாடை, நைட்டினு எல்லா துணிகளையும் விற்பனை செய்ய
ஆரம்பிச்சேன். கூடவே கவரிங் நகைகளும்!
கடை ஆரம்பிச்சு ஒண்ணரை வருஷம் ஆகுது. கிடைச்ச
வருமானத்துல வீட்டுக்காரர் வாங்கின கடன்ல பாதியை அடைச்சாச்சு ஆரம்பத்துல,
'கடன்ல இருந்து இவங்க மீண்டு வரவே முடியாது’னு என் காதுபட பேசினவங்க முன்ன,
வைராக்கியமா கரையேறி இருக்கேன்.
மாசம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறேன் இந்த
சேலை தொழில்ல. தண்ணி கேன், பால் பாக்கெட்னு என் வீட்டுக்காரரும்
ஓடியாடிட்டு இருக்காரு. சீக்கிரமே கடனை எல்லாம் அடைக்கற உத்வேகத்தோட ரெண்டு
பேரும் உழைச்சுட்டு இருக்கோம். எல்.கே.ஜி படிக்கிற பையனோட எதிர்காலத்தை
பாதுகாப்பா அமைச்சுக் கொடுக்கணும் இல்லையா!'' என்று மூச்சுவிடாமல் பேசி
முடித்த ஷோபா,
''நான் பெருசா தொழில் செய்து, பணத்தை அள்ளிக்
குவிச்சுடல. ஆனா, பூஜ்யத்துல இருந்து, நம்பிக்கையோட எழுந்து
வந்திருக்கேன்கிறதே பெருமைதானே! கஷ்டத்துல இருக்கற சகோதரி கள்...
என்னையும், பெண்களுக்கு நெருக்கமான புடவை வியாபாரத்தையும் நம்பிக்கையா
எடுத்துக்கோங்க. 50 ஆயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கி விற்பனை செய்தா, 10
ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். புடவை கெட்டுப் போற பொருள் இல்லை. அதனால,
துணிஞ்சு இறங் குங்க. உத்திரவாதமுள்ள லாபத்தை எடுங்க!''
- நம்பிக்கை வார்த்தைகளை அள்ளிவிட்டார்!
Post a Comment