பெ ரும்பாலான பள்ளிகளில் மார்ச் இறுதிக்குள் ஆண்டுத் தேர்வு முடிந்துவிடும். குழந்தைகளுக்கான கொண்டாட்டக் காலம...
பெரும்பாலான பள்ளிகளில் மார்ச்
இறுதிக்குள் ஆண்டுத் தேர்வு முடிந்துவிடும். குழந்தைகளுக்கான கொண்டாட்டக்
காலமும் தொடங்கிவிடும். பள்ளிக்குச் செல்லும்போது காலை சிற்றுண்டி, மதிய
உணவு என நேரத்துக்குச் சாப்பிட்ட குழந்தைகள் டி.வி., சினிமா, விளையாட்டு என
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவார்கள். இதனால், சரிவிகித
ஊட்டச்சத்தான உணவும் உடலுக்குக் கிடைக்காது.
கோடைக் கொண்டாட்டத்துடன் ஊட்டச்சத்துள்ள உணவையும்
ஊட்ட, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர்
தீபா அகர்வால்.
'லீவு விட்டால் போதும், குழந்தைகளை வீட்டில் பார்க்கவே
முடியாது. வெளி விளையாட்டில் நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். இதைத்
தெரிந்துதான் இயற்கையே இந்த வெயில்காலத்தைச் சமாளிக்கத் தேவையான காய்கறி,
பழங்களை நமக்கு வழங்குகிறது. இதைச் சரியாகப் பயன்படுத்தி, குழந்தைகளை
எப்போதும் புத்துணர்வோடு வைத்திருக்க வேண்டியது பெற்றோர் கடமை.
குழந்தைகளுக்கான உணவு, அவர்களை ஈர்க்கும் வகையில்
வண்ணமயமாகவும், வாசனை உள்ளதாகவும் இருக்க வேண்டும்.வெள்ளரி, தர்பூசணி,
கிருணி, லிட்சி, தக்காளி போன்ற வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள்
நிறைந்த காய்கறி, பழங்கள் கோடைக்காலத்தில்தான் அதிகம் கிடைக்கும். இவை
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். நொறுக்குத் தீனியே வழக்கமான
மூன்று வேளை உணவுக்கு மாற்றாக மாறிவிடக் கூடாது.
தக்காளி சல்சா
வைட்டமின் சி சத்து நிறைந்த தக்காளியைக் கொண்டு சல்சா
செய்துகொடுங்கள். தக்காளி மற்றும் வெங்காயத்தை மிகச் சிறிய சிறிய
துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் கொத்துமல்லியைச்
சேர்த்து, சுவைக்குச் சிறிது உப்பு, மிளகு சேர்த்தும் கொடுக்கலாம். இந்த
சல்சா

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்டிராபெரி லெமனேட் ஸ்மூத்தீஸ்
கோடையில் விரும்பி அருந்தும் பானம் எலுமிச்சைச் சாறு.
அரை கப் ஸ்ட்ராபெரி, கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட புளிக்காத கெட்டித்
தயிர், ஒரு எலுமிச்சைப் பழ சாறு, சிறிது சர்க்கரை ஆகியவற்றை ப்ளெண்டர்
அல்லது மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் குடிக்கக் கொடுக்கலாம்.
புளிப்புச் சுவை அதிகம் வேண்டும் எனில் எலுமிச்சைச் சாறை அதிகம்
சேர்த்துக்கொள்ளலாம். இது உடல் வெப்பத்தைப் போக்கிப் புத்துணர்வுடன் இருக்க
வைக்கும்.
க்ரீன் பீஸ் இட்லி டிலைட்
இரண்டு கப் வறுத்த ரவை, முக்கால் கப் மசிக்கப்பட்ட
பச்சைப் பட்டாணி, ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெந்தயக்கீரை, தயிர், ஓட்ஸ்,
சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட பாகற்காய் தலா இரண்டு டேபிள் ஸ்பூன்,
மூன்று டேபிள் ஸ்பூன் இஞ்சி ஆகியவற்றை ஒருபாத்திரத்தில் இட்டு, இட்லிக்கு
மாவு கரைப்பது போல தண்ணீர் விட்டுக் கரைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு
உப்பு சேர்த்து, அரை முதல் ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர்,
இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி 7 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து
சுடச்சுட பரிமாற வேண்டும்.
ஸ்டிராபெரி-வாழைப்பழம் கஸ்டர்ட்
ஒரு பாத்திரத்தில் கால் கப் பால் ஊற்றி, இரண்டு டேபிள்
ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலக்குங்கள். மற்றொரு
பாத்திரத்தில், ஒன்றே முக்கால் கப் பாலை ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து
அடுப்பில் வையுங்கள். பால் நன்கு சூடானதும், ஏற்கனவே கஸ்டர்ட் பவுடர்
கலந்து வைத்துள்ள பால், வென்னிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து
கலக்குங்கள். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்துப் பாகு நிலை வரும் வரையில்
அடுப்பில் வைத்திருங்கள். இது ஆறியதும் வாழைப்பழத்தைச் சேர்த்து நன்கு
கலக்கி, நான்கு பாகமாகப் பிரித்து ஃப்ரிட்ஜில் வையுங்கள்.
ஸ்டிராபெரி ஸ்டூ : இரண்டு கப் நறுக்கிய ஸ்டிராபெரி,
கால் கப் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒரு
பாத்திரத்தில் இட்டு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவேண்டும்.
அடுப்பில் இருந்து இறக்கியதும் இதை நான்கு பாகமாக பிரித்து பாத்திரத்தில்
வையுங்கள். இதன்மீது, ரெப்ரெஜிரேட்டரில் வைக்கப்பட்டுள்ள கெட்டியான
கஸ்டர்ட் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுங்கள். கால்சியம்,
வைட்டமின் சி இந்த உணவில் நிறைந்துள்ளது.
Post a Comment