வடைகறி --- சமையல் குறிப்புகள்,
வடைகறி இட்லி , தோசைக்கு சட்னி , சாம்பார் அலுத்து விட்டதா? இந்த வடைகறியை ட்ரை பண்ணிப் பாருங்க. பருப்பு சேர்த்து செய்வதால் இது ...

https://pettagum.blogspot.com/2013/03/blog-post_7181.html
வடைகறி
தேவையான பொருட்கள்:
வடைக்கு:- கடலைப் பருப்பு – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
- சோம்பு – 1/4 டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- பெரிய வெங்காயம் – 2
- காய்ந்த மிளகாய் – 4
- இஞ்சி – 1 அங்குலத் துண்டு
- பூண்டு – 4 பல்
- தக்காளி – 4
- மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – 1/4 டீ ஸ்பூன்
- சீரகத் தூள் – 1/2 டீ ஸ்பூன்
- தனியாத் தூள் – 1/2 டீ ஸ்பூன்
- சோம்பு – 1/2 டீ ஸ்பூன்
- பட்டை – 1 சிறிய துண்டு
- கிராம்பு – 2
- எண்ணெய் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
வடை செய்யும் முறை:
- கடலைப் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பை நன்றாகக் களைந்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்துவிட்டு மிக்சியில் தர தரப்பாக அரைக்கவும். அரைத்த பருப்பை ஒரு பவுலில் போடவும்.
- பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அரைத்த கடலைப் பருப்புடன் சேர்க்கவும்.
- இதனுடன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.
- வடைகள் பொன்னிறமாகப் பொரிந்த பின் எண்ணெயில் இருந்து அரித்து எடுத்து வடிதாளில் போடவும்.
கடலைப் பருப்பை விழுதுபோல் அரைக்காமல், ஒன்றிரண்டாக அரைக்கவும்.
கடலைப் பருப்பை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்த பின் மின் விசிறியின் (Fan) கீழே சிறிது நேரம் உலரவிட்டு பின் அரைத்தால் பருப்பு அரைக்கையில் தண்ணீராக வராது.
அரைத்த பருப்பில் வெங்காயம், உப்பு சேர்த்த பின் நீண்ட நேரம் வைத்திராமல், உடனே வடைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். இல்லாவிட்டால் வெங்காயம் தண்ணீர் விடத் தொடங்கி விடும்.
மசாலா செய்யும் முறை:
- தக்காளியை முழுசாகத் தண்ணீரில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். பின் தோல் நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு சேர்த்து வெடிக்க விடவும். பின் இவற்றை எண்ணெயிலிருந்து அரித்து நீக்கவும்.
- தொடர்ந்து எண்ணெயில் சோம்பினைப் போட்டு பொரிய விடவும்.
- இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள் சேர்த்து வதக்கவும்.
- வதக்கியவற்றை லேசாக ஆறவிட்டு மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து சில நிமிடங்கள் தக்காளியின் பச்சை வாடை போக கொதிக்கவிடவும்.
- பின் 2 கப் தண்ணீர் விட்டு இந்த மசாலாக் கலவையை நன்றாகக் கொதிக்க விடவும். திக்கான குழம்புப் பதத்திற்கு மசால் வந்தவுடன், அதனுடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்துக் கலக்கவும்.
- பொரித்து வைத்திருக்கும் வடைகளை சூடான இந்த மசால் கலவையுடன் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.
- நறுக்கிய கொத்த மல்லித் தழை மேலே தூவி அலங்கரிக்கவும்.
Post a Comment