30 வகை சீஸன் ரெசிபி ! --- 30 நாள் 30 வகை சமையல்,

30 வகை சீஸன் ரெசிபி ! ஹாட் க்ளைமேட் மாறி, குளிர்காற்று உடலைத் தழுவ ஆரம்பித்த உடனேயே, 'சூடா, கர...

30 வகை சீஸன் ரெசிபி !
ஹாட் க்ளைமேட் மாறி, குளிர்காற்று உடலைத் தழுவ ஆரம்பித்த உடனேயே, 'சூடா, கரகரனு ஏதாச்சும் சாப்பிட்டா நல்லா இருக்கும்’, 'ஜலதோஷம் வேற எட்டிப் பார்க்குது... தொண்டைக்கு இதமா, வயித்துக்கு பதமா ஏதாவது கிடைக்குமா?’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதைப் போக்குவதற்காகவே '30 வகை மழை மற்றும் குளிர்கால ரெசிபி’களுடன் களம் இறங்குகிறார், சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களில், சுவை மட்டுமல்ல... மருத்துவ குணமும் அதிகம் உண்டு. எளிதில் கிடைக்கும் சமையல் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு இந்த ரெசிபிகளை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், ருசிக்கு ருசி... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!'' என்று உற்சாகமூட்டும் பத்மாவின் ரெசிபிகளை, அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
நெல்லிக்காய் போளி
தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பெரிய நெல்லிக்காய் - 10, வெல்லம் (பொடித்தது) - 200 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, நெல்லிக்காயைப் போட்டு, ஆறிய உடன் எடுத்து உதிர்த்து, கொட்டை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும்... தேங்காய் துருவல், வறுத்த கடலைப்பருப்பு, வேக வைத்த நெல்லிக்காய், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய உருண்டையாக உருட்டி, சப்பாத்தி வடிவத்தில் சிறியதாக இட்டு, உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது நெய் தடவி, கைகளால் போளியாக தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு போளியாக போட்டு, சிறிது நெய்விட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: பூரணத்தை முதல் நாளே தயாரித்து வைத்தால், போளி தயாரிப்பது மிகவும் சுலபம்.
கறிவேப்பிலை குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, கடுகு  - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து... புளி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில்  இருக்கும். மழைக்காலத்தில் காய் வாங்க முடியாமல் போகும்போது, இந்தக் குழம்பு மிகவும் உதவும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பாகற்காய் ரோஸ்ட்
தேவையானவை: நீளமான பாகற்காய் - 250 கிராம், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  பொடித்த வெல்லம்  - ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வில்லை வடிவமாக நறுக்கி விதையை எடுக்கவும். புளியைக் கரைத்து பாகற்காயில் விட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, தண்ணீர் வடிக்கவும். வேக வைத்த பாகற்காயுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசிறிய காயை வறுக்கவும். வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு பாகற்காய் மிகவும் நல்லது. பாகற்காயில் ஜூஸ் தயாரித்தும் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை பாகற்காயை  சமையலில் சேர்ப்பது, உடலுக்கு நன்மை தரும்.
சுண்டைக்காய் கூட்டு
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, நசுக்கிய சுண்டைக்காயை சேர்த்து, லேசாக வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து... வேக வைத்த சுண்டைக்காயுடன் கலந்து, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். கடுகு தாளித்து இதில் சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல் அல்லது பச்சை மணத்தக்காளி - 100 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,  எண்ணெய் - 10 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... சாம்பார் பொடி போட்டு வறுத்து, மணத்தக்காளியை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.
குறிப்பு: மணத்தக்காளி காய்க்கும் சீஸனில் அதை வாங்கி... தயிரில் உப்பு சேர்த்து, மணத்தக்காளியை போட்டு ஊற வைத்து, காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால்... வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
புதினா  சீரக ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், நெய் - 6 டீஸ்பூன், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு லேசாக வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். புதினாவை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு தாளித்து, சீரகம், பொட்டுக்கடலை, இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், புதினாவை சேர்த்து வதக்கவும். வதக்கியதை சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.
துவரை வடை
தேவையானவை: துவரைக்காய் - 200 கிராம், பொடியாக நுறுக்கிய இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகு - 4, பூண்டுப் பல் - ஒன்று, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரைக்காயை உரித்து பருப்பை மட்டும் எடுக்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தண்ணீர் வடித்து... துவரை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, பூண்டுப் பல், உப்பு சேர்த்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைத்து, வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: துவரைக்கு பதிலாக மொச்சை, சோளத்திலும் இதே முறையில் வடை தயாரிக்கலாம்.
கீரை குணுக்கு
தேவையானவை: அரிசி மாவு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகளுடன் தோல் சீவி நறுக்கிய இஞ்சியையும், மிளகையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய  கீரையை அரைத்த மாவுடன் கலந்து... உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டை அளவில் கிள்ளிப் போட்டு (உருட்டக் கூடாது), பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: கீரை குணுக்கும் சட்னியும் சிறந்த காம்பினேஷன். மோர்க்குழம்பில் கூட இந்த குணுக்கை போடலாம்.
மிதிபாகற்காய் பிட்லை
தேவையானவை: மிதிபாகற்காய் (சிறிய பாகற்காய்) - கால் கிலோ, புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தனியா - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை நறுக்கி, விதை எடுத்து, எண்ணெய் விட்டு வதக்கவும். புளியை கரைத்து இதனுடன் சேர்த்து... சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதனுடன்  வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கொதிக்கும் சாம்பாருடன் கலக்கவும். அதில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: மிதி பாகற்காயை விதை இல்லாமல் பிஞ்சாக பார்த்து வாங்கினால், அப்படியே வதக்கலாம்.
புடலங்காய் மிளகூட்டல்
தேவையானவை: புடலங்காய் - 250 கிராம், மிளகு - 6, தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகு, தேங்காய் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த புடலங்காயுடன் கலந்து, வெந்த பாசிப்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: புடலங்காய், பத்திய சமையலுக்கு ஏற்ற காய்.
வாழைத்தண்டு புளிப்பச்சடி
தேவையானவை: பொடித்த வெல்லம் - ஒரு சிறிய கப் வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், மோர் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி நார் எடுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை  சிறிது நேரம் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, நறுக்கிய வாழைத் தண்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து இதனுடன் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு, பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். வாழைத்தண்டில் ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.
பப்பாளி பணியாரம்
தேவையானவை: பப்பாளிப்பழத் துண்டுகள் - 10, இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப்.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது மசிந்த உடன் பப்பாளித் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். பணியாரக் கல் குழியில் நெய் தடவி, சிறிய கரண்டியால் மாவை ஊற்றி, சிறிது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு அடுக்கவும்.
குறிப்பு: பப்பாளி, கண்ணுக்கு மிகவும் நல்லது.
பூண்டு குழம்பு
தேவையானவை: பூண்டு - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு சிறிய கப், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரித்து, பூண்டுப் பல்லை இரண்டாக நறுக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பூண்டை இதில் சேர்த்து, சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல்லையை குறைக்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கும் பூண்டு மிகவும் நல்லது.
திப்பிலி ரசம்
தேவையானவை: அரிசி திப்பிலி - 10, கண்டதிப்பிலி - சிறிதளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் புளிக் கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
பருப்பு உருண்டை குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப் பல் - 4, புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பூண்டுப் பல், இஞ்சி சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாகக் கிளறி, தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். கடாயில் புளியைக் கரைத்து விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து...  வேக வைத்த உருண்டைகளைப் போட்டு சிறிது  நேரத்துக்குப் பிறகு இறக்கி, கடுகு தாளிக்கவும்.
குறிப்பு: மசாலா வாசனையை விரும்புபவர்கள்... பருப்புடன் பட்டை, சோம்பு சேர்த்து அரைத்து குழம்பு செய்யலாம்.
புளிப் பொங்கல்
தேவையானவை: அரிசி (ரவை போல் உடைத்தது)  - 200 கிராம், புளி ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில், ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் புளித் தண்ணீர் விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், உப்பு சேர்த்து, ரவையைத் தூவிக் கிளறி, பாத்திரத்தை குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளிப்பு - காரம் காம்பினேஷன் ருசியில் அசத்தலாக இருக்கும் இந்த பொங்கல். சூடாக சாப்பிட்டால்... சுவை சூப்பரோ சூப்பர்!
ஸ்டீம்டு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி ரவை - 250 கிராம், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் அளந்து, தாளித்ததுடன் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கொதித்ததும், அரிசி ரவையை சேர்த்துக் கிளறவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி. இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தேவையானால், விருப்பமான காய்களை நறுக்கி சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.
நூடுல்ஸ் சமோசா
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், மைதா மாவு - 100 கிராம், கேரட் துருவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கோஸ் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கேரட், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாயை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மைதா மாவை பிசைந்து சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும்.
வதக்கி வைத்து இருக்கும் காயுடன், வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம். அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் சிறிது பூரணம் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி, எண்ணெயில் பொரிக்கவும்.
குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம். 
மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - ஒன்று, வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன், பச்சை மிளகாய் - பாதி, கடுகு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி வேகவிட்டு நன்கு மசிக்கவும். பச்சை மிளகாய், தேங்காயை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... பச்சை மிளகாய் விழுது, மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த வெல்லம் உப்பு, மசித்த மாங்காயும் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: பருப்புப் பொடி, வற்றல் குழம்பு சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். மாங்காயுடன் வெல்லம் மட்டும் சேர்த்துக் கிளறி ஜாம் தயாரித்தும் வைக்கலாம்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சம் பழம்  - ஒரு மூடி, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கடுகு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணைக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்து, மசித்து, புளிக் கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு தாளித்து, இதனுடன் பெருங்காயத்தூளும் சேர்க்கவும். நிறைவாக, வெல்லத்தை பொடித்துப் போட்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு, கலந்து இறக்கவும்.
குறிப்பு: மூல நோய் உள்ளவர்களுக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது.
கத்திரிக்காய் மசாலா ரோஸ்ட்
தேவையானவை: கத்திரிக்காய் - 10, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், புளி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள்,  - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை காம்பு பகுதி நறுக்காமல், அடி பக்கத்தில் மெல்லியதாக கத்தியால் கீறவும். இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், புளி பேஸ்ட், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கத்திரிக்காயின் உள்ளே நிரப்பவும். வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு கத்திரிக்காயாக வதக்கி எடுக்கவும்.
குறிப்பு: இதை தயிர் சாதத்துக்கு தொட்டு சாப் பிடலாம். சூடான சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்
தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் சோள மாவு கலந்து, தேவையான உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கேரட் துருவல், கோஸ் துருவல், வெங்காயத்தாள், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து, சிறிது எண்ணெய் விட்டு, காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இட்டு, உள்ளே வதக்கிய காய்களை சிறிது வைத்து நன்கு சுருட்டவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, சுருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி, சீஸ் துருவல், பட்டாணியும் சேர்த்து இதேமுறையில் தயாரிக்கலாம்.
பிரண்டை துவையல்
தேவையானவை: நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 10, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2 கொத்து, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை வறுத்து... புளி, உப்பு, வதக்கிய பிரண்டை சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: பிரண்டைத் துவையலை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்... அட்டகாசமான ருசியில் இருக்கும். பிரண்டை, பசியைத் தூண்டும்.
ஓம மோர்க் குழம்பு
தேவையானவை: வெண்டைக்காய் - 10, சிறிது புளிப்பு உள்ள மோர் - அரை லிட்டர், ஓமம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓமம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்ததை மோருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக் காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும். இதை மோர் கலவையுடன் கலந்து, லேசாக சூடாக்கி, கொதிக்க ஆரம்பித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
வெஜ் சூப்
தேவையானவை: கேரட் துருவல் - ஒரு கப், கோஸ் துருவல் - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - 4 டீஸ்பூன், சோயா மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட் துருவல், கோஸ் துருவல், வெங்காயத்தாள் மூன்றையும் நெய் விட்டு வதக்கவும். சோள மாவு, சோயா மாவு இரண்டையும் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து, உப்பு சேர்த்து, வதக்கிய காய்களை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் மிளகுத்தூள் போட்டு, வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
குறிப்பு: சாப்பிடுவதற்கு முன்பு இதை சூடாக பருகினால், நன்கு பசி எடுக்கும். பிரெட் துண்டுகளை நெய்யில் பொரித்து சூப்பில் சேர்த்தால்...  சுவை கூடும்.
முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெள்ளை முள்ளங்கி - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: கோதுமை மாவுடன் 2 டீஸ்பூன் நெய் விட்டு, உப்பு சேர்க்கவும். முள்ளங்கியை தோல் சீவி, கேரட் துருவலில் துருவி, மாவுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி யைப் பயன்படுத்தி தோசை,அடை போன்றவையும் தயா ரிக்கலாம்.
ஆள்வள்ளிக் கிழங்கு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 3, ஆள்வள்ளிக் கிழங்கு - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாக ஊற வைக்கவும், துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அரிசியை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்புகளுடன் இஞ்சி. காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு கலக்கவும். ஆள்வள்ளிக் கிழங்கை தோல் சீவி, துருவி இதில் சேர்த்து... நன்றாகக் கலந்து, தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
தக்காளி கூட்டு
தேவையானவை: பச்சை தக்காளிகாய் - 6, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு,       மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தக்காளியை நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: தக்காளிக்காயில், புளிப்பு இருப்பதால் புளி தேவை இல்லை. விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
சேமியா பக்கோடா
தேவையானவை: வறுத்த சேமியா - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், அரிசி மாவு - இரண்டு ஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி  - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவுடன் வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போல கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.
குறிப்பு: ரவை அல்லது ராகியிலும் இதே முறையில் பக்கோடா தயாரிக்கலாம்.
பூரி கார பொரி
தேவையானவை: பூரி (சிறியது) - 10, அரிசிப் பொரி - ஒரு பாக்கெட் (சிறியது), பொட்டுக்கடலை - ஒரு சிறிய கப், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, பூண்டுப் பல் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை பொரித்து எடுக்கவும். பூண்டுப் பல்லை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து, வெடித்ததும் பொட்டுக் கடலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பூண்டுப் பல் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் பொரியைப் போட்டு கலந்து, பூரியை நொறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 793295595945523550

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item