30 வகை ஸ்டார் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,

30 வகை ஸ்டார் ரெசிபி 'பசிக்கு உணவு’ என்பது போய், 'நல்ல ருசியோடு இருக்கிறதா... எவ்வளவு கலோரி இருக்கும்... சத்துமிக்கதா, ஜீர...


30 வகை ஸ்டார் ரெசிபி

'பசிக்கு உணவு’ என்பது போய், 'நல்ல ருசியோடு இருக்கிறதா... எவ்வளவு கலோரி இருக்கும்... சத்துமிக்கதா, ஜீரணமாகுமா’ என்றெல்லாம் சிந்திப்பது சமீபத்திய டிரெண்ட். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, '30 வகை ஸ்டார் ரெசிபி’களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் 'செஃப்’ ஜேக்கப். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் பலவற்றிலும் பணியாற்றிய அனுபவத்தோடு... உணவுகள் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கும் இவர், தற்போது சென்னை, நுங்கம்பாக்கத்தில் 'ஜேக்கப்’ஸ் கிச்சன்’ என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார்.
''கீரை, பைனாப்பிள், நெல்லிக்காய், கம்பு, பச்சைப்பயறு, வெற்றிலை என உடலுக்கு நலம் தரும் பல்வேறு பொருட்களை கொண்டு இந்த ரெசிபிகளை கொடுத்துள்ளேன். செய்து பாருங்கள்.... 'கிச்சன் கில்லாடி’ என்ற புகழுடன் வலம் வாருங்கள்'' என்று உத்வேகம் ஊட்டுகிறார் செஃப் ஜேக்கப்.
வெஜ் கிரேவி
தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், முருங்கைக்காய் - ஒன்று, கொத்தவரங்காய், சேனைக்கிழங்கு - தலா 50 கிராம்,  புளிக் கரைசல் - 100 கிராம், பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 50 கிராம், மஞ்சள்தூள் - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகள் அனைத்தையும், தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து... பச்சரிசி மாவு தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு வேகவிடவும். கலவை நன்றாக கொதித்து, காய்கறிகள் பாதி அளவு வெந்தபின், பச்சரிசி மாவை சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்து குழம்பு பதத்துக்கு வரும்போது உப்பு சரிபார்த்து இறக்கவும்.
இதை வெள்ளை சாதம், இடியாப்பம் இவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
கோஸ்  தேங்காய் கிரேவி
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ,  கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 3,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 2, தேங்காய் - அரை மூடி (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு வாணலியில் கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய கோஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, பொடித்த கடலைப்பருப்பு - மிளகாய் கலவை, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்து கெட்டியான பின் இறக்கிப் பரிமாறவும்.
 பொட்டேடோ மசாலா
தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு - 100 கிராம், வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 40 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 5 பல், அரைத்த தேங்காய் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து - தலா அரை டீஸ்பூன், உப்பு  - தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. 
செய்முறை: சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். தேங்காய், கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து, சிறிது சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். பூண்டினை இடித்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... சிறிது சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி சேர்த்து கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கிண்டவும். கடைசியில், பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் கிளறி,  உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கேப்சிகம் குச்சும்பர்
தேவையானவை: குடமிளகாய் - ஒரு கிலோ (பச்சை, மஞ்சள், சிவப்பு குடமிளகாய் மூன்றும் சேர்த்து), எலுமிச்சம் பழம் - 7, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து எடுக்கவும். குடமிளகாயை விதை நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடமிளகாய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை ரொட்டி, சப்பாத்தியோடு பரிமாறலாம்.
பனீர் தோ பியாஸ்
தேவையானவை: பனீர் - 200 கிராம், கறுப்பு சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், சதுரமாக நறுக்கிய வெங்காயம் -  அரை கப் , தக்காளி - 2 (அரைக்கவும்),  பச்சை குடமிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - 50 கிராம் (அரைத்துக் கொள்ளவும்), கொத்தமல்லி - சிறிதளவு, கிரீம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுரம் சதுரமாக வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, குடமிளகாய் இரண்டையும் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் சேர்த்து, பொரிந்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த தக்காளியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல், எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, சதுரமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கொதிவந்த பின் பொரித்த பனீர், அரைத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கிளறவும். கலவை நன்றாக கலந்து வரும்போது கிரீம் சேர்த்துக் கிளறி, பின்னர் பரிமாறவும்.
இந்த பனீர் தோ பியாஸை ரொட்டி, நாண், சப்பாத்தி ஆகியவற்றோடு சாப்பிட... சுவை சூப்பராக இருக்கும்.
 கீரை  தக்காளி கிரேவி
தேவையானவை: அரைக்கீரை - 2 கட்டு, தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, புளிக் கரைசல் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, அலசி வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கவும். உளுத்தம்பருப்பை வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து (உளுத்தம்பருப்பு பொடி தவிர) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்றாக வெந்து, மசிந்த பின், வறுத்து பொடியாக்கிய உளுந்தை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, உப்பு சரிபார்த்து இறக்கவும். 
சாதத்துடன் பிசைந்தும், சப்பாத்தியோடு தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.
வெற்றிலை ரசம்
தேவையானவை: வெற்றிலை - 10 , சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 8 பல், மிளகு - அரை டீஸ்பூன், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு
செய்முறை: 9 வெற்றிலைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டு, மிளகு, சிறிது சீரகம் மூன்றையும் இடித்துக் கொள்ள வும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். இதில் இடித்து வைத்திருக்கும் மசாலா, அரைத்த வெற்றிலையை சேர்த்து, புளிக் கரைசல்   ஊற்றி... உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஒரு வெற்றிலையை, நீளமான துண்டுகளாக நறுக்கி மேலே தூவினால்... வெற்றிலை ரசம் தயார்.
 சிர்குமா
தேவையானவை: சேமியா - 100 கிராம், பேரீச்சம்பழம் - 25 கிராம், உலர்ந்த தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் - ஒரு லிட்டர், பைனாப்பிள் - 50 கிராம் (நறுக்கியது).
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து, சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பாத் திரத்தில் பாலை ஊற்றி  நன்றாக கொதிக்கும் வரை காய்ச்சி,  வறுத்த சேமியாவை சேர்த்து வேகவிடவும். சேமியா வேகும் சமயத்தில், மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய்யை சேர்த்து... முந்திரி, திராட்சை, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். சேமியா வெந்தபின் சர்க்கரை மற்றும் வறுத்த முந்திரி கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கலவை நன்றாக கொதித்த பின் இறக்கவும். பரிமாறும்போது, அதன் மேல் நறுக்கிய பைனாப்பிள் தூவி பரிமாறவும்.
பனீர் மகாராணி
தேவையானவை: கறுப்பு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ராஜ்மா - தலா கால் கப்,  பனீர் - 150 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் ஸ்பூன், கிரீம் - 100 மில்லி, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ராஜ்மா மூன்றையும் சுத்தம் செய்து இரவு முழுவதும் நன்றாக ஊறவிடவும். அவை நன்கு ஊறிய பின், மசியும் பதத்தில் வேக வைக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து பொரியவிடவும். பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், மசித்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கொதித்து வரும்போது நறுக்கிய பனீர் மற்றும் கிரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.
இது சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுக்கு சிறந்த சைட் டிஷ்.
காஷ்மீரி ஆலூ
தேவையானவை: உருளைக் கிழங்கு - கால் கிலோ, வெங்காயம் (பொடியாக நறுக்கியது), தக்காளி (அரைத்தது) - தலா அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.   
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து,   தோல் நீக்கி, 'கட்’ செய்து, பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் சேர்க்கவும். பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் அரைத்த தக்காளி சேர்த்து நன்றாக எண்ணெய் மிதக்கும்வரை வதக்கி, பின்னர் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
தால் தோ தடுக்கா
தேவையானவை: பாசிப்பருப்பு - 150 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல் (இடித்தது), உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சிறிது சீரகம் சேர்க்கவும். பொரிந்த பின் இடித்த பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி... சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை தாளித்து, பருப்புக் கலவையில் சேர்க்கவும்.
இதை சாதம், சப்பாத்தியோடு பரிமாறலாம்.
பெப்பர் காலிஃப்ளவர் ஃப்ரை
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று (பெரியது), மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 250 கிராம், சோள மாவு - 25 கிராம், உளுந்துப் பொடி - 50 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாக நறுக்கிக் கொள் ளவும். வெந்நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு அலசி வடிகட்டவும். நறுக்கிய காலிஃப்ளவருடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கலந்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வேக வைத்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி பரிமாறவும்.
 ஸ்தூவ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - ஒன்று, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், முதல் தேங்காய்ப் பால் - ஒரு கப், இரண்டாம் தேங்காய்ப் பால் - 2 கப், நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கில் கால் பங்கை மசித்துக் கொள்ளவும். மீதமுள்ள கிழங்கை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மசித்த உருளைக்கிழங்கு இரண்டாம் தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். கலவை கெட்டியாகும்போது முதல் தேங்காய்ப் பால், நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
ஆப்பம், புட்டு, இடியாப்பம் ஆகியவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால்... சுவையோ சுவைதான்!
வெஜ் மொய்லீ
தேவையானவை: கேரட் - 100 கிராம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் - தலா 50 கிராம், பச்சைப் பட்டாணி - 25 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், துருவிய தேங்காய் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு
செய்முறை: காய்கறிகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிளகு சேர்க்கவும். பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் பாதி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். தேங்காய், கசகசா, மீதி பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். வதக்கிய வெங்காய கலவையுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பின் வேக வைத்த காய்கறி, உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுக்கு சூப்பர் காம்பினேஷன்.
பனீர் பசந்தா
தேவையானவை: பசலைக்கீரை - ஒரு கட்டு, பனீர் - 200 கிராம், வெங்காயம் - கால் கப் (நறுக்கியது), தக்காளி - 2, இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, கிரீம் - 2 டீஸ்பூன், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,          மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பசலைக்கீரையை சுடுநீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்து, அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இத்துடன் சிறிது கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பனீரை சதுரம் சதுரமாக வெட்டி, அதன் நடுவில் அரைத்த கீரையை வைத்து ஒட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், சிறிது கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி... தயிர், கிரீம், உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிதளவு தண்ணீர், பொரித்த பன்னீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் இறக்கிப் பரிமாறவும்.
பைனாப்பிள் குழம்பு
தேவையானவை: பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) - ஒன்று, மிளகு - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 150 கிராம், தக்காளி - 100 கிராம், புளி - 50 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய் - 50 மில்லி, குழம்பு மிளகாய்த்தூள் - 60 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பைனாப்பிளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியையும் நறுக்கி கொள்ளவும். பைனாப்பிளை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.
மீதமுள்ள எண்ணெயை கடாயில்  ஊற்றி அதில் மிளகு,  சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து, அதன் பின் மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, வதங்கிய பின் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்க்கவும். பிறகு பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து, கொதித்த உடன் இறக்கிப் பரிமாறவும்.
ஆம்லா அல்வா
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 15, வெல்லம் - 150 கிராம், சர்க்கரை - அரை கிலோ, அரிசி மாவு - 100 கிராம், சோள மாவு - 100 கிராம், நெய் - 150 மில்லி.
செய்முறை: 10 நெல்லிக்காயை  சுத்தம் செய்து, அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெல்லிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். அடி கனமான கடாயில் நெல்லிக்காய் சாறு, வெல்லப்பாகு, சர்க்கரை, நறுக்கிய நெல்லிக்காய்  சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி மாவையும், சோள மாவையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் ஜூஸ் நன்றாக கொதித்து வரும்போது மாவு கரைசலை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பச்சை வாசனை போகும்வரை கிளறி, பிறகு நெய் சேர்த்து வேகவிடவும். நன்றாக அல்வா திரண்டு வரும் தறுவாயில், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். 
இந்த அல்வா வைட்டமின் நிறைந்தது. சர்க்கரை நோய்க்கு உகந்தது.
வெற்றிலை குழம்பு
தேவையானவை: சின்ன வெங்காயம் - 150 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 5 பல், நல்லெண்ணெய் - 150 மில்லி, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், புளிக் கரைசல் - 50 கிராம், வெற்றிலை - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, மையாக அரைக்கவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பின் புளிக் கரைசல், தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்த பின் உப்பு மற்றும் நறுக்கிய வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்கவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
கருப்பட்டி பணியாரம்
தேவையானவை: கருப்பட்டி - 150 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், தோசை மாவு - கால் கிலோ, திராட்சை - அரை டீஸ்பூன், நெய் - 25 மில்லி.
செய்முறை: கருப்பட்டியை பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பாகை ஆற வைத்து தோசை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, திராட்சை சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லில் நெய் ஊற்றி சூடாக்கி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
இது, சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு உகந்தது.
டமாட்டர் புனா
தேவையானவை: தக்காளி - 10, எண்ணெய் - ஒரு டீஸ் பூன், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 5 பல்
செய்முறை: தக்காளியை தீயில் சுட்டு, தோல் நீக்கி கையால் நன்றாக மசித்துக் கொள்ளவும். பூண்டினை இடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், மசித்த தக்காளியை சேர்த்துக் கிளறவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
கொத்தமல்லி தொக்கு
தேவையானவை: கொத்தமல்லி - 2 கட்டு, நறுக்கிய வெங்காயம் - 100 கிராம், இஞ்சி - 4 இன்ச் நீள துண்டு, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - 6, தேங்காய் - ஒன்று, எலுமிச்சை - 2, சோம்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 30 கிராம், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லியை சுத்தம் செய்யவும், இஞ்சியை      தோல் சீவவும், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு, முந்திரி இவற்றையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி பேஸ்ட்டை அதில் சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் கலவையை  சேர்க்கவும். நன்கு கொதித்ததும் எலுமிச்சைச் சாறை  ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.
 எள் கார கறி
தேவையானவை : வெங்காயம் - 3, தக்காளி - 2, பூண்டு - 10 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள்  - தலா 2 டீஸ்பூன், கறுப்பு எள் - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, புளிக் கரைசல் - 50 கிராம், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை : வெங்காயத்தை தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். கறுப்பு எள்ளை கடாயில் போட்டு வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். அது பொரிந்தவுடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து...  தக்காளியையும் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்றாக கொதித்து, பச்சை வாசனை போன பின் கெட்டியாக வரும்போது, வறுத்து பொடித்த எள்ளைத் தூவி கிளறி, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சாதத்தோடு பரிமாறவும்.
வடகம் புளிக் குழம்பு
தேவையானவை: காய்ந்த கொத்தமல்லி - 2 டீஸ்பூன், புளிக் கரைசல் - 100 கிராம், மஞ்சள்தூள், வறுத்துப் பொடித்த தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன், வறுத்த வடகம் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: காய்ந்த  கொத்தமல்லியை எண்ணெய் விடாமல் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை சேர்க்கவும். அதனுடன் தனியாத்தூள் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். கலவை நன்றாக கொதிக்கும்போது தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் இறக்கவும்.
பாலக் ரசம்
தேவையானவை: பாலக் - ஒரு கட்டு, புளி - 100 கிராம், சீரகம், பூண்டு - தலா 25 கிராம், மிளகு - 40 கிராம், தக்காளி - 3, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, எண்ணெய் - 50 மில்லி, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தாளிப்பதற்காக  சிறிதளவு சீரகத்தை தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள சீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் இடித்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். பாலக், தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி.. காய்ந்த மிளகாய், சிறிதளவு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, இடித்து வைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய பாலக், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மேலும் வதக்கவும்.  தேவையான அளவு புளிக் கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்கும் முன் இறக்கிப் பரிமாறவும்.
ஃப்ரூட் தோசா
தேவையானவை: வாழைப்பழம் - 5, சர்க்கரை - 50 கிராம், அரிசி மாவு - ஒன்றரை டீஸ்பூன், மைதா - ஒரு டீஸ்பூன், முந்திரி, நெய் - சிறிதளவு. 
செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். பிறகு, அரிசி மாவு, மைதா சேர்த்துக் கலக்கவும். இத்துடன் நெய்யில் பொரித்த முந்திரியை சேர்த்துக் கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் நெய் சேர்த்து சூடாக்கி, கலந்த மாவை சிறுசிறு தோசையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
 வெஜிடபிள் ரசம்
தேவையானவை: கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் - தலா 25 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 5 பல் , காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு, தக்காளி - 2, எண்ணெய் - ஒன் றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, புளி - 50 கிராம்.
செய்முறை: கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, இடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து வதக்கி... வேக வைத்த காய்கறியை சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், புளிக் கரைசல் சேர்த்து, பின்னர் உப்பு போட்டு... கொத்தமல்லி தூவி, கொதிக்கும் முன் இறக்கிப்  பரிமாறவும்.
மோகன கலவை
தேவையானவை: பச்சைப்பயறு - கால் கிலோ, இளநீர் - 3, நெய் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை ஊற வைத்து, இளநீர் தண்ணீர் சேர்த்து  நன்றாக வேக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடான தும் கடுகு சேர்க்கவும். பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கவும். கலவை நன்றாக வதங்கிய பின், வேக வைத்த பச்சைப்பயறை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தபின், உப்பு, இளநீர் வழுக்கை சேர்த்துக் கிளறி இறக்கி... சாதத்தோடு பரிமாறவும்.
 பேபி கார்ன் ஃப்ரை
தேவையானவை: பேபி கார்ன் (சின்ன சோளம்) - கால் கிலோ, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: பேபி கார்னை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பேபி கார்ன், மிளகாய்த்தூள், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில்   பேபி கார்ன் கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இதை கார சட்னியோடு சாப்பிட்டால்... அட்ட காசமான ருசியுடன் இருக்கும்.
மல்டி தால்
தேவையானவை: துவரம்பருப்பு - 150 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், தேங்காய் - கால் கப் (அரைத்தது), சின்ன வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று பருப்புகளையும் சுத்தம் செய்து, கழுவி வேக வைக்கவும். அரை வேக்காடு வந்ததும், கொத்தமல்லி தவிர மீதமுள்ள அனைத்து பொருட் களையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கலவை நன்கு வெந்தபின் உப்பு சரிபார்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறி பரிமாறவும்.
இதில் எண்ணெய் இல்லாததால் பத்திய உணவாகவும் சாப்பிடலாம். இதை சாதம், சப்பாத்தியோடு சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.
கம்பு அல்வா
தேவையானவை: கம்பு, சர்க்கரை - தலா அரை கிலோ, நெய் - 150 கிராம், பாதாம் அல்லது  பிஸ்தா - 50 கிராம்.
செய்முறை: கம்பை கல் நீக்கி, சுத்தம் செய்து சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடிகட்டி, அரைத்து, பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் பிழிந்து வடிகட்டிய கம்பு பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பால் நன்றாக கொதித்து கெட்டியாக வரும்போது, கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நன்றாக பச்சை வாசனை போனபின் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பின் இத்துடன் நெய் சேர்த்துக் கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருக்கும்போது பொடித்த பாதம் (அ) பிஸ்தாவை சேர்க்கவும். அல்வா கடாயில் இருந்து பிரிந்து வரும்போது அதை நெய் தடவிய தட்டுக்கு மாற்றவும். இதை ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஆறியபின் நமக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறலாம்.

Related

சமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி !

30 வகை உருளை ரெசிபி ! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசிக்கும் உருளைக்கிழங்குக்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம். பேரைச் சொன்னால் போதும்... நிமிடத்தில் தட்டே காலியாகிவிடும். அல்வா, சாலட், சூப்...

சமையல் குறிப்புகள்--30 வகை பாசிப்பருப்பு சமையல் !

சூப்பர் டேஸ்ட்... டாப்பர் ஹெல்த்... பாசிப்பருப்பு சமையல் ! பச்சைப்பயறு... காலகாலமாக நம்முடைய உணவில் தவறாமல் இடம்பிடித்து வரும் பயறு வகைகளில், முக்கிய இடம் பிடித்திருக்கும் பயறுகளில் ஒன்று. அதோடு, ம...

சமையல் குறிப்புகள்--30 வகை எண்ணெய் இல்லாத சமையல்

மளிகை செலவை மட்டுமல்ல... மருத்துவ செலவையும் குறைக்கும் 30 வகை எண்ணெய் இல்லாத சமையல் ''எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!'' என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பா...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Nov 26, 2024 11:19:31 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,118

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item