நாட்டுக் கோழி வளர்ப்பு! கோழி நல்ல தோழி!!

நாட்டுக் கோழி இறைச்சிக்கோழி இன்று கோடிகளில் விற்பனை ஆகும் புரத உணவு. மாநகரத்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் பேருந்துகூட செல்ல இயல...

நாட்டுக் கோழி

 • இறைச்சிக்கோழி இன்று கோடிகளில் விற்பனை ஆகும் புரத உணவு. மாநகரத்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் பேருந்துகூட செல்ல இயலாத கடைக்கோடி குக்கிராமம் வரை எளிதில் கிடைக்கக்கூடிய மாபெரும் சந்தையை உடைய தொழில்.
 • மிகப்பெரிய சந்தையும், உற்பத்தியும் உடைய இந்த இறைச்சிக் கோழி ஆறு வாரங்களில் இரண்டு கிலோவுக்கும் மேல் உடல் எடையை அடையும் இறைச்சி இயந்திரமாக இருக்கின்றன. இந்த ஆறு வார கோழிக் குஞ்சின் இறைச்சியில் அப்படி என்ன சுவையையும் மணத்தையும் எதிர்பார்த்திட முடியும்?
 • தான் உண்ணும் தீவனத்தை இறைச்சியாக மாற்றும் ஒரு உயர் இயந்திரம்தான் பிராய்லர் என்று அழைக்கப்படும் இறைச்சிக் கோழி. சுதந்தரக் காற்றைச் சுவாசித்து அறியாத பறவைகள் இவை. இறக்கை பறப்பதற்கும், கால்கள் விரைவாக ஓடிச் செல்வதற்கும் பயன்படும் என்பதை மறந்துவிட்ட பறவைகள்.
 • குஞ்சு பொரிப்பதில் இருந்து இறைச்சிக்காக கூண்டுகளில் அடைக்கப்படும் வரை எல்லாமே இயந்திரமயமாகவும், செயற்கைமயமாகவும், ரசாயனமயமாகவும் வளர்க்கப்படுபவை இறைச்சிக் கோழிகள். இந்தக் கோழிகளின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்கும், இந்தக் கோழிகளின் கழிவுகளைச் சாப்பிடும் நாய் போன்ற பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம்...
 • நாட்டு மாடுகள், நாட்டு ஆடுகள் என்று நாம் மறந்துவிட்ட கால்நடைச் செல்வங்களின் வரிசையில் நாட்டுக் கோழிகளையும் கொண்டுவர வேண்டும். நம் நாட்டு இனங்களைப் பற்றி நினைத்தாலோ, பேசினாலோ, எழுதினாலோ பழமைவாதம் எனப் பலர் பேசுகின்றனர். நஞ்சற்ற உலகை மீட்டெடுக்க பழமைவாதமே சரியான தீர்வு.
 • முன்னேற்றம், தொழில்நுட்பம் என்ற பெயரில் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் நம்முடைய இறைச்சி மற்றும் முட்டைத் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். இறைச்சி விலை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால், இவை இயற்கைக்கு முரண்பட்டு எவ்வளவு பெரிய சமூக, பொருளாதார, உணவுக் கலாசார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை நான் உணரவில்லை.
 • இந்தக் கூண்டுக் கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் வருவதற்கு முன் சந்தை அமைப்பு எப்படி இருந்தது. சின்னஞ் சிறிய குக்கிராமங்களில் புறக்கடையில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக் கோழிகளும், உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முட்டைகளும் கூடை வியாபாரிகளால் வாங்கப்பட்டு, பெரு நகர சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, பெரிய வியாபாரிகளால் மொத்தமாக சேகரிக்கப்பட்டு நகரத்து வீடுகளுக்கும், உணவகங்களுக்கும் பயணித்தன. கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கிய பொருள் நகர்வும், நுகர்வும் என ஆரோக்கியமான வியாபாரம் இருந்தது.
 • ஆனால் இன்றைய நிலை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தின் முட்டை தலைநகரமான நாமக்கல்லில் இருந்து புறப்படும் முட்டை லாரிகள், கிராமம் தவறாமல் கடை கடையாக முட்டை போட்டுக்கொண்டு செல்கின்றன. தத்தித் தவழ்ந்து செல்லும் பிராய்லர் கோழிகள், கறிக்கடைதோறும் இறக்கிவிடப்படுகின்றன. கோழி வளர்ப்பில் இருந்த கிராமப் பொருளாதாரம், கார்ப்பரேட் பொருளாதாரமாக மாறிவிட்டது.
 • நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பெரிய விஷயமில்லை. படிப்பறிவும், பெரிய விஞ்ஞான அறிவும் இல்லாத கிராமத்து ஏழைப் பெண்ணால், ஒரு ஆண்டுக்கு ஒரு ஜோடி கோழியையும், சேவலையும் வைத்து 75 முதல் 80 குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். சில இறக்கும். சிலவற்றை நாய், நரி, கழுகு தூக்கிக்கொண்டு போகும். சில திருடுபோகும். இருந்தாலும், நிகரலாபம் நிச்சயம் இருக்கும்.
 • நாட்டுக் கோழி பொருளாதாரம், என்றும் நஷ்டம் இல்லாத பொருளாதாரம். கொஞ்சம் விஞ்ஞானத்தையும் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்து நாட்டுக் கோழி வளர்த்து வெற்றிகரமாக பண்ணையம் செய்வோர் பலர். கோழிகளுக்கும் இவருக்குமான தொடர்பு 2002-ம் ஆண்டு ஏற்பட்டது. இறைச்சிக் கோழிகளை (பிராய்லர்) வளர்த்து பணத்தை அள்ளிக் குவித்துவிடலாம் எனப் புறப்பட்ட இளைஞர் படையில் இவரும் ஒருவர். 2006-ம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் இறைச்சிக் கோழிகளை வளர்த்தவர். விற்பனைப் பந்தயத்தில் எவ்வளவு வேகமாக ஓடினாலும் வெல்பவர் என்னவோ பந்தயத்தில் கலந்துகொள்ளாத நபர்தான். இது இவரை யோசிக்கவைத்தது.
 • கையில், இறைச்சிக் கோழிகளுக்காக அமைக்கப்பட்ட இரண்டு ஷெட்கள் இருந்தன. ஐந்து ஆண்டுகால இறைச்சிக் கோழி வளர்ப்பு அனுபவம் இருந்தது. இவை இரண்டையும் மூலதனமாக வைத்து, தன்னுடைய எதிர்காலத்தை அவர் முடிவு செய்தார். நாட்டுக் கோழி வளர்ப்பை நோக்கி இவரது பார்வை திரும்பியது.
 • கோழி வளர்ப்பை கேவலமாக எண்ணிய காலம் இருந்தது. கோழி வளர்ப்பை ஒரு தொழிலாக எவரும் அங்கீகரிக்கவில்லை. கோழிப் பண்ணை வைத்திருப்பதை ஒரு கௌரவமான தொழில் என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • கோழிப் பண்ணைத் தொழில் ஒரு முழு நேரத் தொழில். கூலிக்கு மாரடிக்கும் தொழில் அல்ல. 365 நாட்களும் வேலை செய்ய வேண்டும். ஞாயிறு விடுமுறை இல்லை. வாரத்தின் ஏழு நாள்களும், ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனமாகச் செயல்பட வேண்டும். தனிப்பட்ட கவனம் இருக்க வேண்டும். தொழில் பக்தியும், ஈடுபாடும் இருக்க வேண்டும்.
 • இத்தனை வேண்டுகளும் தாமோதரனிடம் இருந்தன. 100 சதவீதம் சுத்தமான நாட்டுக் கோழிகளை வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, கிராமப் பகுதிகளில் அலைந்து திரிந்து, தாய்க் கோழிகளையும், சேவல்களையும் தேர்வு செய்தார். அவற்றைக் கொண்டு தனது புதிய கோழிப் பண்ணையைத் தொடங்கினார். அவரே ஒரு தீவன தொழிற்சாலையை நிறுவி, தனது வளர்ப்புக் கோழிகளுக்காக நேர்த்தியான தீவனத்தை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.
 • அடுத்தது இனப்பெருக்கம். தரமான நாட்டுக் கோழி முட்டைகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி செய்ய, அடைகாக்கும் தாய்க் கோழிகளை மட்டும் நம்பினால் பயன் இருக்காது. விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க ஒரு இன்குபேட்டர், ஹேட்ச்சர், இவை தடையில்லாமல் இயங்க மின்சார ஜெனரேட்டர் என ஒரு முழுமையான ஹேட்ச்சரி உருவானது. வாரம் 30 ஆயிரம் முட்டைகள் பொரிக்கத் தக்க இன்குபேட்டரும் ரெடியானது.
 • நாட்டுக் கோழியுடன் காடை, வான்கோழி வாத்து, கிண்ணி கோழி என பல வகை பறவைகளும் இந்தப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவருடைய பண்ணையில் இருந்து குஞ்சுகளை வாங்கி வளர்த்து, பல விவசாயிகள் இன்று பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

லாபம்

 • நாட்டுக் கோழிக் குஞ்சு ரூ.22, காடைக் குஞ்சு ரூ.5, வான்கோழிக் குஞ்சு ரூ.40, வாத்துக் குஞ்சு ரூ.30, கிண்ணி கோழிக் குஞ்சு ரூ.22 என்ற விலையில் கிடைக்கின்றன. குஞ்சுகள் அனைத்தும் தடுப்பு ஊசி போடப்பட்டே விற்கப்படுகின்றன.
 • நாட்டுக் கோழி, 75 நாளில் இருந்து 90 நாளில் ஒண்ணேகால் கிலோ எடையை அடையும். இதுதான், நாட்டுக் கோழி விற்பனைக்கு உகந்த எடை.
 • ஒரு கோழிக் குஞ்சின் விலை ரூ.22, தடுப்பு ஊசி மருந்து ரூ.2, ஒண்ணேகால் கிலோ எடை வரை வளர்க்க மூன்று கிலோ தீவனம் தேவை. அதன் விலை ரூ.48, கோழி வளர்ப்புக் கூலி ரூ.3 என மொத்தம் ரூ.75 ஆகிறது.
 • பொதுவாக, சில்லறை விற்பனையில் உயிருள்ள நாட்டுக் கோழி கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கலாம். ஆயிரக்கணக்கில் வளர்த்து விற்கும்போது, மொத்த வியாபாரியிடம்தான் விற்கவேண்டி உள்ளது. அப்படி மொத்தமாக விற்கும்போது, விற்பனை விலை கணிசமாகக் குறையும். அப்படி கிலோவுக்கு ரூ.200 என்று விற்றாலே, ஒண்ணேகால் கிலோ கோழியை ரூ.250-க்கு விற்கலாம். செலவு ரூ.75 போக, ஒரு கோழிக்கு ரூ.175 கிடைக்கும்.
 • ஒரு கோழிக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறதே என்று நினைக்கும் அதே நேரத்தில், அதை வளர்த்தெடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 • முதலாவது, கோழிகளுக்கான வீடு அமைப்புக்கும், தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அடைத்து வளர்க்காமல் மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை நல்லது. அப்போதுதான் தீவன செலவு கட்டுப்படும். வெளியில் அலைந்து திரிந்து, மண்ணை கிண்டிகிளறி புழு, பூச்சிகள், புல் பூண்டுகளை தின்று வளரும் கோழிதான், சதைப்பற்றுடனும் மணமான இறைச்சியுடனும் இருக்கும். வளர்ச்சி கொஞ்சம் தாமதமாக இருந்தாலும், இந்த முறைதான் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஏற்றது.
 • ஆனால், தாய் இன்றி இளம் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பத்தில் புரூடிங் எனும் செயற்கை வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். புரூடிங் காலத்தில் வெப்பத்தைக் கொடுக்க கரிப்பானை அல்லது மின் விளக்கைப் பயன்படுத்தலாம். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. தண்ணீருக்கு நிப்பிள் ட்ரிங்கர் அல்லது ஆட்டோமேட்டிக் ட்ரிங்கர் அமைக்கலாம். இயற்கை முறையில் வளர்க்கிறேன் என்பதற்காக சுத்தமும் சுகாதாரமும் இல்லாத தண்ணீரைக் கொடுக்கக்கூடாது.


கோழிக் குஞ்சுக்குத் தேவையான வெப்பம்

வயது (நாளில்)தேவையான வெப்பம்
1 - 432 டிகிரி - 33 டிகிரி
5 - 730 டிகிரி
8 - 1428 டிகிரி
15 - 2126 டிகிரி
22 - 2824 டிகிரி

நூறு கோழிக்குத் தேவையான குடிதண்ணீரின் அளவு

வயது (வாரத்தில்)தண்ணீரின் அளவு
12 லிட்டர்
24 லிட்டர்
36 லிட்டர்
48 லிட்டர்
510 லிட்டர்
612 லிட்டர்
714 லிட்டர்
816 லிட்டர்
 • கடும் கோடைக்காலத்தில் தண்ணீரின் அளவு இரு மடங்கு ஆகலாம். குளிர்க்காலத்தில் தண்ணீரின் அளவு பாதியாகக் குறையலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தண்ணீர் இல்லாமல் கோழிகளால் உயிர் வாழவோ, உடல் எடையை அதிகரிக்கவோ முடியாது.
 • நாட்டுக் கோழிகளுக்கு இயற்கையிலேயே எதிர்ப்புச் சக்தி அதிகம் என்றாலும், கோடைக்காலத்தில் வரும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கினால், கொத்துக் கொத்தாக செத்து மடியும். ஒரே வாரத்தில் பண்ணையே காலியாகிவிடலாம். அதற்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்தை கோழிகளுக்கு சரியான முறையில் அவசியம் போட வேண்டும்.
 • பிராய்லருக்குக் கொடுப்பதுபோல் தீவனம், வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றை நாட்டுக் கோழிகளுக்குக் கொடுக்கக்கூடாது. பலவகை கீரைகளை உணவாகக் கொடுக்கலாம். மனிதர்களின் உணவைத் தவிர தானியங்களை கோழித் தீவனமாகக் கொடுக்கலாம். தீவனத்தில் போதுமான நார்ச்சத்து இல்லையென்றால் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும். ரத்தத்தின் சுவையை உணர்ந்துவிட்டால், நோஞ்சானாக இருக்கும் கோழியை எல்லாக் கோழிகளும் கொத்திக் கொன்று தின்றுவிடும். ஒன்றுக்கொன்று கொத்திக்கொள்கின்றனவே என்று சிலர் மூக்கு வெட்டும் கருவியால் மூக்கின் கூரான பகுதியை வெட்டி தீய்த்துவிடுவார்கள். இவ்வாறு செய்தால், கொத்துவது குறையும். ஆனால், மூக்கு வெட்டிய கோழியை பண்ணைக் கோழி என்ற பெயரைச் சொல்லி வியாபாரிகள் வாங்க மறுத்துவிடுவர். ஆகவே, அப்படிச் செய்யாதீர்கள்.
 • இந்த நாட்டுக் கோழி வளர்ப்பிலும் போலிகள் உண்டு. நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் விற்பனையில் நல்ல லாபம் இருப்பதைத் தெரிந்து பலர் பிராய்லர் கோழிக் குஞ்சுகளை நாட்டுக் கோழிக் குஞ்சுகள் என்று சொல்லி விற்றுவிடுகின்றனர். இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை இனம்கண்டு ஒதுக்குவது நாட்டுக் கோழி வளர்ப்போருக்கு நல்லது.
 • கோழிக் குஞ்சுகள் வாங்கும்போது, அவற்றின் விலையை மட்டும் பார்க்காமல், தரமான குஞ்சுகளா என்று பார்த்து வாங்க வேண்டும். குஞ்சுகளை வாங்கும்போதே அவை எந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்பதை கணக்கிட வேண்டும். புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை போன்ற மாதங்களில் கோழி விற்பனை டல் அடிக்கும். அது விரத காலம். அதேபோல் ஆடி, ஐப்பசி, பங்குனி, சித்திரையில் கோழி விற்பனை அமோகமாக இருக்கும். ஏனெனில், அது அசைவ காலம்.
 • நாட்டுக் கோழி வளர்ப்பு நல்ல தொழில். மிகப்பெரிய பண்ணை அளவுக்கு பெரும் முதலீட்டுடன் செய்யாமல், கொட்டகை, மேய்ச்சல் இடத்துடன் கூடிய அமைப்பில், உள்ளூர் விற்பனையைக் கருதி, விற்பனைக் காலத்தையும் முன்கூட்டியே கணக்கிட்டு, உற்பத்தி செலவையும் இறப்பு விகிதத்தையும் குறைத்து நாட்டுக் கோழியை வளர்த்து விற்றால், கோழி நல்ல தோழிதான்.

Related

வேலை வாய்ப்புகள் 549699135172693997

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item