ரூ.40 லட்சம்... வீடு வாங்கலாமா, ஃபண்டில் போடலாமா? - ஃபண்ட் கார்னர்!
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். வி.அரிகிருஷ்ணன், சென்னை. ?“என் வயது 35. என்னிடம் ரூ.40 ல...

வி.அரிகிருஷ்ணன், சென்னை.
?“என் வயது 35. என்னிடம் ரூ.40 லட்சம் உள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு வீடு வாங்கிக் குடியிருப்பது சரியா அல்லது வாடகை வீட்டில் வசித்து, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சரியா? மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருந்தால், 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். 20 ஆண்டுகள் கழித்து ஒரு வீட்டை விற்பதில் கிடைக்கும் லாபத்தைவிட, மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் கிடைக்குமா?’’
‘‘அரிகிருஷ்ணன் அவர்களே, உங்களின் கேள்விக்கு ஒரு பதிலல்ல – இரண்டு பதில்களைக் கொடுக்கிறேன். எந்தப் பதில் உங்களுக்கு மிகவும் சரியாகப்படுகிறதோ, அதன்படி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும்.
மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம். இவை மூன்றுக்கும் பிறகுதான் முதலீடு போன்றவை வருகிறது. ஆகவே பல கோணங்களில் நோக்கும்போது, ஒருவருக்கு முதலில் வீடு என்பது அவசியம். ஆகவே, நீங்கள் வீட்டை வாங்கிக்கொண்ட பிறகு, மீதமிருக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் முதலீட்டுக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட காலத்தில் ரியல் எஸ்டேட் முதலீட்டைவிட அதிகமான வருமானம் தரும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகவே, வருமானம்தான் உங்களுக்கு முக்கியம் எனில், ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்துகொள்ளுங்கள். இருபது ஆண்டுகள் கழித்து, ஒரு வீட்டை விற்பதில் கிடைக்கும் லாபத்தை விட மியூச்சுவல் ஃபண்டில் உறுதியாக அதிக லாபம் கிடைக்கும்.”
கே.கே.ரமேஷ், ஆவடி.
?“கேப்பிட்டல் கெய்ன் டாக்ஸ் என்றால் என்ன? மியூச்சுவல் ஃபண்டில் இந்த வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?”
“நாம் ஒவ்வொருவரும் முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானம் ‘கேப்பிட்டல் கெய்ன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு கிடைத்த லாபத்தை நாம் சம்பாதிக்கும்போது, அரசாங்கத்துக்குரிய வரியைக் கட்ட வேண்டும். அவ்விதமான வரிதான் ‘கேப்பிட்டல் கெய்ன்ஸ் டாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வரி நிலம், வீடு, தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுகள் போன்ற பலவிதமான முதலீடுகளுக்கும் உரித்தாகும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்த வரி இருவகையாக உள்ளன. ஒன்று, குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short Term Capital Gains Tax), மற்றொன்று, நீண்டகால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gains Tax) ஆகும். இந்த இரு வரிகளும் பங்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்கள் ஆகிய இரு வெவ்வேறு வகைக்கும் மாறுபடும். (மேலே உள்ள வரி விகித அட்டவணையைப் பார்க்கவும்.)
ராஜா, சென்னை.
?“1994-ல் மார்கன் ஸ்டான்லி குரோத் ஃபண்டில் 200 யூனிட் வாங்கினேன். இந்த யூனிட்கள் பிசிக்கலாக உள்ளன. இதனை டீமேட் அக்கவுன்ட்டுக்கு மாற்ற முடியுமா?”
“மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட் தற்போது நடைமுறையில் இல்லை. இந்த ஃபண்ட் நிறுவனம், தான் நிர்வகித்த சொத்துகளை ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. தற்போது இந்த ஃபண்ட் ஹெச்.டி.எஃப்.சி லார்ஜ்கேப் ஃபண்ட் என அழைக்கப்படுகிறது.
பிசிக்கலாக இருக்கும் யூனிட்டுகளை டீமேட் கணக்குக்கு மாற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நீங்கள் அப்படி விரும்பினால் தாராளமாக உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.”
வினோத்பாபு, சென்னை.
?“மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது, யார் மூலம் முதலீடு செய்யலாம்?”
“மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்குச் சுலபமான வழி, மியூச்சுவல் ஃபண்ட் அட்வைஸருடன் கைகோத்துக்கொள்வதுதான். அந்த அட்வைஸர் உங்கள் தேவைகளுக்கு ஏற்றாற்போல் ஃபண்டுகளைப் பரிந்துரை செய்து, அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு உதவி செய்வார்.
மேலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் உங்களின் முதலீட்டைப் பரிசீலனை செய்து, உங்கள் முதலீட்டைக் கவனித்துக் கொள்ளவும் உதவுவார். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும் பான் கார்டு, அட்ரஸ் புரூஃப், போட்டோ போன்றவை தேவைப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்!”
Post a Comment