தடுப்பூசி ரகசியங்கள்!
தடுப்பூசி
என்பது தமிழ் சூழலுக்குப் புதிய விஷயம் அல்ல. 'வெள்ளம் வரும் முன் அணை
போடு’ என்பது காலங்காலமாய் நம் சூழலில் உலவிவந்த சொலவடைதான். தடுப்பூசி
என்பது அந்தக் கருத்தாக்கத்தில் விளைந்த கருவிதான்.
குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி,
பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும்.
பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி
விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும்
பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப்
பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது
மட்டும்தான்.
பி.சி.ஜி தடுப்பூசி (BCG Vaccine): 
குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி,
பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச்
சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத்
தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர்
காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர்
குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம்
புரிந்திருக்கும்.
காசநோய்:
காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு
'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்று
பெயர். நுரையீரல்களைத்தான் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. என்றாலும்,
குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் போன்ற
பகுதிகளையும் இது பாதிக்கும். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் சளியில்
வெளியேறும். இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித்
துப்பும்போது, இந்தக் கிருமிகள் சளியுடன் காற்றில் கலந்து, அதைச்
சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும்.
காசநோயின் அறிகுறிகள்:
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக்
காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல்எடை குறைதல், நெஞ்சு வலி,
இரவில் உடல் வியர்ப்பது, எந்த நேரமும் களைப்பு ஏற்படுதல் இவையே காசநோயின்
முக்கிய அறிகுறிகள்.
பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary complex):
குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை 'பிரைமரி
காம்ப்ளெக்ஸ்’ என்கிறோம். குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல், தொடர்
மூச்சிறைப்பு, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி
உடல்எடை அதிகரிக்காதது, கழுத்தில் நெறிக்கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த
நோயின் முக்கிய அறிகுறிகள்.
பரிசோதனை என்ன? சிகிச்சை என்ன?
காசநோயை சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, 'மாண்டோ’
பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எலிசா பரிசோதனை, ஜீன்எக்ஸ்பெர்ட் (Gene Xpert
Test) போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த நோய்க்குச்
சரியாகவும் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகவும் மருந்துகள் எடுத்துக்கொண்டால்,
இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இவ்வளவு சிரமப்படவேண்டிய அவசியமும் இல்லை. காசநோயைத் தடுக்க இருக்கவே இருக்கிறது பிசிஜி தடுப்பூசி.
'பிசிஜி’யைப் போட்டுக்கொள்ளும் முறை: 
குழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி.
அளவில் இடது புஜத்தில் தோலுக்குள் (மிஸீtக்ஷீணீபீமீக்ஷீனீணீறீ ஸிஷீutமீ)
போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த
ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5
வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு, இதைப் போட்டுக்கொள்ளத் தேவை
இல்லை. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, இது வேலை
செய்யும். தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக்
கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
புஜத்தில் தழும்பு அவசியமா?
பிசிஜி போடப்பட்ட புஜத்தில் அறு வாரங்கள் கழித்து, சிறு
கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில்
சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள்
அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக்
கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத்
தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி.
இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும்
இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.
இலவச தடுப்பூசி!
இந்திய அரசின் சுகாதாரத் துறை, குழந்தை பிறந்தது முதல்
போடவேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை
வெளியிட்டுள்ளது. இவற்றுடன் பெற்றோரின் விருப்பத்தின் பெயரில் போடக்கூடிய
புதிய தடுப்பூசிகளையும் சேர்த்து, 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்
கூட்டமைப்பு’ (IAP) ஒரு அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இதில் பெரும்பாலான
ஊசிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு
மருத்துவ முகாம்களில் இலவசமாகவே போடப்படுகின்றன.
Post a Comment