வயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்! மிரட்டும் பூச்சி- நோய்கள்...விரட்டும் வழிகள் ! விவசாயக்குறிப்புக்கள்!!
வயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்! மிரட்டும் பூச்சி- நோய்கள்...விரட்டும் வழிகள் ! நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை சமாளி...

https://pettagum.blogspot.com/2014/07/blog-post_3475.html
வயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்!
மிரட்டும் பூச்சி- நோய்கள்...விரட்டும் வழிகள் !
நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றி... பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம் இந்த இதழிலும் தொடர்கிறார்.
''கம்பளிப் புழு மற்றும்
பச்சைக்காய்ப் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பச்சை மிளகாய்
பூண்டுக்கரைசல் தெளித்தாலே போதும் எனச் சொன்னீர்கள். அதை எப்படித் தயார்
செய்வது?''
''காம்பு நீக்கிய 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3
லிட்டர் தண்ணீரில் இட்டு, 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கால் கிலோ
வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் போட்டு, 24 மணி நேரம்
ஊறவைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து, 10
லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக்
கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற
விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.''
''புகையான் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?''
''புகையான் தாக்கிய வயல் முழுவதும், திட்டு,
திட்டாக பயிர் எரிந்தது போன்று பயிர்கள் இருக்கும். காய்ச்சலும்,
பாய்ச்சலுமாகத் தண்ணீர் கட்டினாலே புகையான் தாக்குதலைத் தடுக்கலாம்.
அளவுக்கு அதிகமான உரம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பச்சை
மிளகாய்-பூண்டுக்கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.''
''கதிர்நாவாய்ப் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?''
''கதிர்நாவாய்ப் பூச்சிகள் வந்த பிறகு விரட்டு வதை விட,
வருமுன் காப்பதுதான் நலம். நடவு செய்த 20-ம் நாளில் இருந்து,
வேப்பங்கொட்டைக் கரைசலையும், மூலிகைப் பூச்சிவிரட்டியையும்
10 நாட்கள் இடைவெளியில், மாற்றி மாற்றி தொடர்ச்சியாகத் தெளித்து வந்தால், இப்பூச்சிகள் வராது.''
''ஆனைக்கொம்பன் பூச்சியைக் கட்டுப் படுத்த என்ன வழி?''
''ஆனைக்கொம்பன் தாக்கிய பயிர்களில் செடி வெங்காயத்தாள்
போல மாறிவிடும். நெல் வயல்களில் இறங்கி நடந்தால்... கொசு போன்ற பூச்சிகள்
பறக்கும். இந்த அறிகுறி இருந்தால், வேப்பங்கொட்டைக் கரைசலை 10 நாட்கள்
இடைவெளியில், 3 முறை தொடர்ச்சியாகத் தெளித்துக் கட்டுப் படுத்தலாம்.''
''வேப்பங்கொட்டைக் கரைசலை எப்படித் தயாரிப்பது?''
''வேப்பங்கொட்டை 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு அரை
கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும்
கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது) காட்டன் துணியில் இறுக்கமாகக்
கட்டி... 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல்
தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, பத்து லிட்டர்
டேங்குக்கு 500 மில்லி என்ற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப்
பிறகு தெளிக்க வேண்டும்.''
''கூண்டுப் புழுவை எப்படிக் கட்டுப்படுத்துவது?''
''கூண்டுப் புழு பயிரை திடீரென்று தாக்கும். இப்புழு
பயிர்களின் நுனியில் தொங்கிக்கொண்டிருக்கும். இதைக் கட்டுப்படுத்த...
தண்ணீர் செல்லும் வாய்மடையில் 10 சொட்டு மண்ணெண்ணெய் விட்டு விட்டு, வயலின்
இருபுறத்திலும் ஒவ்வொருவர் நின்று கொண்டு... ஒரு கயிறைப் பிடித்துக்
கொண்டு பயிர் மீது இழுக்க வேண்டும். அப்படி இழுக்கும்போது இலைகளில்
ஒட்டிக்கொண்டிருக்கும் புழுக்கள் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி
இறந்துவிடும்.''
''மாவுப்பூச்சித் தாக்குதலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?''
''ஒரு ஏக்கருக்கு, 200 லிட்டர் தண்ணீரில் 800 கிராம்
'பவேரியா பேசியானா’ என்கிற நுண்ணுயிரியைக் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது
50 லிட்டர் தண்ணீரில், 100 கிராம் கருவாட்டு மீன் எண்ணெய் சோப் கலந்து
தெளிக்க வேண்டும்.''
Post a Comment