காபி கப் ரகசியங்கள்! ஹெல்த் ஸ்பெஷல்!!
காபி கப் ரகசியங்கள்! கா லை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. தொண்டைக்குள் இறங்கும் மெல்லிய...
https://pettagum.blogspot.com/2014/07/blog-post_5449.html
காபி கப் ரகசியங்கள்!
காலை எழுந்தவுடன்
ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது.
தொண்டைக்குள் இறங்கும் மெல்லிய கசப்புடன் கூடிய காபியின் சுவைக்குப் பலரும்
அடிமை. கும்பகோணத்து டிகிரி காபி தொடங்கி 'காபி ஷாப்’ வரை தலைமுறை தாண்டி
தமிழர்களின் ரசனையில் இடம்பெற்றிருக்கும் காபியின் நன்மை, தீமைகள்
என்ன? திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் காயத்ரி விரிவாகச் சொல்கிறார்.
''பொதுவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள்
கலந்ததே காபி. இதில், 'காஃபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான்
உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது. அதே சமயம், நம் மூளையில் உள்ள
நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது. அதிக
அளவில் காபி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும்
ஏற்படுகிறது.
காபி சில நோய்களுக்குத் தடுப்பு மருந்தாகவும்
இருக்கிறது என்பது உண்மை. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்’
நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. இன்சுலின்
சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல்
தடுக்கலாம். ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் காபியில் பாலுடன் அதிகம்
சர்க்கரையும் சேர்க்கப்படுவதால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல''
என்கிற காயத்ரி, அதிகம் காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்தார்.
''அன்றாடம் வீட்டில் சர்க்கரை மற்றும் பால்
சேர்ப்பதால், ஒரு கப் காபியில் கிட்டத்தட்ட 500 கலோரி கிடைக்கிறது. நாள்
ஒன்றுக்கு இரண்டு கப் அளவுக்கு மேல் அருந்துபவர்களுக்கு அதிகப்படியான கலோரி
உடலில் சேர்ந்து எடை கூடி பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
காபியில் உள்ள 'கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை
அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்
அதிகரிக்கின்றன. 'அல்சர்’ மற்றும் 'இதய நோய்’ உள்ளவர்கள், காபி அருந்துவதை
நிறுத்திவிடுவது நல்லது.
காபியில் உள்ள காஃபின் பித்தப்பையில் அதிகம்
சேரும்போது, அது கல்லாக மாறுகிறது. இதனால், பித்தம் அதிகரித்து வாந்தி,
தலைவலி ஏற்படும். மேலும், அடிக்கடி காபி குடிக்கும்போது, நரம்புகள்
பாதிக்கப்படும். நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
காபியில் உள்ள சில பொருட்கள், உடலுக்குத் தேவையான
ஜிங்க், கால்சியம், இரும்பு போன்ற தாதுஉப்புக்களை உடலில் சேரவிடாமல்
தடுக்கிறது. இதனால், சத்துக் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள்
வலுவிழந்துபோகலாம். பெண்களுக்கு இடுப்பில் வலி ஏற்படுவதற்கு, அதிக காபி
அருந்துவதும் ஒரு காரணம்.
நடை, ஓட்டம், அதிக உழைப்பு என எப்போதும்
சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, காபி அதிகம் குடித்தாலும் அதன் பாதிப்புகள்
குறைவாகவே இருக்கும். ஆனால், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் 40
வயதுக்கு மேற்பட்டவர்கள் காபி குறைவாகக் குடிப்பது நல்லது'' என்கிறார்.
அப்புறம் என்ன, காபி கப்பைக் கீழே வைங்க சார்!
டிப்ஸ்! 

Post a Comment