30 வகை வாழை சமையல்! 30 நாள் 30 வகை சமையல்!!

''வீ ட்டில் ஒரு வாழைக்கன்று வைத்தால் போதும்... நம் பரம்பரைக்கே அது பலன் தரும்'' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இலை, பூ,...

''வீட்டில் ஒரு வாழைக்கன்று வைத்தால் போதும்... நம் பரம்பரைக்கே அது பலன் தரும்'' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துமே சமையலுக்குப் பயன்படும் தாவரம் என்றால் அது வாழைதான். வாழையை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், வடை, பாயசம், சூப், அவியல், பச்சடி, கஸ்டர்ட் என ஒரு விருந்தே தயாரித்துவிடலாம். இப்படி, சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட வாழையில் 30 வகை ரெசிப்பிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி,
''வாழைக்காய், பூ, தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர், மஞ்சள்தூள் சேர்த்து வைத்தால், சமைப்பதற்குள் கறுத்துவிடாமல் இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு அருந்தினால், கண்களுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும்'' என்று 'டிப்ஸ்’களையும் அள்ளித் தருகிறார்.

வாழைப்பூ பொரிச்சக் குழம்பு
தேவையானவை: நரம்பு நீக்கி சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூ - ஒரு கப், பயத்தம்பருப்பு - 50 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெங்காய வடகம், மோர் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 4 இதழ்கள்.
செய்முறை: பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாழைப்பூவை நறுக்கி, சிறிதளவு மோர், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வெங்காய வடகத்தை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.

வாழைப்பூ - முருங்கைக் கீரை பொரியல்
தேவையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், உதிர் உதிராக வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், மோர் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வாழைப்பூவை மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். முருங்கைக்கீரையை தனியாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெந்த வாழைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து, வேகவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

வாழைப்பூ அடை
தேவையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், புழுங்கல் அரிசி - 2 கப், துவரம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டேபிள்ஸ்பூன்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5,  கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியையும் பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து... காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அதையும் மாவுடன் சேர்க்கவும்.  தோசைக்கல்லில்  இரண்டு கரண்டி மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி, வேகவிட்டு எடுக்கவும்.
இந்த அடையை வெண்ணெய் தொட்டுச் சாப்பிடலாம்.

வாழைக்காய் - பனீர் புட்டு
தேவையானவை: பெரிய வாழைக்காய் - ஒன்று, பனீர் (துருவியது) - கால் கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோலை உரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி, துருவிய பனீரையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து, நன்கு கலந்துவிடவும்.

வாழைக்காய் எரிசேரி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, சேனைக்கிழங்கு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  
செய்முறை: பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய  வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்துகொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த எரிசேரி.

வாழைப்பூ வடை
தேவையானவை: பொட்டுக்கடலை - 2 கப், மெல்லியதாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, சோம்பு - அரை டீஸ்பூன். பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைக்கவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்க்கவும். (இதில் உள்ள நீரே போதுமானது. தேவைப் பட்டால், சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

வாழைக்காய் - வெங்காயம் - தக்காளி பொரியல்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பூண்டு - 3 பல், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு இறக்கி, நறுக்கிய கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் உசிலி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  
ஊறவைத்து அரைக்க: துவரம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: வாழைக்காயை மெல்லியதாக நறுக்கவும். பருப்புகளை மிளகாயுடன் சேர்த்து 40 நிமிடம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறிய பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று லேசாக சுற்றினால் ஒரே அளவாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வாழைக்காயையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்தால் 5 நிமிடத்தில் வெந்துவிடும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). பிறகு, தயார் செய்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து, இரண்டு புரட்டு புரட்டி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் கொத்சு
தேவையானவை: வாழைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி - சிறிதளவு, வேகவைத்த பயத்தம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தனியா - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கி, மிகவும் பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, காய் வெந்த உடன்,  வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
இந்த  கொத்சு... இட்லி, தோசை, உப்புமாவுக்கு ஏற்ற சைட் டிஷ்.

வாழைக்காய்  அவியல்
தேவையானவை: நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய்  - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: தேங்காய்த் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4.
செய்முறை: காய்கறிகளை நீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர், தேங்காய் எண்     ணெய் சேர்த்து இறக்கி  னால்... வாழைக்காய் அவியல் தயார்!

வாழைக்காய் சாம்பார்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 6, வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, சேர்த்து, ஒரு கொதி வரும்போது... சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய் வெந்ததும், வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

வாழைக்காய் - வற்றல்கள் காரக்குழம்பு
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு - 8 பல், தேங்காய்த் துருவல் - கால் கப், சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காய வடகம் (சிறியது) - ஒன்று.
செய்முறை: தேங்காய் துருவலை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து  கொதிக்கவிடவும். வாழைக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி, பூண்டு சேர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். காய் பாதி வெந்ததும், வற்றல்களை வறுத்துச் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து வந்ததும் தேங்காய் விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

வாழைக்காய் - பனீர் துவட்டல்
தேவையானவை: நறுக்கிய வாழைக்காய் (ஸ்வீட் கார்ன் அளவுக்கே நறுக்கவும்) - ஒரு கப், ஸ்வீட் கார்ன், நறுக்கிய பனீர் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, தனியா - 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வாழைக்காயை வதக்கி, பனீரையும் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, எல்லாமாகச் சேர்த்து வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, நன்றாக புரட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

வாழைக்காய்  பஜ்ஜி
தேவையானவை: வாழைக்காய் - 2, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப்,  எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,     மஞ்சள் பொடி, பெருங்காயம் - சிட்டிகை, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பேக்கிங் பவுடர் - சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொண்டு, நறுக்கிய வாழைக்காயை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறுக்கு காளன்
தேவையானவை: நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நீர் விடாமல் கடைந்த மோர் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும். நறுக்கிய வாழைக்காயை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்த தும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் கடைந்த மோரை அதில் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நீர் முழுவதும் வற்றும்படி குறுக வைத்து இறக்கவும்.

வாழைக்காய்  கதம்ப பக்கோடா
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, கடலை மாவு - ஒன்றரை கப், அரிசி மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை,  நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெயை அடிகனமான வாணலியில் காயவிடவும்.  நறுக்கிய வாழைக்காய், பச்சை மிளகாய், மற்ற காய்கறிகளுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிசிறவும். காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் இருந்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயை எடுத்து சேர்த்து நன்கு பிசிறி, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு மேலும் பிசிறவும். காயும் எண்ணெயில் மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

 நேந்திரம்பழ பாயசம்
தேவையானவை: நேந்திரம்பழம் - 3, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைந்த முந்திரித்துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப்.
செய்முறை: தேங்காய்த் துருவலை சிறிதளவு நீர்விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கரைந்துவிடாமல் வேகவைக்கவும். வெந்ததும் வெல்லத்தைச் சீவி சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், அரைத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு கொதி வெந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். முந்திரித்துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

நேந்திரங்காய் சிப்ஸ்
தேவையானவை: முற்றிய நேந்திரம் வாழைக்காய் - 3, மஞ்சள் தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: நேந்திரங்காய்களை அடி, நுனி இரண்டையும் நறுக்கிவிட்டு, தோலை உரிக்கவும். அடிகனமான வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூளைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக காய்களை (சிப்ஸ் கட்டையால்) வட்டமாக எண்ணெயில் படும்படி சீவவும். எண் ணெயில் நன்கு கலந்துவிடவும். சலசலவென்று சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசலை கால் டீஸ்பூன் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசல் கால் டீஸ்பூன் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சலசலவென்று சத்தம் வந்ததும் வறுவலை எடுத்து எண்ணெயை வடிய வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.
இந்த சிப்ஸ் பல மாதங்கள் கெடாது. இதை தேங்காய் எண்ணெயில்தான் பொரிக்க வேண்டும்.

இலை அப்பளம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வாழை இலை - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை முதல் நாள் இரவே கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். (அரைப்பதற்கு முன்பு 40 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும்), மறுநாள் காலை மாவுடன் உப்பு, சீரகம் சேர்க்கவும். இட்லிப்பானையில், தட்டில் வாழை இலையை வைத்து, அதில் ஒரு கரண்டியால் மாவை வட்ட வடிவில் ஊற்றி வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்தால்... இலை அப்பளம் தயார். இதே மாதிரி முழு மாவையும் ஊற்றி எடுத்து வெயில் காய வைத்து, இரண்டு மணி நேரத்தில் வாழை இலையை விட்டு எடுத்து விடலாம். எடுத்த அப்பளத்தை துணியில் போட்டு, வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 4 தினங்கள் பகலில் இவ்வாறு காயவைத்து எடுக்கவும். வாழை இலை அப்பளத்தை அதிக அளவில் செய்து வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இதை எண்ணெயில் பொரித்தோ, தணலில் சுட்டோ  பயன்படுத்தலாம்.

குறிப்பு: பச்சை மிளகாய் - கசகசாவை அரைத்து, அப்பளம் தயாரிக்கும் மாவில் சேர்த்தால்... சற்று காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம் இருக்கும்.

வாழைத்தண்டு சூப்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பொடியாக நறுக்கிய  கேரட், பீன்ஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு, அது உருகியதும் நறுக்கிய வாழைத்தண்டு, கேரட், பீன்ஸ், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கி, 2 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சோள மாவைக் கரைத்து ஊற்றி, மேலும் 2 நிமிடம் கொதித்து சூப் பதம் வந்ததும், மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

வாழைத்தண்டு கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், மோர் - 3 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பயத்தம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: துருவிய தேங்காய் - 5 டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 3 இலைகள், கொத்தமல்லித் தழை - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் சேர்த்து வேகவிடவும். இதனுடன் வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
வாழைத்தண்டு கூட்டு, மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

வாழைத்தண்டு ஸ்வீட் பச்சடி
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், சீவிய வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிட்டிகை.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வாழைத்தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பச்சடி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

வாழைப்பழ கீர்
தேவையானவை: மலை வாழைப்பழம் - 3, பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் - தலா ஒரு சிட்டிகை, மெல்லியதாக சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், மெல்லியதாக சீவிய முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். இதனுடன் ஒரு கப் பால், ஒரு கப் நீர் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு, வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பாதாம், முந்திரியால் அலங்கரிக்கவும்.

வாழைப்பழ கஸ்டர்ட்
தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம் - ஒரு கப், நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், பலாச்சுளை, முழு பச்சைத் திராட்சை (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாலை   சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். மிதமாக சூடாகும்போதே கால் கப் பாலை எடுத்து கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். பால் - கஸ்டர்ட் பவுடர் இரண்டும் சேர்ந்து வரும்போது இறக்கி, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிடவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்கள் முன்பு எடுத்து, பழங்களைச் சேர்த்து கலந்துவிடவும்.
குறிப்பு: பரிமாறுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு பழங்களை 'கட்’ செய்தால் போதும். வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று எந்த ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடர் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

வாழைப்பழ ஸ்மூத்தி
தேவையானவை: வாழைப்பழம் - 3, தயிர் - ஒன்றரை கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 3, தேன் - ஒரு டீஸ்பூன், தூளாக்கிய பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒருசிட்டிகை.
செய்முறை: பேரீச்சம்பழத்தை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து ஓடவிட்டு, உப்பு, பனங்கற்கண்டு, தேன் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு, வாழைப்பழத்தைச் சேர்த்து அடித்து, இறுதியில் தயிரும் சேர்த்து நுரைவரும் வரை அடித்து நிறுத்தவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கினால்... சுவையான, சத்தான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!

வாழைப்பழ அப்பம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுந்து, ஜவ்வரிசி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், நன்கு கனிந்த மஞ்சள் வாழைப்பழம் - 2, உடைத்த முந்திரித் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை - 3 டேபிள்ஸ்பூன், நெய் - சமையல் எண்ணெய் கலவை - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். துருவிய தேங்காயை நீர் விட்டு கெட்டியாக அரைத்து மாவில் சேர்த்து, பொடித்த வெல்லத்தையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து, உப்பு, பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்க்கவும். மீண்டும் நன்றாகக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் - எண்ணெய் கலவையை கொஞ்சமாக விட்டு, மாவினை ஊற்றி, மேலே முந்திரி, திராட்சையை தூவி, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவினை கரண்டியால் எடுத்து ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டும் எடுக்கலாம்.

பஞ்சாமிர்தம்
தேவையானவை: வாழைப்பழம் - 10, நாட்டு சர்க்கரை - 100 கிராம், கொட்டை நீக்கிய பேரீச்சை - 50 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், நெய் - 50 கிராம்.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையையும் சிறிய துண்டுகளாக்கவும். இவற்றுடன் உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிடக் கொடுக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு கல்கண்டு சேர்க்கலாம்).
இதில் சத்துக்கள் ஏராளம்!

வாழைத்தண்டு - ஸ்வீட் கார்ன் பொரியல்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு (சோளம் அளவுக்கு நறுக்க வேண்டும்) - ஒரு கப், மோர் - 3 டேபிள்ஸ்பூன், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து அரைவேக்காடாக வேகவிட்டு... சிறிதளவு தண்ணீர், ஸ்வீட் கார்ன் சேர்த்து, வாழைத்தண்டு - ஸ்வீட் கார்ன் இரண்டும் குழைந்துவிடாமல் வேகவைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து இதனுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மொளகூட்டல்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - அரை கப்,  மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, நறுக்கவும். இத னுடன் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். பின்னர், இறக்கி எல்லாவற் றையும் நன்றாக கலந்துவிடவும்.

வாழைப்பழ பச்சடி
தேவையானவை: வில்லைகளாக நறுக்கிய வாழைப்பழம் - ஒரு கப், கறுப்பு திராட்சைப் பழம், சிறிதாக நறுக்கிய தக்காளி, பைனாப்பிள் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் - தலா ஒரு சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையுடன் லெமன் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்ந்து மூழ்கும் வரை நீர் விட்டு மிதமாக பாகு காய்ச்சவும். இதனுடன் நறுக்கிய வாழைப்பழம், முழு திராட்சை,  நறுக்கிய தக்காளி, பைனாப்பிள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி... தேன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 5513494753238642132

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item