பேலன்ஸ் டயட் டிபன் ரெடி!
சென்ற
வாரம் நான்கு நாட்களுக்கான காலை உணவு எப்படி இருந்தது? 'உள்ளம் கேட்குமே
மோர் மோர்!’ என்று துள்ளிக் குதித்திருப்பீர்களே! இதோ இன்னும் மூன்று
நாட்களுக்கான சமையல்

குறிப்புகள். சொல்பவர்: சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. சமைத்து
அசத்தியவர்: சமையல்கலை நிபுணர் பத்மா. இனி உங்கள் காலை குட் மார்னிங்
மட்டுமல்ல, டேஸ்ட்டி மார்னிங்கும்கூட!
ஐந்தாம் நாள் : சாமை அரிசி பொங்கல், மிளகு வடை, சட்னி
சாமை அரிசி பொங்கல்
தேவையானவை: பாசிப்
பருப்பு - 100 கிராம், சாமை அரிசி - 250 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு,
சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.,
வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு மற்றும் அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு
தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்துக்கொள்ளவும். வேகவைத்த
சாதம், பருப்புடன் வறுத்த முந்திரி, பெருங்காயத் தூள் சேர்த்துக்
கலக்கவும்.
மிளகு வடை
தேவையானவை: உளுந்து - 200 கிராம், மிளகு - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தை
2 மணி நேரம் ஊறவைத்துக் களைந்து வடிகட்டி, மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து
கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு மாவை ஒரு வாழை இலையில்
தட்டிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சட்னி: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கடுகு தாளித்து சேர்க்கவும்.
ஆறாம் நாள்: வெஜிடபிள் உப்புமா, கத்திரிக்காய் கொத்சு
வெஜிடபிள் உப்புமா
தேவையானவை: அரிசி
ரவை - 200 கிராம், பொடியாக நறுக்கிய காரட், பீன்ஸ், குடமிளகாய் - தலா ஒரு
கப், பச்சைப் பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய் - 1, மிளகு - 10, உப்பு,
எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: மிளகு,
அரிசியை ரவை பதத்தில் உடைத்துக்கொள்ளவும். இஞ்சி, காரட், பீன்ஸ்,
குடமிளகாய், பட்டாணி எல்லாவற்றையும் சிறிது எண்ணெய்விட்டு
வதக்கிக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் கடுகு, பச்சை மிளகாய்,
உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, ஒரு பங்கு ரவைக்கு நான்கு பங்கு
தண்ணீரைக் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு, வதக்கிவைத்துள்ள காய்கறிகளையும்
சேர்த்து நன்கு வேகவிட்டு தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைத் தூவிக்
கிளறவும். குறைந்த தீயில், மூடிவைத்துக் கிளறிவிட்டால், நன்கு
வெந்துவிடும்.
கத்திரிக்காய் கொத்சு
தேவையானவை:
கத்தரிக்காய் - 2, பெரிய வெங்காயம் - 1, கடலைப் பருப்பு, தனியா - தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் -
சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கத்தரிக்காய்,
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சிறிது எண்ணெயில் கடலைப் பருப்பு, தனியா,
காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடாயில்
எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயத்தை வதக்கி,
புளியைக் கரைத்துவிட்டு, உப்பு, பொடித்தப் பொடி, வெல்லம் சேர்த்துக்
கொதிக்கவைத்து இறக்கவும்.
ஏழாம் நாள்: ஓட்ஸ் தோசை, வேர்க்கடலை சட்னி
ஒட்ஸ் தோசை
தேவையானவை: ஓட்ஸ்
- 100 கிராம், அரிசி மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது
அளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸ்,
அரிசி மாவுடன் உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கி மாவுடன்
சேர்த்து தோசைப் பதத்தில் கரைக்கவும். மிதமானத் தீயில் தோசைக் கல்லைக்
காயவைத்து மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
வேர்க்கடலை சட்னி
தேவையானவை: கடுகு -
ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் -
1, இஞ்சி - சிறு துண்டு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி,
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், புளி, உப்பு இவற்றை மிக்ஸியில் நைசாக
அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்ததைப் போட்டு
கிளறி இறக்கவும். புளிக்குப் பதிலாக, எலுமிச்சைச் சாறும் சேர்க்கலாம்.
Post a Comment