நில்... கவனி... செய்! வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்!
லதா ரகுநாதன் ம த்திய அரசுக்கு வருமான வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க நாம் பல முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். வரிச் சலுகை விஷயத்தில் பல...

மத்திய அரசுக்கு வருமான வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க நாம் பல முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். வரிச் சலுகை விஷயத்தில் பலரும் ஏனோதானோவென ஏதாவது முதலீட்டை மேற்கொள்கிறார்கள். பிற்காலத்தில் அது தவறு என்று தெரியும்போது வருத்தப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க, இப்போது முதலீடு செய்யும் போதே, முதலீடு மற்றும் வட்டி/வருமானம் மீதான வரிச் சலுகை, முதலீட்டு மீதான ரிஸ்க் போன்ற வற்றை கவனித்து முடிவெடுப்பது அவசியம்.
முதலில், வரி விலக்குகளைப் பார்ப்போம். நம் முதலீடுகளுக்கு மட்டுமில்லாமல், நாம் செய்யும் செலவுகளுக்கும் வரிச் சலுகை உண்டு.
1. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் - டேர்ம் பிளான்
டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்பட்சத்தில், அதற்கான பிரீமியத்தை ஒரு செலவாகவே பார்க்க முடியும். பாலிசி முதிர்வில் வருமானம் ஏதும் கிடைக்காது. அதற்காக டேர்ம் பிளான் எடுக்காமல் இருப்பது தவறு. ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல், 10-12 மடங்கு கவரேஜ் தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம்
இரண்டு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை உண்டு. போக்கு வரத்துக் கட்டணம், விடுதி வாடகை, நூலகம், சாப்பாடு போன்ற செலவுகளுக்கு வரிச் சலுகை கிடையாது. அதேபோல், தனியார் டியூஷன் செலவும் ஏற்றுக்கொள்ளப்படாது. பிரிவு 80சி-யின் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் விலக்கு உண்டு.
3. குழந்தைகளின் படிப்புச் செலவு
பிரிவு 10-ன் கீழ் அளிக்கப்படும் வரிச் சலுகை. இந்தச் சலுகையும் படிப்புச் செலவின் அடிப்படை யில்தான். படிப்புக்கு ரூ.100, விடுதிக்கு ரூ.300 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ஒன்றுக்கு விலக்கு அளிக்கப்படும். அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படும்.
4. கல்விக் கடன் வட்டி
மேற்படிப்புக்காக வாங்கப்படும் கடனில் திரும்பக் கட்டப்படும் வட்டித் தொகைக்கு, பிரிவு 80இ-யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். இதில் அதிகபட்சத் தொகை இல்லை. வட்டியாகக் கட்டும் முழுத் தொகைக்கும் விலக்குண்டு. கடனைக் கட்ட ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை இந்தச் சலுகை உண்டு.
5. மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்
இதில் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தப்படும் பிரீமியத் தொகைக்குப் பிரிவு 80டி-யின் கீழ் வரிச் சலுகை உண்டு. 60 வயதுக்குள் இருப்பவர் என்றால் ஓராண்டுக்குக் கட்டும் பிரீமியத்துக்கு ரூ.25,000, 60 வயதுக்கு மேல் எனில் ரூ.30,000-க்கு வரிச் சலுகை பெறலாம். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குக் கட்டும் பிரீமியத் தொகைக்கும் சேர்த்து மகன் வரிச் சலுகை பெறமுடியும்.
6. சொத்துப் பதிவுக் கட்டணம்
வீடு வாங்கும்போது செலுத்தும் முத்திரைத் தாள் கட்டணம், பத்திரப் பதிவு செலவுகளும் எந்த வருடம் வீடு வாங்கப்படுகிறதோ, அந்த வருடத்தில் பிரிவு 80சி-யின்படி ரூ.1.5 லட்சம் வரை விலக்கு உண்டு.
7. வீட்டுக் கடன் வட்டி
வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருக்கும் பட்சத்தில் திரும்பக் கட்டும் வட்டிக்கு பிரிவு 24(பி)-யின் கீழ் நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரையில் வரி விலக்கு உண்டு. வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அதை வருமானமாகக் காட்ட வேண்டும். இதற்குமுன் இப்படி வாடகைக்கு விடப்பட்டிருக்கும் நிலையில், வட்டிக்கு வரம்பு இல்லாமல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. நடப்பு 2017-18-ம் நிதியாண்டு முதல், வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரைதான் வரிச் சலுகை என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
8. பிரிவு 80இஇ
முதன்முறையாக வீடு வாங்குபவர்கள், வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டியில் கூடுதலாக 24(பி) பிரிவு தவிர, ரூ.50,000 விலக்குப் பெறலாம்.
9. நன்கொடை
சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுத்திருந்தால் (பிரிவு 80ஜி) வரிச் சலுகை உண்டு. அதிகபட்சமாக ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10% வரை இப்படி நன்கொடை தந்து வரிச் சலுகை பெறலாம். நன்கொடையின் தன்மையைப் பொறுத்து, வரிச் சலுகையின் சதவிகிதம் இருக்கும்.
இதுவரையில் செலவுகள் பற்றிப் பார்த்தோம். இனி வருமான வரிச் சலுகைக்காகச் செய்யும் முதலீடுகள் பற்றிப் பார்ப்போம். வரிச் சலுகைக்காக முதலீடு செய்யும்போது, முதலீடு மற்றும் வருமானத்துக்கு வரி, முதலீட்டு மீதான பாதுகாப்பு போன்றவற்றை மனதில்கொள்ளவும்.
1. பிராவிடெண்ட் ஃபண்ட்
சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடெண்ட் ஃபண்டுக்கு (பி.எஃப்) வரிச் சலுகை உண்டு. இதில் நிறுவனம், பணியாளர் கணக்கில் செலுத்தும் பங்குக்குப் பணியாளருக்கு வரிச் சலுகை கிடையாது. இந்த பிஎஃப் தொகை, அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% அல்லது ரூ,1,800 ஆக இருக்கும். இந்தத் தொகைக்குப் பிரிவு 80சி-யின் கீழ், அதிகபட்சம் ரூ1.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. பாதுகாப்பான திட்டம் இது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு இதில் கடன் வாங்க முடியும். முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடத்துக்குள், கணக்கை முடித்தால் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். வேலை மாறும்போது கணக்கை மாற்றுவதில் முன்பிருந்த சிரமம் இப்போதில்லை. காரணம், ஒவ்வொரு பணியாளருக்கும் பிரத்யேக எண் தரப்பட்டிருப்பதாகும். இதற்கான வட்டி விகிதம் இப்போது 8.65%.
2. பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட்
பாதுகாப்பான திட்டம் இது. ஆனால், நினைத்தபோது பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 15 வருடம் லாக் இன் உண்டு. ஏழாவது வருடத்தில் 50% இருப்புத் தொகை கடனாக எடுக்கமுடியும். முதலீடு மற்றும் வட்டிக்கு வரி இல்லை. தற்போது 7.9% வட்டி வழங்கப்படுகிறது.
3. சுகன்யா சம்ருதி
பெண் குழந்தைகளின் கல்யாணம் அல்லது மேற்படிப்புக்கு உதவும் மாதாந்திர டெபாசிட் திட்டம் இது. பெண் குழந்தைகளின் வயது 10-க்குள் இருக்க வேண்டும். பாதுகாப்பான திட்டமாகும். டெபாசிட் அதிகபட்சம் 14 வருடங்கள் செய்ய வேண்டும். 21 வருடங்களில் டெபாசிட் முடிவடையும். பெண் குழந்தைக்கு 18 வயது அடையும்போது, 50% கையிருப்புத் தொகையை எடுக்க முடியும். ஆனால், பப்ளிக் பிராவிடெண்ட் திட்டம் போல், இதில் கடன் வாங்க முடியாது. வட்டி தற்போது 8.4%. முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது.
4. நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் (NSC)
இதுவும் ஒரு பாதுகாப்பான திட்டம்தான்.ஐந்து வருடங்கள் லக் இன் பீரியட். பத்திரத்தின் மீது கடன் வாங்க முடியும். வட்டி 7.9%. வட்டிக்கு வரி உண்டு. இதில் வருடாவருடம் வரும் வட்டி, அதிலேயே மறுமுதலீடு செய்யப்படுவதால், அந்த வட்டித் தொகைக்குப் பிரிவு 80சி-யின் கீழ் விலக்குப் பெறலாம்.
5. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்
இதுவும் ஒரு பாதுகாப்பான திட்டமே. தற்போது 8.4% வட்டி வழங்கப்படுகிறது. ஐந்து வருட லாக் இன் பீரியட் கொண்டது. மற்ற டெபாசிட்களைவிட வட்டி சற்றே அதிகம். ஆனால், வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு கிடையாது. இந்தத் திட்டத்தில் சேர 60 வயது முடித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முடிந்தபின் எப்போது வேண்டு மானாலும் டெபாசிட்டை எடுக்கலாம். ஆனால், அந்தத் தொகை வரிக்கு உட்படுத்தப்படும். மேலும், அபராதமும் இருக்கிறது.
6. ஐந்தாண்டு வங்கி எஃப்.டி
எல்லா வங்கிகளிலும் வரிச் சேமிப்பு டெபாசிட் திட்டம் இருக்கிறது. ஐந்து வருட லாக் இன் கொண்டது. இந்தப் பத்திரத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்க முடியாது. மேலும், முன்கூட்டியே முடிக்கவும் முடியாது. முதலீட்டில் ரிஸ்க் கிடையாது. ஆண்டுக்கு 7.25 - 7.5% வட்டி கிடைக்கும். வட்டி வருமானத்துக்கு வரி உண்டு.
7. மியூச்சுவல் ஃபண்டுகளின் பென்ஷன் திட்டங்கள்
குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பென்ஷன் திட்டங்களை நடத்திவருகின்றன. இது அதிக பாதுகாப்பான முதலீடு எனச் சொல்ல முடியாது. ஐந்து வருட லாக் இன் பீரியட் உண்டு. 10 முதல் 12% வரை லாபம் எதிர்பார்க்கலாம். ஆனால், இந்தத் திட்டங்களின் முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், மூலதனம் மீதான பாதுகாப்பு கொஞ்சம் கேள்விக்குறியே. இந்தத் திட்டத்திலிருந்து வரும் லாபம் மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, ஃபண்டின் தன்மைக்கேற்ப (ஈக்விட்டி, டெப்ட் ஃபண்ட்) வரி விதிக்கப்படும்.
8. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள்
இதுவும் மேலே சொல்லப்பட்டவை போல்தான். இதற்கு அசல் மற்றும் வருமானத்துக்கு வரிச் சலுகை உண்டு. வருமானம் பெரிதாக இருக்காது.
9. இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் (ELSS)
பங்குச் சந்தையுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள இது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆகும். அதிக ரிஸ்க், அதிக லாபம் என்பதாக இருக்கிறது. மூன்று வருட லாக் இன் பீரியட் உண்டு. முதலீட்டின் லாபத்துக்கு வரி இல்லை. மேலே கூறப்பட்ட முதலீடுகள் அனைத்துக்கும் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்தான் வரிச் சலுகை பெற முடியும்.
யாருக்கு எந்த முதலீடு?
இனி, யாருக்கு எந்த முதலீடு பொருத்தமானதாக இருக்கும் என்று பார்ப்போம்.
25 முதல் 40 வயதுள்ளவர்கள்
இவர்கள் நடுத்தர வர்க்கம். மாதச் சம்பளம் சுமார் ரூ.50,000. (ஆண்டு வருமானம் ரூ.6,00,000) இரண்டு குழந்தைகள் என்கிற கணக்கில் மாதச் செலவு ரூ.20,000 என்று வைத்துக்கொண்டால், மாதச் சேமிப்பு ரூ.30,000. இவர்களின் கட்டாயச் செலவு என்கிற வகையில் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் மற்றும் பிஎஃப் தொகை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைத்துவிடும்.
வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதில் திரும்பிச் செலுத்தும் அசலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை போய்விடும். இவையெல்லாம் ரூ.1 லட்சம் என்று எடுத்துக்கொள்வோம். பிரிவு 80சி-யின் கீழ் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் ரூ.25,000 மற்றும் இஎல்எஸ்எஸ்-ல் ரூ.25,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொண்டு, இவரின் வருமான வரியைக் கணக்கிடுவோம்.
பிரிவு 80சி விலக்கு = ரூ.1,50,000
பிரிவு 80டி விலக்கு = ரூ. 25,000
பிரிவு 80சிசிடி விலக்கு = ரூ.50,000
அடிப்படை வரி விலக்கு = ரூ.2,50,000
வரி செலுத்தும் நிகர வருமானம் = ரூ.1,25,000
வரியாகச் செலுத்த வேண்டிய தொகை = ரூ.7,725
ஏழு வருடங்கள் கழித்து பிபிஎஃப்-ல் இருக்கும் வைப்புத் தொகையில் 50% வரையில் எடுத்து அந்த வருடத்துக்கான வரிச் சேமிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவிர, மற்ற சேமிப்புகளைவிட அதிக வட்டி கிடைப்பதோடு, அந்த வட்டி வருமானத்துக்கு வரியும் கிடையாது என்பதால், இவர் இழப்பது பணவீக்கத்தால் அடையும் நஷ்டமே. இதைச் சரிசெய்வதற்கு இஎல்எஸ்எஸ் முதலீடு கைகொடுக்கும்.
41 முதல் 60 வயதுள்ளவர்கள்
இவர்களுக்கு 50% பாதுகாப்பு, 25% வட்டி வருமானம், 25% லிக்விட்டி தேவை. இந்த வகையில் 25% பிபிஎஃப், 25% என்எஸ்சி, 25% இஎல்எஸ்எஸ், மீதி 25% லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்துக்கு வைத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் சொன்னது போல், நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதில் செலுத்தும் அக்கறையை முதலீட்டைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தாமல் இருக்கிறோம். இனி அப்படி நடக்காது என நம்புவோம்.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்)
அரசு உத்தியோகத்தில் 2004-க்குப்பின் சேர்ந்தவர்களின் சம்பளத்தில் இந்தப் பிடிப்பு கட்டாயம் செய்யப்படும். இதிலும் பணியாளர் செலுத்தும் தொகை மட்டும்தான் வரி விலக்குக்கு எடுத்துக்கொள்ளப்படும். அரசு செலுத்தும் தொகைக்குப் பணியாளர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. என்பிஎஸ்-ல் செய்யப்படும் முதலீட்டுக்கு பிரிவு 80சிசிடி-யின் கீழ் கூடுதலாக ரூ.50,000 வரை வரி விலக்கு இருக்கிறது. 60 வயது முடிந்த பின்னும் இந்தப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாது. 40% வரை ஆனுயுட்டி அல்லது பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஆனுயுட்டி திட்டம் என்றால், அது வருமானமாகக் கருதப்பட்டு வட்டி விதிக்கப்படும். இந்தத் திட்டத்தில் நிதி ஆண்டுக்கு ரூ.6,000 குறைந்தபட்சம் முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற வரம்பு ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment