இந்தியாவுக்கு மதம் இல்லை! பெட்டகம் சிந்தனை,
இந்தியாவுக்கு மதம் இல்லை! By பழ. கருப்பையா First Published : 25 November 2015 01:39 AM IST சென்ற மாதக் கடைசியில் ஒரு நாள் உ...
அரசியல் நிருணயச் சட்ட உருவாக்கக் காலத்திலேயே இந்தச் சிக்கல் எழுந்தது. மதத்தின் பெயரால் ரத்தக் களறி ஏற்பட்டு, ரணகளப்பட்டு உடைந்து போயிருந்த இந்தியா, மீண்டும் ஒருமுறை இந்த "ஒரே உரிமையியல் சட்ட' விவகாரம் காரணமாக நாற்றமெடுக்க வேண்டாம் என்று கருதி நம்முடைய அறிவார்ந்த தலைவர்கள், அந்த விவகாரத்தைக் கிடப்பிலே போட்டார்கள். "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை' என்பதுபோல, புதைந்துபோன விவகாரத்தைத் தோண்டி எடுத்து, உவகையோடு அதை வழக்காக்கிக் கொண்டிருப்பது இப்போது நாடிருக்கும் நிலையில் உகந்த செயல்தானா என்னும் கவலை எல்லோரையும் ஆட்கொள்கிறது.
நாடு முழுவதற்கும் ஒரே குற்றவியல் சட்டம்தான் நடைமுறையிலிருக்கிறது; அப்படித்தான் இருக்க முடியும். அப்துல்லா கொலை செய்தாலும் தூக்குதான்; அண்ணாமலை கொலை செய்தாலும் தூக்குதான். மைக்கேல் திருடினாலும் சிறைவாசம்தான்; மயில்சாமி திருடினாலும் சிறைவாசம்தான். ஆனால், அண்ணாமலைக்கும் அப்துல்லாவுக்கும் மண வாழ்க்கை முறைகள், முறித்துக் கொள்ளும் நிலைகள் ஆகியன வேறு வேறானவை.
ஆனால், இந்த வழக்கைத் தானாகவே வலியப் பதிவு செய்து கொண்டிருக்கிற உச்சநீதிமன்றம், ஓரு முகம்மதியன் ஒரு மனைவி இருக்கின்றபோது இன்னொரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்வது, முதல் மனைவியின் கௌரவத்திற்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது என்று கூறி வலியப் போய் நியாயம் வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
அரபுச் சமூகம் போர்ச் சமூகம்; நபிகளின் காலத்தில் இனக் குழுக்களின் சண்டையால் சின்னாபின்னப்பட்டிருந்தது. ஏராளமான இளைஞர்கள் நாள்தோறும் போரில் செத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் எண்ணற்ற இளம்பெண்கள் விதவைகளாகி விட்டார்கள்.
போர் காரணமாக ஆண்கள் ஒரு பங்காகவும் பெண்கள் மூன்று பங்காகவும் இருந்த அந்தச் சமூகத்தில், "ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் நியாயவாத அடிப்படையிலான சட்டத்தை நபிகள் புகுத்தியிருந்தால், நான்கில் மூன்று பெண்கள் ஆண் வாடையே இல்லாமல் செத்திருக்க வேண்டியதுதான். ஆகவே, அன்றைய விகிதாசாரப்படி நபிகள் ஏற்படுத்திய திருமண முறை அது.
நபிகள் மணந்து கொண்ட பெண்கள் அனைவரும் விதவைகளே, ஆயிசாவைத் தவிர! "அது சரி; "இன்றைய நிலை என்ன' என்பது கேள்வியானால், "சரியத்' சட்டம் அவ்வாறு அனுமதித்திருந்தாலும், பெரும்பான்மையான முகமதியர்கள் ஒரு மனைவியுடனேயே வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் நான்கு பேரை மணப்பதற்குப் பெண்ணுக்கு எங்கே போவது?
பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒரு மனைவியுடன்தான் வாழ்கிறார்கள் என்றால், பொதுவான உரிமையியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம் என்பது அவர்களின் அடுத்த வாதமாக இருக்கும்.
இந்தியச் சமயங்கள் நெகிழ்ச்சிப் போக்குடையவை. முகம்மதிய சமயம் இறுக்கமான போக்குடையது; ஒருவிதத்தில் இராணுவத் தன்மையுடையது.
நபிகள் நாயகம் ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொழுகையின்போது எப்படிக் குனிந்தாரோ, எப்படி நிமிர்ந்தாரோ, எப்படிப் பக்கவாட்டில் திரும்பினாரோ, அப்போது எப்படிக் காது மடல்களைத் தொட்டாரோ, எப்படிக் கைகளை விரித்து விண்ணை நோக்கினாரோ, அப்படியே அந்த வரிசை மாறாமல் இவ்வளவு நூற்றாண்டுகள் கழித்துத் தென் தமிழ்நாட்டு இளையான்குடியில் நம்முடைய அப்துல்லாவும் தொழுகிறார் என்னும்போது, நபிகள் நாயகத்தின் செல்வாக்கு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
ஒரு நிறுவனத்தைக் கட்டி அமைத்த நிறுவனர்கள் பலரினும், ஒரு செங்கல்லைக் கூட உருவ முடியாமல், எதையும் மாற்றி அமைக்க முடியாமல், மிகவும் திட்ப நுட்பமாக ஓர் அமைப்பினை உருவாக்கிய உலகின் தலையாய நிறுவனக் கட்டமைப்பாளர் (greatest organiser) நபிகள் நாயகமே! எந்த ஒன்றையும் நோக்குவதில் ஒவ்வொருவர் கோணமும் வேறுபடும்.
பெண்ணின் முகம் மலர் போல் அழகியது என்கிறான் பாரதி. அது உண்மைதான் என்று இசுலாமும் உடன்படுகிறது.
அழகிய மலரனைய முகத்தை மூடலாமா என்கிறான் பாரதி. அது அழகியது; மலரனையது என்பதால்தான் அதை மூடி வைப்பது பெண்ணுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பு என்கின்றது இசுலாம்.
"தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி; பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல்' என்னும் பாரதியின் பார்வை இசுலாமியன் அல்லாதவன் ஒருவனின் பார்வை. தன் போக்கில் எல்லாவற்றையும் அளந்து பார்ப்பது என்பது எல்லாரிடமும் உள்ள இயல்புதான். எனினும், அவை கருத்துக்களாக இருக்கின்றவரை யாரும் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை! ஆனால், நீதிமன்றத்தின் அணுகல் அத்தகையது அல்லவே!
ஏற்கெனவே, சா பானு என்னும் பெண்ணின் மணமுறிவு வழக்கில் இசுலாமியப் பெண்களுக்கான சீவனாம்சம் வலியுறுத்தப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சா பானு என்னும் பெண்ணை அவருடைய கணவர் "தலாக்' சொல்லி மணமுறிவு செய்துவிட்டார். சா பானுவுக்கு அப்போது வயது 62; ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் மணமுறிவு செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் சீவனாம்சம் கோரினார்.
இசுலாமிய சட்டப்படி அந்தப் பெண்ணுக்குச் சேர வேண்டிய ரூ.5,400-ஐ மொத்தமாகக் கொடுத்துவிட்டபடியால், தான் மாதா மாதம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று வாதிட்டார் கணவர் முகமது அகமது கான்.
ஒரு இசுலாமியப் பெண்ணை மணமுறிவு செய்யும் இசுலாமியக் கணவன், அவளை "இத்தாத் காலம்' என்று இசுலாமியச் சட்டம் குறிப்பிடும் மூன்று மாதத்திற்கு மட்டுமே பராமரிக்கக் கடமைப்பட்டவன் என்றும், அந்தத் தொகை கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனால் தனக்கு வேறெந்தப் பொறுப்பும் இல்லை என்றும் உறுதிபட நின்றார் அகமதுகான்.
இந்தியச் சமயங்கள் திருமண உறவைப் புனிதப்படுத்துவதுடன், முடிந்த அளவு முறிவுக்கு அப்பாற்பட்டே அந்த உறவை வைத்துக் கொள்ள முயல்கின்றன. ஆனால், இசுலாமிய சமயத்தில் திருமண உறவு என்பது ஒப்பந்தம் என்னும் அளவினதே!
திருமண நாளிலேயே முறிவு குறித்தும் சிந்திக்கப்பட்டு, அது மிகவும் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுவதுடன், அப்போது பெண்ணுக்கு அளிக்க வேண்டிய "மகர்' தொகையும் முடிவு செய்யப்பட்டு விடுகிறது. முறித்துக் கொள்ளும் உரிமை ஆணைப் போல், பெண்ணுக்கும் உண்டு.
"மகர்', "இத்தாத் காலம்' போன்ற இசுலாமிய மரபு வாதங்கள் எதுவுமே எடுபடவில்லை நீதிமன்றத்தில்! மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் 1979-இல் சா பானுவுக்கு சீவனாம்சமாக ரூ.179.20-ஐ ஒவ்வோர் மாதமும் அளிக்கும்படி தீர்ப்பளித்தது.
அதை மறுத்து, அகமது கான் மேல்முறையீடு செய்தார். ஐந்து நீதிபதிகளின் இருக்கை அதை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதுவும் சீவனாம்சத்தை உறுதி செய்தது.
இசுலாமியச் சட்டம் ஒன்றாக இருந்து குற்றவியல் சட்டம் வேறொன்றாக இருந்தால், குற்றவியல் சட்டமே மேலோங்கி நிற்கும் என்று சொல்லிக் குற்றவியல் சட்டப்பிரிவு 125-ஐ எழுப்பி, சா பானுவுக்கு இசைவாகத் தீர்ப்பளித்தது. சீவனாம்சம் உறுதிப்படுத்தப்பட்டது. ஐந்து இசுலாமியர் அல்லாத நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு இசுலாமியர்களிடையே எதிர் உணர்வுகளைத் தோற்றுவித்தது.
எல்லாருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் என்பது, எட்டுப் பேருக்கு எது சட்டமோ அதுதான் மீதி இரண்டு பேருக்கும் சட்டமாக இருக்க வேண்டும் என்னும் கருத்து அடிப்படையிலானது. அது majoritarian code of rules! நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவின் பன்முகத் தன்மையைக் குலைக்கும் போக்கு அது.
சா பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் முசுலீம்களிடையே அது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்புத் தீர்ப்புத்தான் என்று இந்திய அரசு அமைதியாக இருக்க முடிந்ததா? உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இராசீவ் காந்தி அரசு இசுலாமிய வழமைப்படி "மகர் மற்றும் இத்தாத் காலவரையறையை' ஏற்றுச் சட்டம் செய்தது.
குற்றவியல் சட்டம் 125-ஆவது பிரிவை எழுப்பி, இசுலாமியப் பெண்ணுக்குச் சீவனாம்சம் அளிக்கும் உச்சநீதிமன்றப் போக்கு, இராசீவ் காந்தி அரசு உண்டாக்கிய சட்டத்தால் நீர்த்துப் போகும்படி செய்யப்பட்டது.
"இசுலாமியர்களைத் தடவிக் கொடுக்கும் செயல் இது' என்று பாரதிய ஜனதா கட்சி இராசீவ் காந்தியைக் கடுமையாகச் சாடியது. "இது இந்துக்களின் நாடு' என்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை.
மாற்றம் என்பதை எந்த வகையிலும் அனுமதிக்காத சமூகம் இசுலாமிய சமூகம். குரான் என்பது அல்லாவின் சொல்; அதற்கு மாற்றம் என்பதும் திருத்தம் என்பதும் கிடையவே கிடையாது. இறைவன் பிழையாகச் சொன்னான்; நக்கீரன் திருத்தினான்; இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை எரித்தான்; அப்போதும் நக்கீரன் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்னும் நம்முடைய கோணத்திலிருந்து இசுலாத்தைப் பார்க்கக் கூடாது.
மாற்றான் கிடக்கட்டும்; இசுலாமியன் ஒருவனேகூட குரானில் கை வைக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அந்த மாபெரும் கட்டுமானத்தையே குலைத்து விடுவார்கள் என்னும் அவர்களின் அச்சம் நியாயமே!
மீண்டும் மணம் செய்து கொள்ள முடியாத வயதில் மணமுறிவு செய்யப்படுகின்ற சா பானுக்களுக்குக் குறைவான மகர் போதுமானதுதானா இல்லையா என்பதை இசுலாமியர்களே முடிவு செய்யட்டும். மகர் என்பதும் இத்தாத் காலவரையறை என்பதும் இசுலாமிய வழமை!
இசுலாமியச் சிறு வயதுப் பெண் மறுமண வாழ்வுரிமையைப் பெற்றிருக்கிறார். முது வயதுப் பெண் சா பானுவுக்கு எஞ்சிய காலத்திற்கு வாழ்வதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட மகர் தொகை போதுமானதில்லை என்பது நீதிமன்றத்தின் பார்வை! அதனால் சீவனாம்சம் என்கிறது நீதிமன்றம்! "மகர்' தொகை ஒரு சடங்குபோல் இல்லாமல் வேண்டிய அளவு கூட்டி முடிவு செய்வது இசுலாமியர்களின் கையில்தான் இருக்கிறது.
"மகர்' என்பதே நபிகள் பெண்களின் மீது கொண்ட பெரும் பரிவின் காரணமாக எடுத்த முடிவுதான்! அது வெறும் சடங்காகி விடுவதை அவர் ஏற்பவர் அல்லர்!
எதுவாயினும், இசுலாமியர்களே அதை முடிவு செய்ய உரிமைப்பட்டவர்கள்! அது நம்முடைய வேலை இல்லை!
பெரும்பான்மையோருக்கு எது சட்டமோ, அதுவே சிறுபான்மையோருக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற நாடு நாகரிகமுடையதாக இருக்க முடியாது!
இந்தியர்களுக்கு மதங்கள் உண்டு;
இந்தியாவுக்கு மதம் இல்லை!
பெண்ணின் முகம் மலர் போல் அழகியது என்கிறான் பாரதி. அது உண்மைதான் என்று இசுலாமும் உடன்படுகிறது.
அழகிய மலரனைய முகத்தை மூடலாமா என்கிறான் பாரதி. அது அழகியது; மலரனையது என்பதால்தான் அதை மூடி வைப்பது பெண்ணுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பு என்கின்றது இசுலாம்.
Post a Comment