முதலுதவி யாருக்கு? எப்போது? எப்படி?
ஃபர்ஸ்ட் எய்டு கைடு
‘மழை, கைமாறு
கருதிப் பொழிவது இல்லை. அந்த மழையைப்போல எதிர்பார்ப்பின்றி உதவ வேண்டும்’
என்கிறது வள்ளுவம். உதவிகளில் தலையாயது முதலுதவி. ஆபத்தில் இருக்கும் ஓர்
உயிரைக் காப்பற்றுவது என்பது நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஒரு
வாய்ப்பு. அது நம் சமூகக் கடமைகளில் முக்கியமானது. ‘இந்தியாவில், ஒரு
வருடத்துக்கு ஒரு லட்சம் பேரில் 4,000-க்கும் அதிகமானோர் போதிய முதலுதவி
கிடைக்காமல் இறந்துபோகிறார்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். முதலுதவி
செய்ய ஆர்வம் இருந்தாலும், யாருக்கு, எந்த முதலுதவியை, எப்படிச் செய்ய
வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலுதவி குறித்த
விளக்கமான இந்தக் கையேடு, நமக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
முதலுதவிப் பெட்டி
வீடு, வாகனங்கள், பணியிடம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும்
முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். சில நூறு ரூபாய் மட்டுமே
செலவாகும் முதலுதவிப் பெட்டி கைவசம் இருப்பது, விலை மதிப்பற்ற நமது
உயிருக்குப் பாதுகாப்பு.
வீட்டில் இருக்கவேண்டிய முதலுதவிப் பொருட்கள்
1. ஆஸ்பிரின் 75 மி.கி
மாரடைப்பின்போது ரத்தம் வேகமாக உறையும். இதனால், இதயத்துக்கு ரத்தம்
செல்வதில் தடை ஏற்படும். ஆஸ்பிரின், ரத்தம் உறைவதைத் தடுக்கும். எனவே,
மாரடைப்பு ஏற்படும் சமயங்களில், இது உதவும். வீட்டில் நான்கு மாத்திரைகள்
எப்போதும் இருப்பது நல்லது.
2. குளோப்பிடோகிரெல் 75 மி.கி
இதுவும் மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் ரத்த உறைதல் ஏற்படுவதைத் தடுக்க உதவும் உயிர் காக்கும் மாத்திரையே.
3. சில்வர் சல்ஃபாடயாஸைன் களிம்பு
சிறிய தீப்புண்கள் ஏற்பட்டால், இந்த களிம்பை புண்கள் மேல் தடவலாம்.
4. மர ஸ்கேல்
கை முறிவு ஏற்பட்டால், முதலுதவி செய்யும்போது கட்டுப்போட இது உதவும்.
5. கைக்குட்டை
கட்டுப்போட உதவுவதில் கைக்குட்டைக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே,
சற்று பெரிதான இரண்டு மூன்று கைக்குட்டைகள் எப்போதும் முதலுதவிப்
பெட்டியில் இருக்கட்டும்.
6. காட்டன் பேட் (Guaze pod)
ரத்தம் வரும்போது கட்டுப்போட, காட்டன் பேட் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க முடியும்.
7. ஐஸ் பேக் (Ice bag)
ஒத்தடம் கொடுக்கவும், சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் ரத்தம்
பாய்வதைக் கட்டுப்படுத்தவும், வீக்கம், வலி குறைப்பதற்கும் ஐஸ் பேக்கைப்
பயன்படுத்தலாம்.
8. குளுக்ககான் ஊசி
சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீடுகளில் அவசியம் இந்த ஊசியை வைத்துக்கொள்வது நல்லது. முதலுதவி செய்யும்போது, இந்த ஊசி உதவும்.
9. பாரசிட்டமால் மாத்திரை
காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இரு
நாட்கள் ஆகியும் காய்ச்சல் கட்டுப்படவில்லை எனில், மருத்துவரை அணுகுவது
அவசியம்.
ஆசனவாய் பாரசிட்டமால் (Paracetamol suppository)
காய்ச்சலின்போது சில குழந்தைகளுக்கு உடலின் வெப்பநிலை மேலும்
அதிகரித்து, வலிப்பு ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்கவும், வலிப்பு
ஏற்பட்டால் உடல் வெப்ப நிலையைச் சட்டென குறைக்கவும், இந்த மாத்திரையை
ஆசனவாயில் வைக்கலாம்.
10. கிருமி நாசினி
காயம்பட்ட இடத்தில் மருந்திடுவதற்கு முன், கிருமிகளை அழித்து, சுத்தம்
செய்ய கிருமி நாசினி அவசியம். இது காயங்களில் ஏற்படும் தொற்றுக்களைத்
தடுக்கும்.
11.தெர்மா மீட்டர்
சராசரி உடல் வெப்பநிலைக்கு மேல் ஒரு டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல்
இருந்தால், அதைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல உதவும்.
12. பருத்திப் பஞ்சு
புண்கள், காயங்களில் கட்டுப்போடுவதற்கும், வெட்டுக்காயங்களின் போது
ஏற்படும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும் பருத்திப் பஞ்சு உதவும்.
13. கத்தரிக்கோல்
பிரத்யேகக் கத்தரிக்கோல் மூலமாகத்தான் முதலுதவிப் பொருட்களைக் கத்தரிக்க
வேண்டும். தேவைக்கு ஏற்ப வெவ்வேறு சைஸ்களில் வாங்கிவைத்துக்கொள்ளலாம்.
முதலுதவிகள்
திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest)

மாரடைப்புக்கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இதயத்துடிப்பு
திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா
உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு.

மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும்.

மாரடைப்பு
வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான்
இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள்
கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்.

திடீர்
இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது,
ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில்,
உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க
வேண்டும்.

எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.

அவரது
கையில் நாடி பார்ப்பதோ, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம்
கேட்கிறதா எனச் சோதனை செய்வதோ வேண்டாம். அவை எல்லாம் நேரத்தை வீணாக்கும்
செயல்கள்.

ஒருவருக்குத்
திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிர் பிழைக்கும்
வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் குறைகிறது. அதாவது, 10-வது
நிமிடம் அவர் நிரந்தரமாக உயிர் இழக்கக்கூடும்.

எனவே, உணர்ச்சியே இல்லை எனில், தாமதிக்காமல் உடனடியாக சி.பி.ஆர் எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.
சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation)

சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.

அவரைச் சுற்றிக் கூட்டம்போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களை அவிழ்க்கவும்.

நெஞ்சின்
மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை
வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, இருகை
விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து, எடுக்க வேண்டும்.

ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு
மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும்
மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும்
வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கான சி.பி.ஆர்

குழந்தைகளுக்கு, நெஞ்சுப்பகுதியில் கையின் அடிப்பகுதியை வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது.

குழந்தை
பேச்சுமூச்சின்றி உணர்வில்லாமல் இருந்தால், குழந்தையின் நெஞ்சுப்பகுதியின்
இரண்டு புறமும் கைவைத்துத் தூக்கி, நெஞ்சின் மையப்பகுதியில் இரண்டு கட்டை
விரல்களாலும், 2-3 செ.மீ ஆழத்துக்கு மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஒரு
நிமிடத்துக்கு 30 தடவை அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும். 30 முறை
நெஞ்சுப்பகுதியில் அழுத்தம் தந்தபின், இரண்டு முறை வாய் மற்றும் மூக்கின்
மேல் உங்கள் வாய்வைத்து ஊதி, செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
மாரடைப்பும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மாத்திரை நான்கைக் கொடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

மாரடைப்புக்காரர்கள்
நெஞ்சு வலிக்கிறது எனக் கூறியபடியே பேச்சு மூச்சற்று சரிந்தால், அது
திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக மாறி இருக்கக்கூடும். எனவே, அவர்களுக்கு
சி.பி.ஆர் முதலுதவியைத் தாமதம் இன்றிச் செய்ய வேண்டும்.

தூக்குப்போட்டுக்கொண்டு
தற்கொலைக்கு முயன்றவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், நீரில் மூழ்கியவர்கள்,
விபத்தில் மோசமாகக் காயம்பட்டவர்கள் என அனைவருக்குமே உயிர் பிரிவதின் கடைசி
நிலை திடீர் இதயத்துடிப்பு முடக்கம்தான். எனவே, இந்த முதலுதவியைத் தேவையான
சமயங்களில், சமயோஜிதமாக உணர்ந்து செய்ய வேண்டும்.

பெரியவர்களுக்கு வாய் வழியே சுவாசம் தர வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஆர் மட்டுமே போதுமானது.
மாரடைப்பு
மாரடைப்பு என்பது இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுதான்.

மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான பாரம் இருக்கும்.

கழுத்து,
இடது கைப்பகுதிகளில் வலி ஏற்படும். வியர்த்துக்கொட்டும், வேகமாக
மூச்சுவாங்கும். (சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள்
தெரியாமல் போகலாம்.)

மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின் 75 மி.கி அளவு கொண்ட மாத்திரைகள் நான்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆஸ்பிரினில் கடித்துச் சாப்பிடும் வகையாக, டிஸ்பிரின் என்ற மாத்திரையும் இருக்கிறது.

மாரடைப்புக்கான
அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின்/டிஸ்பிரின், குளோப்பிடோகிரெல் ஆகிய
இரண்டும் தலா 300 மி.கி அளவுக்கு சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கு
உடனடியாகச் செல்ல வேண்டும்.

ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் அடைப்பு மேலும் அதிகரிப்பதை மட்டுமே தடுக்கும்.

அடைப்பை சரிசெய்ய மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாரடைப்பு
ஏற்படுவதன் அறிகுறிகள் தெரிந்தால், வேகமாக நடக்கவோ, படிகளில் ஏறவோ கூடாது.
சோடா குடிப்பதும் தவறு. இவற்றால் வலி கூடுமே தவிர, குறையாது.

மாரடைப்பு ஏற்பட்டால், யாரிடமாவது கன்சல்ட் செய்துவிட்டு பிறகு மருத்துவமனைக்குச் செல்லலாம் என நினைத்து, தாமதப்படுத்துவது தவறு.

இதயத்துக்கான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு உடனடியாகக் சென்றால் மட்டுமே எளிதில் பிழைக்க முடியும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு
குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக்கொள்ளும் பிரச்னை அதிக
அளவில் இருக்கும். ஏனெனில், குழந்தைகள் நாணயங்கள், பட்டாணி, வாழைப்பழம்
போன்றவற்றை விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, சிலர் தலைகீழாகக்
குழந்தைகளைப் பிடித்துத் தட்டுவார்கள். இது தவறு. இப்படிச் செய்யக் கூடாது.

ஒரு
கையில் குழந்தையைச் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, இரண்டு விரல்களை வைத்து
அதன் நெஞ்சுக்குழியில் ஐந்து முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர்,
குழந்தையைத் திருப்பி வைத்து, உள்ளங்கையால் சில முறை முதுகில் தட்ட
வேண்டும்.

மூச்சுத்திணறல் ஏற்படும்போது தலையில் தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

சிலர்
குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு உணவுப்பொருளை வெளியே எடுக்க
முயலுவார்கள். இதனால், அந்தப் பொருள் மூச்சுக் குழாயின் உட்புறம்
தள்ளிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.
திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு
புட்டு, அசைவ உணவுகள் போன்ற சில உணவுகளைச் சாப்பிடும்போது, சிலருக்குத்
திடீரென மூச்சுக்குழாய் அடைத்துக்கொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய்
அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப்பகுதிக்குக் கை
போகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சோக்கிங் ஸைன்’ என்பார்கள்.
யாராவது, தன் கழுத்தைப் பிடித்தபடி தவித்துக்கொண்டிருந்தால், அவருக்குப்
பெரும்பாலும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதை உணர்ந்து, முதலுதவி கொடுக்க வேண்டும்.

மூச்சுக்குழாய் அடைப்புப் பிரச்னையால் தவிப்பவரிடம், ‘மூச்சுக்குழாய் அடைத்திருக்கிறதா?’ என முதலில் கேட்க வேண்டும்.

அவர்
கஷ்டப்பட்டு ‘ஆமாம்’ எனச் சொன்னால், பயப்படத் தேவை இல்லை. அவருக்கு
ஆக்சிஜன் கிடைத்துக்கொண்டிருக்கும். அவரைப் ‘பேச வேண்டாம்’ எனக் கூறி,
நன்றாக இருமச் சொல்லி வலியுறுத்துங்கள்.

ஒருவேளை
சத்தம் வரவில்லை, தலையை மட்டும் ஆட்டுகிறார் எனில், அவர்களுக்கு
ஹெய்ம்லிச் மேனியூவர் (Heimlich maneuver) எனும் முதலுதவியைச் செய்ய
வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்குப்
பின்புறம் நிற்க வேண்டும். அவரது அடிவயிற்றின் தொப்புள் பகுதியில் இடது
கையைக் குத்துவதுபோல வைக்க வேண்டும். வலது கையை இடது கையின் மேல் வைத்து,
நன்றாக மேல்நோக்கி அழுத்தம் தந்து ரிலீஸ் செய்யவும். பாதிக்கப்
பட்டவர் நார்மலாகும் வரை வேகமாக இப்படிச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

முதலுதவி
கொடுக்கத் தாமதப்படுத்தினால், நினைவு இழப்பு ஏற்பட்டு, சில நிமிடங்களில்
இதயத்துடிப்பு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், கவனம் தேவை.

ஒருவேளை
மயக்கமாகிவிட்டார் எனில், திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்குமோ என்ற
சந்தேகம் இருந்தால், சி.பி.ஆர் முதலுதவி தருவது அவசியம்.
வலிப்பு
வலிப்பு வருபவர்களுக்கு அளிக்கும் முதலுதவிகளில் தவறானவையே அதிகம்.

வலிப்பு வந்தவரை சுற்றி கூட்டம் போடக்கூடாது.

விரைவாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல வசதி செய்து தர வேண்டும்.

கையில் சாவி குடுப்பது, செருப்பு கொடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

அதேபோல அவரது கை, கால்களைப் பிடிக்கக் கூடாது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு எலும்புகள், விலகவும் முறியவும் வாய்ப்புகள் உள்ளன.

சோடா, குளிர்பானம் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது.

மூன்று
முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு வலிப்பு வரும்போது காய்ச்சல் இருந்தால்,
மென்மையான துணியைத் தண்ணீரில் நனைத்து, நன்கு பிழிந்த பின் குழந்தையின்
உடலில் ஒற்றி எடுக்கலாம். இல்லை எனில், ஆசனவாயில் வைக்கும் பாரசிட்டமால்
(சப்போசிட்டரி) மாத்திரையை வைத்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.

காய்ச்சல்
இன்றி வலிப்பு வருகிறது எனில், நரம்புத் தொடர்பான பிரச்னையாக
இருக்கக்கூடும். தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்வதே சிறந்தது.

நாக்கைக்
கடித்துக்கொள்ளாமல் இருக்க, நமது கைகளை பற்களின் இடையில் வைப்பதோ,
துணியையோ வேறு ஏதேனும் பொருளையோ வாயில் திணிக்க முயல்வதோ கூடாது.

இதனால், உதவி செய்ய முயல்பவருக்கு விரல்கள் கடிபடக்கூடும். சில சமயங்களில் விரல்களே துண்டாகக்கூடும்.

வலிப்பு நின்றவுடன் ஒருபுறமாக ஒருக்களித்துப் படுக்கவைத்து, மேற்புறம் உள்ள காலை மடக்கி வைத்துவிட்டு, ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.
நாய்க் கடி, பூனைக் கடி, குரங்குக் கடி
நாய்க்கடி, உயிரையே காவு வாங்கும் மோசமான பிரச்னை. வீட்டு நாயோ, தெரு
நாயோ, தடுப்பூசி போடப்பட்டதோ, போடப்படாததோ எதுவாக இருந்தாலும்,
எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடியாலும் ரேபிஸ் தொற்று ஏற்படும்.

கடிபட்ட இடத்தை சோப் போட்டு, குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

நாய்க்கடிக்கு, ரேபிஸ் தடுப்பூசி ஐந்துமுறை போடப்படும். கடித்த தினம் முதல், 3, 5, 7, 28வது நாட்களில் இந்தத் தடுப்பூசி போடப்படும்.

நாய்
கடித்தால், தொப்புளைச் சுற்றி 28 ஊசிகள் போடும் காலம் எல்லாம்
மலையேறிவிட்டது. கையிலேயே ஐந்து முறை ஊசி போட்டுக்கொண்டால் போதும்.

குழந்தையை
நாய், பூனை பிராண்டினாலோ, கடித்தாலோகூட, இந்தத் தடுப்பூசியைப்
போட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு
மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.
பாம்புக் கடி
பாம்புக் கடியைப் பொறுத்தவரை பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம்
இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தை, வாயால் கடித்து, விஷத்தை உறிஞ்சி
எடுத்துக் காறித்துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது,
கீறிவிடுவது போன்றவை எல்லாம் தவறான முதலுதவிகள்.

பாம்பு
கடித்தால், நடக்கவோ ஓடவோ விடாமல் அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனெனில்,
ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவும்.

பாம்பு
கடித்த இடத்திலிருந்து, மேலே 15 செ.மீ உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு
போன்ற ஏதேனும் ஒன்றில் இறுக்கக் கட்டாமல், ஒரு விரல் நுழையும் அளவு
இடைவெளி கொடுத்துக் கட்டலாம்.

கடிபட்ட காலை நகர்த்தவோ, மடக்கவோ கூடாது. எனவே, அதனை ஒரு கட்டையோடு சேர்த்துக் கட்டிவிடலாம்.

பாம்பு
கடித்த இடத்தைச் சுற்றிலும், ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுப்பது,
நல்ல முதலுதவி. இதனால், அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம்
ரத்தத்தில் கலப்பது ஓரளவு தடுக்கப்படும்.

சிலர்,
கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். இதுவும்
தவறு. பாம்பைப் பார்த்து எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடையாது.

பாம்பை அடிக்க ஓடாமல், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே சிறந்தது.
பூச்சிக் கடி, தேனி கொட்டுதல், தேள் கொட்டுதல்
பூச்சிக்கடியால் வலி மற்றும் அலர்ஜி ஏற்படும்.

தேனி கடித்தால், கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. அந்த இடத்தில் அழுத்தக் கூடாது.

தேனியின்
கொடுக்கு வளைந்து இருக்கும். பிய்த்தெடுக்க முயலும்போது, கொடுக்கின்
நுனியில் உள்ள விஷம் உடலுக்கு உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது.

ஒரு
மெல்லிய அட்டையை (விசிட்டிங் கார்டு, சீட்டுக்கட்டு அட்டை) எடுத்து,
தேனியின் கொடுக்கு இருக்கும் இடத்தில் வழித்துவிட (ஸ்க்ரேப்) வேண்டும்.

வலி இருந்தால், வலி மாத்திரை சாப்பிடலாம்.

கடித்த
இடத்தில் ஐஸ் பேக் வைக்க வேண்டும். தேனி கடித்து, வெகு சிலருக்கு அலர்ஜி
காரணமாக மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்படலாம். இதனால், மூச்சுத்திணறல்
ஏற்பட்டு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஐஸ் பேக் வைத்த பிறகு, விரைவாக மருத்துவமனை வந்து பரிசோதித்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுப்பதன் மூலம், மரணத்தைத் தடுக்க முடியும்.

நம்
ஊரில் உள்ள தேள்களில் உயிர் இழப்பை ஏற்படுத்தும் விஷம் இல்லை. எனவே,
பயப்படத் தேவை இல்லை. ஐஸ் பேக் வைத்து, வலி நிவாரணி மாத்திரையைச்
சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு
தேள் கடித்தால், இதயத்துடிப்பில் பெரும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
எனவே, உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
தீக்காயங்கள்
சிறிய அளவிலான தீக்காயங்கள், வெந்நீர் கொட்டுவதால் ஏற்படும் காயங்கள்,
பைக் சைலன்ஸரில் சுட்டுக்கொள்வதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றின் மீது,
உடனடியாகக் குளிர்ந்த நீரையோ அல்லது சாதாரண தண்ணீரையோ ஊற்ற வேண்டும்.

கொப்புளங்கள் ஏற்பட்டால், அவற்றை உடைக்கக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மாவு, மஞ்சள், பேனா மை போன்றவற்றைத் தீக்காயங்கள் மீது தடவக் கூடாது.

கம்பளி போட்டு உடலைச் சுற்றி, மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மிகச்சிறு
தீக்காயங்களுக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பர்னால்
போன்ற சில்வர் சல்ஃபாடயாஸைன் களிம்புகளை நாமே தடவிக்கொள்ளலாம்.
விஷம் சாப்பிடுதல்
பூச்சிக்கொல்லிகள், எலி மருந்து போன்ற உயிர்க்கொல்லிகள், அரளி விதை
முதலான செடி விஷங்கள், ஆசிட் குடிப்பது, தூக்க மாத்திரை, சாணி பவுடர்
எனப்படும் மாலசைட் கிரீன் ஆகியவற்றின் மூலம்தான் நமது ஊரில் அதிகம் பேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இவர்கள் சுயநினைவுடன் இருக்கும்போது, வாந்தி எடுக்கவைப்பதில் தவறு இல்லை.

சுயநினைவு இல்லாதபோதோ, அரை மயக்கத்தில் இருக்கும்போதோ, வாந்தி எடுக்கவைக்க முயற்சிக்கக் கூடாது.

அரை
மயக்கத்தில் அல்லது சுயநினைவு இன்றி இருப்பவர்களை வாந்தி எடுக்கவைத்தால்,
நுரையீரலில் புரையேறி, மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.

இவர்களுக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கவும் கூடாது.

திடீர்
இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால் மட்டும், சி.பி.ஆர் முதலுதவியைச்
செய்து, மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விஷம்
சாப்பிட்டவர்கள் நல்ல சுயநினைவுடன் இருந்தால் மட்டும் கரித்தூள் அல்லது
பிரெட்தூள் கொடுக்கலாம். அரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்லும்
வசதி இருந்தால், இந்த முதலுதவி செய்வதற்குப் பதில், நேரடியாக
மருத்துவமனைக்குக்கொண்டு செல்வதே சிறந்தது.

ஆசிட்
போன்றவற்றைக் குடித்தவர்கள் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின்
வெள்ளைப்பகுதியைச் சாப்பிடக் கொடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லலாம்.

எதைக்
குடித்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றால், எந்த முதலுதவியும்
செய்யாமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதே நல்லது.
தண்ணீரில் மூழ்குதல்
தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு இரண்டு வகையான பாதிப்புகள் நேரலாம். ஒன்று,
தண்ணீர் மூச்சுக்குழாயை அடைத்திருக்கலாம் அல்லது திடீர் இதயத்துடிப்பு
முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம்.

இவர்களின்
வயிற்றில் கை வைத்து அழுத்துவது எந்தப் பலனையும் தராது. வயிற்றில்
அழுத்துவதால் தண்ணீர் வெளியே வருவது இல்லை. மேலும், அழுத்து வதன் காரணமாக
வாந்தி ஏற்பட்டு, வயிற்றில் இருக்கும் தண்ணீர், மூச்சுக்குழாயை
அடைத்துக்கொள்ள நேரிடலாம்.

சுயநினைவு இல்லை எனில், சி.பி.ஆர் முதலுதவியை அவசியம் செய்ய வேண்டும்.

வாயை
வைத்து தண்ணீரை உறிஞ்ச முயல்வது, குப்புறப் படுக்கவைத்துத் தட்டுவது,
சக்கரத்தில் படுக்கை வைத்துச் சுற்றுவது போன்றவற்றைச் செய்து நேரத்தை
வீணாக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
எலெக்ட்ரிக் ஷாக்
எலெக்ட்ரிக் ஷாக்கால் யாராவது பாதிக்கப்பட்டால், மின்சாரம் உடலில் பாய்வதைத் தடுக்க, மிக வேகமாக மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும்.

மின்சாரத்தைத்
துண்டிக்க நேரம் ஆகும் என்றால், மின் கடத்தும் தன்மையற்ற பிளாஸ்டிக்,
மரக்கட்டை போன்றவற்றைக்கொண்டு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வேண்டும்.

மின்சாரம்
தாக்கியவரை வெறும் கைகளாலோ, மின்கடத்தும் பொருட்களான இரும்பு
போன்றவற்றாலோ தொடக் கூடாது; அவசியம் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருக்க
வேண்டும்.

எலெக்ட்ரிக்
ஷாக் அடித்திருப்பவர்களுக்கு தீக்காயங்கள், திடீர் இதயத்துடிப்பு
முடக்கம், தூக்கி எறியப்படுவதால் காயங்கள் போன்றவை ஏற்படலாம். என்ன பிரச்னை
என்பதைப் பொறுத்து அதற்கு உரிய முதலுதவியைச் செய்ய வேண்டும்.

மின்
தீக்காயங்கள் எனில், உடலின் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த
இடத்தை நன்றாகக் குழாய் நீரிலோ, குளிர் நீரிலோ கழுவ வேண்டும். பின்னர்
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஹைப்போ கிளைசிமியா

சர்க்கரை
நோயாளிகள் சிலருக்குத் திடீரென சர்க்கரை குறைந்தால், ‘ஹைப்போ கிளைசிமியா’
எனும் பிரச்னை ஏற்பட்டு உடனடியாக மயக்கம் ஏற்படும்.

மயக்கம்
அடைந்த நிலையில் இருந்தால், எந்த உணவுப்பொருளும் கொடுக்கக் கூடாது. அந்த
உணவு, மூச்சுக்குழாயை அடைத்து, அதனால் உயிருக்கே பாதிப்பு ஏற்படலாம்.

ஓரளவு
சுயநினைவுடன் இருக்கிறார். ஆனால், மிகவும் சோர்வாக இருக்கிறார்; ஏதாவது
சாப்பிடும் நிலையில் இருக்கிறார் என்றால் மட்டும், சர்க்கரை நிறைந்த
பானங்களைக் கொடுப்பதில் தவறு இல்லை.

சுயநினைவு
இன்றி இருந்தால், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது என்பதை
குளுக்கோமீட்டரில் கண்டுபிடித்து, உறுதி செய்துகொண்டு, ‘குளுக்ககான்’ என்ற
ஊசியைப் போட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
சாலை விபத்து
சாலை விபத்துகளில் தமிழகம் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. தினமும் சாலை விபத்துகளில் பலர் உயிர் இழக்கிறார்கள்.

சாலை விபத்தில் அடிபட்டவர்களை அப்படியே ஆட்டோவில் தூக்கிப்போட்டு, மருத்துவமனைக்குச் செல்வதோ, பெட்ஷீட்டில் போட்டுத் தூக்குவதோ தவறு.

கழுத்து
மற்றும் தண்டுவடப் பகுதியில் அடிபட்டிருக்கும்போது, தவறானமுறையில்
தூக்குவதால், எலும்புகள் முறிந்துவிடலாம். சிலருக்குக் தண்டுவடத்தில்
அழுத்தம் ஏற்பட்டு கை,கால்கள் போன்றவை, வாழ்நாள் முழுமைக்கும் நிரந்தரமாகச்
செயலிழந்துவிட வாய்ப்பு உள்ளது.

விபத்தில்
முதுகுத்தண்டு அடிபட்டு இருந்தால், அவரை மூன்று நான்கு பேர் சேர்ந்து,
தட்டையான பலகையில் வைத்துத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதே
சிறந்தது.

சுயநினைவு
இல்லை, மூச்சுவிட சிரமப்படுகிறார்கள் எனில், கழுத்தை மேல் நோக்கித்
திருப்பக் கூடாது. நாக்கு உள் இழுத்துக்கொள்வதைத் தடுக்க, நாக்கைப்
பிடித்து, மெலிதாகத் தூக்கிவிடவும்.

கழுத்தைச் சுற்றிப்போடும் பேண்ட் இருந்தால், உடனடியாகப் போட வேண்டும்.

ரத்தம்
வெளியேறுவதைத் தடுப்பது அவசியம். பஞ்சு அல்லது சுத்தமான துணியைவைத்து,
உடலில் எங்கிருந்து ரத்தம் வழிகிறதோ மிகச்சரியாக அந்த இடத்தில், அழுத்திப்
பிடிக்க வேண்டும்.
முதுகெலும்பில் அடிபடுதல் (Spinal injury)
முதுகெலும்பில் அடிபட்டிருப்பவரால், எழுந்து அமரக்கூட முடியாது; வலி
மோசமாக இருக்கும். வீக்கம் தெரியாது என்றாலும் எழுந்து அமரவே
சிரமப்படுகிறார்கள் எனில், முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறது எனப்
புரிந்துகொள்ளலாம்.

முதுகெலும்பு
பாதிக்கப்பட்டிருப்பவர்களை, சிரமப்படுத்தி அமரச்செய்தோ, அப்படியே கைகளாலோ,
தோளில் போட்டு தூக்கிக்கொண்டோ வரக் கூடாது. இதனால், பாதிப்பு மேலும்
மோசமாகி, தண்டுவடம் நிரந்தரமாகச் செயல் இழந்துவிடக்கூடும்.

முதுகெலும்பில்
அடிபட்டவரை சமதளமான பலகை அல்லது ஸ்ட்ரெச்சர் ஒன்றில் மல்லாக்கப்
படுக்கவைத்துதான் கொண்டுவர வேண்டும். முதுகெலும்பு பாதிக்கப்பட்டவருக்கு,
இரண்டு மூன்று பேராகத்தான் உதவி செய்ய முடியும். கொஞ்சம் பருமனானவர்களுக்கு
நான்கு பேர் தேவைப்படும்.

அடிபட்டவரை
நேராகப் படுக்கவைக்க வேண்டும். பிறகு, அடிபட்டவரின் தோளை ஒருவர்
பிடித்துக்கொண்டும், கால் பகுதியை இன்னொருவர் பிடித்துக்கொண்டும் அவரை
ஒருபுறமாகச் சாய்க்க வேண்டும்.

மற்றொருவர் பலகையை அடிபட்டவருக்கு கீழ்புறம் செருகி, அதில் அடிபட்டவரைச் சாய்த்து, பலகையின் மீது படுக்கும்படி செய்ய வேண்டும்.

இப்போது, தலைப்பகுதியை ஒருவர் கால்பகுதியை ஒருவர் என பலகையோடு தூக்கியபடி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
கழுத்து முறிவு (Cervical injury)
விபத்துகளில், கழுத்துமுறிவு ஏற்படுவது உயிருக்கே ஆபத்தாகவும்
முடியக்கூடும். பெரிய விபத்துகளில் சிக்கியவர்களுக்கு, கழுத்துமுறிவு
ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கழுத்து
முறிவு ஏற்பட்டவர்கள் கழுத்தைத் திருப்பவோ தூக்கவோ கூடாது. அவர்களை
மல்லாக்கப் படுக்கவைத்து, தலையை நேராக வைக்க வேண்டும். நமது கை விரல்களை
அடிபட்டிருப்பவரின் கழுத்தின் அருகே வைத்து, விரித்துப் பார்த்து கழுத்தின்
நீளத்தைத் தோராயமாக அளந்துகொள்ள வேண்டும்.

பிறகு,
இரண்டு மூன்று பக்க செய்தித்தாள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை
ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கழுத்து அகலத்துக்கு மடிக்க வேண்டும்.

மடிக்கப்பட்ட
செய்தித்தாளை ஓர் அகலமான துணி அல்லது போர்வையில் வைத்து, போர்வையை அதே
அகலத்துக்கு மடித்துக்கொள்ள வேண்டும். காகிதம் உள்ளே வைத்துச் சுற்றப்பட்ட
இந்தப் போர்வை நெக் பேண்ட் போல செயல்படும்.

கழுத்தைத்
தூக்காமல், மடிக்கப்பட்ட போர்வையைக் கழுத்தின் அடிபாகத்தில் செருகி,
போர்வையால் கழுத்தை நெக்பேண்ட் போல சுற்ற வேண்டும். மருத்துவமனைக்குச்
செல்லும் வரை இந்த நெக்பேண்டை அவிழ்க்கக் கூடாது.
மூக்கில் ரத்தம் வழிதல்
மூக்கில் அடிபடுவதாலோ, உயர் ரத்த அழுத்தத்தாலோ சிலருக்கு மூக்கில் ரத்தம் வழியும்.
மூக்கில் அடிபட்டால்...

காயம் ஏற்பட்டு மூக்கு உடைந்தால், ஐஸ் பேக் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தால் மூக்கில் ரத்தம் வரும்போது..

அவர்களை
நாற்காலியில் உட்காரவைத்து, தலையை முன்புறமாக நீட்டியவாறு வைத்து, மூக்கை
இரு விரல்களால் அழுத்திப்பிடித்துக்கொண்டு, வாயால் மூச்சு விட வேண்டும்.
ரத்தம் நிற்கும் வரை விரல்களை எடுக்கக் கூடாது.

உயர்
ரத்த அழுத்தத்தால் சிலருக்கு பின் மூக்கு வழியாக ரத்தம் உட்புறமாகக்
கசிந்து, வாய்க்கு வரும். இதனால், வாந்தி வரவோ, புரை ஏறவோ வாய்ப்புகள்
உள்ளன. இவர்கள், ரத்தத்தை உடனடியாகத் துப்பிவிட்டு மருத்துவமனைக்குச்
செல்வதே சிறந்தது.
ரத்தப்பெருக்கு
விபத்துகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டும்போது, முதலில்
காயம் எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டறிய வேண்டும். அந்தப்
பகுதி ஆடையால் மூடி இருந்தால், அதனை முதலில் அகற்ற வேண்டும்.

சுத்தமான
துணியை ரத்தம் பெருகும் இடத்தின் மேல் நேரடியாகவைத்து சில நிமிடங்களுக்கு
அழுத்திப் பிடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், காயம்பட்ட இடத்தில் உள்ள
பிளாஸ்மாக்கள் ரத்த உறைதலை ஏற்படுத்தி, ரத்தப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்.
சிலருக்கு, காயத்தின் தன்மையைப் பொறுத்து மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்லும் வரை ரத்தப்பெருக்கு நிற்காது.

சிலர்,
சில விநாடிகள் மட்டும் அழுத்திப்பிடித்துவிட்டு ரத்தம் வருகிறதா என
எடுத்துப் பார்ப்பார்கள்; இது தவறு. தொடர்ச்சியாக அழுத்திப் பிடித்தவாறே
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
முன் கை உடைதல்
முன் கை உடைவு ஏற்பட்டால், அதன் அறிகுறியாக கை பெரிதாக வீங்கும், தாங்க
முடியாத வலியால் துடிப்பார்கள். கையை அசைக்கக்கூட முடியாது. கைவீங்கி
இருந்தால், அது உடைவாக இருக்கலாம். எனவே, கையை உதறவோ, அமுக்கிப் பார்க்கவோ
கூடாது.

உடைந்த கையின் அடிப்பாகத்தைக் கட்டுப்போடும் வரை, மற்றொரு கையால் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

உடைந்த
கையின் அடிப்பாகத்தில் மர ஸ்கேல் அல்லது பட்டையான கம்பை வைக்க வேண்டும்.
பிறகு, கைக்குட்டை அல்லது துணியால் இரண்டு பக்கமும் கட்ட வேண்டும்.

பிறகு,
சட்டையின் நெஞ்சுப்பகுதியில் உள்ள பட்டனைக் கழற்றி, கட்டுப்போட்ட கையைச்
சட்டைக்குள் வைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
தொட்டில்கட்டு போடுவதற்குப் பதிலாக இந்த முறை உதவும்.

இன்னொரு
முறையிலும் கட்டுப்போடலாம். அதாவது, உடைந்த கையின் கீழ்புறம் அடிஸ்கேல்
அல்லது பட்டையான குச்சியை வைத்து இருபுறமும் கட்டிய பிறகு, சட்டையின்
கீழ்ப்பகுதி பட்டன்களைக் கழற்ற வேண்டும். பிறகு, கட்டுப்போட்ட கையை
நெஞ்சின் மீது வைத்து, சட்டையின் பட்டன் துளையுள்ள நுனியைத் தூக்கி, காலர்
பட்டனில் பொருத்த வேண்டும்.
முழங்கை உடைதல்
விபத்தினால் கை மூட்டுகள் விலகுவதையும், மூட்டுகளின் லிகமென்ட் கிழிவதையும், ‘முழங்கை உடைதல்’ என்கிறார்கள்.

முழங்கை
உடைந்திருப்பதன் அறிகுறி, அந்தப் பகுதி வேகமாக வீங்குவதுதான். மேலும்,
கையைத் தூக்க முடியாதபடிக்கு வலி மிக மோசமாக இருக்கும்.

முழங்கை வீங்கி இருந்தால், கையை உதறுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது. மறுகையால், முழங்கையைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.

கையை
மடித்து அளவுகோல் அல்லது பட்டையான குச்சியின் ஒரு நுனியை புஜத்திலும்
மற்றொரு நுனியை மணிக்கட்டிலும் வைத்து, இரு நுனிகளையும் கைக்குட்டை அல்லது
துணியால் கட்ட வேண்டும்.

பெல்ட்டைக்
கழுத்தில் மாட்டி, கட்டப்பட்ட மர ஸ்கேல் அல்லது குச்சியை பெல்ட்டுடன்
சேர்த்துக் கட்ட வேண்டும். இதைத் தொட்டில் கட்டு என்பார்கள். தொட்டில்
கட்டு கட்டிய பின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
கால் முறிவு
கால் முறிவு ஏற்பட்டவர்களுக்கு, அந்தப் பகுதி சட்டென வீங்கிவிடும்.
கால்முறிவு ஏற்பட்டிருப்பவர்களை நாற்காலியில் உட்காரவைக்கக் கூடாது.
அவர்களை தரையில் படுக்கவைத்தே முதலுதவிகள் செய்ய வேண்டும்.

அடிபட்டவரை மல்லாக்கப் படுக்கவைக்க வேண்டும்.

நீளமான தட்டையான பலகை ஒன்றை, அடிபட்ட காலோடு சேர்த்துவைத்து, கைக்குட்டை அல்லது துணியால் மூன்று இடங்களில் கட்ட வேண்டும்.

பலகை கிடைக்கவில்லை என்றால், அடிபட்ட காலை மற்றொரு காலோடு சேர்த்தும் கட்டலாம்.

கட்டுப்போட்ட
பின்பு, அடிபட்டவரை படுக்க வைத்த நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வர
வேண்டும். கைகளால் தூக்கிக்கொண்டு வரக் கூடாது. ஸ்ட்ரெச்சர் அல்லது
மரப்பலகையில் படுக்கவைத்துக் கொண்டுவருவது நல்லது.
கணுக்கால் மூட்டு முறிவு
கணுக்கால் மூட்டு முறிவு ஏற்பட்டவர்களைப் படுக்க வைக்க வேண்டும்.
கணுக்காலுக்கு அடியில் தலையணை ஒன்றை வைக்க வேண்டும். பிறகு, அந்தத்
தலையணையைக் கணுக்காலோடு சேர்த்துக் கட்ட வேண்டும். இவர்களை நடக்கவைக்கக்
கூடாது. ஏதேனும் ஒரு வண்டியில் அமரவைத்தோ, படுக்கவைத்தோ மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்லலாம். அடிபட்ட பாதத்தை ஊன்றாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
உறுப்புத் துண்டாகுதல்
வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் பயன்படுத்தும்போது, கவனக்குறைவாக சில
பெண்கள் விரல்களைத் துண்டாக்கிக்கொள்வது உண்டு. அதேபோல தொழிற்சாலை
வேலையின்போதும் சாலை விபத்திலும் கை, கால்கள் துண்டாகிவிடுகின்றன.

விபத்து
ஏற்பட்டு துண்டான எந்த உறுப்பையும் வேண்டாம் எனத் தூக்கி எறிந்துவிட
வேண்டாம். விபத்து ஏற்பட்ட 6-8 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குத்
துண்டான உறுப்புடன் வந்தால், உயர் சிகிச்சை (இம்பிளான்ட்) மூலம் மீண்டும்
ஒட்டவைக்க முடியும்.

துண்டான
உறுப்பை தண்ணீர் புகாத பாலித்தீன் கவரில் போட்டு, ஐஸ் பெட்டிக்குள் அந்த
பாலித்தீன் பையைவைத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும்.
துண்டான உறுப்பை நேரடியாக ஐஸ் பெட்டியில் போடக் கூடாது.
ஒவ்வாமை - அனஃபிளாக்சிஸ் (Anaphylaxis)
சிலருக்கு, சிறு வயதில் இருந்தே முட்டை, பால், பட்டாணி ஆகியவை
அலர்ஜியாக இருக்கும். இவர்கள் அந்த பொருளைத் தொட்டாலே மூச்சுக்குழாயில்
வீக்கம் ஏற்பட்டு, 10-15 நிமிடங்களில் உயிர் இழப்பு நிகழலாம். இந்தப்
பிரச்னைக்கு ‘அனஃபிளாக்சிஸ்’ என்று பெயர். இது ஒருவிதமான அலர்ஜி நோய்.
இவர்களுக்கு உடனடியாக அட்ரிலின் ஊசி போட வேண்டும்.

இந்த அலர்ஜியை சிறுவயதில் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் உடன் இந்த ஊசியை வைத்துக்கொள்ள வேண்டும்.

தனக்கே தெரியாமல் குறிப்பிட்ட பொருளைத் தொட்டால்கூட, இந்தப் பிரச்னை ஏற்படும். சமயங்களில் இந்த ஊசி உயிர் காக்கும்.

ஆயிரத்தில்
இருவருக்கு இந்தப் பிரச்னை காணப்படுகிறது. பெரும்பாலும், இவர்களுக்கு
நண்டு முதலான கடல் வாழ் உணவுகள், பட்டாணி போன்றவற்றால் இந்த அலர்ஜி
ஏற்படுகிறது.

இந்த அலர்ஜி இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் அலர்ஜி ஏற்படுத்தும் பொருளைத் தொடவே கூடாது.
கண்களில் கெமிக்கல்கள் படுதல்
பணிபுரியும் இடங்களில் ஆசிட்கள், பெயின்ட், சுண்ணாம்பு, ஆல்கலைன் போன்ற
வேதிப்பொருட்கள் கண்களில் பட்டுவிட்டால், கண்களைக் கசக்குவதோ, விரலை
கண்களில் வைத்து தேய்ப்பதோ கூடாது.

குழாய் நீர் கண்ணில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். தண்ணீரால் வேதிப்பொருளின் வீரியம் குறையும்.

குழாய்
நீரில் கண்களை வைக்கும் போது எந்த கண் பாதிக்கப்பட்டதோ, அது கீழ்புறம்
இருக்குமாறு தலையை நீரில் காட்டுவது நல்லது. இல்லையெனில், மற்றொரு கண்ணும்
பாதிக்கப்படக்கூடும்.

கண்கள்
நன்கு சிவந்து, புண்ணாகிவிட்டிருந்தாலோ எரிச்சல் அதிகமாக இருந்தாலோ,
உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சுயவைத்தியம்
ஏதும் செய்யவே கூடாது.
மயக்கம்
பசி, சோர்வு, ரத்த தானம் செய்த பின் ஏற்படும் தளர்வு ஆகியவற்றால் சிலர்,
திடீரென மயங்கி விழுவார்கள். இது சாதாரண மயக்கமா, திடீர் இதயத்துடிப்பு
முடக்கமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

மயக்கம் அடைந்தவர்களை காற்றோட்டமான சூழலில் மல்லாக்க படுக்கவைக்க வேண்டும்.

அவர்களின் கால்களைச் சற்று நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

உயரமான இரண்டு தலையணைகளின் மேல் அவர்களின் கால்களை வைக்கலாம்.

இவ்வாறு
செய்யும்போது, போதுமான ரத்த ஓட்டம் அவர்களின் மூளைக்குச் சென்று ஒருசில
நிமிடங்களில் அவர்களுக்கு இயல்பாகவே நினைவு திரும்பிவிடும்.

தலையணை
இல்லாவிடில் நாற்காலியிலும் கால்களை வைக்கலாம். மயக்கத்தில் இருக்கும்போது
வாயில் ஏதும் புகட்ட முயலக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பதாலும்
எந்தப் பலனும் இல்லை.
உயிர் பிழைக்க உதவுவோம்!
‘சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்தால், போலீஸ், மருத்துவமனை
எனப் பல தேவை இல்லாத இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். எனவே, சாலை
விபத்தில் அடிபட்டால், அதிகபட்சம் 108-க்கு அழைத்தால் மட்டும் போதுமானது’
எனப் பலர் நினைப்பதால்தான் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் சிலர் மரணிக்க
நேரிடுகிறது.

இது
குறித்து மக்களிடம் உள்ள பயத்தைப் போக்க ‘குட் சமாரிட்டன் சட்டம்’ (Good
Samaritan law) ஒன்றை இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. விரைவில்,
இந்தச் சட்டம் நாடாளுமன்ற ஒப்புதல் பெற உள்ளது.

மேலும், போலீஸ், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவருக்கும் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

‘காவல்
நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வந்தால்தான் சிகிச்சை கொடுக்க
முடியும்’ என, எந்த மருத்துவமனையும் சொல்வது இல்லை. அவை கட்டுக்கதைகளே!

ஒரு
நபர் இறக்கும் தருவாயில் இருந்தால், சட்டப்படி அவருக்கு முதலில்
சிகிச்சைதான் அளிக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் எல்லாம் தேவை இல்லை என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்து
மருத்துவமனைகளிலும் அவசரசிகிச்சைப் பிரிவில் ஏ.ஆர் காப்பி (Accident
Register Copy) இருக்கிறது. நோயாளிக்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்னர்
மருத்துவமனையில் இருந்தே, போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

எனவே,
பாதிக்கப்பட்டவருக்கு உதவினால் நமக்கு போலீஸ் கேஸ் என அலைச்சல், தேவை
இல்லாத தொந்தரவுகள் வருமோ என மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.
குட் சமாரிட்டன் சட்டத்தின் அம்சங்கள்

பாதிக்கப்பட்டவரை யார் வேண்டுமானாலும் எந்த மருத்துவமனையிலும் கொண்டுசேர்க்கலாம்.

மருத்துவமனைக்குக்
கொண்டுசேர்ப்பவர்கள், தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் மருத்துவ
மனையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனை சார்பில் யாரும்
உதவுபவரின் தகவல்களைக் கேட்கக் கூடாது.

தகவல்களைச்
சொன்னால்தான் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட
நபரிடம் வலியுறுத்த யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மருத்துவமனையில் உயிர் காக்க என்ன சிகிச்சை செய்ய வேண்டுமோ, அதை அவசியம் உடனடியாகச் செய்யதே ஆக வேண்டும்.

உயிர்
காக்கும் முதலுதவி சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை பணம் எதிர்பார்க்கக்
கூடாது. உயிர்காக்கும் சிகிச்சை தருவது, மருத்துவமனைகளின் கடமை.
Post a Comment