அவசர காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க எஃப்ஐஆர் தேவையில்லை!
அவசர காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க எஃப்ஐஆர் தேவையில்லை! இ ந்தியாவில் ஒரு மணி நேரத்தில் சராசர...
சாலை விபத்துகளில் அடிபட்டு உயிரிழப்பவர்களில் 80% பேருக்கு, சரியான நேரத்தில் முதலுதவி கிடைக்காததாலும், விரைவில் மருத்துவமனை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும், சிகிச்சையளிக்க தாமதமாவதாலும் மரித்து போகின்றனர் என்கின்றது ஓர் ஆய்வு.
நமது மக்கள் பலர் சினிமாவில் காண்பிப்பதை அப்படியே நம்பி விடுகின்றனர். உதவி செய்தால் பிரச்னை வரும் என நினைக்கின்றனர். இது தவறு. மக்களுக்கு இடையே இருக்கும் அச்சத்தை போக்குவதற்காக, 'குட் சமாரிட்டன் சட்டம்' (Good Samaritan law) ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல நாடுகளில் அமலில் இருக்கிறது.
‘சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்தால், போலீஸ், மருத்துவமனை எனப் பல தேவை இல்லாத இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். எனவே, சாலை விபத்தில் அடிபட்டால், அதிகபட்சம் 108-க்கு அழைத்தால் மட்டும் போதுமானது’ எனப் பலர் நினைப்பதால்தான் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் சிலர் மரணிக்க நேரிடுகிறது.
* இது குறித்து மக்களிடம் உள்ள பயத்தைப் போக்க ‘குட் சமாரிட்டன் சட்டம்’ (Good Samaritan law) ஒன்றை இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. விரைவில், இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற உள்ளது.
* மேலும், போலீஸ், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவருக்கும் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
* ‘காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வந்தால்தான் சிகிச்சை கொடுக்க முடியும்’ என, எந்த மருத்துவமனையும் சொல்வது இல்லை. அவை கட்டுக்கதைகளே!
* ஒரு நபர் இறக்கும் தருவாயில் இருந்தால், சட்டப்படி அவருக்கு முதலில் சிகிச்சைதான் அளிக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் எல்லாம் தேவை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏ.ஆர் காப்பி (Accident Register Copy) இருக்கிறது. நோயாளிக்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்னர் மருத்துவமனையில் இருந்தே, போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
* எனவே, பாதிக்கப்பட்டவருக்கு உதவினால் நமக்கு போலீஸ் கேஸ் என அலைச்சல், தேவை இல்லாத தொந்தரவுகள் வருமோ என மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.
குட் சமாரிட்டன் சட்டத்தின் அம்சங்கள்
* பாதிக்கப்பட்டவரை யார் வேண்டுமானாலும் எந்த மருத்துவமனையிலும் கொண்டு சேர்க்கலாம்.
* மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பவர்கள், தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் மருத்துவமனையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனை சார்பில் யாரும் உதவுபவரின் தகவல்களைக் கேட்கக் கூடாது.
* தகவல்களைச் சொன்னால்தான் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட நபரிடம் வலியுறுத்த யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
* மருத்துவமனையில் உயிர் காக்க என்ன சிகிச்சை செய்ய வேண்டுமோ, அதை அவசியம் உடனடியாகச் செய்தே ஆக வேண்டும்.
* உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. உயிர்காக்கும் சிகிச்சை தருவது, மருத்துவமனைகளின் கடமை.
அப்புறமென்ன, இனி சாலை விபத்துகளில் அடிப்பட்டவர்களுக்கு முதலுதவி தர நாம் தயக்கம் காட்ட வேண்டுமா என்ன?
Post a Comment