திராவிட இயக்கத் தலைவர்களின் இசை முரசு! பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் காலமானார்!!

திராவிட இயக்கத் தலைவர்களின் இசை முரசு! வா ணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும...

திராவிட இயக்கத் தலைவர்களின் இசை முரசு!
வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அறிவாலயத்தில் குழுமியிருந்தனர் செய்தியாளர்கள்.
வேட்பாளரை அறிவிக்க கலைஞர் வந்தார்; பேராசிரியர் அன்பழகன் வந்தார்; கூடவே நாகூர் ஹனிபாவும் வந்தார். தான் கையோடு கொண்டு வந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தவாறு, மைக் பிடித்தார். கலைஞர். தன் டிரேடு மார்க் கரகர குரலில், 'இசை முரசு' நாகூர் ஹனிபாதான் வாணியம்பாடி தொகுதி வேட்பாளர்' என்று அறிவித்தார்.

அப்போது அங்கே ஓர் அதிசய காட்சி நிகழ்ந்தது. ஒரு பக்கம் கலைஞரையும், இன்னொரு பக்கம் பேராசிரியர் அன்பழகனையும் இழுத்து அணைத்துக் கொண்டு போஸ் கொடுத்தார், ஹனிபா. கேமராக்களின் பளிச்! பளிச்! சப்தத்தைத் தவிர அரங்கமே அன்று நிசப்தத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 'எந்த வேட்பாளரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத காட்சி' இது என அப்போது வியந்து எழுதியது, ஆனந்த விகடன்.

* சிறு வயதிலிருந்தே ஹனிபா பாடத் தொடங்கி விட்டார். நாகூரில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் பாடியதுதான் அவரது முதல் பாடல் அனுபவம். நாகூரில் செயல்படும் 'கௌதியா பைத்து சபை'யில் இணைந்து, திருமண நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் பாடினார் ஹனிபா. பைத்து சபாவில் பெற்ற பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடகராகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

* 1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழெந்தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனிபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனிபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக் கொண்டு செய்த முதல் கச்சேரியும் அதுவே. 25 ரூபாயை பெற்றுக் கொண்டு ஹனிபா அந்தக் கச்சேரியை நடத்திய போது அவருக்கு வயது 15.

* ஹனிபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்ல. அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. முறையாக சங்கீதம் கற்றிருந்தால் அதிகமாக சாதித்திருக்க முடியுமே? என ஹனிபாவிடம் கேட்ட போது, ''முஸ்லீம்கள் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்பதில்லை; அப்படி நான் சங்கீதம் கற்றிருந்தால் இன்று இந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றிருக்க மாட்டேன்; எனது சங்கீதத்தை மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கேட்டு ரசித்திருப்பார்கள்; ஆனால், எனது குரலை இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் கேட்கிறது; சாதாரண மக்கள் கூட எனது பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஒரு மக்கள் பாடகனாக விளங்குகிறேன்'' என்று பதில் சொன்னார் அவர்.
* ஹனிபாவின் பாடல்கள் இசைத்தட்டில் பதிவான ஆண்டு 1954. இலங்கை கம்பலையில் வாழ்ந்த நல்ல தம்பி பாவலர் எழுதிய 'சின்னச் சின்னப் பாலர்களே... சிங்காரத் தோழர்களே!' என்று தொடங்கும் சிறுவர்களுக்கான அறிவுரைப் பாடலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற உணர்ச்சிப் பாடலும் ஒரே இசைத்தட்டில் பதிவாகி முதன் முதலில் வெளிவந்தது.

* தமிழ் மட்டுமின்றி வேற்று மொழிகளிலும் ஓரிரு பாடல்களைப் பாடியுள்ளார் ஹனிபா. ஒருமுறை அவர் இலங்கை சென்றிருந்தபோது அன்றைய அமைச்சர் ஜெயவர்த்தனேயின் விருப்பப்படி சிங்கள மொழியில் ஒரு பாட்டு பாடினார். மும்பை சென்றிருந்தபோது 'ஓ துனியாகே ரக் வாலே' என்ற இந்திப் பாடலை பாடினார். ஹைதராபாத்தில் உருதுப் பாடலைப் பாடினார். அரபு நாடுகளில் அரபுப் பாடல்களைப் பாடி அனைவரையும் ஈர்த்துள்ளார்.

* ஹனிபா பாடகர் மட்டுமின்றி; சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'அழைக்கின்றார் அண்ணா...' என்ற பாடல் ஹனிபாவின் இசையில் உருவான பாடலாகும்.

* திரைத்துறையிலும் தடம் பதித்தவர் ஹனிபா. குலேபகாவலி திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து 'நாயகமே நபி நாயகமே' என்ற பாடலைப் பாடினார். பின்னர் 'பாவமன்னிப்பு' படத்தில் டி.எம்.சௌந்திரராஜனோடு இணைந்து 'எல்லோரும் கொண்டாடுவோம்' என்ற பாடலையும், 'செம்பருத்தி' படத்தில் 'நட்ட நடு கடல் மீது...' என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில் 'உன் மதமா என் மதமா' என்ற பாடலையும் மேலும் பல திரைப் பாடல்களையும் பாடியுள்ளார் ஹனிபா.

* நாகூர் ஹனிபா என்ற பாடகர் புகழ்பெற காரணமாயிருந்தவர், புலவர் ஆபிதீன். எழுத்தாளர்; இதழாளர்; ஓவியர் என பன்முக ஆளுமையாக விளங்கிய அவரும் சிறந்த பாடகராக இருந்தார். ஹனிபா பாடத் தொடங்கிய காலத்தில் அவரது பாடல்களால் ஈர்க்கப்பட்ட புலவர் ஆபிதீன், தாம் பாடுவதை நிறுத்திக் கொண்டு ஹனிபாவுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவ்வாறு உருவான பாடல்களில் பெரும்பகுதி சூப்பர் ஹிட் பாடல்களாயின. ஆபிதீனும் ஹனிபாவும் ஒரே ஊரை (நாகூர்) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கச்சேரிகள் நடத்துவதற்காக ஹனிபா ஊர் ஊராகப் பயணிக்கும்போது கூடவே செல்வாராம் புலவர் ஆபிதீன். 'நாகூர் இரட்டையர்' என அடையாளப்படும் அளவுக்கு இருவரும் இணைந்தே பயணித்துள்ளனர். பயணத்தின் போதே ஆபிதீன் பாட்டெழுத, ஹனிபா உடனடியாக இசையமைத்துப் பாடுவாராம்.

பேரறிஞர் அண்ணாவும், கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தும் பங்கேற்ற குளச்சல் முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது 'நாட்டின் இரு கண்கள்; நல்லவர்கள் போற்றும் வல்லவர்கள் இவர்கள்' என்ற பாடலை ஆபிதீன் எழுத, அங்கேயே இசையமைத்துப் பாடினாராம், ஹனிபா. புலவர் ஆபிதீன் கடைசியாக எழுதிய பாடலும் இதுவே.

* ஹனிபா ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது.

* ஹனிபா ஒரு நாடகப் பிரியர். இளம் வயதிலேயே நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தாகம் அவருக்குள் இருந்தது. ஒருமுறை நாகப்பட்டினத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவை சந்தித்த ஹனிபா, அவரிடம் பாட்டுப்பாடி நடித்துக் காட்டினார். ஹனிபாவின் கலை ஆர்வத்தைக் கண்டு வியந்த எம்.ஆர்.ராதா, மறுநாளே நாடகக் குழுவில் வந்து சேர்ந்துவிடும்படி சொல்லிவிட்டார். ஹனிபாவும் வீட்டுக்குத் தெரியாமல் வந்து நாடகக் குழுவில் இணைந்து விட்டார். மகனைக் காணாமல் தாய் வாடுவதைக் கண்டு கலங்கிய ஹனிபாவின் அண்ணன், தம்பியைத் தேடியலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார். அம்மாவின் மீதான அன்பால் அன்று நாடக குழுவிலிருந்து பிரியா விடைபெற்றார் கலைஞரான ஹனிபா.

* ஹனிபாவின் குரலைப் போலவே தோற்றமும் கம்பீரமாக இருக்கும். தொடக்க காலத்தில் முகச்சவரம் செய்தவராக அடையாளப்பட்டவர், 1980களிலிருந்து தாடி வைத்த ஹனிபாவாக உருமாறினார். இப்போது ஹனிபாவின் தாடியும், தொப்பியும், கண்ணாடியும் தனிச் சின்னங்களாகவே மாறி விட்டன.

* ஹனிபா தம்பதியரை, காஞ்சிபுரத்தில் உள்ள தம் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் அண்ணா. அண்ணாவின் வீட்டுக்கு ஹனிபா சென்றிருந்தபோது வெறும் லுங்கி, சட்டையுடன் வாசலுக்கே வந்து வர வேற்று அழைத்துச் சென்றாராம் அண்ணா. ''அண்ணா அண்ணா என்று சொல்லுவீர்களே... அந்த அண்ணா துரை இவர்தானா'' என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம் ஹனிபாவின் துணைவியார், ஹனிபா தம்பதியருக்கு தம் கைப்பட உணவு பரிமாறி உபசரித்திருக்கிறார், பேரறிஞர் அண்ணா.

* ஹனிபா தமது எந்த இசை நிகழ்ச்சிக்கும் 'ரிகர்ஸல்' செய்வதில்லை. பொதுவாக கச்சேரிகள் செய்வதற்கு முன்னர் பாடகர்கள் பயிற்சி செய்து குரலை சீர் செய்து கொள்வதே வழக்கம். ஆனால், ஹனிபாவோ அவ்வாறு எந்த ஒத்திகையும் செய்யாதது மட்டுமின்றி, எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் 'பாடுங்கள்' என்றால் உடனே பாடி விடுவார். பக்கவாத்தியங்கள் இல்லாமல் பாடினால் கூட ஹனிபாவின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பிப் பாடச் சொன்னால் கூட ஹனிபா பாடுவார். அப்போதும் வழக்கமான எடுப்பான குரல் அவரிடம் வெளிப்படும்.

* ஹனிபா உயிரைக் கொடுத்து பாடியிருக்கிறார்; இரத்த வாந்தி எடுக்குமளவுக்கும் பாடியிருக்கிறார். உச்சஸ்தாயியில் பாடிப் பாடியே தமது செவித் திறனை இழந்திருக்கிறார். அவ்வாறு உழைத்து, ஊர் ஊராக அலைந்து சேர்த்த செல்வத்தைக் கொண்டு நாகூரிலும் சென்னையிலும் சொந்த இல்லங்களைக் கட்டினார். நாகூரில் கட்டிய முதல் வீட்டுக்கு 'கலைஞர் இல்லம்' என்றும் அதே ஊரில் எழுப்பிய இரண்டாம் வீட்டுக்கு 'அண்ணா இல்லம்' என்றும் பெயர் சூட்டினார். சென்னையில் உள்ள வீட்டுக்கு 'காயிதே மில்லத் இல்லம்' என்று பெயர் வைத்தார்.

* பெரியார் பற்றி ஹனிபா நிறைய பாடியுள்ளார். பெரியாரைப் பற்றிய பாடல் ஒன்றை முதன் முதலில் இசைத் தட்டில் பதிவு செய்தவரும் ஹனிபாதான். ''பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வே.ரா தூங்கிக் கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வே.ரா.வே!'' என்பதே அந்தப் பாடல். 1955 ஆம் ஆண்டு இப்பாடலின் இசைத் தட்டு வெளிவந்தது.

* 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஹனிபா. எம்.எல்.சி. ஆனதும் பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெறச் சென்றார். 'என் வயது வாழுங்கள்' என்று ஹனிபாவை வாழ்த்தினார் பெரியார். அப்போது அருகில் நின்ற மணியம்மையார், 'அய்யா யாரையும் இப்படி வாழ்த்தியதில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

* 'குடி அரசு' இதழை தீவிரமாக வாசித்ததன் விளைவாக, ஹனிபாவிடம் திராவிட இயக்கச் சிந்தனையும் சுயமரியாதை உணர்வும் மேலோங்கியது. சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் ஹனிபா. அதனால் இளமையிலேயே தீவிர இயக்கவாதியாக மாறினார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். திராவிட இயக்க மேடைகளில் ஹனிபாவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

* நீதிக்கட்சி கூட்டங்களிலும் இந்தி எதிர்ப்பு மாநாடுகளிலும் ஹனிபாவின் பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தந்தை பெரியார், ஹனிபாவின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அந்நாளில் தந்தை பெரியார் அடிக்கடி மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு வருவார். அப்படி வரும்போதெல்லாம் ஹனிபாவை அழைத்து பாடச் சொல்லி பலமுறை கேட்டு பரவசப்பட்டிருக்கிறார். 'ஹனிபா அய்யாவுக்கு ஒலி பெருக்கி தேவையில்லை' என்று பெருமையாய்க் குறிப்பிடுவாராம், தந்தை பெரியார். யாரையும் எளிதில் பாராட்டி விடாத பெரியார், ஹனிபாவைப் பாராட்டியதோடு நில்லாமல், சில நேரம் ஒரு ரூபாய் பரிசு கொடுத்தும் மகிழ்வாராம். ''பெரியாரிடம் பாராட்டு வாங்குவதே பெரிய விஷயம்; ஆனால், ஹனிபா அவரிடமிருந்து பரிசும் வாங்குகிறாரே'' என வியப்போடு பார்ப்பார்களாம் திராவிட இயக்கத் தோழர்கள்.

* ஹனிபாவின் முதல் வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இலங்கையில்தான் நடைபெற்றது. 1949இல் யாழ்பாணத்தில் நிகழ்ந்த மீலாது விழாவில் முதன் முதலில் பாடிய ஹனிபா, அதன் பிறகு இலங்கையில் போகாத ஊர்களே இல்லை எனுமளவுக்கு அந்நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார். இலங்கையின் எல்லா பகுதிகளிலும் அவர் கச்சேரி நடத்தியுள்ளார். இலங்கையின் ஆட்சியாளர்கள் பலரையும் அவர் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். முன்னாள் பிரதமர்களான சர்ஜோன் கொத்தலாலவ, டட்லி சேனநாயக, முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாசா ஆகியோரை தம் பாடல்களால் ஹனிபா ஈர்த்துள்ளார். ஹனிபாவின் ஆன்மீகப் பாடல்கள் தமக்கு உத்வேகம் அளிப்பதாக நெகிழ்ந்து கூறுவாராம். ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மண்ணில், இலங்கை அரசின் முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படும் மீலாது நபி பெருவிழாக்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இஸ்லாமிய இசைவிருந்து படைத்திருக்கிறார், ஹனிபா. அப்போது அன்றைய ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க மேடையேறி ஹனிபாவுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.

* ஹனிபா என்னும் அரபிச் சொல்லுக்கு 'நேர்மையாளர்' என்பது பொருள். பெயருக்கு ஏற்ப நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஹனிபா, ஆடம்பரம் ஆரவாரத்தை அறவே விரும்பாதவர் அவர். எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர். 'ஹனீ' என்றால் தேன்; 'பா' என்றால் பாட்டு. ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது. எனவே அவருக்கு ஹனிபா என்று பெயர் வைத்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்றார் கலைஞர்.

* ஹனிபாவின் இசை நிகழ்ச்சிகள் இல்லாத திமுக மாநாடுகளே இல்லை; பொதுக் கூட்டங்கள்; தேர்தல் பிரச்சாரங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பாடி, கட்சியை வளர்த்தார் ஹனிபா. 1967 தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி, தமிழகத்தில் திமுக ஆட்சி மலர அரும்பாடுபட்டவர் அவர். தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பயணம் செய்து தம் பாடல்களால் தேர்தல் பரப்புரை செய்தார்.

* 2002 ஆம் ஆண்டு ஹனிபாவுக்கு 'முரசொலி' அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருது வழங்கப்பட்டது. ஹனிபாவோடு சேர்ந்து கவிஞர் வாலி பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கலைஞரின் கரத்தால் விருது வாங்கும் போது வாலி கலைஞரின் காலில் விழுந்தார். பெருங்கவிக்கோ முதுகு வளைந்தார். ஆனால், ஹனிபா மட்டுமே கம்பீரமாக நிமிர்ந்து நின்றார். பதவிக்காகவும், பட்டம் பரிசுகளுக்காகவும் ஒருபோதும் வளையாத தன்மானச் சிங்கம் அவர்.

* 1937ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அறப்போர் நடைபெற்றது. ராஜாஜி எந்த ஊருக்குப் போனாலும் அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. ஒருமுறை அவர் நாகூருக்கு வந்தபோது கருப்புக்கொடி காட்ட முயன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹனிபா. 13 வயது சிறுவனாக இருந்ததால் ஹனிபாவைச் சிறைக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினர் காவல் துறையினர்.

* இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்கள் ஹனிபாவுக்கு மிகவும் கை கொடுத்தன. 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு', 'தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்', ' 'பாண்டியர் ஊஞ்சலில் பாடி வளர்ந்த பைந்தமிழ்' ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
* ஹனிபாவின் கச்சேரி இல்லாமல் தி.மு.க.வின் எந்த முக்கிய நிகழ்ச்சியும் நடந்ததில்லை. தி.மு.க.வின் ஆரம்ப கால தலைமை நிலையமான 'அறிவகம்' மற்றும் 'அன்பகம்', இன்றைய தலைமை நிலையமான 'அறிவாலயம்' ஆகியவற்றின் தொடக்க விழாக்களில் ஹனிபா இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தி.மு.க.வின் முப்பெரும் விழாக்களிலும், கலைஞரின் பிறந்த நாள் விழாக்களிலும் கட்சியினரின் திருமண நிகழ்ச்சிகளிலும் ஹனிபாவின் கச்சேரி நிச்சயம் இருக்கும்.

* நாகூருக்கு முதல் முதலில் தொலைபேசி வந்தது ஹனிபாவின் வீட்டுக்குத்தான், அவரது தொலைபேசி எண் 'ஒன்று'.

* ஹனிபாவின் மனைவி பெயர் ரோஷன் பேகம். 'ரோஷன்' என்றால் பிரகாசம். என் மனைவி ரோஷன் கிடைத்ததுகூட பிரகாசம்தான் என்று நெகிழ்வார் ஹனிபா. மனைவியைக் குறிப்பிடும் போதெல்லாம் ''அவர்கள்; இவர்கள்'' என்று மரியாதையாகத்தான் அழைப்பார் ஹனிபா. 2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் அவர் மனைவி காலமானார். 'என் பிள்ளைகள்தான் என் செல்வங்கள்' என்று கூறும் ஹனிபாவுக்கு ஆறு பிள்ளைகள், நவ்ஷாத் அலி, நாஸர் அலி என இரண்டு மகன்களும் நஸீமா பேகம், நூர்ஜஹான் பேகம், மும்தாஜ் பேகம், ஜரீனா பேகம் ஆகிய மகள்களும் உள்ளனர்.

* மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போய்விட்டு நாடு திரும்பினார் அண்ணா. அவரைப் பார்க்கப் போயிருந்தார் ஹனிபா. அப்போது, 'ஹனிபா! நான் போன இடத்திலெல்லாம் நீதான் இருந்தாய்' என்று சொன்னாராம், அண்ணா. ஹனிபாவுக்குப் புரியவில்லை. 'வீட்டுக்கு வீடு உன் பாட்டுதான் ஒலித்துக்கொண்டிருந்தது' என்று விளக்கிச் சொல்லிவிட்டுச் சிரித்தாராம், அண்ணா.

* ஹனிபாவும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். தி.மு.க.விலிருந்து விலகி அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது ஹனிபாவை தம் பக்கம் இழுக்க எம்.ஜி.ஆர். எவ்வளவோ முயற்சிகள் செய்தார். 'எனக்கு ஒரே இறைவன்; ஒரே கட்சி' என்று ஹனிபா உறுதியாக நின்றுவிட்டார். இதனாலேயே ஹனிபாவை 'கற்பு தவறாதவர்' என்று வர்ணித்தார் கலைஞர்.  ''ஆடாமல், அசையாமல், அலை பாயாமல், சபலத்திற்கு ஆட்படாமல், எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேன்! தொடேன்! என்கிற உறுதிமிக்க இசைவாணர் ஹனிபா'' என்று புகழாரம் சூட்டியுள்ளார் கலைஞர்.

* ஹனிபாவும், கலைஞரும் சமகாலத்தைச் சார்ந்தவர்கள். கலைஞர் 1924இல் பிறந்தார். ஹனிபா 1925இல் பிறந்தார். அந்தக் காலத்தில் கலைஞரை 'மு.க.' என்றுதான் அழைப்பார் ஹனிபா. இருவருக்கும் இடையே அவ்வளவு நெருக்கம்.

* ஹனிபா துணிச்சல்காரர், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய இடர்களையும் எதிர் கொள்ளத் தயங்காதவர். சுயமரியாதை இயக்கத்துக்கு எதிர்ப்பு மேலோங்கியிருந்த காலம் அது. இயக்கத்தின் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன் கொள்கை விளக்கப் பாடல்களை முழு ஈடுபாட்டோடு கண்ணை மூடிக்கொண்டு பாடுவார் ஹனிபா. பாடி முடித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் ஒரு கும்பல் மேடையை சுற்றி வந்து கொண்டே இருக்கும். பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் கச்சேரியை நிறுத்தாமல் மனத் துணிவுடன் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பார் ஹனிபா.

* 1953ஆம் ஆண்டு கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் முதன் முதலில் 'அழைக்கின்றார் அண்ணா... அழைக்கின்றார் அண்ணா...' என்ற பாடலை ஹனிபா பாடினார். அந்தக் கூட்டத்தில் கலைஞரும், ஹனிபாவும் கலந்து கொண்டனர். அப்போது, தி.மு.க. செய்தித்தாளான 'நம்நாடு' நாளிதழில் இந்தப் பாட்டு வெளிவந்திருந்தது. இதை ஹனிபா பாடினால் பொருத்தமாக இருக்குமே என்று கலைஞர் கருதினார். ஹனிபாவின் கையில் பாட்டைக் கொடுத்து பாடச் சொன்னார். ஹனிபா அப்போதே இசையமைத்துப் பாடினார். மகத்தான வரவேற்பு கிடைத்தது.

* அண்ணாவைப் பற்றிய ஹனிபாவின் பாடல் பிரபலமானதைப் போலவே, கலைஞரைப் பற்றிய ஹனிபாவின் பாடலும் புகழ்பெற்றது. 1953 இல் திருச்சி டால்மியாபுரத்தை 'கல்லக்குடி'யாக மாற்ற வேண்டும் என்று போராடினார் கலைஞர். அப்போது 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்று ஹனிபா பாடிய பாடல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. விற்பனையிலும் சாதனை படைத்தது.

நன்றி: ஆளூர் ஷாநவாஸ்

Related

வரலாற்றில் ஒரு ஏடு 7999863168946081787

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item